Home » விடைபெற்றார் மொஹமட் பஸால்

விடைபெற்றார் மொஹமட் பஸால்

by Damith Pushpika
March 31, 2024 6:19 am 0 comment

‘2001 இதே மைதானத்தில் (குதிரைப்பந்தய திடல்) பாதணி கூட இல்லாமல் ஆடினேன். அப்போது எமது சாஹிரா கல்லூரி சம்பியனானது. 2024 இல் அதே மைதானத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுகிறேன்’ என்று மொஹமட் பஸால் கூறும்போது அவரது குரல் தளதளத்தது.

சர்வதேச அரங்கில் ஓய்வு பெறுவதென்பது எப்போதும் கவலையாகவே இருக்கும் அதுவும் மொஹமட் பஸால் போன்ற ஒருவர் ஓய்வு பெறுவதென்பது இன்னும் கடினமானது. ஏனென்றால் கடந்த 16 ஆண்டுகளாக அவர் இலங்கை தேசிய கால்பந்து அணியில் இன்றியமையாத வீரர் ஒருவராக இருந்து வந்தார்.

கொழும்பு, குதிரைபந்தய திடல் மைதானத்தில் கடந்த வாரம் நடந்த பூட்டானுக்கு எதிரான போட்டியே அவரது கடைசி சர்வதேச கால்பந்து போட்டியாக இருந்தது. ஆரம்பத்தில் களமிறக்கப்படாத அவர் 86 ஆவது நிமிடத்தில் களமிறங்கியது சர்வதேச அரங்கில் இலங்கைக்காக ஆடும் கடைசி தடவையாகவாகும்.

பின்னர் இலங்கை அணி சர்வதேச கால்பந்தில் இரண்டு ஆண்டுகளில் முதல் வெற்றியை பெற்ற மகிழ்ச்சியுடனேயே பஸால் ஓய்வு பெற்றார்.

போட்டிக்கு பின்னர் அவருக்கு அணி வீரர்கள் மற்றும் கால்பந்து நிர்வாகம் முழு மரியாதையையும் செலுத்தியே அவரை விடைகொடுத்து அனுப்பியது. அவரும், ‘தற்போது இலங்கை அணி பலம்பொருந்தியதாக உள்ளது’ என்ற திருப்தியுடனேயே விடைபெற்றார்.

‘பஸால் ஒரு விதிவிலக்கான வீரர். 53 சர்வதேச போட்டிகளில் ஆடுவதென்பது சாதாரணமானதல்ல. அவர் அபரிமிதமான திறமை பெற்றவர் என்பதோடு இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறார். அவர் எம்முடன் தொடர்ந்து பணியாற்றுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன், ஒருவேளை அது பயிற்சியாளராகக் கூட இருக்கலாம்’ என்று இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டார்.

கோல்கள் புகுத்துவதில் பிரத்தியேக திறமை பெற்ற முன்கள வீரரான 33 வயது மொஹமட் பஸால் 2008 ஆம் ஆண்டு இலங்கை தேசிய அணியில் அறிமுகம் பெற்றார். அது தொடக்கம் இன்று வரை அவர் அணியில் தமது இடத்தை தக்கவைத்திருக்கிறார். குறிப்பாக 2018 மற்றும் 2019 இல் இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

கொழும்பு, சாஹிரா கல்லூரியில் தனது கால்பந்தை ஆரம்பித்த அவர் இலங்கைக்கான 53 சர்வதேச போட்டிகளில் ஆடியிருப்பது சாதாரணமான ஒன்றல்ல.

கழக மட்டத்தில் அவர் ஏகப்பட்ட சாதனைகள் புரிந்திருக்கிறார். அவர் ரினோன், கொழும்பு எப்.சி. மற்றும் மிக அண்மையில் புளூ ஸ்டார் அணிக்காக ஆடி இருக்கிறார். கொழும்பு எப்.சி. பல பிரதான கிண்ணங்களையும் வெல்வதில் பஸால் பின்னணியில் இருந்திருக்கிறார். பின்னர் 2021 சுப்பர் லீக் தொடருக்கு முன்னர் புளூ ஸ்டார் கழகத்தில் களமிறங்கிய அவர் அந்தப் பருவத்தில் அந்த அணி கிண்ணத்தை வெல்லவும் உதவினார்.

இலங்கை மாத்திரமன்றி எம்.டீ.சி.சி. மற்றும் டென்ட் எஸ்.சி. போன்ற மாலைதீவு கால்பந்து லீக் கழகங்களிலும் ஆடி இருக்கிறார்.

இலங்கையின் மிக பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவரான பஸாலின் தாக்கம் அணியில் எப்போதும் இருக்கும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division