சங்க காலத்தில் தமிழ் இலக்கிய மரபானது செய்யுள் இலக்கியமாகப் படைக்கப்பட்டு வந்துள்ளது. அக்கால புலவர்களின் கவிதைகள் கருத்துச் செறிவும் சொற் செறிவும் மிக்கனவாகக் காணப்பட்டன. அதன் பின்னரான காலப்பகுதிகளில் மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக் கவிதை, நவீன கவிதை, பின் நவீனத்துவக் கவிதை, தன்முனைக் கவிதை, ஹைக்கூ கவிதை என படித்தரங்கள் மாற்றமடைந்து வந்துள்ளன.
செய்யுள் இலக்கியங்கள் கற்றோருக்கு மாத்திரமே புரிந்த காலம் மாறி பாரதியாரின் காலத்தில் எழுதப்பட்ட உரைநடைக் கவிதைகள், பெரும்பாலான மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பிற்காலத்தில் பிரதேச மொழி நடையில் எழுதப்படும் படைப்புகள், வாசிப்பின் மீதுள்ள ஆர்வத்தைத் தூண்டின எனலாம்.
தென் மாகாணத்தைப் பொறுத்தளவில் எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் பாரியளவு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. சில சமயங்களில் பேச்சினிடையே சிங்களச் சொற்களும் ஊடுருவிக் காணப்படுகிறது. படைப்பாக்கத்தின் போது பிரதேச மொழி வழக்கை வாசகர்கள் விரும்புவதால் படைப்பாளர்கள் அதில் அதிக கவனம் செலுத்தலாயினர். அதேபோல தென்னிலங்கைப் படைப்பாளிகள் கவிதைகள் மீது அதிக முனைப்புக்காட்டி வந்துள்ளனர். இதில் ஆன்மிகம் சார்ந்த அதாவது பக்தி இலக்கியங்களே மிகவும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்பட்டன.
தென்னிலங்கை என்ற வரையறைக்குள் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களே உள்ளடங்குகிறது. எனினும் மறைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி ‘ஈழத்து தமிழ் இலக்கியத் தடம்’ என்ற தனது நூலில் தென்னிலங்கை என்பது இலக்கிய ரீதியாக பாணந்துறை முதல் திக்குவல்லை வரையான பிரதேசம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கையின் முன்னோடிக் கவிஞர்கள் என்று நோக்கும் போது அதில் மிக முக்கியமான கவிஞர்களாக கவிஞர் ஏ. இக்பால் மற்றும் திக்குவல்லைக் கமால் ஆகியோரைப் பிரதானமாகக் குறிப்பிடலாம்.
“எரியும் நட்சத்திரம்” கவிதை நூலாசிரியர் தர்காநகர் ஷஹ்னா ஸப்வானும் தென்னிலங்கையைச் சேர்ந்தவராகின்றார். இவர் சிறுவயதிலிருந்தே இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதை அவருடைய கவிதைத் தொகுதி மூலம் தெரிந்து கொண்டேன்.
பாடசாலைக் காலத்திலிருந்தும் அதற்குப் பின்னரான காலப் பகுதியிலிருந்தும் இவருக்கு கவிதைத் துறை மீது ஒரு அலாதியான ஈடுபாடு இருந்திருக்கிறது.
அத்துடன் இத்துறையில் தனது பெயரையும் பதிக்க வேண்டும் என்பதுவும் ஷஹ்னா ஸப்வானின் ஆசையாக இருந்திருக்கிறது. இவருடைய இந்த விருப்பத்தின் வெளிப்பாடாகவே ‘எரியும் நட்சத்திரம்’ என்ற இந்தக் கவிதைத் தொகுதி 113 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.
இந்தப் பெண் கவிஞர் எங்கள் எல்லோரையும் விட்டு மறைந்துவிட்டார். இனி எங்களுக்கென்ன என்று நினைக்காமல் இவருடைய கவிதைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தெடுத்து, இவருடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் வகையில் ‘இளம் தாரகையின் தூரிகை’ என்ற குழும உறுப்பினர்களான இவருடைய நண்பர் குழாம் இந்தக் கவிதை நூலை வெளியிட்டு வைப்பது பெரும் மகிழ்வுக்குரியது, பாராட்டுக்குரியது.
இந்தப் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த களு/ ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபரான, நூலாசிரியரின் தந்தை ஏ.எச்.எம். ஸப்வானும் பாராட்டுக்குரியவர்.இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள வலம்புரி கவிதா வட்டத் தலைவர் கவிஞர் என். நஜ்முல் ஹுசைன், நூலாசிரியர் ஷஹ்னா ஸப்வான் பற்றிக் குறிப்பிடும் போது,
விடை கொடுத்துச் சிறகடித்தாள் ஷஹ்னா ஸப்வான். கவிதை நடைக்குள்ளே சிறைப்பிடித்துத் தொட்டாள் தொடுவான். என்று குறிப்பிட்டு நூலாசிரியரின் சில கவிதைகளை நயந்து தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
‘எரியும் நட்சத்திரம்’ கவிதைத் தொகுதியின் உள்ளடக்கமானது – எழுத்துலகம், மனதோடு கொஞ்சம், நேசம், குடும்பம் ஆகிய நான்கு உப தலைப்புக்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. நூலில் இடம்பிடித்துள்ள இவருடைய கவிதைத் தலைப்புகளைப் பொதுவாக நோக்கும் போது காலத்துக்குத் தேவையான, யதார்த்தமான பாடுபொருள்களைப் பிரதிபலிக்கின்ற பல்வேறு வகையான தலைப்புகளில் அமைந்துள்ளது.
‘எரியும் நட்சத்திரம்’ ஷஹ்னா ஸப்வானின் கன்னிக் கவிதைத் தொகுதியாகும். இந்த நூலிலுள்ள பல கவிதைகள் இது கன்னிக் கவிதைத் தொகுதி என்பதைப் பறை சாற்றி நின்றாலும்கூட சில கவிதைகள் கவிதைக்கேயுரிய இலக்கணங்களைப் பின்பற்றி கனதியான முறையில் சிறப்பாக அமைந்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம். அகம் சார்ந்த மன உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற கவிதைகளைத் தேடி வாசிப்போர் நிச்சயமாக தர்காநகர் ஷஹ்னா ஸப்வானின் கவிதைகளையும் வாசிக்க முடியும்.
மொத்தத்தில் தமிழின் சிறப்பு, மானிட அவலம், நாட்டு நடப்பு, அனுபவப் பாடம், இயற்கையின் வனப்பு, போலி முகம், வாழ்வின் யதார்த்தம், ஆன்மிகம், துரோகம், நட்பின் தூய்மை, பெண்மையின் கண்ணியம், உணர்வுகளின் வெளிப்பாடு, தாய்ப் பாசம் போன்ற கருப்பொருட்கள் இவருடைய கவிதைவெளியை வியாபித்து நிற்கின்றன.
‘எழுதுகோல்’ என்ற முதலாவது கவிதை ஒரு மனிதனின் சிந்தனை சக்தியை எழுத்து வடிவமாக மாற்றும் எழுதுகோலின் பங்களிப்பு பற்றி பேசி நிற்கின்றது.
‘யாவும் எனக்கு கவிதை தான்’ என்ற கவிதையினூடாக நமது கவிஞர் எல்லாவற்றையும் தனது கவிதைக் கண் கொண்டு பார்க்கின்றார்.
பாரதி தொட்டு அத்துனையுமே இங்கு எனக்குக் கவிதை தான். காற்று, மரங்கள், பூக்கள் இவையெல்லாம் எனக்குக் கவிதை தான். சுட்டெரிக்கும் சூரியனும் எனக்கு கவிதை தான். கலைந்து செல்லும் மேகங்களும் எனக்குக் கவிதை தான். இரவில் எரியும் விண்மீன்களும் எனக்குக் கவிதை தான்.இரவை துவைக்கும் விடியலும் எனக்குக் கவிதை தான்..
என்று இவர் அனைத்தையும் தனது கவிதைக் கண் கொண்டே பார்க்கின்றார்.
இருளை நேசி விடியல் தெரியும்..தோல்வியை நேசி வெற்றி தெரியும்..மக்களை நேசி மனிதாபிமானம் தெரியும். தாயை நேசி அன்பு தெரியும். அன்பை நேசி அடிமைத்தனம் தெரியும். தந்தையை நேசி உழைப்பு தெரியும். உழைப்பை நேசி உயர்வு தெரியும். உன்னையே நீ நேசிஉலகம் உனக்கு அழகாய் தெரியும்..
‘நேசம்’ எனும் கவிதையில் நேசத்தின் மூலம் நாம் அடையும் பிரதிபலன்கள் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இனிமையான சொல்லாடல்களால் இக்கவிதை ஆக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.
இந்தக் கவிதை நூலை வாசிக்கும் அனைவரும் மறைந்த கவியாளுமை ஷஹ்னா ஸப்வானுக்காக கரமேந்திப் பிரார்த்திப்பார்கள் என்பது உறுதி. எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனத்தை வழங்குவானாக என்று நானும் இரு கரமேந்திப் பிரார்த்திக்கின்றேன்!!!
வெலிகம ரிம்ஸா முஹம்மத்