Home » புறாவின் தோழன் நௌபர்

புறாவின் தோழன் நௌபர்

by Damith Pushpika
May 12, 2024 6:00 am 0 comment

1

வழமை போல் காலையில் விழித்ததும் முதல் வேலையாகப் புறாக் கூட்டைப் பார்க்கப் போனான் நௌபர். ஏலவே விழித்துக் கொண்ட உம்மா குசினியில் தேத்தண்ணி தயார் செய்து கொண்டிருந்தாள்.

நௌபர் புறாக்கள் வளர்ப்பதற்கு அவள் எந்த விதமான ஆட்சேபணையும் தெரிவிப்பதில்லை, ஆனால் அவனை வேலைக்கு நேர காலத்துடன் அனுப்புவதில் தீவிரமாக இருந்தாள். நௌபருக்கு 15 வயதாக இருக்கும்பொழுது அவனது மாமா கபூர் புறா வளர்ப்பதில் மிகத் தீவிரமாக இருந்தவர் என்பது இவனுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஆரம்பத்தில் மாமா புறாக்களுக்காகப் பலகையால்தான் கூடு வைத்திருந்தார். பலகையால் செய்து வைத்திருக்கும் கூட்டில் புறாக்கள் வளர்ப்பது பாதுகாப்பானதாக இருக்கவில்லை. பலகையால் செய்த கூடுகளைப் பூட்டுப் போட்டு பூட்டிவைத்திருந்தாலும், நடு இரவில் கீரிகள் பலகைக் கூட்டை உடைத்து புறாக்களை சாப்பிட்டுவிட்டுப் போய்விடும். பகல் நேரங்களில் காகங்கள் புறாக்களை கொத்திக் கொண்டு போய் விடும். இப்படிதான் மாமாவின் நல்ல பல புறாக்களை கீரிகள் சாப்பிட்டுவிட்டுப் போன சம்பவங்களை நாநா யூசுப் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தான் நௌபர்.

பின்வந்த நாட்களில் மாமா கம்பிகளாலும் தடிப்பான தகரத்தால் பெரிய கூட்டினை செய்து எடுத்தார். சுற்று வட்டாரத்தில் புறாக்கள் வளர்க்கும் பாரூக் சைமன் போன்றவர்களும் அவ்வாறான கூடுகளை செய்து எடுத்துக் கொண்டார்கள். மொட்டை மாடியில் கூடு வைத்து புறாகள் வளர்ப்போருக்கும் கீரியாலும், காகங்களாலும் புறாக்களுக்கு ஆபத்து இருந்தது. அவை தரை வழியாக மட்டுல்லாமல் கூரை வழியாகவும் வந்து விடும். அதனால் பாரூக் போன்றவர்களும் தங்களின் புறாக்களின் கூடுகளை நௌபரின் மாமா கட்டிய கூடுகள் போலக் கட்டிக் கொண்டார்கள்.

அப்பொழுது மாமா அவர்களின் வீட்டில் தான் இருந்தார்.. கடைசி வரை அவர் திருமணம் முடிக்காமலே இருந்தவர். அவருக்கு குடும்பம் என்ற ஒன்று இருக்கவில்லை, நௌபரின் குடும்பம்தான் அவரது குடும்பம், உம்மாவை வளர்த்தவர். பெட்டாவில் ஒரு கடையில் வேலை செய்து அதில் வந்த பணத்தில் பக்கத்து ஓழங்கையில் ஓரு சின்னதாய் வீடு வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார். கைச் செலவு போக, அவரது வருமானத்தில் பெரும் பங்கை புறாக்கள் வளர்ப்பதில் செலவழித்தார்.

அவர்கள் இருந்த வீடு அமைந்த ஒழுங்கை 30- – 40 குடியிரூப்புகள் கொண்ட ஒழுங்கையாக இருந்தது, வேறு இனத்தவர்களும் வசித்து வந்தார்கள்.

அந்த நௌபர் குடும்பத்தினர் வசித்த வீடு அமைந்த ஒழுங்கைக்கு அருகே பிரதான பாதையிலிருந்து உள்ளே வரும் பொழுது நௌபர் இருந்த வீட்டின் சுவரின் இடது பக்கத்தில் அமைந்திருந்த மூலையில்தான் மாமா புறாக்கள் வளர்க்கும் கூட்டை வைத்திருந்தார். அப்போது எல்லா வீடுகளும் பலகையால் அமைக்கப்பட்டவை. காலபோக்கில் அந்த வீடுகள் கல் வீடுகளாவும், கல்லால் செய்த மாடி வீடுகளாவும் மாறி விட்டன.

மாமா புறாக்களுடன் வேலை செய்யும் பொழுது இவன் அவதானித்து கொண்டிருப்பான். மாமாவுக்கு வயதாக நௌபரின் நாநா யூசுப்புக்கு புறா வளர்ப்பை சொல்லிக் கொடுத்ததை இவன் கவனித்து வந்தான். அப்பொழுது நௌபர் எட்டாம் வகுப்புப் படித்து கொண்டிருந்தான். அவன் பாடசாலை போகும் காலத்தில் புறாக்கூட்டின் பக்கம் அவன் வருவதை மாமா தவிர்த்து வந்தார்.. அவன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினார். காலக்கிரமத்தில் புறா வளர்ப்பை நௌபரின் நாநா யூசுப் கையில் கொடுத்து விட்டார். சிறிது காலத்தில் மாமா மவுத்தாகி விட, யூசுப் மாமாவைப் போல் புறா வளர்ப்பில் கவனம் செலுத்தினான்.

நௌபர் புறா வளர்ப்பதை உம்மாவும் தடுக்கவில்லை. தன் நாநாவின் ஆசையை தன் மகன் நிறைவேற்றி வைக்கிறான் என்ற திருப்தியில் இருந்தாள். ஆனால் வேலைக்கு போவதற்கு நௌபர் அசட்டையா இருந்தாலோ முணுமுணுப்பாள்.

காலப்போக்கில் யூசுப்புக்கு நல்லதொரு இடத்தில் உம்மா கல்யாணம் பேசி வைத்தாள். யூசுப் கல்யாணம் முடித்த சிறிது காலத்திற்குள் சிறிது சிறிதாக புறா வளர்ப்பில் கவனத்தை குறைக்க.. மெது மெதுவாக நௌபர் முழுமையாக அப்பணியினை எடுத்து கொண்டான்.

புறா வளர்ப்புப் பற்றி மாமாவை பார்த்து கற்றுக் கொண்டதும், நாநாவிடமிருந்து நேரடியாகக் கற்றதும் புறா வளர்ப்பதில் அவனுக்கு ரொம்பவும் பயன்பட்டது.

புறாக்கள் வளர்ப்பதென்பது ஒரு கலை. மாமா கபூரிடமிருந்து நாநா யூசுப் கூட்டைப் பொறுப்பெடுத்த பொழுது பாகிஸ்தாஸ் பொட்ட ஜோடி ஒன்றும் இந்தியா பொட்ட ஜோடி ஒன்றும் மற்றும், ஈஜீப்ஷன் வகைச் சார்ந்த ஜோடி ஒன்றும், மேலும் சாதாரண வகை புறாக்கள் சிலதுகளும் என்று நாநா விடமிருந்து புறாக் கூட்டை இவன் பாரமெடுத்த பொழுது கூட்டில் இருந்தன. மாமாவும் நாநாவும் ஏலவே கூடு பழக்கிய புறாக்களும் இருந்தன. கூடுகள் பழகிய புறாக்கள் என்றால் அவற்றை காலையில் திறந்து விட்டால் இருளுக்கு முன் தனக்குரிய கூடுகளுக்கு இறங்கி விடும் என்பதுதான்..

புறாக்கள் வளர்ப்பவர்கள் சில வகை புறாக்களை ரொம்வும் நேசிப்பார்கள். குறிப்பாக பாகிஸ்தான் இந்தியா ஈஜீப்ஸன் வகை புறாக்களை மிக பிரியமாக வளர்ப்பார்கள். அவற்றின் விலைகளும் அதிகம்.

2

நௌபரின் கூடு அவனது வீடு இருந்த சுவருக்குப் பின்னால்தான் இருந்தது, இவன் வீட்டு ஹோலில்தான் தூங்குவான். அக்கூட்டிலிருந்து இரவு நேரத்தில் மெல்லிதாய் ஓலிக்கும் புறாக்களின் உருமலை ரசித்த படி தூங்கினாலும், இன்று மாலையில் காயப்பட்ட நிலையில் அவனது கூட்டுக்கு வந்து இறங்கிய பெண் புறா யாருடையது எனத் தெரியாமல் புறாவைப் பற்றி யோசித்தபடியே உறங்கிப் போனான்.

புறாக்களின் நினைவுகளில் தூங்கி எழுந்தான் நௌபர், இவன் வேலைக்குப் போகும் முன் சாப்பிடுவதற்கு உம்மா தயாரிக்கும் இடியாப்பமும், கடைக்கு வேலைக்கு போகும் பொழுது, கட்டித் தரும் பகல் சாப்பாடும் தயாராகும் வரை நௌபர் ஹோலில் சோபாவில் சாய்ந்த வண்ணம் போனில் பலவற்றை பார்த்துக் கொண்டிருப்பான், குறிப்பாக youtube இல் புறாக்கள் பற்றிய video clip களை பார்த்துக் கொண்டிருப்பான். அப்பொழுது அவன் பெயரைச் சொல்லி யாரோ வெளியே அழைப்பது கேட்டது. யூசுப் கல்யாணம் முடித்து பொண்ணு வீட்டுக்கு வசிக்கப் போன பின், வீட்டில் உம்மாவும் நௌபரும் மட்டுமே இருந்தார்கள்.

நௌபர் வாசலுக்கு வந்தான். வாசலில் பக்கத்து ஒழுங்கையில் இவனைப்போல் புறாக்கள் வளர்க்கும் சைமன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் வாட்டம் தெரிந்தது. ”என்ன விசயம் மச்சான்” என்று நௌபர் சிங்களத்தில் கேட்டான்.

கொழும்பின் சுற்று வட்டாரத்தில் (தோட்டங்களில்) தமிழ்-, முஸ்லிம், சிங்களவர் என மூவின மக்களும் இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்ததால் சைமன் போன்ற சிங்கள நண்பர்களும் கொச்சையாக பிரியத்துடன் தமிழில் பேசுவது வழக்கம்.

தன்னிடம் இருந்த பாகிஸ்தான் வகை பெண் புறா நேற்று மாலை கூடு திரும்பவில்லை என்று சைமன் சிங்களத்தில் சோகத்துடன் சொன்னான்.

நௌபர் வசிக்கும் ஓழங்கையால் வரும் போதே, நௌபரின் புறாக் கூடு இருக்கும் இடம் சைமனுக்கு தெரிந்திருந்ததால், ஒருவேளை நௌபரின் கூட்டுக்குள் இறங்கி இருக்குமோ என்ற ஐயத்துடன் நௌபரின் கூட்டை எட்டிப் பார்த்தான். ஆனால் அவனுடைய அந்த பாகிஸ்தான் வகை பெண் புறாவை காணவில்லை. நௌபரிடம் விசாரிப்போம் என்ற எண்ணத்துடன் நௌபரிடம் வந்திருந்தான். நௌபருக்கு நேற்று மாலை தன் கூட்டுக்கு வந்த புறாவுக்குரியவர் வந்து விட்டார். அதுவும் தன் நண்பன் சைமன்தான் அது என்பது ஆறுதலாக இருந்தது

ஏதோ தடுமாற்றத்தில் கூடு இறங்காத புறாக்கள் வானத்தில் சஞ்சாரித்துக் கொண்டிருப்பதுண்டு. அதற்காக வரும் வழியில் வானத்தை அண்ணார்ந்து பார்த்த வண்ணம் வந்தான் சைமன். புறாக்கள் எவ்வளவு தூரம் மேலே பறந்து கொண்டிருந்தாலும் அந்த புறாவின் உரிமையாளர்கள் அவை தங்களது புறாக்கள்தான் என்று அடையாளம் கண்டு கொள்வார்கள். அந்த நம்பிக்கையில்தான் காணாமல் போன தன் புறாவை வானத்திலும் தேடினான் சைமன்.

கூடு மாறி இறங்கும் புறாக்கள் அதிக தூரத்தில் இறங்காது, தம் வசிப்பிடங்களான கூடுங்கள் இருக்கும் சுற்றுப்புறச் சூழலில்தான் இருக்கும் கூடுகளில்தான் இறங்கும். அபூர்வமாக அதிக தூரத்தில் இறங்கும் கூடுகளில் புறாக்களை உரியவர்கள் தேடி வராதபட்சத்தில் இறங்கிய கூட்டின் சொந்தக்காரர்கள் பாராமரிப்புக்கு பின், தங்கள் புறாக்களுடன் சேர்த்து வைத்துக் கொள்வார்கள். எப்போதேனும் யாராவது தவறி இறங்கிய தங்களது புறாவைத் தேடி வந்தால், திரும்பக் கொடுத்து விடுவார்கள், இதுவே புறாக்களை வளர்ப்பவர்களின் ஒழுக்கமாக இருந்தது. புறாக்களை இழந்தவர்கள் ஏலவே காணாமல் போன தங்கள் புறாக்களின் பட்டியலுடன் அப்புறாவையும் சேர்த்து சோகத்தைத் தணித்துக் கொள்வார்கள்.

நௌபர் நாநாவிடமிருந்து புறாக் கூட்டைப் பாரமெடுத்த பின் பலமுறை இப்படி நடந்திருக்கிறது.

நௌபரின் புறாக்கள் சிலவேளைகளில் சைமனின் கூட்டுக்கோ நௌபரின் சில புறாக்கள் சைமனின் கூட்டுகோ, நௌபரின் கூடு அமைந்திருந்த ஒழங்கைக்கு எதிரே இருந்த அந்த ஒழுங்கையின் தொங்கலில் இருந்த இறைச்சிக் கடை முதலாளியின் மகன் பாரூக்கின் வீட்டின் மொட்டை மாடியில் வைத்திருந்த புறாக் கூட்டுக்கோதான் வந்திறங்கும். அவனது கூடு உயரத்தில் இருந்ததால் அடிக்கடி பிறரின் புறாக்கள் வந்து இறங்கும், அவற்றை நன்கு பாராமரித்து உரியவர்களிடம் திரும்பக் கொடுத்து விடுவான்.

யாருடைய புறாவாக இருந்தாலும் மேலே பறந்து கொண்டிருந்தால் ஏதோ காரணத்தால் காயப்பட்ட நிலையில் மாறி இறங்கி விடும். அவற்றை எடுத்துக்கொண்டவர்கள் அது யாருடைய புறா என்று தேடாமல், நோய்வாய்ப்பட்ட புறாக்களை தனிமைப்படுத்த வைத்திருக்கும் கூடுகளில் வைத்துப் பாராமரிப்பார்கள்.

புறாக்களுக்கு வரும் சில நோய்கள் தொற்று நோய்களாக இருக்கும். அவ்வாறு அடையாளம் தெரியாத நோய்களுடன் தங்கள் கூடுகளுக்குள் இறங்கும் புறாக்களைச் சோதித்து, அவை நோய்வாய்ப்பட்டுள்ளமை தெரிந்தால் அவற்றுக்கு மருத்துவம் செய்து தங்கள் கூட்டில் தனிமைப்படுத்தி வைத்திருப்பார்கள்.

சளி போன்ற நோய் வந்தால் மஞ்சள் உப்பு போன்றவற்றை நீரில் கரைந்து அந்த புறாகளுக்கு ஊட்டி விடுவார்கள். அப்படியும் சளி குணமாகா விட்டால் புறாக்களுக்கான சளிக்கு, பார்மஸிகளில் விற்கும் Vitamin B, DOXY CYCINE போன்ற ஏதேனும் மாத்திரை ஒன்றை வாங்கி ஊட்டி விடுவார்கள்.

புறாக்களுக்கு கோடை காலத்தில் வரும் அம்மை நோய் போன்ற நோய்கள் வந்தால் அவற்றை 6 வாரத்துக்கு தனிமைப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக அவற்றுக்கு தனியாக நீர் பருக்க வேண்டும்.

இப்படி புறாக்களுக்கான மருத்துவத்தை மாமா மூலமும் நாநா மூலமும் புறா வளர்க்கும் சக நண்பர்கள் வழியாகவும் நௌபர் தெரிந்து வைத்திருந்தான்.

அப்படிதான் நேற்று மாலை பாகிஸ்தான் வகை பெண் புறா ஒன்று நௌபரின் கூட்டுக்கு வந்திறங்கி இருந்தது. வெளியிருந்து அடையாளம் தெரியாமல் வரும் புறாக்கள் கூடுகளின் கூரையில் நின்று கொள்ளும்.

யாருடையது என்று தெரியவில்லை. அதை கையில் எடுத்து சோதித்தான். அதன் சிறகொன்றில் காயம்பட்டிருந்தது. அப்படி காயப்பட்டு இறங்கும் புறாவுக்கு தடவி விட பார்மஸியிலிருந்நு சின்ன டப்பாவில் கொண்டுவந்த கொண்டீஸ் தூளை அந்த புறாவுக்கு தடவி, ஓரு சந்தேகத்தடன் அந்த புறாவை தனிமைப்படுத்தி இருந்தான்..

அத்தகைய ஒரு சூழலிதான் காணாமல் தன் புறாவை தேடி நௌபரிடம் சைமன் வந்திருந்தான். நேற்று தன் கூட்டுக்கு வந்து இறங்கிய அந்த பெண் புறாவை கூட்டிலிருந்து எடுத்து சைமனிடம் ஒப்படைந்தான். அந்த புறாவை கையில் எடுத்த சைமனுக்கு நௌபர் அதை பாராமரித்து வைத்திருந்தான் என்று தெரிந்தது

நௌபருக்கு நன்றி சொல்லும் வகையில் ஸ்தூத்தி என சிங்களத்தில் சொல்லி தன் புறாவை எடுத்து போனான். நெளபர் வேலைக்குப் புறப்பட்டுப் போனான்.

3

சமீப காலமாக அந்த ஏரியாவில் புறாக்கள் வளர்ப்போருக்கு புதிய கவலை இருந்தது

அவர்களின் கவலைக்குக் காரணம் புறாக்கள் வளர்த்த சுற்றுப் புறச் சூழலில் அமைந்திருந்த பெரும் நிலப்பகுதியில் இரசாயன மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிருந்து இடைக்கிடை வெளியேறும் புகை வளி மண்டலத்தில் கலந்து அதன் சுற்றுப்புறச் சூழலில் இருந்த பறவைகளுக்கும் கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது.

அதனால் புறா வளர்ப்பில் இதுவரை இவர்கள் காணாத பல புதிய நோய்களை எதிர்கொண்டார்கள். சில பல நோய்களுக்கு ஆளாகி சிலரின் புறாக்கள் இறந்த நிலைமை ஏற்பட்டது.

அந்தத் தெருவின் ஆரம்பத்தில் வசித்து வந்த மணி அம்மாளின் மகன் நாதனும் புறாக்கள் வளர்த்து வந்தான். அவனது கூடும் அவன் வீட்டு மொட்டை மாடியில்தான் இருந்தது அந்த மொட்டை மாடியின் பின் புறச் சுவர் அருகேதான் அந்த நச்சுப் புகை கக்கும் தொழிற்சாலை இருந்தது. அதனால் அதிக அளவான பாதிப்புகளை அவனுடய புறாகள் எதிர்கொண்டன. பல புறாகள் இறந்திருக்கின்றன. அந்த விரக்தியில் அவன் புறாக்கள் வளர்ப்பதில் ஆர்வத்தை குறைந்துக் கொண்டான் என்று சொல்வதை விட முற்றும் முழுவதுமாகக் கைவிட்டு விட்டான். எஞ்சிய புறாக்களை புறா வளர்ப்பவர்களுக்குக் கொடுத்து விடலாம் என்றால் அப்புறாக்களை எடுத்துக் கொள்ள புறா வளர்ப்பர்கள் தயக்கம் காட்டினார்கள்., சமீப காலமாகப் பாரூக், சைமன், நௌபரும் கூட இந்தப் பாதிப்பால் பல புறாக்களை இழந்திருக்கிறார்கள்.

இதுவரை காலம் இல்லாத வகையில் அந்த புகை வளி மண்டலத்தில் கலந்து விடுவதனால் புறாக்களுக்கு சளி தொண்டையில் கடுமையாகக் கட்டுவிடும். சோர்வாகி சாப்பிடுவதை பூரணமாக நிறுத்தி விடும். கண்கள் பால் வர்ணமாக மாறி விடும். திடீரென்று கூரையிலிருந்து விழும். அதன் கழுத்து திரும்பி விடும். அத்தோடு இறந்தும் விடும். புறாக்களின் தொண்டையில் அடைக்கும் சளியினால் அப்பறாக்கள் சோர்வாகி விடும். அப்படியாக புறாக்களுக்கு சளி அடைப்பு வரும் போதெல்லாம் செய்யும் கை மருந்தான மிளகு, கடுகு மற்றும் உப்பு போன்றவை நீரில் கரைந்து சேர்ந்து இடித்து சிறு உருண்டை ஆக்கிக் கொடுப்பது வழக்கம். அப்படியும் சுகம் கிடைக்காவிட்டால் பார்மஸியில் சளிக்காக விற்கும் மருந்துகளை எடுத்து அதற்குச் செலுத்துவார்கள்.

கவலையான முகத்துடன் இன்றும் காலை எழுந்தவுடன் புறாக் கூட்டைத் திறந்துப் பார்த்தான் நௌபர், கூட்டைத் திறந்ததும் புறாக்கள் படபடத்தன. எல்லா புறாக்களும் பத்திரமாக இருந்தன. மனம் ஆறுதல் அடைந்தது. ஆனாலும் அவனது அக்கூட்டில் இருந்த ஈஜீப்ஷன் வகையைச் சார்ந்த புறாக்களில் ஓன்று சற்று சோர்வாக கூட்டின் மூலையில் பதுங்கி கிடந்தது. நேற்று மாலை கூட்டை மூடி வீட்டுக்கு வரும் வரை அப்படி இருக்கவில்லை. இவன் ஓரு கணம் பயந்தவனாக அதனை கையில் வாரி எடுத்தான். அதனை மேலும் கீழுமாக சோதித்துப் பார்த்தான். சற்றுச் சோர்வாக இருப்பதாக இவனுக்குப் பட்டது. மற்றபடி இவன் பயப்பட்டது போன்று பாரதூரமாக ஓரு பாதிப்பும் அதற்கு இருக்கவில்லை. ஆனாலும் அதை தனிமைப்படுத்தி வைத்துவிட்டுப் போனான்.

சமீப காலமாக அந்த தொழிற்சாலை புகையால் இனங்கண்டு கொள்ள முடியாத நோய்கள் புறாக்கள் வளர்க்கும் எல்லோரையும் பயமுறுத்தி கொண்டிருந்தன. ஏலவே வந்த நோய்களின் சாயலில் அந்த நோய்கள் இருந்தமையால் அவற்றுக்கு செய்த மருந்துகளை செய்து பார்ப்பார்கள். அந்த மருந்து கொஞ்ச நாள் வேலை செய்யும். மீண்டும் புறாக்கள் நோய்வாய்ப்பட்டு விடும். அதற்கு அந்த தொழிற்சாலை கக்கும் புகையே பிரதான காரணமாக இருந்தது.

இதற்கு என்ன செய்யலாம் என்று அந்த ஏரியாவில் புறா வளர்ப்போரான பாரூக் சைமன், நௌபர் போன்றவர்கள் ஒன்றாய் கலந்தாலோசித்தார்கள்.

(தொடரும்)

மேமன்கவி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division