Home » உம்மாவின் சமையல்

உம்மாவின் சமையல்

by Damith Pushpika
April 28, 2024 6:00 am 0 comment

“நீங்கெல்லாம் செலநேரம் எங்களுக்கு தந்துட்டு, நீங்க சாப்பிடாம இருந்திரிக்கிறீங்க தானே? இதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம். நாங்க இதெல்லாம் நெனச்சி பாக்காம இருந்துட்டமே…இதுக்கு எங்களால கைமாறு செய்யவே ஏலா. ஆனா… ஆனா… கைக்கு மோதிரம் போடோணுமென்டு வாயால சொல்றத ஒருநாளாவது செஞ்சமில்லயே…?

அந்த மாலைப்பொழுதில் நுவைராவின் வீடு கலகலவென்றிருக்கிறது. அவளுடைய நெருங்கிய தோழிகள் பத்துப் பேர் தாய்மாருடன் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தங்கள் தாய்மாரை மற்றத் தாய்மாருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். தாய்மார் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்கிறார்கிறார்கள்: நலம் விசாரிக்கிறார்கள். சிறிது நேரத்தின் பின் சுவாரசியமாகக் கதைக்கத் தொடங்குகிறார்கள். ஒரு சிலர் அமைதியாகப் புன்னகைத்தபடி அவர்களின் பேச்சுகளைக் கேட்டு இரசிக்கிறார்கள்.

நுவைராவின் வீட்டு ஹோல் தோழிமார்களால் அமர்க்களப் பட்டுக்கொண்டிருக்கிறது. பழைய, புதிய கதைகளோடு அவர்கள் தங்கள் காரியங்களிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறரார்கள். அவர்களுடன் வந்திருந்த பிள்ளைகள் ஒன்றுகூடி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஹோலில் பெரிய சாப்பாட்டு மேசைகள் இரண்டு இணைத்துப் போடப்பட்டிருக்கின்றன. சுற்றிலும் இருபதுக்கும் மேற்பட்ட கதிரைகள். நுவைரா உட்பட தோழிமார்கள் செய்து கொண்டு வந்திருந்த சிற்றுண்டி வகைகளையெல்லாம் அழகிய தட்டுகளில் அடுக்கி, ஆங்காங்கே வைக்கிறார்கள். அந்த ஹோல் முழுதும் சிற்றுண்டி வாசம்.

கடந்த ஐந்து வருடங்களாக அவர்கள் தாம்தாம் செய்த சிற்றுண்டிகளோடு ஓர்டர் பண்ணி வாங்கிய ஸ்பெஷல் சிற்றுண்டிகளையும் சேர்த்து ஒன்றாய்க் கூடி, உண்டு மகிழ்ந்து உரையாடிக் கழிப்பது வழக்கம். இம்முறை அதை மாற்றி எதையும் ஓர்டர் பண்ணி வாங்குவதில்லை; எல்லாம் தாமே செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தன் தாயின் கையால் செய்த பாரம்பரிய தின்பண்டம் ஒன்றோடு அவரவர் தாய்மாரையும் அழைத்து வரவேண்டும் என்றொரு விதியும் வகுத்திருந்தார்கள்.

மேசைகள் சிற்றுண்டி வகைகளாலும் பானவகைகளாலும் நிரம்பி மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. தோழிகள் செய்த பிஸ்ஸா, குலோப் ஜாமுன், பர்பி, ரோல்ஸ், கட்லட், ஷவர்மா, பெட்டிஸ், ஜிலேபி, பிரௌனி, டேட்பார், கேக்வகைகள் இத்யாதி வகைகளோடு வட்டிலப்பம், தொதல், அடை, கஜோர், கலத்தப்பம், ஓட்டுமா, பொரிவிளங்காய், சுருட்டப்பம், கொழுக்கட்டை, பணியாரம், கிச்சடி, தோசி வகைகள் என தாய்மார் தம் கைப்பட தாராளமாகவே செய்து கொண்டு வந்திருந்த சிற்றுண்டிகளும் பலூடா, டல்கோனா, பாதாம்கீர், புரூட்சலட், ஜூஸ் வகைகள் என்பனவும் சேர்ந்து மேசைகள் ஓர் உணவுக் கண்காட்சி போல் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு தாயும் பிள்ளைகளின் வித்தியாசமான தின்பண்டங்களைச் சுவைத்துப் பாராட்டுகிறார்கள்.

அதுவரை சுவைக்காத பண்டங்களைப் பற்றிக்கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். பிள்ளைகளும் தாய்மார்களின் உணவுப் பண்டங்ககைச் சுவைக்கிறார்கள். சிலருக்கு அதுவரை கண்டிராத தின்பண்டங்களும் அவற்றின் சுவைகளும் புதுமையாக இருக்கின்றன. உணவுப் பண்டங்களும் பானங்களும் பரிமாறப்படுவது போல் அவற்றின் செய்முறைகளும் அங்கே பரிமாறப்படுகின்றன.

(2)

‘நல்லாயிரிக்கி ஆன்ட்டி’, ‘டேஸ்டாயிரிக்கி ஆன்ட்டி’, ‘சுப்பர்’, ‘வாவ்’ ‘கைக்கு மோதிரம் போடோணும்’ என்று பலப்பல பாராட்டுப் பத்திரங்கள் பிள்ளைகளால் அந்த தாய்மாருக்கு வழங்கப்படுகின்றன.

நுவைராவின் மனதுக்குள் ஒரு மின்னற்பொறி. அதேவேளை அவளுக்கு அலைபேசி அழைப்பொன்று வருகிறது. ‘எக்ஸ்யூஸ்’ கேட்டுக்கொண்டு சற்று அப்பால் போய்ப் பேசுகிறாள்.

நாநா ஹஸனின் அழைப்பு அது.

அவர் விசாரித்த ஏதோ செய்திக்கு பதில் கூறியவள் தானும் ஏதேதோ அவருடன் பேசிவிட்டு உணவு மேசையருகே வருகிறாள்.

“எக்ஸ்யூஸ் மீ மை டியர் ப்ரென்ட்ஸ் அன்ட் பேரன்ட்ஸ். நான் அவசரமா கொஞ்சம் வெளிய போவ வேண்டியிரிக்கிது. தங்கச்சி ஜெஸ்மின் இங்க கவனிச்சிக் கொள்ளுவா. இன்ஷா அல்லாஹ். நானொரு இருவது நிமிஷத்துக்குள்ள திரும்பி வந்துடுவன். நாதிரா, ப்ளீஸ் என்னோட கொஞ்சம் கூட வரேலுமா…?”

நாதிரா எழுந்து எல்லோரிடமும் சொல்லிவிட்டுப் புறப்படுகிறாள்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் சற்று குழம்பித்தான் போகிறார்கள். அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் வெளியேறி விடுகிறார்கள்.

சொன்னது போல் இருவரும் இருபது நிமிடத்துக்குள் திரும்பி வந்து விடுகிறார்கள். விருந்துபசாரம் தொடர்கிறது.

பள்ளிப் பருவத்து மலரும் நினைவுகளோடு நேரம் நகர்கிறது. இடையில் நுவைரா எழுந்து உம்மாவின் அருகில் வருகிறாள். சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்து பேசத் தொடங்குகிறாள்.

“டியர் ப்ரென்ட்ஸ் அன்ட் பேரன்ட்ஸ்…இன்டக்கி எங்கட உம்மாமாரும் எங்களோட சேந்திரிக்கிறாங்க. எங்கட வளர்ச்சியில அவங்கட அன்பு, தியாகம்,கரிசனய எல்லாம் வாயால சொல்லேலாது. எங்கட ஆரம்ப பாடசாலையே அவங்கதான். வீட்டுக்கு வெளிய உள்ள உலகத்த அவங்களும் எங்கட வாப்பாமாரும் காட்டித்தான் எங்களுக்கு தெரியும். எங்கட உம்மாமார்கிட்ட இருந்து நாங்க படிச்சிக் கொண்ட விசயம் நெறய….பேச்சு, ஒழுக்கம், மார்க்கம், சமையல் எண்டு இப்பிடி நெறய நெறய.. இன்டக்கி எங்கட உம்மாமார்ட கையால செஞ்ச வகைவகையான ஸ்வீட்ஸ்கள் சாப்பிட்டம்… சந்தோசப் பட்டம். அவங்கட சமையல டெய்லி வீட்டுல ருசியா சாப்பிடுறம். சுப்பர், வாவ் எண்டு பாராட்டுறம். கைக்கு மோதிரம் போடோணுமென்டு சொல்லி அவங்கள பேச்சால சந்தோசப் படுத்துறம். என்டெக்காவது யாராவது அவங்கட கைக்குமோதிரம் போட்டீக்கிறமா…?”

அவள் கேள்வியோடு நிறுத்துகிறாள்.

தோழிமார்களின் தலைகள் எல்லாம் ‘இல்லை’ என்ற பாவனையில் ஆட, ‘ம்ஹும்’ என்ற சொற்கள் மெல்லக் கேட்கின்றன. தாய்மார்கள் சிரித்துக் கொள்கிறார்கள்.

“அது எங்கட கடம’மா….”

ஒரு தாயின் குரல் அங்கே மென்மையாக ஒலிக்கிறது.

“அதுதான்’மா அந்தக் கடமய நீங்க ஒரொரு புள்ளையிடம் ஆசக்கி ஏத்தமாதிரி, ஆசயா டேஸ்டா பாத்துப்பாத்து செஞ்சி தாரீங்கதானே…”

நுவைரா அந்தத் தாய்மாரைப் பார்த்துக் கேட்கிறாள்.

அவர்கள் புன்னகைக்கிறார்கள். நுவைரா தொடர்கிறாள்.

“நீங்கெல்லாம் செலநேரம் எங்களுக்கு தந்துட்டு, நீங்க சாப்பிடாம இருந்திரிக்கிறீங்க தானே? இதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம். நாங்க இதெல்லாம் நெனச்சி பாக்காம இருந்துட்டமே…இதுக்கு எங்களால கைமாறு செய்யவே ஏலா. ஆனா… ஆனா… கைக்கு மோதிரம் போடோணுமென்டு வாயால சொல்றத ஒருநாளாவது செஞ்சமில்லயே…? இன்டக்கி அதப்பத்தி இந்தஇடத்துல லரீபா சொன்ன நேரம்தான் எனக்கு ஒரு ஐடியா வந்திச்சி. ஏன்ட நாநாவோடயிம் இதப்பத்தி பேசினன். ஏன்ட ஐடியாக்கு நாநா ஓகே சொன்னாரு. அதுக்குத்தான் நான் கொஞ்சம் முந்தி நாதிராவோட வெளிய போனன்…”

அவளின் பேச்சை அங்கிருந்தவர்கள் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவள் உம்மாவை எழுந்து நிற்கச் செய்கிறாள்.

“இது…இது…ஏன்டயிம் நாநாடயிம் சந்தோசம்’மா….”

தாயின் விரலைப் பிடித்து அந்தத் தங்க மோதிரத்தை உம்மாவின் விரலில் அணிவிக்கிறாள் நுவைரா.

உம்மா மகிழ்ச்சிப் பெருக்கோடு கண்களிலிருந்து கண்ணீர் வழிய அவளைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார்.

எம்.ஏ. ரஹீமா கொழும்பு

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division