“நான் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவன் என்பதால் அனைத்தையும் எனது தலையில் கொட்ட முடியாது” என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். எனினும் எத்தனை விசாரணைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள தயாராகவே உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார் . பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“இந்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டு . அந்த அடிப்படையில் எதிர்க்கட்சியினரும் வேறு சில தரப்பினரும் குண்டுத் தாக்குதலில் மரணித்தவர்களை இன்னமும் விவாதப் பொருளாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
சிலர் அரசியலுக்காக என் பக்கம் கை நீட்டுவதனையும் காண முடிகிறது. அவர்கள் தொடர்பில் நான் கவலை மட்டும்தான் அடைய முடியும். எனினும் எத்தனை விசாரணைகள் வந்தாலும் அவற்றை நான் எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன்.
2012ஆம் ஆண்டிலிருந்தே இந்த மதப் பயங்கரவாதம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியது. பௌத்த பேரினவாதிகள் சிலரும் அதற்கு ஆதரவாக செயற்பட்டார்கள்.
அதை வைத்து முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களிலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் இடம்பெற்றன. ஐ .எஸ். ஐ. எஸ் பயங்கரவாதம் உலகத்தில் உச்சம் தொட்டிருந்த நிலையில்தான் இங்கும் ஆட்சி மாற்றங்கள் நடந்தன. அப்போது ஆட்சியைப் பொறுப்பேற்றவர்கள் இதனை சரியாக இனங்கண்டு கொள்ளவில்லை.
செனல் 4 சம்பந்தமாக பேசப்பட்டது. இந்த நிறுவனம் இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.
செனல் 4 இல் காட்டுகின்ற போது அது ஒரு சிறப்பான நாடகம். அந்த செனல் 4 தயாரிப்பாளரிடம் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய வினவும்போது இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்பார். அதற்கு அவர் எதுவுமே இல்லை என்பார்.
இதில் எனது பெயரையும் இழுக்கின்றார்கள். சர்வதேச விசாரணைகளில் கூட எனது பெயர் கூறப்படவில்லை. நானாகத்தான் நான் சிறையில் இருந்ததன் அடிப்படையில் எனக்கு தெரிந்த தகவல்களை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு தெரிவித்தேன்.
நான் விடுதலைப் போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. இங்குள்ள ஒரு குழந்தைப்பிள்ளை மக்களை குழப்புகின்றது. மக்களை குழப்ப வேண்டாம் என சாணக்கியன் போன்ற சிறு பிள்ளைகளுக்கு நான் கூற விரும்புகின்றேன்” என்று மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்