உயிர்த்தெழுந்த ஆண்டவர் தன் சீடர்களைப் பார்த்து கூறிய முதல் வார்த்தை அமைதி என்பதே.
உலகம் முழுவதும் இன்று அமைதி யிழந்து போரினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் தவிக்கின்றது. இதனால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
குழந்தைகளை ஆற்றித் தேற்றத்தான் ‘சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதே” என்ற பல்லவியை சொல்லிக் கொடுக்கின்றோம். ஆனால் குழந்தைகளால் கூட இந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடிவதில்லை. காரணம் குழந்தைகள் அத்தனை வன்முறைகளை அனுபவித்து இறுதியில் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அமைதியின்மையே. கல்லறை முதல் கருவறை வரை, ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை, தாத்தா முதல் பாட்டி வரை எல்லோரும் விரும்புகின்ற ஒன்று மகிழ்ச்சியுடன் கூடிய அமைதியே.
திருமறையின் பார்வையில் உயிர்த்தெழுந்த ஆண்டவர் தன் சீடர்களைப் பார்த்து கூறிய முதல் வார்த்தையும் அமைதியே என யோவான் நற்செய்தி நூல் 20: 19-26 இல் மும்முறை கூறுவதனைக் காண்கிறோம்.
இயேசுவின் உயிர்ப்பு மதத் தலைவர்களையும், படையினரையும் கல்லறைக்கு காவல் நின்றவர்களையும் மலைப்புக்குள்ளாகியது. அதேநேரம் எல்லா நற்செய்தி நூல்களிலும் உயிர்ப்பு நம்பிக்கையைக் கொடுத்தது. பயத்தோடு பாதை மாறிச் சென்ற எம்மாவூர் சீடர்களை நம்பிக்கையின் பாதையில் எருசலேமுக்கு அழைத்து வந்து (லூக் 24: 13-23) கல்லறைக்கருகில் அழுது கொண்டு ஆண்டவரைத் தேடிய மகதலெனா மரியாள் நம்பிக்கையினால் (யோவான் 20 : 11 – 18) ஓடி இயேசுவின் சீடர்களை கல்லறைக்கு அழைத்து வந்தாள். உயிர்த்த ஆண்டவரைக் கண்டு அவரது விலாவிலும் கரங்களிலும் ஏற்பட்ட காயங்களில் என் விரலை வைத்துப் பார்ப்பேன் என்று விசுவாசத்தில் இருந்த தோமாவை இந்தியா வரை அழைத்து வந்தது உயிர்ப்பின் நம்பிக்கை தான். (யோவான் 20:24-29)
நாங்கள் நம்பியிருந்தவர் உரோம ஆட்சி அடக்குமுறையிலிருந்து எம்மையும், எம் இனத்தையும் காப்பார் என்ற கனவு பொய்யாகி விட்டது. இனி நாம் இருந்து பயனில்லை. எம் பழைய தொழிலாகிய கடற்றொழிலுக்குச் செல்வோம், எனக் கூறி சில சீடர்களை அழைத்துக் கொண்டு மீன் பிடிக்கச் சென்ற பேதுருவை இயேசு அழைத்து, தொழிலில் வெற்றியைக் கொடுத்தது உயிர்ப்பின் நம்பிக்கை தான். (யோவான் 21:1-14)
புதிய ஏற்பாட்டில் உயிர்த்த ஆண்டவர் இயேசு குறைந்த பட்சம் பத்துத் தடவைகளுக்கும் மேல் தன் அடியவர்களுக்கு காட்சி தருகின்றார். கொலை வெறியோடு சென்ற சவுலை தமஸ்குப் பாதையிலே சந்திக்கிறார் (தி.ப 9: 1-19) சவுலுக்கு உயிர்த்த இயேசு துன்புறும் கிறிஸ்துவாக தன்னைக் காண்பிக்கிறார்.
உயிர்த்த இயேசுவைச் சந்தித்தவர்கள் மனதிலே அமைதியற்றவர்களாகத் தான் காண்கிறோம். அதனால் தான் உயிர்த்த ஆண்டவர் கூறிய வார்த்தை உங்களுக்கு அமைதி உண்டாவதாக என்பதாகும்.
கல்லறை அருகில் கண்ணீர், தொழிலில் ஏமாற்றம், விசுவாசத்தில் உறுதி, பயணத்தில் தடுமாற்றம், உள்ளத்தில் கொலை வெறி. போன்ற உணர்வுகளோடு வந்தவர்களைச் சந்தித்த ஆண்டவர் ஏன் இன்று இவ்வாறான போராட்டங்களோடு வாழும் மக்களுக்கு அமைதியைக் கொடுக்க முடியவில்லை என்பது காலங்காலமாக கேட்கப்படும் கேள்வியாக இருக்கின்றது.
காயீன் ஆபேலில் தொடங்கிய கொலை உலக மீட்பர் இயேசு வரைக்கும் தொடர்ந்த கொலை இன்றுவரைக்கும் ஓயவில்லை. இவ் வன்முறை பல வடிவங்களில் மக்கள் மனங்களில் பயத்தையும் அமைதியின்மையையும் உளவியல் நோய்களையும் ஏற்படுத்தி சமூகத்தை நடமாடும் பிணங்களாக மாற்றியுள்ளது.
இம் மாற்றத்திலிருந்து இருந்து மீட்கப்பட அமைதி தான் பதிவாகின்றது.
நான் கால் நீட்டிப் படுத்துறங்குவதற்குப் போதுமான இடமில்லை என்று சொல்லி ஆஸ்திரியா நாட்டை ஹிட்லர் பிடித்தான். இன்று அமைதியாக இருங்கள் என்று சொல்வதைக் கூட அதட்டித்தான் சொல்கிறோம். அன்றிந்த மக்கள் கூட்டம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தினால் ஏற்பட்ட காயங்களும் வடுக்களும் இன்னும் ஆறவில்லை. பரிசேயர்கள், சதுசேயர்கள் சுட்ட பொறாமைத் தீ, யூதாசின் பணத் தீ, பிலாத்துவின் பதவித் தீ, பாமர மக்களின் அறியாமைத் தீ, போர்வீரர்களின் கோபத் தீ அவரைச் சுட்டுப் பொசுக்கியது.
இந்த தீக் காயங்கள் எல்லாம் மூன்று நாட்கள் வரை தான் கல்லறையில் நீடித்தது. உயிர்த்த ஆண்டவர் இந்த காயங்களை ஏற்படுத்தியவர்களை பழிவாங்கவில்லை. அவர்களுக்கும் அமைதியை அள்ளிக் கொடுத்தார்.
இன்னும் அதே ஆண்டவர் எம்மைப் பார்த்து என் கூட இருந்தே குழி பறித்த யூதாசோடு நான் வாழ வேண்டியிருந்தது. அவனுக்குப் பணம் பதவி இவை மட்டுமே முக்கியமானதாகத் தெரிந்தன. மூன்று முறை மறுதலித்த பேதுருவோடு நான் வாழவேண்டியிருந்தது அவருக்கு அவருடைய உடலும், உயிரும் முக்கியமானதாகத் தெரிந்ததே. என்னை சிலுவையில் அறைந்து தொங்கவிட்டு கேலி செய்தவர்களோடு வாழ வேண்டியிருந்தது. அவர்களுக்கு அதிகாரமும் ஆணவமும்தான் முக்கியம். ஆனால் எனக்கு முக்கியமானதாகத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அது தான் அன்பும். அமைதியும் என உயிர்த்த ஆண்டவர் பேசுகிறார்.
இந்த உயிர்ப்பின் செய்தி நமக்கு கொடுக்கும் அறைகூவல், இயேசு வாழ்ந்த காலத்தில் பொழிந்த அன்பை பகிர்வதே. இயேசு தமக்குத் தெரிந்தவர்களுக்கு அன்பு செய்தார். (யோவான் 11: 1-14) லாசருவின் தமக்குத் தெரியாதவர்களையும் அன்பு செய்தார். மாற்கு 5: 24-34 இல் 12 வருடங்களாக வியாதியால் துன்புற்ற பெண் ஒருத்திக்கு வாழ்வு கொடுத்தார். தமது எதிரிகளுக்கு அன்பு செய்தார். தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் அன்பு செய்ய அவரால் முடிந்தது.
இப்படி தெரிந்தவர்களையும் தெரியாதவர்களையும் எதிரிகளையும் அன்பு செய்த இயேசுவை ஒரு நாள் அந்த அன்பு உயிர்ப்பித்தது. அன்பே உருவான விண்ணகத் தந்தை அவரை உயிர்ப்பித்தார் 1 யோவான் 4:8 இல் கடவுள் அன்பு மயமானவர். எங்கே அன்பு இருக்கின்றதோ அங்கே உயிர்ப்பு உண்டு. உயிர்ப்பு ஏற்படும் போது அமைதி கிடைக்கும். அமைதிக்காக, உலக அமைதிக்காக, உயிர்த்த ஆண்டவரின் அருளோடு உழைப்போமா?
அருட்பணி டி.எஸ்.மதியாபரணம்