இராமாயண காவியத்தில், அரைவாசிக்கும் மேலான நிகழ்வுகள் இடம்பெற்ற இலங்கையில் அக்கதையோடு தொடர்புடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல காணப்படுகின்றன. நுவரெலியாவில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயம் உலகம்முழுவதுமுள்ள இராம – சீதா பக்தர்களால் அறியப்பட்டதொரு வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இராமாயணத்தில் குறிப்பிடப்படும் அசோக வனம் அமைந்த இடமாக நுவரெலியா சீதா எலிய பிரதேசம் காணப்படுகின்றது.
சீதையை இராவணன் சிறை வைத்த இடமாகவும் சீதை நடமாடிய, நீராடிய பிரதேசங்களாகவும் அசோக வனம் விளங்குகின்றது. சீதையின் புகழ் கூறும் சீதையம்மன் ஆலயம் அங்கு அமைந்திருப்பது மலையகத்துக்கும் புகழ் சேர்ப்பதாகும்.
அந்த வகையில் இவ்வருடம் அயோத்தியில் இராமர் ஆலய மகாகும்பாபிஷேகம் இடம்பெற்று இராம பக்தர்களை பரவசப்படுத்தியது போன்று இலங்கையில் சீதாதேவி எழுந்தருளியுள்ள நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திலும் இன்று 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கடந்த 30 வருட காலப்பகுதியில் பாரிய அபிவிருத்தியையும் சர்வதேச மட்டத்திலும் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக ஸ்ரீ சீதையம்மன் ஆலயம் உருவாகியுள்ளது.
இராமாயணத்தில் குறிப்பிடுவது போன்று சீதையை சிறை வைத்த இடமாகவும், ஆஞ்சநேயர் இராமனின் கணையாழியை கொண்டு வந்து சீதா பிராட்டிக்கு கொடுத்த இடமாகவும் இந்த ஆலயம் விளங்குகின்றது.
இவ்வருடம் அயோத்தியில் பால இராமர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து இந்த ஆலயத்தை நோக்கி இந்திய உல்லாசப் பயணிகள் அதிகளவில் படையெடுத்து வருவதை காண முடிகின்றது. நுவரெலியா, வெலிமடை வீதியில் 6 கிலோ மீற்றர் தூரத்தில் வீதிக்கு அருகாமையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 6200 அடி உயரத்தில் உள்ள நுவரெலியா நகரில் இது அமைந்திருந்தாலும் மத்திய, ஊவா மாகாணங்களை இணைக்கின்ற ஒரு நிலமாகவும் இது இருக்கின்றது.
ஆரம்ப காலத்தில் இங்கே அசோக மரங்கள் சூழ்ந்திருந்ததாக சொல்லப்பட்டாலும் இன்றும் இந்த பகுதியில் ஒரு சில இடங்களில் அசோக மரங்கள் இருப்பதை காண முடிகின்றது. இதன் காரணமாக இந்த இடமானது அசோக வனம் அல்லது அசோக் வட்டிக்கா என்ற பெயர்களில் பிரபலமாகியிருக்கின்றது.
இதிகாச கால வரலாற்று பின்னணியில் அமைந்த இவ் ஆலயம் பாரத மக்களால் நன்கு அறியப்பட்ட காவியங்களில் ஒன்றான இராமாயண காலத்தை நினைவூட்டுகின்றது.
இராமனின் துணைவியான சீதையை இலங்காபுரி வேந்தனாகிய இராவணன் கடத்தி புட்பக விமானம் மூலம் இலங்காபுரியில் அசோகவனத்தில் சிறைவைத்தான். இதுவே இராமாயண காதை உருவாகவும் காரணமாயிற்று
அந்த அசோகவனமே சீதா எலிய என்ற கிராமமாக இன்று பெயர் பெற்று விளங்குகின்றது.
இவ் அசோக வனத்தில் ஓடும் சிற்றோடைக் கரையில் கோயில் கொண்டு அருள் பாலிப்பவளே ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அவதாரமாகிய சீதையம்மன். சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இவ்வாலயம் ஆரம்பத்தில் மிகச்சிறிய ஆலயமாக இருந்து நாடிவரும் அடியார்களுக்கு அருளாட்சிபுரியும் திவ்விய தலமாக விளங்கியது. இவ்வாலயத்தின் பொறுப்பாளர்களாக விளங்கிய ஆர்.பி.பூட்டானி, கே.எஸ்.அருளம்பலம், எஸ்.மாணிக்கவாசகர் ஆகியோர் கோவில் அமைப்பதற்கு 1918ஆம்ஆண்டு 32 பேர்ச் காணியை குத்தகை அடிப்படையில் வாங்கியிருந்தனர்.
1927 வரை குத்தகை செலுத்தப்பட்டு வந்த இக்காணி 1965ஆம் ஆண்டு ஆவெலியா ஸ்ரீ முத்துமாரியம்மன், சீத்தா எலிய சீதையம்மன் ஆலய பரிபாலன சபையிடம் சட்டபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு அரசாங்க வர்த்தமானியின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாலயத்தை புனர்நிர்மாணம் செய்ய வேண்டுமென தீர்மானிக்கப்பட்டு இதனை செயற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இவ்வாலயத்தின் பரிபாலன சபையின் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் செயலாளர் ஏ.சந்திரன், எம்.செல்லையா, பொருளாளர் கரு.சுப்பிரமணின் ஆகியோரின் அயராத முயற்சியினாலும் ஆலய நிர்வாக சபையினதும் காப்பாளர்களினதும் ஒத்துழைப்புகளினாலும் 19.03.1998 அன்று வியாழக்கிழமை பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.
இவ்வாலயத்தின் புனர்நிர்மாண பணிகளை செவ்வனே செயற்படுத்துவதற்கு தடையாக பல எதிர்ப்புகள் எழுந்தன. 1998ஆம் ஆண்டு நுவரெலியா கச்சேரியில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மதகுருமார்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இவ்வாலயத்தை புனரமைப்பதற்கு எதிர்ப்புகள் பல தோன்றிய போதும் முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், முத்துசிவலிங்கம் எம்.பி, ஆகியோர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமது அரசியல் பலத்தின் மூலமாக நல்ல தீர்வினை பெற்றுத் தந்தனர். அத்துடன் தமது முழுமையான ஆதரவினை நல்கியதோடு ஆலய வளர்ச்சிக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கும் தமது பங்களிப்பை நல்கி வந்தார்கள்.
குறுகிய காலப்பகுதிக்குள் ஆலயத் திருப்பணிகள் நிறைவுபெற்று ஆலயத்தின் முதல் கும்பாபிஷேக நிகழ்வு 26.01.2000 அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது. இவ் வாலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் 2008.01.28 அன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. இம் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கலந்து சிறப்பித்ததோடு பல வெளிநாட்டு பிரமுகர்களும், உள்ளுர் பக்த அடியார்களும் கலந்து சிறப்பித்தனர். இவ்வாலய புனருத்தாபன பணிகளுக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது அமைச்சின் மூலமாகவும் இந்து கலாசார திணைக்களத்தின் மூலமாகவும் ஆலய பக்தர்களினதும் வர்த்தக பெருமக்களினதும் நிதி உதவியினாலும், பொருள் உதவியினாலும், ஆலயத் திருப்பணி வேலைகள் செவ்வனே நிறைவேறின. ஆலயத்தின் அருகில் ஓடுகின்ற நீரோடையில் சீதாதேவி ஸ்நானம் செய்ததாகவும் நீரோடைக்கு மத்தியில் பாறைகளுக்கு இடையில் ஓர் சுரங்கப்பாதை போன்ற சிறு வாயில் காணப்பட்டதாகவும், இதன் மேற் பகுதியில் சீதாதேவி வெள்ளை, சிவப்பு நிற மலர்களை தினமும் ஸ்ரீ இராமபிரானை நினைத்து நீரில் வீசுவதாகவும்ட மறு புறம் வெள்ளை நிற மலர் முதலில் வர சீதாதேவி அதனை மகிழ்வோடு எடுத்து தன் நாயகன் தன்னை வந்து அழைத்து செல்வாரென்று உறுதியுடன் உளமகிழ்ந்திருப்பார் எனவும் கம்பர் பாடுகின்றார். இங்கு வரும் அடியார்களும் இவ்வாறு பூக்களை வீசி தாம் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைப்பதற்காக அதனைத் தொடர்வது ஐதீகமாகும். 1977ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தினால் இவ்விடத்தின் சுரங்க வாயில் மூடப்பட்டு விட்டதாகவும் பக்தர்கள் கூற கேட்கலாம். இவ் அற்புதமும் சீதாதேவியின் மகிமையினை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 3ஆவது கும்பாபிஷேகமானது 18.05.2016 அன்று நடைபெற்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்த ஆலய பரிபாலன சபைக்கு தலைமை தாங்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஸ்ணன் ஆலயத்தை ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதை குறிப்பிட வேண்டும். அதற்கு நிர்வாக சபையின் ஆயுட் காப்பாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் முழுமையான பங்களிப்பை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான்காவது கும்பாபிஷேகத்தின் விசேடம் என்ன?
கீழ் வரும் புனிதப் பொருட்கள் பாரத பூமியிலிருந்து கொண்டு வரப்படுகின்றன; 1000 பேருக்கு அயோத்தி பிரசாதம், முதல் முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 5000 லட்டுகள், இராமாயண கதைகூறுவோரால் நெய்யப்பட்ட பருத்தி புடவை , விசேட விருந்தினர்களுக்கான பொதி செய்யப்பட்ட பிரசாதம் 40, 2 செப்பு கும்பங்களில் புனித கங்கை மற்றும் புனித நதிகளில் பெறப்பட்ட புனித நீர், சீதைக்கு அணிவிப்பதற்கான இரண்டு காற் சிலம்புகள், வெள்ளியால் செய்யப்பட்ட 16 மெட்டிகள், சீதைக்கு அணிவிப்பதற்கான தலைக்கிரீடம், 25 லீற்றர் சரயு நதி தீர்த்தம், கோயம்புத்தூர் நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 கலசங்களோடு முதன் முறையாக ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்திற்கான உற்சவ மூர்த்தியும் கொண்டுவரப்படுகின்றது.
இந்நிகழ்வுக்கு வருகை தரும் விசேட விருந்தினர்கள் வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி, கோயம்புத்தூர் ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள், பிரதமர் தினேஷ் குணவர்தன, கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மத்திய பிரதேச முன்னாள் நிதி அமைச்சர் ஜெயந்த் குமார் மல்லையா, மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிஸ்னோய், உலக இராமாயண அமைப்பின் அழைப்பாளர் பாலா வெங்கடேஸ்வரராவ், இராம ஜென்ம பூமியின் தீர்த்த சேத்திரா டிரஸ்ட் உறுப்பினர்கள், என இன்னும் பலரும் கலந்து சிறப்பிக்கின்றார்கள். அயோத்தியில் குடி கொண்டுள்ள பால இராமர் செதுக்கப்பட்ட கல்லில் இருந்து பெறப்பட்ட ஒரு சிறிய புனித கல்லும் கொண்டு வரப்படுகின்றது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொண்டு அருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தினகரன் எஸ்.தியாகு