புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக உலகின் நாலா பாகங்களில் இருந்தும் சுமார் இரண்டரை மில்லின் மக்கள் மக்காவில் ஒன்றுகூடியுள்ளனர். சவுதி அரேபியாவின் ஆறு சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ஜித்தா சர்வதேச துறைமுகத்தின் ஊடாக இவர்கள் சவுதியை வந்தடைந்துள்ளனர். ஹாஜ்ஜாஜிகள் எவ்வித அசௌகரியங்கள், நெருக்கடிகள் இன்றி சவுதியை வந்தடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் விமான நிலையங்களிலும் துறைமுகத்திலும் சவுதி அரசு மேற்கொண்டுள்ளது.
சவுதியை வந்தடைந்துள்ள ஹஜ்ஜாஜிகள் தங்கள் ஹஜ், உம்ரா கடமைகளை எவ்வித குறைபாடுகளும் இன்றி முழு மனத்திருப்தியுடன் மேற்கொள்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சவுதி அரேபியா சிறந்த முறையில் செய்து கொடுத்திருக்கிறது. ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்றவென வருகை தந்துள்ள அனைத்து ஹாஜிகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் பணியில் சவுதி அரேபியாவின் அரச இயந்திரம் முழுவதும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும், சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ், பட்டத்து இளவரசரும், பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் உட்பட்ட ஹஜ் விவகார அமைச்சு, இஸ்லாமிய விவகார அமைச்சு, உள்விவகார அமைச்சு, அமைச்சர்கள், முப்படையினர், பொலிஸார் அடங்கலான பாதுகாப்பு படையினர், தொண்டர் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஹஜ்ஜாஜிகளுக்கென உச்சளவில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். சவுதி மக்களும் கூட ஹாஜிகளுக்கு சேவையாற்றுவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
சவுதி அரேபிய ஆட்சியாளர்களும், சவுதி மக்களும் ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்ற வருகை தரும் ஹாஜிகளுக்கு சேவையாற்றுவதில் ஒரு போதும் பின்நிற்காதவர்களாவர். ஹாஜிகளுக்கு சேவையாற்றுவதில் அவர்கள் எப்போதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர். அதன் ஊடாக இறை திருப்தியை அடைந்து கொள்வதே அவர்களது ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.
மன்னரின் விருந்தாளி திட்டத்தின் கீழ் இம்முறை ஹஜ் கிரியை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளவர்களில் ஒருவரான எனக்கு இவ்விஜயத்தின் போது ஹாஜிகளுக்கு சேவையாற்றும் சவுதியின் சில நிறுவனங்களது பிரதிநிநிதிகளை சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அச்சமயம் அவர்கள், முஸ்லிம்களுக்கு வருடத்தில் இரண்டு பெருநாட்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் மக்காவாசிகளாகிய நாங்கள் நோன்பு பெருநாளை மாத்திரமே கொண்டாடுகிறோம். ஹஜ் பெருநாளிலும் பெருநாள் காலத்திலும் ஹாஜிகளுக்கு சேவையாற்றுவதிலும் அவர்களது நலன்கள் தொடர்பிலுமே எமது கால நேரங்களை செலவிடுகின்றோம்’ என்று குறிப்பிட்டனர். இது எம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. மக்காவாசிகள் ஹஜ் பெருநாள் கொண்டாடுவதை விடவும் ஹாஜிகளுக்கு சேவை செய்வதையே சிறந்ததாகவும் முக்கியமானதாகவும் கருதுவதையே இது எடுத்துக்காட்டுகிறது.
இதேவேளை, ஹாஜிகளுக்கு சேவை செய்யும் பணியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களும் தயார்படுத்தல் பயிற்சிகளும் சிறந்த முறையில் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா உள்ளிட்ட ஹஜ் கிரியையுடன் சம்பந்தப்பட்ட இடங்களிலும் ஹாஜிகள் தங்கியுள்ள ஹோட்டல்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் சேவையாற்றக் கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் தங்களது பணிகளுக்கு இறை திருப்தியையே ஒரே பிரதிபலனாக எதிர்பார்க்கக் கூடியவர்களாக உள்ளனர். அத்தோடு மருத்துவ தாதியர் பயிற்சியில் நன்குபயிற்றப்பட்ட சுமார் 5,000 தாதியரும் ஹாஜிகளுக்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஹஜ்ஜாஜிகளுக்கான போக்குவரத்து சேவையை எடுத்து நோக்கினால் அது மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதை எம்மால் காண முடிகிறது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் பெருந்தொகை மக்கள் கூடியுள்ள போதிலும் அந்த அனைத்து மக்களுக்கும் தேவையான போக்குவரத்து சேவை எவ்வித குறைபாடுகளும் அற்ற முறையில் சிறந்த முறையில் முன்னெடுக்கபட்டுள்ளது. குறிப்பாக மினாவில் இருந்து அரஃபாவுக்கு பயணிக்க இலத்திரனியல் ரயில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அரஃபாவில் இருந்து முஸ்தலிபா செல்வதற்கும் முஸ்தலிபாவில் இருந்து மீண்டும் மினாவுக்கு வருவதற்கும் சகல போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஹஜ் என்றால் அரஃபாவாகும். அரஃபாவில் ஒரு மனிதன் தரித்திராவிட்டால் ஹஜ்ஜை நிறைவேற்றியதாக அமையாது. இந்தப் பின்புலத்தில் ஹஜ் கிரியை மேற்கொள்ளவென சவுதிக்குள் வந்து சேர்ந்த பின்னர் ஏதாவது நோய் நொடிகளுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் தங்கி இருந்து சிகிச்சை பெறுபவர்களை அம்புலன்ஸ் வண்டிகளில் அழைத்து வந்து அரஃபா தினத்தில் அரஃபாவில் தங்க வைக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அபார சேவையாகும். ஹஜ் கிரியை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் பெருந்தொகை பணத்தைச் செலவிட்டே ஒவ்வொருவரும் சவுதி வருகின்றனர். அதனால் சவுதிக்குள் வந்த எந்தவொரு மனிதரும் அப்பாக்கியத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான சேவை முன்னெடுக்கப்படுவதாக சவுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது அனைவராலும் மெச்சிப் பாராட்டப்படும் சேவையாக விளங்குகிறது.
இதேவேளை அவசர சிகிச்சை அல்லது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களை அழைத்துவருதல், அழைத்து செல்லல் அல்லது அவசர தேவைகளின் நிமித்தம் பயணிப்பதற்காக மினா, அரஃபாவில் இம்முறை முதற்டவையாக Air taxy சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு டயலிஸிஸ் செய்வதற்கான வசதிகள் சவுதியின் மருத்துவ துறையினரால் மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களிலும் அவர்கள் தங்கும் ஹோட்டல்களிலும் முதன்முறையாக இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் ஹஜ்ஜுக்கு வந்திருப்பவர்களில் அவசர இருதய சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக இருதய சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு ஹஜ்ஜாஜிகளுக்கு சுகாதார அறிவூட்டல்களை வழங்கவென மக்கா, மதீனாவில் ரோபோக்களையும் சவுதி அரேபியா முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளமையும் விஷேட அம்சமாகும்.
மேலும் மன்னர், பிரதமரின் பிரதமான அலுவலகங்கள் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள போதிலும், ஹஜ் காலத்திலும் நோன்புக் காலத்திலும் மன்னர், பட்டத்து இளவரசர் அடங்கலாக அமைச்சர்கள், உயரதிகாரிகளும் நேரடியாக மக்கா, மதீனாவுக்கு வருகை தந்து ஹாஜிகளின் நலன்களில் கவனமெடுத்துக் கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர். இது எந்தளவுக்கென்றால் இம்மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் இத்தாலியில் உலக தலைவர்களின் ஜி 7 சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. அம்மாநாட்டில் பங்குபற்ற பட்டத்து இளவரசருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதில் அவர் கலந்து கொள்ளுவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இந்த நாட்களில் சுமார் 25 இலட்சம் மக்கள் ஹஜ்ஜுக்காக மக்காவில் கூடியிருக்கும் சூழலில் அவர்களுக்கு சேவையாற்றுதற்கு முன்னுரிமை அளித்து மாநாட்டில் கலந்து கொள்வதை அவர் தவிர்ந்து கொண்டிருப்பது நல்ல எடுத்துக்காட்டாகும். இது தொடர்பில் அவர் இத்தாலிய பிரதமருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதேவேளை உலகின் பல பகுதிகளில் இருந்தும் வருடாவருடம் ஆயிரக்கணக்கான ஹாஜிகளை தமது சொந்த செலவில் விருந்தினராக மக்காவுக்கு அழைத்து அவர்கள் ஹஜ் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கும் முறைமை சவுதி அரேபிய மன்னர்களால் நீண்ட காலமாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் மன்னர் சல்மானின் நேரடி ஏற்பாட்டின் கீழ் இம்முறை 3300க்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர். இத்திட்டத்தின் கீழ் அழைத்து வரப்பட்டுள்ளவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.
இதன் நிமித்தம் இலட்சக்கணக்கான ரியால் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இம்முறை பலஸ்தீனில் இருந்து 2000 பேர் இத்திட்டத்தின் கீழ் வரவழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மன்னரின் விருந்தாளி என்ற திட்டத்தின் கீழ் ஹஜ்ஜை மேற்கொள்ள வாய்ப்பை பெற்றுக் கொள்பவர்களுக்கு இஹ்ராம் ஆடை முதல் விமான டிக்கட்டுகள், விசா, உழ்ஹிய்யாவுக்கான செலவு, ஸம்ஸம் நீர், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 25 வருட காலப்பகுதியில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் அழைத்துவரப்பட்டு ஹஜ் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
அரஃபாவிலிருந்து அஷ் ஷெய்க் எம்.எச். சேஹுத்தீன் மதனி, பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு