“றிங்..றிங்…” பரீனாவின் தொலைபேசி சிணுங்கியது “அஸ்ஸலாமு அலைக்கும் ”
“வஅலைக்குமுஸ்ஸலாம் ” இண்டைக்கி இப்தாருக்கு வாறதானே அன்ரீ?” என்று பரீனாவின் தங்கையின் மகள் ஷம்லா கேட்க
” இன்ஷா அல்லாஹ் பாப்பம்” “என்ன அன்ரீ நீங்க பாப்பம் என்டு செல்ற. வரோணும் இண்டைக்கி பெருநாள் சம்பந்தமான நம்மட பெமிலி மீட்டிங் தெரியும்தானே அன்ரீ” ” ஓம் மகள் தெரியும்” என்று இழுத்தாள் பரீனா.
“அப்ப என்ன? நாநா, தாத்தா, தம்பியையும் கூட்டிக்கி வாங்க அன்ரீ ஞாபகப்படுத்தத்தான் நான் கோல் பண்ணினன்” என்று ஷம்லா தொலைபேசியை வைத்தாள்.
பரீனா கொஞ்சநாளாவே ஏதோ சிந்தனையிலும் கவலையிலும் சந்தோசமற்றும் காணப்பட்டாள். பரீனா மிகவும் சமூகப்பற்று நிறைந்தவள். இறையச்சம் நிறைந்தவள். எல்லா விடயங்களிலும் பக்குவமாய் நடப்பவள். கணவன், பிள்ளைகள் விடயத்தில் மிகவும் பொறுப்புடையவள். சமூக அமைப்பு ஒன்றில் உறுப்பினராக செயற்பட்டுக்கொண்டிருப்பவள். ரமழான் வந்ததிலிருந்து அடிக்கடி நல்ல விடயங்களில் ஈடுபாடும் கவனமும் செலுத்திக்கொண்டிருந்தாள். பெருநாள் ஆடை, உணவுப் பழக்கவழக்கங்களில் மிகவும் பக்குவமாக நடந்துகொள்கின்றாள். ஆடம்பரம் பரீனாவிடம் துளியும் இல்லை. பிள்ளைகளையும் அவ்வாறே வளர்க்கின்றாள்.
இப்தாருடன் குடும்ப ஒன்றுகூடலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தோடு சென்றாள்.
“அஸ்ஸலாமு அலைக்கும் தாத்தா வாங்க” என்று வரவேற்றாள் பரீனாவின் மூத்த சகோதரி. குடும்பமும் “வஅலைக்குமுஸ்ஸலாம் ” என பதில் கூறி இப்தார் ஏற்பாடுகள் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள் பரீனாவை. மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டார்கள் பரீனாவின் சகோதரிகளும் சகோதரர்களின் மனைவிமார்களும். வீடு முழுக்க பிள்ளைகளின் சத்தத்தினால் கலகலவெனக் காணப்பட்டது.
திருமண வீடும் தோற்றுப்போகும் அளவிற்கு இருந்தது பரீனாவின் தாய்வீடு. பரீனா வீட்டில் இரண்டாவது பிள்ளை என்றாலும், பரீனா மட்டுமே சமூக அக்கறையும் பொறுப்புமுடையவள். சகன் சாப்பாடுகளும், பழங்களும், இனிப்புகளும், குடிபானங்களும் இப்தாருக்காக ஏற்பாடு செய்யப்படுகின்ற விருந்துகளைப் பார்த்ததும் பரீனாவின் மனதில் தாங்கமுடியாத ஒரு பரிதவிப்பு,குறுகுறுப்பு, உளக்குமுறல் ஏதோ ஒரு குற்ற உணர்வுபோல உணரலானாள். இந்த வீணான ஆடம்பர ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ள அவள் மனம் மறுத்துக்கொண்டேயிருந்தது.
“எல்லாரும் வாங்க மீட்டிங் ஸ்டாட் பண்ணுவம், நேரமாகுது.” என்று பரீனாவின் இரண்டாவது தம்பி ஒரு குரல் கொடுக்க அனைவரும் விரைந்து வந்தார்கள்.
“அஸ்ஸலாமு அலைக்கும். நம்மட பெமிலி மிச்சநாளைக்கி பொறகு கூடி இருக்கம். சந்தோசமா இரிக்கி, இன்ஷாஅல்லாஹ். பெருநாளைக்கு இன்னம் மூணு நாள்தான் இரிக்கி. அதனால அதப் பத்தி சில ப்ளான் பண்ண வேண்டி இரிக்கி அதான் இந்த மீட்டிங். இது சம்பந்தமான ஐடியாக்களை ஒவ்வொருத்தரா தெரிவிக்கலாம்” என்று பரீனாவின் தம்பி முடிக்க.
“மாமா நம்ம எல்லாரும் சேர்ந்து 3 நாள் ட்றிப் ஒண்டு போவம்…” என்று பரீனாவின் தாத்தாவின் மகன் மிஹாஸ் கூற…
“3 நாளா அது என்னத்துக்கு காணும் 5 நாள் போவம்” என்று பரீனாவின் தம்பியின் மகன் கூற..
” நாலு நாள் காணும். கொழும்பு, கண்டி, நுவரேலியா பாத்துட்டு வரலாம்” என்று பரீனாவின் தங்கையின் கணவர் கூற…”இது நல்ல ஐடியா இதையே நம்ம முடிவாக எடுப்பம்.”
பரீனாவின் தம்பி கூற…
“எல்லாரும் பெருநாளைக்கு உடுப்பு எடுத்தாச்சா?” என்ற கேள்வியை பரீனாவின் தம்பி கேட்க…”எனக்கி நாலு உடுப்பு..எனக்கி ஆறு..எனக்கி அஞ்சி…எனக்கி மூணு” என்று ஒவ்வொரு பிள்ளைகளும் தன் பெருநாள் ஆடைகளின் எண்ணிக்கைகளை கூற..
“எல்லாரும் உடுப்புகள செல்றாங்க நீங்களும் ஒங்கட உடுப்புகள செல்லுங்களன் ” என்றான் பரீனாவின் தம்பி..,வீடே கலகலத்துபோய் இருக்க பரீனாவும் பிள்ளைகளும் அமைதியாக இருந்தார்கள். அவர்களின் அமைதி பக்குவமானதே தவிர வேறேதுமில்லை. சபை ஒழுக்கம் தெரிந்தவர்கள். மரியாதையாய் பேசிப் பழகுபவர்கள். பரீனாவின் வளர்ப்பு அது. பரீனாவின் கணவரும் அப்படியேதான்.
“எங்களுக்கு மூணு பேருக்கும் ஒவ்வொரு உடுப்பு எடுத்த.” என்று முடிக்க “என்ன தாத்தா பிள்ளையளுக்கு ஒண்டுதானா எடுத்த ” என்று பரீனாவின் தம்பி கேட்க ஏனையவர்களும் ஆச்சரியத்துடன் நோக்க…”ஓ..தம்பி அது போதும்தானே பெருநாள் ஒருநாள்தானே தொழப் போறத்துக்கு புது உடுப்பு உடுத்தி போனா செரிதானே. அது என்னத்துக்கு மிச்சமா?” என்று சாந்தமாக கூறி முடித்தாள் பரீனா. எல்லோரும் அமைதியானார்கள்.
“வருசத்துல நமக்கு வாறதே ரெண்டு பெருநாள்தான். அத ஒரு உடுப்போட கொண்டாடுற எப்புடி. நாலஞ்ச எடுத்தா மாறி மாறி போடலாம்தானே.” என்றாள் பரீனாவின் மூத்த சகோதரி.
பரீனாவின் மெல்லிய புன்னகையே அதற்குப் பதிலாக இருந்தது.
“செரி செரி அத உடுங்க உடுப்பு எடுக்கது அவரவர் விருப்பம்தானே ..பெருநாள் அன்டைக்கு காலையில் ஒரு பங்சன் ஏற்பாடு செய்றம் ஒராளுக்கு ஐநூறு ரூபா போட்டு செய்றதாக இரிக்கம்” என்று பரீனாவின் மூத்த சகோதரி முடிப்பதற்கிடையில் “ம்மா…ம்மா…இரிங்க அந்த பங்சன பத்தி நான் செல்லப்போறன்” என்றாள் ஷம்லா.
“பெருநாள் பங்சனா?? அதென்ன பெருநாள் பங்சன் இதுவேற செய்யப்போறயளா??” என்று உள் மனதில் கேள்விகளை எழுப்பினாள் பரீனா. அவளால் இந்த ஆடம்பர பேச்சுக்களை தாங்கவே முடியாமல் இருந்தது.
” பெருநாளைக்கு முதல் நாள் இரவைக்கு எல்லாரும் வாங்க நிறைய வேலைகள் இரிக்கி…டெகரேசன் பண்ணனும்..அதுக்கு நிறைய நேரம் தேவப்படும்..திங்ஸ் வாங்கணும்..எங்கட ஊட்டதான் செய்ற ..சுவர்ல ஈத் முபாறக் எண்டு பெரிசா அடிச்சி …பலூன் நிறைய வாங்கி அதையும் பிறை வடிவத்துல டபள் கலர்ல செஞ்சா சூப்பரா இரிக்கிம்… இன்னம் இன்னம்..எவ்வளவு அழகா க்ரேண்டா டெகெரேஷன் பண்ண ஏலுமோ பண்ணலாம் நீங்களும் ஐடியா தரலாம்…அடுத்தது ஸ்வீட் ஐட்டம்ஸ் நிறைய தேவைப்படுது…அதுக்கு ஆளுக்கு ரெண்டு ஸ்வீட் செஞ்சுட்டு வந்தா சரி..ஐசிங்க கேக் கூகுள்ள மொடல் பாத்து பெரிசா ஒண்டு ஓடர் பண்ணிரிக்கி..வேற…வேறென்ன…ஹ்ம்..”
“பட்டாசுகள், சக்கரவானம் ?..” ஷம்லாவின் தம்பி ஞாபகப்படுத்தினான்.
“இதெல்லாம் செஞ்சி பங்சனும் முடிஞ்சா பெருநாள் சாப்பாடு சமைக்க நேரமே இரிக்காது போல…” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் பரீனாவின் தம்பியின் மனைவி.
“சமையலா?…பெருநாள் உடுப்ப போட்டுக்கு சமைக்கிற எப்டி…இது செரிவரா…ஒவ்வொரு நாளும் கிச்சன்லதானே நிக்கம் இன்டைக்காவது எங்களுக்கு ஓய்வு வேணும். நாங்க கடையில சகன் சாப்பாடு ஓடர் பண்ணப்போறம்.” என்று பரீனாவின் மூத்த சகோதரி பேசி முடித்தாள்.
“அப்ப செரி …இதோட மீட்டிங்க முடிச்சுக்குவம். இந்த மீட்டிங்ல எடுத்த முடிவுகள செல்றன் கேளுங்க.. ஒருவருக்கு ஐநூறு ரூபா வீதம் சேர்த்து பெருநாள் தினத்தன்று பெருநாள் பங்சன்..
அடுத்தது பெருநாள் அடுத்த நாளைக்கி காலையில வெளியூர் நாலு நாள் பயணம் போற இப்பவே அதுக்கு எல்லாரும் ரெடியாகுங்க. செரிதானே ரெண்டு முடிவுகளும்தான் இப்ப எடுத்திரிக்கி.
பெருநாள் டெகரேசன் செய்றதுக்கு முதல்நாள் இரவைக்கி எல்லாரும் இஞ்ச அதாவது மூத்த தாத்தாட வீட்ட வந்தா செரி.” என்று பரீனாவின் தம்பி முடிப்பதற்கிடையில்
“பலூன் ஊதுற வேலையெல்லாம் இரிக்கி எல்லாரும் வரணும் இதையும் செல்லுங்க மாமா ” என்றாள் ஷம்லா.
“எல்லாரும் பேசின பரீனா தாத்தாதான் ஒன்டுமே பேசல.. தாத்தா ஒங்கட ஐடியாக்கள் ஏதும் இருந்தா செல்லுங்களேன்..”என்றான் பரீனாவின் தம்பி.
பரீனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது போலிருந்தது…
“எல்லாருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்ம குடும்பமா கூடினது சந்தோசம் அல்ஹம்துலில்லாஹ்.
நீங்க எல்லாரும் பெருநாளை செலிப்றேட் பண்றதும் அத க்றேன்டா கொண்டாடுறது சம்பந்தமாவும் முடிவுகள் எடுத்தியள். ஆனா எத்தனை ஊடுகளுக்கு நோன்பு பிடிக்க,நோன்பு திறக்க வசதியில்லாம இரிக்கி…அதோட பெருநாள் கேள்விக்குறியில் இரிக்கிது அவங்களுக்கு. ஒரு வேள சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற ஏழைகள் எத்தனையோ பேர். உடுத்த உடுப்புக்கு மறு உடுப்பு இல்லாம இரிக்க ஆக்கள் எவ்வளவோ பேர். ஊடே இல்லாம….,தகர கொட்டிலுக்குள்ள…..,இந்த கொடூர வெயில் வெப்பத்துக்குள்ள ஒரு பேன் கூட இல்லாம எத்தனையோ குடும்பங்கள்.. கை நீட்டி கேக்க வெக்கத்துல பசியோட பட்டினியோட காலத்த கடத்துற வறும குடும்பங்கள்…,பிள்ளையளுக்கு அரசாங்கம் குடுக்கற பால்மா அட்டைய வித்து அரிசி வாங்கி சோறு மட்டும் ஆக்கி அத தண்ணி ஊத்தி சாப்பிடுற குடும்பங்கள்” …குரல் தடுமாற, தொய்ந்த குரலில், நீர் நிரம்பிய கண்களுடன் பரீனா.. ஏழைகளை விபரித்துக்கொண்டிருக்க எல்லோரும் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
கண்களைத் துடைத்து விட்டு ” இது மட்டுமா காஸாவுல நாளுக்கு நாள் அங்குள்ள மக்கள் படுறபாடு…இதெல்லாம் நான் புதுசா செல்லத்தேவலதான்…ஆனா இந்த விசயங்கள நம்மட சமூகத்துல ஞாபகப்படுத்த வேண்டிய தேவைப்பாடு இரிக்கி.
இண்டைக்கி இஞ்ச இப்தாருக்கு செய்ற விருந்துகள் இப்தார் முடிஞ்சா விளங்கும் எவ்வளவு வீண்விரயம் ஆகப்போகுது எண்டு.
இதில இரிக்கிற ஈச்சப்பழம் கூட இல்லாம நோன்பு திறக்குற மக்கள் எவ்வளவு பேர் இரிக்காங்க எண்டு ஆருக்காவது தெரியுமா?
இது போக பெருநாள் பங்சனுக்கு ப்ளான் பண்றயள். அதுவும் ஆடம்பரமா கொண்டாட..
அடுக்குமா இது ஒங்களுக்கு? ஒராளுக்கு ஐநூறு போட்டு இறைவனுக்கு பொருத்தமில்லாத வீண்விரயத்த செய்யப் பாக்கயளே, அந்தக் காச சேத்து யாராவது ஒரு குடும்பத்துக்கு பெருநாள் சாப்பாட்ட சமச்சி குடுத்து, அந்த சாப்பாட்ட வயிராற சாப்பிட்டு, மனம் குளிரும் வேலைய செஞ்சா இது ஒங்களுக்கு மறுமைவரையும் கொண்டுபோய் நன்மையாய் பெருகுமே.” பணிவான குரலில் சொன்னாள் பரீனா.
” புது உடுப்ப போட்டுக்கு சமைக்க ஏலாதாம் நம்மட தாத்தாக்கு.” சிறு புன்னகைத்தபடியே சொன்னாள் பரீனா.
“குளிச்சா போட புதுசுக்கு கேள்விக்குறி…., அடுப்ப பத்தவைக்க கேள்விக்குறி..இப்பிடி வறுமையோட வாழுறவங்களோட ஒப்பிட்டு பாருங்க. சமைக்கிறதுல கொஞ்சம் சேத்து சமச்சி ஒரு பார்சல குடுத்து பாத்தா அதுல வாற மனநிறைவு எதிலயும் இல்ல தாத்தா” மிகவும் தாழ்மையுடன் சகோதரியை பார்த்து சொன்னாள் பரீனா.
“வறுமை ஒழிக்கணும்…ஏழைகள் வாழணும் என்டு குரல் குடுத்தா மட்டும் காணுமா? மாற்றங்கள் வெளியில இருந்து தொடங்க தேவல நம்மட ஊட்ல இருந்து தொடங்கணும். நம்மட பிள்ளைகளுக்கு கஷ்டத்தையும் சொல்லி வளக்கணும். பிள்ளைகள் தானே நாளைக்கு தலைவர்களாக வரப்போறவங்க, அதுகளே சமூக அக்கறையில்லாம பொறுப்பில்லாம நடந்தா அதுக்கு பேரன்ஸ் நாமதானே பொறுப்பு. நம்ம பொறுப்பு பத்தி மறுமையில இறைவன் கேட்டா செல்றதுக்கு என்ன செஞ்சிரிக்கம்?” என்று தன் உளக்குமுறல்களை, ஆதங்கத்தை, சமூக பற்றை தன் குடும்பத்தின் முன் கொட்டித் தீர்த்தாள் பரீனா.
இவ்வாறிருக்க இப்தாருக்கு நேரமாகி அதானும் ஒலித்தது (பள்ளியில் சொல்லப்படும் பாங்கு)
இப்தாரும் அமைதியாக முடிந்தது.
ஆண்களெல்லாம் பள்ளிக்குச் சென்று தொழுது வந்தார்கள்.பெண்களும் வீட்டில் தொழுது கொண்டார்கள். பிள்ளைகள் குர்ஆனை எடுத்து ஓத ஆரம்பித்தார்கள்.
பின்னர் எல்லோரும் உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள்.
அடுத்தநாள் பகல் 2.00 மணிக்கு குடும்பத்தின் வாட்ஸ்அப் குழுமத்தில் குறுந்தகவலொன்று வருகிறது…
பரீனா அந்த குறுந்தகவலை பார்க்கிறாள்..”நாம் நேற்று எடுத்த பெருநாள் தீர்மானங்களில் சுற்றுலாவைத் தவிர வேறெதுவும் நடக்காது. அத்தோடு சுற்றுலா இரண்டு நாள் மட்டுமே செல்வதாக தீர்மானிக்கப் பட்டுள்ளது. அத்தோடு ஒருவருக்கு ஐநூறு ரூபா வீதம் (விரும்பியவர்கள் விரும்பிய தொகையை தரலாம்) சேர்த்து பரீனா தாத்தா சொன்னது போல் எமது ஊரில் உள்ள ஏதாவது ஒருசில குடும்பங்களுக்கு பெருநாள் சாப்பாடு சமைத்து கொடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதனை அனைவருக்கும் அறியாத்தருகிறேன்
இப்படிக்கு எமது குடும்ப நிருவாக தலைவர்.” (பரீனாவின் தம்பி)
இந்த குறுந்தகவலை பார்த்துக்கொண்டிருக்கும் போதே நான் ஆமோதிக்கிறேன் நான் ஆமோதிக்கிறேன் என எல்லோரும் தத்தமது சம்மதத்தை தெரிவித்தார்கள்.
பரீனாவுக்கு சந்தோசம் மேலெழுந்து ஆனந்தக்கண்ணீர் வடிய உடனே இறைவனுக்கு நன்றி சொல்ல ஸுஜுதில் (சிரம் பணிதல்) விழுகிறாள்.
நிஸா இஸ்மாயில்