கடந்த வாரத் தொடர்
நாட்பட நாட்பட அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை கரும் நிறமாக மாறி கொண்டிருந்தது. அதற்கான காரணம் அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் புறா வளர்ப்பவர்களின் கவலை அதிகரித்தது.
இடையில் யாரோ ஓருவர் உங்கள் புறாக்களை மிருக வைத்தியர் ஒருவரிடம் காட்டுங்கள் என்று ஒர் ஆலோசனை சொன்னார். இவர்கள் இருக்கும் ஏரியாவில் பறவை வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்பொழுது சைமன் சொன்னான். ‘‘அடுத்த தெருச் சந்தியில் சமரநாயக்க என்றொரு மிருக வைத்தியர் இருக்கிறார். அவரிடம்தான் என்னுடைய மாமா சோமபால வேலை செய்கிறார். அந்த டாக்டரிடம் ஓருக்கா காட்டுவோமா?” என்று கேட்டான். அவனது ஆலோசனை சரியென பாரூக்குக்கும், நௌபருக்கும் பட்டது. மறுநாள் காலை தங்களிடம் இருந்த நோய்வாய்ப்பட்ட புறாக்களை எடுத்துக் கொண்டு டாக்டர் சமரநாயக்கவிடம் போனார்கள். அவர் அவர்களுடைய புறாக்களை பரிசோதித்து சில ஆங்கில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அவற்றில் இவர்கள் நோய்வாய்ப்படும் புறாக்களுக்கும் கொடுக்கும் வழமையான ஒரு மருந்தும் இருக்கவில்லை. சமீப காலமாக தங்களுடைய புறாக்கள் நோய்வாய்ப்படுவதற்கு காரணமான அந்த தொழிற்சாலையின் புகை பற்றி சொன்னர்கள். அதைப்பற்றி அவர் ஒன்றும் சொல்லாமல் மருந்துகளை பார்மஸியில் வாங்கும்படி சொல்லி அனுப்பி விட்டார். சமரநாயக்க கொடுத்த மருந்து மூவரது புறாக்களுக்கு வேலை செய்யதாக தெரியவில்லை. அந்த புகைபற்றிய கவலை மூவரூக்கும் குறையவில்லை.
4
அந்தத் தொழிற்சாலை ஒரு பன்னாட்டு கம்பெனியால் நிர்வாகிக்கப்பட்டது. அவர்களைப் பாதிக்கும் தொழிற்சாலையின் அந்தப் புகை வெளி ேயற்றத்திற்கு எதிராக இந்தச் சாதாரணமானர்வர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை..
நௌபர் ஓர் ஆலோசனை சொன்னான். தன்னுடைய தூரத்து உறவினர் யூசுப் சாச்சா ‘‘இலங்கையன்” என்ற தமிழ் பத்திரிகையில் வேலை செய்வதாகவும், அவருடன் இது சம்பந்தமாகப் பேசி ஏதாவது எழுதச் சொல்வோமா? என்றும் அவன் பாரூக்கிடம் கேட்டான். அதுவொரு நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாள் பாரூக்குடன் நௌபர் அவனுடைய உறவினர் வேலை செய்யும் பத்திரிகை ஆபீஸுக்கு போனான். நல்லவேளையாக அவர் ஆபீஸில் இருந்தார். அவரிடம் தங்களுடய பிரச்சினையைச் சொன்னார்கள். அவரும் நிதானமாகக் கேட்டார். ‘‘நீங்க போங்க நான் எழுதுகிறன்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். அவர் பேசிய விதத்தில் அவர் நிச்சயமாக எழுதுவார் என்ற நம்பிகை ஏற்பட்டது. அவர் சொன்னது போல் அந்தப் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் அவருடைய பேரில் எழுதாது முல்லா என்ற பேரில் புறாக்களுக்கு அந்தத் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்பை எழுதி இருந்தார். அக்கட்டுரையில் அவர்களின் ஒழுங்கை அமைந்திருந்த பிரதான வீதியின் படத்தையும் போட்டு இரண்டு புறாக்களின் படங்களைப் போட்டு, அந்தத் தொழிற்சாலையிலிருந்து புகை வெளியேறும் படத்தையும் போட்டு அக்கட்டுரையை எழுதி இருந்தார்.
அக்கட்டுரையை போட்டதையிட்டு நன்றி சொல்ல அடுத்த கிழமை அவரைச் சந்திக்கப் போனபொழுது அவர் இருவருக்கும் அந்தக் கட்டுரை வெளிவந்த பத்திரிகையின் பிரதிகள் இரண்டை கொடுத்தார். இன்னொரு பிரதியையும் கேட்டு எடுத்து கொண்டார்கள். சைமனுக்கு கொடுக்க. ஆர்வம் தங்காது நௌபர் அவரிடம் ‘‘ஏதாவது நடவடிக்கை எடுப்பாங்களா சாச்சா” என்று கேட்டான். ‘‘ஓ. ஓ. நாங்கள் அது சம்பந்தமாகத் தொடர்பில் இருக்கிறோம்.” என்று சொல்லி “நாங்கள் நடுநிலையான பத்திரிகைதானே ஓரு பிரச்சினையின் இரண்டு பக்கத்தைப் பார்ப்போம்”. என்றார். பின் ‘‘அந்தக் கம்பெனியின் தன்மையை விளக்கும் அந்தக் கம்பெனி கொடுத்த ஒரு விளம்பரமும் அடுத்தகிழமை எங்கட பேப்பரில் வெளி வருகிறது. எனச் சொல்லி அடுத்தகிழமை வெளிவரும் அந்தக் கம்பெனியின் விளம்பரத்தைக் காட்டினார். இருவருக்கும் சற்று ஏமாற்றமாக இருந்தாலும், ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்தார்கள். அவர்களின் சாச்சா சொன்னார் அடுத்த வாரம் வா நௌபர் அந்தப் பேப்பரை தாரேன் அப்போ உங்களுக்கு அந்தக் கம்பெனியை பத்தி தெரியும்” என்று அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார். அவர்களுடன் வராத சைமனிடம் நடந்தைச் சொல்லி கையோடு கொண்டு அந்த கட்டுரை வெளிவந்த பேப்பரையும் கொடுத்தார்கள்,
அந்ந கட்டுரை வெளிவத்த இரண்டு நாளுக்குப் பிறகு கடைக்குப் போய் வந்தவுடன் ‘‘வீட்டுக்குக் கொஞ்சம் வந்துட்டு போ” என்று பாரூக் போன் பண்ணிச் சொன்னான். புறா விசயமாகத்தான் இருக்கும் என்று முடிவுடன் பாரூக் வீட்டுக்குப் போனான். அங்கு சைமனும் இருந்தான். எல்லோரும் பாரூக்கின் மொட்டை மாடியில்தான் இருந்தார்கள். அங்கு. ஒரு பெண்ணும், கேமேராவுடன் ஒரு இளைஞரும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நௌபரையும் சைமனை அறிமுகப்படுத்தி அவர்கள் அரசு சாரா அமைப்பான NGO ஒன்றிலிந்து வந்திருப்பதாகவும், பாரூக் சொன்னான். சமீபத்தில் இலங்கையன் பத்திரிகையில் வெளிவந்த தங்கள் புறாக்களைப் பற்றிய கட்டுரையைப் பாரத்ததாகச் சொன்னான். சாச்சா எழுதிய கட்டுரையால் ஏதோ பயன் ஏற்பட்டிருக்கிறது என்று எண்ணினான் நௌபர். அந்த இளைஞர் சிங்களத்திலும், அந்த பெண்மணி தமிழிலும் மாறி மாறிக் கேள்விகள் கேட்டு அவர்களின் புறா சம்பந்தமான பிரச்சினைகளைத் தெரிந்து கொண்டதோடு. அந்தத் தொழிற்சாலையால் வெளியேறும் புகையால் அவர்களது புறாக்களுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றியும் தெரிந்து கொண்டதோடு கையில் கொண்டு வந்த கேமேராவால் பாரூக்கின் கூட்டைப் பல கோணங்களில் படமும் எடுத்தான். இதெல் லாம் எதற்கு? என்று பாரூக் கேட்டதற்கு அந்தத் தமிழ் பெண் ‘‘புறாக்களை பற்றியும் தொழில்சாலைகளால் புறாக்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் உலக சுகாதார நிறுவனத்திற்காக செய்யும் ஆராய்ச்சிக்கான ஒர் ஆவணத்தைத் தயாரிக்க” என்றாள். மூவருக்கும் அந்தப் பெண்மணி சொன்னது கொஞ்சம் புரிந்தும் புரியாத மாதிரியும் இருந்தது. மூவருக்கும் எது எப்படியானாலும் தங்கள் புறாக்களுக்கு நல்லது நடந்தால் போதும் என்று இருந்தது. அதற்குப் பிறகு அந்த ஆராய்ச்சிக்கு, ஆவணத்திற்கு, என்ன நடந்தது? என்று அந்த மூவருக்கு தெரியவில்லை. ஆனால் அந்த ஆவணம் அந்த அரச நிறுவனத்தின் ஆராய்ச்சி சஞ்சிகையில், பேராசியரின் ஓருவரின். பேரில் ஓர் ஆராய்ச்சி கட்டுரையாக வெளிவந்தது என்பதை. அவர்கள் மூவரும் அறிந்திருக்கவில்லை,
5
பாரூக், சைமன், நௌபர் மூவரும் அந்தத் தொழிற்சாலையின் புகையிலிருந்த தங்கள் பறாக்களை காப்பாற்றும் முயற்சில் தொடர்ந்தும் ஈடுப்பட்டார்கள்.
ஏதோ யோசனையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான் நௌபர். புறாக்கள் இறங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்று எந்தச் சேதாரமுமின்றி புறாக்கள் இறங்க வேண்டும் என மனதில் பிரார்த்தித்து கொண்டு தன் புறாக்களை தேடி வானத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டு வந்தவன் பாரம் சுமந்து முன்னால் வந்து கொண்டிருந்த வண்டியைக் கவனிக்கவில்லை. வண்டி நேராக அவனது முழங்காலை இடித்து நின்றது. வண்டிக்காரன் நிதானமிழந்து. வண்டியில் கொண்டுவந்த பொருட்கள் சிலதும் கீழே சரிந்தன. நௌபரும் இடிந்துப் போய் ”அல்லாஹு” என அலறி நடுத்தெருவில் உட்காந்து விட்டான், இடித்த வண்டிக்காரன் ‘ஏ தம்பி கீழே பார்த்து வரத்தெரியாதா? என்ற கோபத்துடன் காத்தினான்.
பிறகு கீழே விழுந்து கிடந்த பொருட்களைப் பொறுக்கி வண்டியில் அடுக்கினான். நௌபர் சுதாகரித்து கொண்டு எழுந்தான். தவறு தன் மீதுதான். தான் புறாக்களை வானத்தில் தேடி அண்ணார்ந்து பார்த்ததன் வினை அதுவெனப் புரிந்துகொண்டான். பெரிதாகக் காயம் ஒன்றுமில்லை சிறிய உராய்வுதான். மூட்டில் சிறிய அடி. அதனால் நொண்டிக் கொண்டு தெருவின் ஓரமாக வீட்டை நோக்கி நடந்தவாறே புறாக்களுக்கு ஏதும் நடந்து விடக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் மீண்டும் வானத்தை அண்ணார்ந்து பார்த்த பொழுது புகை கக்கிக் கொண்டிருந்த தொழிற்சாலை பக்கம் சில புறாக்களுடன் தன்னுடைய ஈஜிப்ஸன் வகை புறாவும் போய்க் கொண்டிருந்ததை கண்டான். மெல்ல மெல்ல அந்தப் புகை மூட்டத்தில் அந்தப் புறாக்கள் காணாமல் போயின.
மேமன்கவி