பெருந்தோட்டத் தொழில்துறையை இயற்கை வளத்துடன் கூடிய ஏற்றுமதி உற்பத்தி துறையாக மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்று சமகால பொருளாதார மற்றும் தொழிற்சங்க ரீதியிலான நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் ஜனாதிபதி குழுவின் உறுப்பினரும், இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளருமான எஸ். ஆனந்தகுமார் குறிப்பிட்டார்.
தற்பொழுது வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பெருந்தோட்டத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதேபோன்று இங்குள்ள மக்களின் நலன்கள் குறித்தும் விசேடமாக சிறுவர்களின் கல்வி தொடர்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த விஷேட பேட்டியில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கேள்வி : பெருந்தோட்டத்துறை 1867ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பமானது. அக்காலப்பகுதியில் தேயிலை உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன அதன்பின்னர் பெருந்தோட்டத் தொழில்துறையாக தேயிலை உற்பத்தி ஆரம்பமான நாள் முதல் 1971ஆம் ஆண்டுவரை குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் இத்தொழில்துறை அபிவிருத்தி கண்டது. ஆனால் இந்தக் காலப்பகுதியிலேயே காணி மறுசிரமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் இத்தொழில்துறையில் வீழ்ச்சி ஆரம்பமானதாக பலரும் தெரிவிக்கின்றனர். நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் இது காரணமாக அமைந்தது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
பதில் : இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதனை வரலாறு நன்கறியும்
கேள்வி : காணி மறுசீரமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து பெருந்தோட்டத் தொழில்துறையிலிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளானார்கள். தோட்டங்களை விட்டு வீதிக்கு வரும் நிலையை அவர்கள் எதிர்கொண்டனர். அதுமாத்திரமின்றி, இந்த தொழில்துறையும் சீர்குலைய ஆரம்பித்த பின்னணியைக் குறிப்பிட முடியுமா?
பதில் : இதற்கு அரசியல் மாத்திரமன்றி பல்வேறு பின்னணிகளும் இருந்தன. அதனை வரலாறு அறியும். அவை நடந்து முடிந்தவை. இருப்பினும் தற்போது ஜனாதிபதி இத்தொழிற்துறையை மீண்டும் ஏற்றுமதி பொருளாதார உற்பத்தி துறையாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கையின் கீழ் தரிசு நிலங்கள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.
கேள்வி : இந்த திட்டங்களை விபரிக்க முடியுமா?
பதில் : பெருந்தோட்டத்துறையில் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்காக ‘உறுமய’ திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் பேசும் தொழிலாளர்கள் தோட்டத்துறையில் 1 இலட்சத்து 15 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இதேபோன்று சிங்களத் தொழிலாளர்கள் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேர் இருக்கின்றனர். முன்னர் 7 பேர்ச் அளவுகொண்ட காணிகள் வழங்கப்பட்டன. அவற்றுக்கு காணி உறுதிகள் முறையாக வழங்கப்படவில்லை. தற்போது 10 பேர்ச் காணி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி இந்திய திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்பொழுதும் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. இந்த வீடுகளுக்கும் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேள்வி : இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் 1990 களுக்கு முன்னர் தேயிலை ஏற்றுமதி முதலிடத்தை வகித்தது. ஆனால் அது தற்பொழுது ஏற்றுமதி பொருளாதாரத்தில் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதைக் கூட இலகுவாக அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் என்ன?
பதில் : ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டத் துறை வீழ்ச்சிக்கு காரணம் அரசியல் நடவடிக்கைகளாக இருந்த போதிலும் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளப்படாமை முக்கிய காரணமாகும்.
கேள்வி : ஆங்கிலேயர் காலப்பகுதியில் தோட்டங்கள் முறையாக நிர்வகிக்கப்பட்டன. அவர்களின் காலப்பகுதியில் மலையகத்தின் இயற்கை அழகுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பெருந்தோட்டத் துறை அபிவிருத்தியை மேற்கொண்டனர்.
உதாரணமாக மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள நீர்வளங்களை பயன்படுத்தி தேயிலை தொழிற்சாலை இயங்குவதற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பெரும்பாலான தோட்டங்களில் தற்போது அந்த நிலை இல்லை.
இவர்களது காலப்பகுதியில் தோட்டங்களை பராமரிப்பதற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவது வழமை. இந்த நிதியினைக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை கண்காணிப்பதற்கும் அதிகாரிகள் இருந்தனர். ஆனால் இன்று அவ்வாறு இல்லை. இதனால் தான் தோட்டங்களில் சிறுத்தைகள் நடமாடுவதுடன் வண்டுகளும் தொழிலாளர்களை மாத்திரமன்றி குடியிருப்பாளர்களையும் தாக்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதை தோட்ட நிர்வாகக் கம்பனிகள் சில வங்கிகளில் கடன்களைப் பெற்று அதிகாரிகளை சந்தோஷப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. உரிய கவனம் செலுத்தியிருந்தால் இந்த நெருக்கடி நிலை உருவாகியிருக்காது அல்லவா?
பதில் : தோட்ட நிர்வாக சீர்கேடே இதற்குக் காரணம். சில தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் விசேடமாக தளபாட விற்பனையில் முன்னணியில் திகழும் தோட்டக் கம்பனியொன்று தோட்டங்களிலுள்ள மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்து வருகின்றது. இது தொடர்பில் நாம் கவனம் செலுத்திவருகின்றோம்..
கேள்வி : வருமானத்தை மாத்திரமே கருதி கம்பனிகள் செயல்படுகின்றன. தொழிலாளர் நலன்களிலும் அக்கறை செலுத்துவதில்லை. இந்த நிலையில் இத்துறையை மேம்படுத்த முடியுமா? விசேடமாக 1990ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தோட்டங்களை கம்பனிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தோட்டங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்குவதே சிறந்தது என, தூரநோக்குடன் தெரிவித்திருந்தார்.
இதற்குக் காரணம் பெருந்தோட்டத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு ரூபா நிதியல்ல அமெரிக்க டொலர்களே முக்கியமானது என்பதை நேரடியாக அவர் வலியுறுத்தியிருந்தார்.
விசேடமாக ஆங்கிலேயர் காலப்பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறிய தொழிற்சாலைகளை இவர்கள் மூடினர். அவற்றிலிருந்த பெரும்பாலான கூரைத் தகடுகள், பெறுமதிமிக்க இரும்பு முதலான பொருட்கள் விற்கப்பட்டன. இந்த சிறிய தொழிற்சாலைகளை அவர்கள் அமைத்ததன் நோக்கம், தேயிலையின் தரம் சர்வதேச ரீதியில் சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்கேயாகும். ஆனால் தற்போதைய நிர்வாகம் இந்த நிலைக்கு அப்பால் செயற்பட்டதனாலேயே உரிய தரமின்றி தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது..
காலையில் பறிக்கப்படும் கொழுந்து நீண்டநேரம் வெறுமனே தரையில் குவிக்கப்பட்டு நீண்ட தூரத்திலுள்ள பிரதான தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும் நிலையை இவர்கள் ஏற்படுத்தினர். இதனால் சர்வதேச ரீதியில் இலங்கை தேயிலைக்கான மதிப்பு வீழ்ச்சி கண்டமை ஒரு காரணமாகும். இவ்வாறான சீர்கேடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளனவா?
பதில்: இந்த விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
கேள்வி : தோட்டங்களில் சில நிர்வாகங்கள் கெடுபிடியாக நடந்து கொள்கின்றன. சமீபத்தில் இரத்தினபுரி பிதேசத்தில் தோட்டமொன்றில் தோட்டத் தொழிலாளி முகாமையாளரால் தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் இந்த மாவட்டத்திலுள்ள தோட்டங்களில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. இதற்கு மதுபான பாவனையும் காரணமாகும். இந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டமொன்றில் அத்துமீறி செயல்பட்ட வெளியாரின் நடவடிக்கையை இளைஞர்கள் தட்டிக் கேட்டதனால் தோட்டக் குடியிருப்புகள் தீவைக்கப்பட்ட சம்பவம் இரு வருடங்களுக்கு முன் நடைபெற்றது. இவற்றைத் தவிர்க்க வழியில்லையா?
பதில் : குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தோட்ட நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டனர். இதேபோன்று வைத்தியசாலையிலும் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரியவில்லை. நிர்வாகத்துக்கு சாதகமாக வைத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸார் ஆஜர்படுத்தப்பட்டு கலந்துரையாடினோம். இதன்போது இந்த விடயங்களை நாம் முன்வைத்ததற்கு அமைவாக பொலிஸ் மா அதிபர் சட்டநடவடிக்கைக்கு உறுதியளித்தார். இவ்வாறான சம்பவங்கள் இனியும் தோட்டப் பகுதிகளில் இடம்பெறக் கூடாது என்பதற்காக நாம் சிவில் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றோம்.
கேள்வி : தோட்டங்களிலுள்ள உள்ள தரிசு நிலங்கள் தொடர்பில் சமகால அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் என்ன?
பதில் : தரிசு நிலங்களைக் கொண்டு அபிவிருத்தி திட்டத்துக்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். ஒரு தோட்டத்தில் 10 ஏக்கர் காணி இருக்குமாயின் அந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அல்லது வருமானத்துக்காக காத்திருப்போர் ஒன்றிணைந்து இதற்கான திட்டமொன்றை சமர்ப்பிக்க முடியும்.
இது தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு எம்முடன் தொடர்புகொள்ள முடியும் தோட்டங்களில் அமைதியின்மைக்கு காரணம் தோட்ட நிர்வாகங்கள் முறையாக தொழில் வழங்குவதில்லை.
வருடத்தில் 300 நாட்கள் தொழில் வழங்க வேண்டும் என்ற நடைமுறை நீண்ட காலமாக இருந்தது. தொழிற்சங்கங்களின் கவனயீனத்தால் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவில்லை. வெளியிடங்களுக்கு தொழிலுக்காக தொழிலாளர்கள் செல்வது குறித்து அவர்களிடம் நேரடியாக கேட்ட போது தோட்டங்களில் இந்த 300 நாள் வேலை நடைமுறைப்படுத்தப்பட்டால் வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டிய அவசியமில்லை.
கேள்வி : தோட்டப் பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் காணி வழங்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தார். பல வருடங்களாகியும் சில பாடசாலைகளுக்கு இந்த காணிகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.
பதில் : இவற்றுக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார். இவ்வாறான பாடசாலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக விஞ்ஞானம், கணித பாட ஆசிரியர்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அவர் உறுதியளித்துள்ளார்.
கேள்வி : சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா திரும்பிய பல இந்திய வம்சாவளியினருக்கு இதுவரையில் அந்த நாட்டின் உரிமை வழங்கப்படவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 50 வருட காலமாகியும் பலரும் இந்த நிலையில் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து அந்த நாட்டுக்கு விஜயம் செய்யும் பல தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் இதுதொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பதில் : இதற்கு உரிய பகுதியினருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கேள்வி: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த தற்போதைய நிலை என்ன?
நாளாந்த சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என மே தினத்தன்று ஜனாதிபதி அறிவித்தார். அது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டது. தோட்டத்துறையுடன் சம்பந்தப்பட்ட தோட்ட கம்பெனிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த வர்த்தமானி தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் கடந்த 15ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இக்காலப்பகுதியில் எந்த தரப்பினரும் இது குறித்த ஆட்சேபனைகளை முன்வைக்கவில்லையென தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இந்த சம்பள அதிகரிப்பை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கொண்டுவருகிறார்.