இலங்கையை பொருளாதார ரீதியில் மேம்பாடடையச் செய்யும் நோக்கத்துடன் தென்னிந்தியாவிலிருந்து 1823ஆம் ஆண்டு வருவிக்கப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள். அந்த மக்களில் எஞ்சியுள்ளோர் பெருந்தோட்டங்களில் இருந்து படிப்படியாக வெளியேறி வெவ்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர்.
எனவே இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களில் இரு தரப்பினர் உள்ளார்கள். தோட்டத் தொழிலாளர்களை முதலாவதாக குறிப்பிட்டால் தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதோரை இரண்டாவது தரப்பினர் எனக் குறிப்பிடலாம்.
இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களில் தோட்டங்களை விட்டு வெளியேறி தோட்டங்களுக்கு வெளியே நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்பவர்கள் தமக்கான முகவரிகளை கொண்டவர்களாக வாழ்வதனால் அவர்களுக்கு தபால் விநியோகம் நேரடியாகவே இடம் பெறுகிறது.
ஆனால், இந்த நாடெங்கிலும் உள்ள பெருந்தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிவோரின் வீடுகளுக்கு இலக்கம் குறிப்பிடப் படாததனாலும் லயன் அறைகளில் குடியிருக்கும் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு இத்தனையாவது லயனில் இத்தனையாவது வீடு எனக் குறிப்பிடாததனாலும் தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டில் இருநூற்றொரு வருட வரலாற்றைக் கொண்டிருப்பினும் அவர்களுக்கு இன்டர்நெட் யுகம் என வர்ணிக்கப்படும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் முகவரிகள் தோட்ட நிர்வாகங்களினால் உரிய விதத்தில் வழங்கப்படவில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கான தபால் விநியோகம் அவ்வப்போது கிரமமாக இடம் பெறாமையினால் தோட்டத் தொழிலாளர்கள் தாம் வங்கிகளில் அடகு வைத்த நகைகளை இழந்துள்ளார்கள். ஏனெனில் வங்கிகள் அடகு நகைகளை ஏலத்தில் விடப்போவதாக அறிவிக்கும் கடிதங்கள் உரிய காலத்தில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உரிய நேரத்தில் கடிதங்கள் கிடைக்காதமையால் தொழில் வாய்ப்புகளையும் இழந்ததோடு உரிய நேரத்தில் பரீட்சைகளில் தோற்ற முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகின்றார்கள்.
கடந்த ஜனவரி மாதத்தில் மாவத்தகம மூலன்கந்த தோட்டத்தில் வசிக்கும் ஜீவரட்ணம் சுரேஷ்குமார் தான் வாழ்ந்த தோட்டத்தில் 300 குடும்பங்கள் வசிப்பதாகவும், நாட்டில் இருநூறு ஆண்டுகால வரலாறு கொண்ட அந்த மக்களுக்கு இன்னும் முகவரி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். ஒன்பது மாதங்களில் நாடெங்கிலும் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய முகவரியை அரசாங்கம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கான முகவரியை வழங்க இதுகாலவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் தமக்கென ஒரு இன அடையாளத்தை குறிப்பிட முடியாமல், குடிசன மதிப்பீட்டின் போதும், தம்மை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள நிரப்ப வேண்டிய விண்ணப்ப பத்திரங்களிலும் மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் தம்மை இலங்கை தமிழர் எனவும் இந்திய தமிழர் எனவும் குறிப்பிடுவதன் மூலம் பல வழிகளிலும் பாதிக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே, இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் தம்மை மலையக தமிழர் என குறிப்பிட்டு அவர்களுக்குரிய இன விகிதாசாரத்திற்கு ஏற்ப உரிமைகளை பெற வேண்டும்.
இந்த நாட்டின் வரலாற்றை அலசி ஆராய்ந்தால் தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்றிற்கு ஏழு பேர்ச்சர்ஸ் காணி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு அந்த காணிகளில் தனித்தனி வீடுகளை நிர்மாணித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை முதன் முதலாக முன் வைத்தவர் மலையக மக்களின் ஸ்தாபகத் தலைவரான பெரியசாமி சந்திரசேகரன். அவர் தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏறத்தாழ ஆறாயிரத்து ஐந்நூறு வீடுகளை நிர்மாணித்து வழங்கினார்.
அதன் பின்பு மலையக புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த பழனி திகாம்பரம் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து வழங்கினார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடியிருப்புகளும், குடியிருப்புகளை சுற்றியுள்ள காணிகளும் சொந்தமாக வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்க தோட்டத் தொழிலாளர்கள் தமது குடியிருப்புகளை முன்புறமாகவும் பின்புறமாகவும் விஸ்தரித்து இடவசதியை அதிகரித்து கொண்டார்கள்.
ஆனால், இதுகாலவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களோ வீட்டுரிமை பத்திரங்களோ வழங்கப்படவில்லை. எனவே, தற்போதைய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக பதவி வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஜனாதிபதியின் ஆலோசகரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ், கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் ஆகிய மூவரும் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று விடயங்களையும் துரிதமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அத்தோடு, இந்த நாட்டில் வாழும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10 பேச்சர்ஸ் வீதம் காணிகளை பெற்றுக் கொடுத்து தோட்டத் தொழிலாளர்களை இந்த நாட்டில் காணியுரிமை கொண்டவர்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையகத் தலைவர்கள் சமூக நலன் கருதி செயல்படின் அவர்கள் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தை பெறுவார்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயம் இல்லை.
நோயாளி ஒருவரின் உடலை பரிசோதித்து அவருக்குள்ள நோயை இனங்கண்டு அதற்கு சிகிச்சை அளிப்பது போன்று இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரச்சினைகளை இனம்கண்டு மலையக மக்களுக்கான தலைவர்கள் உரிய விதத்தில் செயல்பட வேண்டியமை காலத்தின் கட்டாய தேவை என்பதை மறுக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.
இவதன்