காலையில் அந்தப் பையனைக் கண்டது முதல் மலருக்கு மனசு கிடந்து தவிக்கத் தொடங்கியது. யார் அந்தப் பையன்? இவனை எங்கேயோ பாத்த மாதிரியிருக்கிறதே. ஆனாலும் யாரென்று தான் தெரியவில்லை. ஒன்றுக்குப் பத்துத் தடவைகள் அவனைப்பற்றி நினைத்துப் பார்க்கத் தொடங்கினாள். அப்போது தான் அம்மாவிடமிருந்து கோல் வந்தது. அதற்குமேல் அவளால் அவனைப் பற்றி நினைக்கவே முடியவில்லை.
“மலரு உங்கப்பா படுத்த படுக்கையாக கிடக்கிறாருடி. எதுக்கும் நீ ஒரு தடவை வந்திட்டு போம்மா. அவரைப் பார்க்கவே பாவமாயிருக்குதுடி. கைகால் இழுத்ததோடு இப்போ வாய்பேசவும் முடியல்லடி” சொல்லிவிட்டு அம்மா அழத் தொடங்கி விட்டாள்.
“சரிசரி அழாதம்மா” மலர் கொஞ்சநேரம் மௌனமாக நின்றாள். பிறகு “எப்படிம்மா அப்பாவுக்குத்தான் என்னைக் கண்டாலே ஆகாதே. நான் எப்படிம்மா வரமுடியும்?”
“என்னால் முடியல மலர் தனியாக் கிடந்து நான் என்ன பண்ணுவன் சொல்லு? உன்னைப் பார்த்தாலாவது மனசுக்கு ஆறுதலாயிருக்கும்மல்ல.”,
“நீ சொல்வது சரிதானம்மா அப்பாவைப் பார்க்கக்கூடாதென்று எனக்கென்ன வேண்டுதலா?” “அப்போ புறபட்டு வாயேன்.”
“என்னம்மா பேசிற நீ போன தடவை உன் பேச்சைக் கேட்டு நான் அங்கு வந்து பட்ட அவமானம் போதாதா? நான் செத்தாக் கூட இந்த வீட்டுப்பக்கம் நீ வரக்கூடாது ? என்றுதானே அப்பா கைக்குழந்தையோடு வந்த என்னை ஓட ஓட விரட்டினார். அதைக் கூட மறந்திட்டியா?”
“நீ சொல்வது சரிதான் மலரு. உடம்பில ஆட்டம் இருக்கும் வரையும் அப்படிதான் ஆடுவாங்க. உடம்பில் இயக்கம் கெட்டுப் போனா, அடங்கிக்கிடக்க வேண்டியதுதான். இப்போது அவரால் ஒன்றும் பண்ண முடியாது மலர். ஒருதடவையாவது நீ வந்திட்டுப் போம்மா.” அம்மாவின் கெஞ்சலில் மலர் விழியின் மனசு இளகி விட்டது.
“சரிம்மா அவரோடையும் பேசிப்போட்டு உனக்கு முடிவு சொல்லுறன் சரியா? நீ எதுக்கும் கவலைப்படாமல் தைரியமாயிரு.” அவள் போனை வைத்துவிட்டாள்.
அப்பாவுக்கும் அவளுக்கும் இடையில் அப்படி என்ன தான் வில்லங்கம்? இப்போ மலர்விழியின் மனசுக்குள் அந்தப் பழைய நினைவுகள் தான் ஓடி மறைந்தது.
அவளுடைய அப்பா ஒரு சாதாரண பள்ளிவாத்தியார் தான் ஆனால் எல்லா விடயங்களிலும் ரொம்பக் கண்டிப்பானவர். அம்மாவுக்குப் பரந்த மனசு. மலர் விழிக்கு ஒரு தம்பி அவன் டாக்டருக்குப் படிச்ச கையோடு லண்டனுக்குப் போய்விட்டான்.
மலர்விழிக்கு நர்ஸ் வேலை கிடைத்து. காலி பெரியாஸ்பத்திரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த விடயத்தில் வாத்தியாருக்குப் பெரிய சந்தோஷம் தான். இனி அவளுக்கொரு கல்யாணத்தைச் செய்து விட்டால் நிம்மதி என்று நினைத்தவர் மகளுக்கு மாப்பிளை பார்க்கத் தொடங்கிவிட்டார்.
அதற்கிடையில் மலர்விழியே ஒரு மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டாள் என்றது தான் அவருடைய கோபம்.
சரத் உண்மையிலேயே நல்ல பையன் மலர்விழி வேலைபார்க்கும் ஆஸ்பத்திரிலேயே அவனும் எக்கவுண்டனாக வேலை பார்த்து வந்தான்.
இருந்தும் அவன் என்ன சாதியோ? என்ன சமயமோ? என்ன குலம் கோத்திரமோ? என்று காரணம் சொல்லிச் சொல்லியே ஒதுக்கி விட்டார். மலர்விழி போராடிப் பார்த்துவிட்டு ஓர் நாள், அவர்முன் மாலையும் கழுத்துமாக அவனோடு வந்து நின்று போது, அவர் வெகுண்டெழுந்தார்.
அவளுடைய அந்தச்செயலை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அன்றைக்கு அவளை அடித்து உதைத்து வீட்டைவிட்டுத் துரத்திய மனுசன் அதன்பிறகு எக்காரணம் கொண்டும் அவளைப் பார்க்க விரும்பினாரில்லை.
அதை நினைத்து நினைத்தே அம்மா உருகிப்போனாள். திடீரென்று ஒரு நாள் அம்மாவுக்கு வருத்தம் கடுமை என்று கேள்விப்பட்டு, கைக்குழந்தையோடு வீடு தேடி வந்தவளை வீட்டு வாசல் படியைக் கூட மிதிக்க விடாமல் ஓட ஓட அவர் விரட்டிய போதுதான் மலர்விழியின் மனசு கல்லாய்ப்போனது.
உலகத்தில் நடக்காத தப்பையா அவள் செய்து விட்டாள்? இந்த லட்சணத்தில் மறுபடியும் அவர்முன் போய் நின்றால் என்ன நடக்குமோ? நினைக்கவே அவளுக்கு பயமாயிருந்தது.
அம்மா தான் பாவம் தனியாகக் கிடந்து அல்லாடுகிறாள். வாறது வரட்டும் எதுக்கும் ஒரு தடவை போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டியது தான். முடிவெடுத்து விட்டாள் அவள்.
அன்றைக்கு ‘டியூட்டி’ முடிந்து வீட்டுக்கு வந்ததும் எல்லா விடயத்தையும் சரத்திடம் சொல்லி விட்டு அவன் முகத்தைப் பார்த்தாள். பாவம் அவன் எந்த மறுப்பும் சொன்னானில்லை. ‘நீ போயிட்டு வா மலர் அம்மாவும் நானும் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வோம் தானே. நீ கவனமாகப் போயிட்டு வாம்மா” என சந்தோசமாக அவளை வழியனுப்பி வைத்தான் அவன்.
அவள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. அம்மா அனுப்பிய ஆட்டோக்காரன் வந்து அவளை ஏற்றிச் சென்றான். ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்குச் செல்ல சுமார் இருபத்தாறு கிலோ மீற்றரை கடக்க வேண்டும். இருபது வருசங்களுக்கு பிறகு வருகிறாள். அப்பாடா எவ்வளவு பெரிய மாற்றம்? இது நம்ம ஊர் தானா அவளால் நம்பவேமுடியவில்லை.
போகும் வழியெல்லாம் புதுப் புது மாடி வீடுகளும், கடைகளும், கோயில்களும் ஊரே மாறிப்போயிருந்தது. ஓட்டோக்காரனிடம் எல்லா விடயங்களையும் மலர்விழி விசாரித்துக்கொண்டே வந்தாள்.
“எல்லாம் சூறாவளிக்கும், சுனாமிக்கும் பிறகு முளைத்தவை தானம்மா. இடையில் யுத்தத்தால் தரைமட்டமாகி… இப்போ புதுசு புதுசா உருவாகின்றன.” என்றான் அவன்.
“பரவாயில்லையே ஊரைப்பார்க்கவே நல்ல எழுப்பமாயிருக்குதண்ணை” ஆட்டோக்காரன் சிரித்தான்.
போகும் வழியில் கடைசியாக ஒரு வீடு. நீலமும் வெள்ளையுமாகக் கலர் அடித்த அழகான இரண்டு மாடிக்கட்டிடம் “இது யாரோட வீடண்ணை?” மலர்விழிதான் கேட்டாள்.
இதுவா? உங்க அப்பாவோட அக்காமுறையாம் சரசக்கா என்றுதான் இங்கே எல்லோரும் கூப்பிடுவினம். அவங்களோட மாளிகை தான் இது.
மலர்விழியால் நம்பவே முடியவில்லை. அத்தனை அழகாக இருந்தது அந்த வீடு. “ஓ! சரசு மாமியோட வீடா?” மலர்விழி தன் வாயில் விரல் வைத்து வியப்பை வெளிப்படுத்தினாள். பிறகு அவள் ஏனண்ணை “மாமியோட பிள்ளைகள் யாரும் வெளிநாட்டில் இருக்குறானுகளோ?”
ஆட்டோக்காரன் சிரித்தான். மலர்விழிக்கு அவளின் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை அதனால் கேட்ட கேள்வியையே அவள் மறுபடியும் கேட்டாள்.
“எங்கம்மா வெளிநாட்டில, சரசக்காவுக்கு ரெண்டு பையன்கள் தானே மூத்தவன் என்னமோ ‘டூரிஸ்டுக் கைட்டாம்’ மற்றவன் படிக்கிறான் போல, அவையின்ர வீட்டுச் சங்கதியெல்லாம் நமக்கெதுக்கம்மா. சரி உங்கவீடு வந்தாச்சு இறங்குங்க மலர்” வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தினான் அவன்.
உள்ளேயிருந்து அம்மா தான் ஓடிவந்தாள். பல வருஷங்களுக்குப் பிறகு மகளைக் காண்கிறாள். “எப்படிடா இருக்கே?” அவளைக் கட்டிக் கொண்டு அழுதவள் நேராகத் தகப்பனாரிடம் அழைத்துச் சென்றாள்.
மலர்விழிக்கு முதலில் கைகால் எல்லாம் உதறல் எடுக்கத் தொடங்கியது. எல்லாம் ஒரு நிமிடம் தான். கட்டிலில் எலும்பும் தோலுமாய் பேச்சு மூச்சின்றி படுத்திருந்த அப்பாவைப் பார்த்ததும் மலருக்கு ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது. கைகால்கள் கூட இயங்காத நிலை. எவ்வளவு அட்டகாசமாக இருந்த மனுஷன் இப்படி அடங்கிப் போய்க் கிடக்கிறாரே. அந்த வேதனையைத் தான் அவளால் தாங்க முடியவில்லை. அவர், கால்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விடத் தொடங்கினாள் அவள்.
உணர்ச்சியற்ற மரக்கட்டையால் என்னதான் பண்ண முடியும்? ஒரு சின்ன எதிர்ப்பைக் கூடக் காட்டமுடியாமல் படுத்துக் கிடந்தவரின் கண்களில் இருந்துமட்டும் கண்ணீர் லேசாகக் கசிந்து கொண்டிருந்தது.
இது எதனால்? தன் இயலாமையை நினைத்து அழுகிறாரா? அல்லது இந்தக் கழுதையை வரக்கூடா தென்று சொல்லியும் வந்து விட்டாளே என்ற வெறுப்புணர்வா? அவளுக்கு ஒன்றுமே புரிய வில்லை. இப்போது அவள் அம்மாவைப் பார்த்தாள்.
இப்படித்தானம்மா ஒரே அழுதபடி இருக்கிறார். நான் என்ன பண்ணமுடியும்? அம்மா சொல்வதும் சரிதான். அப்பாவின் ‘மெடிக்கல்’ றிப்போட்களைப் படித்துப்பார்த்த பின் எல்லாவற்றையும் புரிந்து கொண்டாள். இனி ஒன்றுமே செய்வதற்கில்லையாம். டாக்டர்களும் கைவிட்டு விட்டார்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. இருந்தும் அவள் தன் மனத்திருப்திக்காக எண்ணெய் பூசுவது, மசாஜ் பண்ணுவது என்று ஏதேதோ செய்துகொண்டிருந்தாள்.
எப்படியோ ஊருக்கு வந்தும் இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. சரத்திடம் அப்பாவைப் பற்றிச் சொன்னதும் பரவாயில்லை மலர் எங்களைப் பற்றி நீ கவலைப்படாத, பிள்ளைகளை நாங்கள் கவனிப்பம். நீ அப்பாவைப் பார்த்துவிட்டு வா என்றான். அன்றும் அப்படித்தான் மலர் அப்பாவுக்குச் சேலைன் போட்டுக் கொண்டிருந்தாள். வெளியில் யாரோ அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருப்பது துல்லியமாகக் கேட்டது.
“என்னக்கா மலர்விழி வந்திட்டாள் என்று கேள்விப்பட்டன் மெய்தானா?”
“ஓம் சரசு அவள் வந்து ஒரு கிழமையாச்சு எத்தனை நாளைக்குதான் அவளும் இங்கு நிற்கேலும்” அம்மாதான் சரசு மாமிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதுசரி அவளால தானே அண்ணனுக்கு இந்தநிலை அவர் சொல்லைக் கேட்காமல் தன்ரை இஷ்டத்திற்குக் கலியாணம் செய்துகொண்டு, என்றைக்கு ஓடினாளோ அன்றைக்கே அண்ணண் உடைஞ்சுபோனான்.
எவ்வளவு கம்பீரமாக இருந்தவன், இண்டைக்கு இப்படி சுருண்டு போய்க்கிடக்கிறான். போலிக்குப் பெருமூச்சு விட்டாள் சரசுமாமி.
என்ன சொல்லி அவள் வாயை அடக்குவது என்று தெரியாமல் அம்மா மௌனமாக நின்றாள்.
சரி அக்கா, அண்ணைய ஒருக்கா பார்த்திட்டுப் போறன் என்றபடியே சரசுவதி உள்ளே நுழையவும் மலர்விழி மறுவழியால் வெளியே வரவும் சரியாக இருந்தது.
வெளியே வந்த மலர்விழி அம்மாவைப் பார்த்தாள். மகளின் மனவேதனை அவளுக்கு நன்றாகப் புரிந்தது.
நீ ஒன்றுக்கும் கவலைப்படாத மலரு கொட்டுறது தானே தேளுக்கு குணம் அதுமாதிரித்தான் சரசுவும் சொல்லுறதை சொல்லி விட்டும் போகட்டும்.
நீ பேசாமல் இரு மலர், என்று மகளைச் சமாதானப்படுத்தி விட்டு மலர் விழியின் அம்மா உள்ளே போய் விட்டாள்.
நாகராசாண்ணை ஓடிப்போன உன்ரமகள் உன்னைப் பார்க்கவாம் எண்டு வந்திருக்கிறாலெல்லே எழும்பி பாரண்ண. ஓடுகாலி என்று அடிக்கடி புலம்புவியே இப்போ வீடுதேடி வந்திருக்கிறாள். எழும்பண்ண எழும்பு… ஏதோ பாசமழையில் பேசுவதைப்போல் பேசிய வார்த்தைகளைக் கேட்ட மலர்விழியின் அம்மாவுக்கு வேதனை தாங்க முடியவில்லை.
இதெல்லாம் தேவையா? ஏன்தான் இப்படி மற்றவங்களின் மனசை வேதனைப்படுத்துகிறாளோ? என்று மனசுக்குள் நினைத்தபடியே. இரு சரசு நான் டீ ஊத்திக்கொண்டு வாறன் என்றாள்.
இல்லையில்லை நான் அவசரமாகப் போக வேணும். நீ டீ ஒன்றும் ஊத்தாத அதுசரி மலர்விழி எங்கபோட்டாள்? காணவேயில்லை வம்புக்கிழுப்பது போல் கேட்டாள் குளிக்கிறாள் சரசு. “சரி சரி ஊருக்குப் போகமுதல் வீட்டவரச் சொல்லு. என்ன அவளைக் கண்டும் பலவருஷ மாச்சுதல்லே. சரி நான் வாறன்” ஒரே மூச்சில் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து மலர்விழி ஊருக்குப் போக ஆயத்தமானாள்.
“சரி போயிற்று வா மலரு இரவில் உங்க சித்தப்பா மகன் சந்திரன் உதவிக்கு வருவான். பகல்ல வேளைக்காரப் பையன் இருக்கிறான் தானே? நான் சமாளிப்பேன். நீ கவலைப்படாமல் போயிட்டு வா மகள். அடுத்த தடவை வரும் போது குடும்பத்தோடு வா மலர்”
அம்மாவின் அன்பான வார்த்தைகளால், மலருக்கு மனசு குளிர்ந்து போனது. அந்த சந்தோஷத்தில் இருக்கும் போதே, மலரு போக முதல்ல “சரசு மாமியையும் ஒருக்கால் போய்ப் பார்த்திட்டுப் போம்மா” என்றாள் அம்மா. அவ்வளவு தான், மலருக்கு எல்லா சந்தோசமும் எங்கோ அடிபட்டுப் போனாற் போலிருக்கவே “ஏம்மா அவ இன்னும் என்னை அவமானப்படுத்த வேணுமென்று விரும்புகிறாயா?” அம்மாவைக் கேட்டாள் மலர்.
“இல்ல மலரு நீ வந்தும் வராமல் போயிட்டியே என்று ஆயுள் முழுவதற்கும் சொல்லிக்காட்டுவாள் மகள் அதுதான் சொல்லுறன். அவள் இப்போ பணத்திமிருல ஆடுறாள். என்ன பேசிறதென்றே தெரியிறதில்ல. மற்றவங்களை மனம் நோக வைப்பதும் கிண்டலடிப்பதுமே தான் அவளுக்கு கைவந்த கலையாயிற்றே. நீ ஒன்றும் பேசாமல் சும்மா ஒருதடவை போய் எட்டிப் பார்த்துட்டு வா அதுபோதும்.”
அம்மாவுக்காக அன்று மாலையில் சரசு வீட்டு வாசலில் போய் நின்றாள் மலர்விழி. வீட்டு கேட்டோடயே கோலிங் பெல்லை பூட்டியிருக்கிறார்கள். மனசுக்குள் நினைத்தப்படியே சுவிட்சை அழுத்தியதும் இரண்டாம் மாடியில் நின்றபடியே வெளியே எட்டிப் பார்த்தாள் சரசுமாமி.
“ஓ மலரா! வாம்மா வா” கீழே வந்து கதவைத் திறந்து வரவேற்றாள். விஸ்தாரமான முற்றம். உள்ளே பெரிய பூந்தோட்டம். வீடு பளிச்சென்றிருந்தது. அழகாக கோடிக்கணக்காயிருக்கும். வீட்டைப் பார்க்கவே மலருக்கு வியப்பாக இருந்தது.
மாமி உள்ளே அழைத்துச் சென்றாள். எப்படி மலரு வீடு நல்லா இருக்குதா? முகத்தில் பூரிப்புப் பொங்க மலரைப் பார்த்தாள் மாமி, “சூப்பராய் இருக்குது மாமி” சரசுவுக்கு பதில் சொன்னாள் மலர்விழி.
“ஓம் பிள்ளை எல்லாம் என்ர மூத்தவன்ர கைலாசுவின்ர உழைப்புத்தான் மலரு. சரியான கஷ்டப்பட்டுக் குடும்பத்தை நிமிர்த்திப்போட்டான்.” பார்த்தியே பெருமையாகச் சொன்னாள் சரசு மாமி.
“பிள்ளையள் உழைத்தால் சந்தோஷம் தானே மாமி.”
“ஓம் மலரு நீ உள்ளே போய் வீட்டைச் சுற்றிப்பார். நான் டீ ஊத்திக் கொண்டு வாறன் என்ன?”
மலர் சரி என்பது போல் தலையை ஆட்டினாள். தனியே இருக்க அவளுக்குப் பிடிக்கவேயில்லை. எனவே மாமி உள்ளே சென்றதும், மலர் கீழே இருந்தபடியே ஹோலைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினாள்.
நீலப் பெயின்ட் அடித்த சுவரில் நாலைந்து படங்கள் மின் விளக்கொளியில் அழகாகக் காட்சியளித்தன. கடைசியாக ஒரு படம், வெள்ளைக்காரன் ஒருத்தனோடு வாட்டசாட்டமான ஒரு இளைஞன் மிக நெருக்கமாக நின்றுகொண்டிருந்தான். படத்தைக் கூர்ந்து பார்த்த மலர்விழியின் மூளையில் மின்னலடித்தது. இந்தப்பையன்… சந்தேகமேயில்லை இவனேதான் அன்றைக்கு ஆஸ்பத்திரியில் சூட்டுக்காயத்தோடு ஒருவனை அழைத்து வந்தப் பையன் இவனேதான் இப்போது மலர்விழிக்குப் புரிந்து விட்டது.
சரசு மாமி டீக் கோப்பையோடு வெளியே வந்தாள். “என்ன மலரு படத்திலிருக்கிறது யாரெண்டு யோசிக்கிறாயா? இவன் தான் என்ர மூத்த மகன் கைலாசு… நீ இவனை எங்கே பார்த்திருக்கப் போகிறாய்?”
“ஓ! இவன் தானா மாமி அது? சரி இவன் எங்கே வேலை பார்க்கிறானென்று சொன்ன னீங்கள்?” அவன் நல்ல பெரிய வேலையில இருக்கிறான் மலர். வெளிநாட்டுகாரரோடு தான் வேலை” மாமியின் முகத்தில் பெருமை தெரிந்தது.
“கவனம் மாமி காலம் கெட்டுக் கிடக்கிறது. உங்கட நல்லதுக்குத்தான் சொல்லுறன்.” மலரின் வார்த்தைகளைக் கேட்டதும் சரசுவுக்கு ஒரு மாதிரியாய்ப் போய்விட்டது. “என்ன சொல்லுறாய் நீ? என்ர பிள்ளையென்ன பொய், களவா செய்கிறான்?” கோபத்தோடு கேட்டாள்.
“இல்ல மாமி நான் அப்படி சொல்லயில்ல. நம்மோட பிள்ளைகள் எங்க போகிறார்கள் யாரோட பழகுகிறார்கள்? எப்படி உழைக்கிறார்கள் என்றெல்லாம் பெத்தவங்க நாம தான் கவனிக்க வேணும். அதைத்தான் மாமி சொல்லுறன் வேறோன்றுமில்ல.”
மலர் சொன்ன பதிலில் ஏதோ உட்குத்து இருப்பதாக உணர்ந்தாள் சரசு. எனவே மறுபடியும் “இல்ல மலரு உன்ரபேச்சு எனக்கு சரியாகப் படயில்ல ஏன் இப்படி சொல்லுகிறாய் சொல்லுபார்ப்பம். இந்தக் காலத்துல எவன் எப்படி உழைக்கிறான் என்று கேட்டறிய வேணும் மாமி. கண்டவங்களையும் நம்பி வாழ்க்கையைச் சீரழித்து விடக்கூடாதல்லவா. மாமி கைலாசு நல்லாயிருக்கவேணுமென்ற நோக்கத்தில் தான் சொல்லுறன். சொன்னது தப்பென்றால் மன்னியுங்கோ மாமி.” பட்டும் படாமலும் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டாள் மலர்விழி.
ஒன்றுமே விளங்காமல் சரசு கொஞ்சநேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். அதுவரை நேரமாக உள்ளே படுத்துக்கிடந்தபடியே எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சரசுவின் புருஷன் வெளியே வந்து “ஏன்டி பைத்தியக்காரி அந்த ஓடுகாலி பொறாமையில் ஏதேதோ சொல்லிவிட்டு போறாளெண்டா அதைக்கேட்டு நீ மண்டை குழம்பியிருப்பியா.. போடி போய் தேத்தண்ணியைக் கொண்டுவா”
அதட்டியபடியே டீவியை போட்டவர் ஐயோ கடவுளே என்று கத்தியபடியே சரிந்து விழுந்தார்.
“என்னது.. என்னாச்சு.. ஏனப்பா இப்படிக் கத்திறியள்?” கணவன் கனகராசுவைக் கேட்டபடியே டீவியைப் பார்த்த சரசு, “உதென்னப்பா முருகா என்ற பிள்ளையைக் காப்பாத்தப்பா கதிர்காமக் கந்தா என் தலையை மொட்டையடிப்பன் தெய்வமே என்ர மகனைக் காப்பாற்றப்பா” கையெடுத்துக் கும்பிட்டபடியே அழுது புரண்டாள்.
அது வேறொன்றுமில்லை. பிரபல போதைவஸ்துக் கும்பலொன்றை பொலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர். செய்திக் குறிப்போடு கைலாசுவினதும் அவன் கூட்டாளிமாரினதும் படங்களும் ரீவியில் பெரிதாக ஓடிக் கொண்டிருந்தது.
இதுவரை நாளும் தம்பி உழைக்கிறான் என்று திமிரோடு திரிந்த சரசு, வேரறுந்த மரம் போல விழுந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். குற்றச்செயல்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுடைய உடமைகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படுவதோடு குற்றவாளிகள் மரண தண்டனைக்கும் ஆளாக்கப்படுவார்கள் என்ற செய்தி தொடர்ந்து கொண்டிருந்தது. அவனுடைய படத்தைப் பார்த்து கதறி அழுது கொண்டிருந்தாள் சரசு மாமி.