பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த விடயம் தற்பொழுது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் அறிவித்த இந்த சம்பள அதிகரிப்பைத் தொடர்ந்து அதற்கான வர்த்தமானி அறிவிப்பை, தொழிலமைச்சு வெளியிட்டிருந்தது.
இந்த வர்த்தமானி அறிவிப்பை உறுதி செய்து மே மாதம் 21ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இரண்டாவது விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையிலேயே தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளால் இந்த விடயம் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி இது தொடர்பில் கவனத்தில் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், கம்பனிகளின் கோரிக்கையை நிராகரித்தது. அதாவது, தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி மனுவை தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்திருந்தன. மனுவை விசாரித்த நீதிமன்றம் கம்பனிகளின் கோரிக்கையை நிராகரித்தது.
நீதியரசர்கள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு கடந்த மாதம் (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா விடயங்களை முன்வைத்தார். இதனையடுத்து சமர்ப்பணங்கள் மீதான பரிசீலனை கடந்த 3 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அகரபதன பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 தோட்டக் கம்பனிகளினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழில் ஆணையாளர் உட்பட 52 பேர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பெருந் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாகவும் விசேட கொடுப்பனவு 350 ரூபாவும் அடங்காலாக நாளாந்த சம்பளம் 1700 ஆக நிர்ணயிக்கப்பட்டதுடன் மேலதிக தேயிலைக்கொழுந்துக்கான கொடுப்பனவு ரூபா 80 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை உறுதி செய்து கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் அமைச்சின் இரண்டாவது விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் மனு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சமீபத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களிலும் அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை இது தொடர்பில் வெளிப்படுத்தியதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
தொழில் அமைச்சர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் இதுபோன்ற முடிவை எடுத்திருப்பது நீதியின் சட்டக் கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வர்த்தமானி அறிவிப்பை வலுவிழக்கச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தோட்டக் கம்பனிகள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது தொழிலாளர்களின் சம்பள விடயம் நீதிமன்றத்தில் இருந்த போதிலும் வர்த்தமானி அறிவிப்புக்கு அமைவாக மே மாதம் 21 ஆம் திகதி முதல் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்புக்கு உரித்தானவர்களாவர்.
2021ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் போதும் தோட்டக் கம்பனிகள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அப்பொழுது கோரப்பட்ட 1000 ரூபா சம்பள அதிகரிப்பு பின்னர் தொழிலாளர்களுக்கு கிடைத்தது. இதுவும் பெரும் இழுபறிகளுக்கு மத்தியிலேயே அவர்கள் இதனைப் பெற வேண்டியதாக இருந்தது.
ஏனைய தொழில் துறையை சார்ந்த தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் குறைந்த வருமானத்தைப் பெறுவதாக கம்பனிகள் குறிப்பிட்டிருந்தன. அப்போதைய காலகட்டத்தில் உதாரணமாக ஆடைத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 7,500 ரூபா முதல் 15,450 ரூபா வரையில் வருமானமாக கிடைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்தம் 1000 ரூபா சம்பளத்துடன் மாதத்தில் 25 நாட்கள் பணிபுரிந்தால் 25 ஆயிரம் ரூபா பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. தற்பொழுதும் அதே மனநிலையிலேயே கம்பனிகள் செயல்படுவதாக தொழிலாளர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாக இருந்தபோதிலும் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இப்பொழுதும் உறுதியாக உள்ளனர்.
சம்பள நிர்ணய சபையின் விதிகளுக்கு உட்பட்டதாக 45 வர்த்தக தொழிற்துறையைச் சார்ந்தவர்களுக்கு சம்பள நிர்ணய சபை சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளது.
பெருந்தோட்ட தேயிலை தோட்டத்துறை கடந்த 10 ஆண்டுகளில் 51,150 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் தொடர்பான மதிப்பீட்டுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டில் 34 ஆயிரம் மெற்றிக் தொன்னாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட தேயிலையின் அளவு 328,800 மெற்றிக் தொன்களாகும். 2020ஆம் ஆண்டில் 278,489 மெற்றிக் தொன்னும், 2023ஆம் ஆண்டில் 256,039 மெற்றிக் தொன்னுமாக வீழ்ச்சியடைந்ததாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் 2013ஆம் ஆண்டில் 319,700 மெற்றிக் தொன்னும் 2015ஆம் ஆண்டில் 306,900 மெற்றிக் தொன்னும் 2020 ஆம் ஆண்டில் 265569 மெற்றிக் தொன்னும், 2023 ஆம் ஆண்டில் 241,912 மெற்றிக் தொன்னுமாக வீழ்ச்சியடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி கண்டதனால் ஏற்பட்ட நஷ்டம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் 75 சதவீதத்துக்கு சமமானதாகுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக தேயிலை ஏற்றுமதி 24 சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேயிலைத் துறையின் ஏற்றுமதி குறித்தும் உற்பத்தி குறித்தும் இந்த விபரங்களை வெளியிட்டிருந்த போதிலும் அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.
ஊடகம் ஒன்றுக்கு இந்தத் தகவல்களை பேராதனை பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு காரணமான விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதுமாத்திரமன்றி இத்துறையுடன் தொடர்புபட்ட தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கும் இவர்கள் முழுமையான கவனத்தை செலுத்துவதன் மூலமே ஏற்றுமதித் துறையின் மூலமான வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பது பலரது அபிப்பிராயமாகும்.
அதற்கு தொழிலாளர்களின் நலன் மிக முக்கியமானதாகும். விசேடமாக இழுபறியற்ற நிலையில் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிடைப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
தற்பொழுது தோட்டங்களை நிர்வகித்த வரும் 21 கம்பனிகளின் குறைபாடுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க முடியாத கம்பனிகளின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் விவசாயம் மற்றும் பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தேயிலை சபைக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தோட்டக் கம்பனிகள், தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தரகு நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு தேயிலையை வழங்குவதாகவும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். நிறுவனங்கள் அதனை அதிக விலைக்கு விற்று வருமானத்தைப் பெறுகின்றன. இந்த தரகு நிறுவனங்கள் தோட்டக் கம்பனிகளின் மறைமுகமான பங்குடமையின் கீழ் செயற்படுகின்றன.
அவ்வாறாயின் இத்துறையின் மூலம் பெறப்படும் முழுமையான வருமானம் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும். 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் தோட்டங்கள் அரசாங்கத்தினால் தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட பின்னர் கம்பனிகள் சம்பாதித்த வருமானத்தை கணக்கிட்டுப் பார்ப்பது முக்கியமானதா என்பதும் கேள்விக்குறியாகும்.
ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட குழுக்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும். 1992ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தில் பிரதமராக இருந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோட்டங்கள் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட உடன்படிக்கை குறித்து அவர் அறிவார்.
இதனால் அவர் முன்னெடுத்திருக்கும் குழுக்கள் மூலமான நடவடிக்கை பெருந்தோட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பது பலரதும் கருத்தாகும். சமீபத்தில் மலையக தோட்டமொன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அனேக ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டதை அனைவரும் அறிவார்கள்.
குறிப்பிட்ட தோட்டம் பயிர்ச்செய்கையில் மாற்றத்தை மேற்கொள்ள முற்பட்டதுமன்றி தொழிலாளர்கள் விடயத்திலும் தான்தோன்றித் தனமாக நடந்தமையும் அதற்குக் காரணமாகும்.
இந்த விடயத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையிட்டு நீதிக்காக செயல்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது தோட்ட உற்பத்தியை ஏற்றுமதிக்காக எடுத்துச் செல்வது தடுக்கப்பட்டதால் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
சில ஊடகங்கள் பெரும்பாலும் பக்கசார்பாக செயல்படுவதாக சிலர் கூறுகின்றனர். இவர்களது இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு இந்த தொழில் துறையை சார்ந்த முன்னோடிகள் முன்வர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் உரிமை அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் போன்று அவர்கள் சார்ந்துள்ள தோட்டத் தொழில் துறை இன்று வீழ்ச்சி கண்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்துவது காலத்தின் தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
- ஏ.கே.எம். பிள்ளை