இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நேற்றுமுன்தினம் 19 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடவடிக்கையாக இந்திய பொதுத்தேர்தல் கருதப்படுகின்றது.
இந்திய நாடாளுமன்றமானது பிரதிநிதிகள் சபை (லோக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்றுமுன்தினம் (19) பொதுத்தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.
இந்திய பொதுத்தேர்தல் இரண்டரை மாதகாலத்துக்கு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட தேர்தல் நேற்றுமுன்தினமும் (19), 2 ஆவது கட்டம் ஏப்ரல் 26 ஆம் திகதியும், மூன்றாம் கட்டம் மே 7 ஆம் திகதியும், நான்காம் கட்டம் மே 13 ஆம் திகதியும், ஐந்தாம் கட்டம் மே 20 ஆம் திகதியும், ஆறாம் கட்டம் மே 25 ஆம் திகதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1 ஆம் திகதியும் நடைபெறுகின்றன.
எதிர்வரும் ஜூன் 4- ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும். இந்தப் பொதுத்தேர்தலில் 970 மில்லியன் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வலுவான தலைமையை வழங்கி வருகிறார். பிரதமர் மோடியின் பா.ஜ.க தங்களுக்கு நட்பான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்று பெயர்.
இந்தப் பொதுத்தேர்தலில் நரேந்திர மோடியின் பா.ஜ.க தனித்து 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், ஒட்டுமொத்தமாக பா.ஜ.க உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 400- இற்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்றும் இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
எனினும் இறுதிவேளையில் மக்களின் செல்வாக்கு எந்த அணியை நோக்கித் திரும்பும் என்பதை தற்போது கூற முடியாதிருக்கின்றது. ஒருசில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் அணியே வெற்றி பெறுமென்று கூறியுள்ள போதிலும், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பா.ஜ.கவுக்ேக வெற்றிவாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றன.
2019 பொதுத்தேர்தலில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமரானார். அந்தத் தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களில் வெற்றி பெற்றது. இது ஒரு மகத்தான சாதனை. 1980 இல் பா.ஜ.க இந்து தேசியவாதக் கட்சியாக அரசியல் களத்தில் இறங்கிய பிறகு, இவ்வளவு தொகை வாக்குகளைப் பெற்றது இதுவே முதல் முறையாகும்.
நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியுள்ள பொதுத்தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படுகின்றன. 15 மில்லியன் தேர்தல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
18- ஆவது லோக்சபா தேர்தலின் முதல் கட்டமாக நாட்டின் 21 மாநிலங்களில் 102 லோக்சபா தொகுதிகளில் நேற்றுமுன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவையின் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்றுமுன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்திய லோக்சபா தேர்தல் நேற்றுமுன்தினம் ஏப்ரல் 19- ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. ஜூன் 4- ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 4 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் நேற்றுமுன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
102 லோக்சபா தொகுதிகளில் 8 மத்திய அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வம் உட்பட 3 முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் களம் காண்கின்றனர். 102 தொகுதிகளில் பா.ஜ.க 77- தொகுதிகளில் போட்டியிடுகிறது. 102 தொகுதிகளில் காங்கிரஸ் 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 86 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது.
முதல் கட்ட தேர்தலை எதிர்கொண்டது நாட்டின் வடமுனையான ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் லோக்சபா தொகுதி. அதே போல நாட்டின் தென்முனையான தமிழ்நாட்டின் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியிலும் நேற்றுமுன்தினம் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் தமிழ்நாட்டின் கரூர் லோக்சபா தொகுதியில்தான் மிக அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 46 பேர் சுயேச்சைகள்.
முதல் கட்டதேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் மிக குறைந்தபட்சமாக வெறும் 3 வேட்பாளர்கள் போட்டியிட்டது அஸ்ஸாமின் திப்ரூகர் லோக்சபா தொகுதிதான். இங்குதான் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் போட்டியிட்டார். இது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளில் இதுவரை அறியப்படாத 20 கட்சிகள் காணப்பட்டன. தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம், வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளிகள் கட்சி, இந்திய ஐக்கிய குடியரசுக் கட்சி, அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட மக்கள் கழகம், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம், Viro Ke Vir இந்தியக் கட்சி, தக்கம் கட்சி, ஊழல் எதிர்ப்பு டைனமிக் கட்சி, திப்பு சுல்தான் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, தேசிய மக்கள் சக்தி கட்சி, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு பேரியக்கம், சென்னை இளைஞர் கட்சி, இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்), அறவோர் முன்னேற்றக் கழகம், தேசிய மகா சபா கட்சி, மகாத்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, Hardam Manavtawadi ராஷ்ட்ரிய தளம், ஜெபமணி ஜனதா போன்ற கட்சிகள் இதுவரை அறியப்படாத கட்சிகளாகும்.
எஸ்.சாரங்கன்