பிஃபா தொடர் என்பது சர்வதேச கால்பந்து அரங்கில் அதிகம் அவதானம் செலுத்தப்படாத தொடராக இருந்தபோதும் இலங்கைக்கு அதி முக்கியமானது. அதாவது சர்வதேச அளவில் அதிக போட்டி வாய்ப்புகள் இல்லாத அடிமட்ட அணிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலேயே சர்வதேச கால்பந்து சம்மேளனம் இந்த தொடரை உலகெங்கும் அறிமுகம் செய்தது.
ஆனால் இலங்கையை பொறுத்தவரை சர்வதேச போட்டித் தடை, அதனால் இலங்கை கால்பந்து அணியில் ஏற்பட்டிருக்கும் குழப்பம், பலவீனம், சர்வதேச அளவில் போட்டிகளுக்கு இருக்கும் பஞ்சம் எல்லாவற்றையும் சேர்த்து இது ஒரு பொன்னான வாய்ப்பாக இருந்தது.
கொழும்பு குதிரை பந்தய திடல் மைதானத்தில் கடந்த வாரம் நடந்த நான்கு அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டிகள் சர்வதேச அளவில் பெரிதாக பரபரப்பை ஏற்படுத்தாதபோதும் இலங்கை கால்பந்துக்கு நீண்ட காலத்திற்கு பின் வெற்றிக் கொண்டாட்டம் ஒன்றுக்கு காரணமானது. முதலில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி நடந்த பப்புவா நியூகினியாவுக்கு எதிரான போட்டி இலங்கைக்கு பெரும் போராட்டமாக இருந்தது. எவ்வாறாயினும் அந்தப் போட்டியை இலங்கை அணியால் கோல் இன்றி சமநிலை செய்வதற்கு முடிந்தது.
என்றாலும் கடந்த மார்ச் 25 ஆம் திகதி நடந்த பூட்டானுக்கு எதிரான போட்டி இலங்கைக்கு வெற்றியை தேடித்தந்த ஆட்டமாக மாறியது. அந்தப் போட்டியில் இலங்கை அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை சர்வதேச அரங்கில் பெற்ற முதல் வெற்றியாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் தனது தெற்காசிய போட்டியாளரான பூட்டானை தோற்கடித்த முதல் சந்தர்ப்பமாகவும் இருந்தது.
அதாவது 2021 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான நான்கு நாடுகள் கால்பந்து தொடரின்போதும் இலங்கை அணி வசீம் ராசிக்கின் இரட்டை கோல் மூலம் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியதன் பின்னர் இலங்கை பெறும் முதல் வெற்றி இது தான். அதன் பின்னர் இலங்கை ஏழு சர்வதேச போட்டிகளில் ஆடி நான்கு போட்டிகளில் தோற்று மூன்று ஆட்டங்களை சமநிலை செய்திருக்கிறது.
இந்நிலையில் பூட்டானுக்கு எதிரான போட்டியில் மத்திய கள வீரர் டிலான் பெரேரா நேர்த்தியாக பந்தை எடுத்துச் சென்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவானதோடு அணித் தலைவர் சுஜான் பெரேராவுக்கு கிடைத்த மகுடமாகவும் இது இருந்தது.
முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிந்தபோதும் இரண்டாவது பாதியில் 10 நிமிடங்களுக்குள்ளேயே கோல் புகுத்தி இலங்கையால் வெற்றியை உறுதி செய்ய முடிந்தது. டி சில்வா மற்றும் பின்கள வீரர் ஒலிவர் கெலார்ட் இருவருக்கும் பந்தை வலைக்குள் செலுத்த முடிந்தது.
‘எமது திட்டமிடல், ஒழுக்கம் மற்றும் கட்டமைப்பு எதிரணியை வீழ்த்த உதவியது. எமது வீரர்கள் பற்றி நான் பெருமைப்படுகிறேன்’ என்கிறார் இலங்கை அணி பயிற்சியாளர் அன்ட்ரூ மொரிஸன். அணியின் தயார்படுத்த மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
உண்மையில் பிஃபா அறிமுகப்படுத்திய இந்தத் தொடரில் உலகெங்கும் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் உலகக் கால்பந்து தரவரிசையில் மிகவும் அடிமட்டத்தில் இருக்கும் அணியாக இலங்கை இருக்கிறது. அதாவது பிஃபா தரவரிசையில் இலங்கை 204 ஆவது இடத்திலேயே உள்ளது. அதுவே இலங்கை தோற்கடித்த பூட்டான் அணி 184 ஆவது இடத்தில் காணப்படுகிறது.
அந்தவகையில் இலங்கை அணியின் வெற்றி முக்கியமானது தான். ஆனால், இலங்கை பயணிக்க வேண்டிய தூரமோ மிக நீண்டது. ஒன்றிரண்டு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கை கால்பந்து அணியின் தராதரத்தில் இருந்த இந்தியா, பங்களாதேஷ் ஏன் மாலைதீவு அணிகள் கூட இன்று ஒருபடி மேலே இருக்கிறது. அதிலும் இந்தியா நாளுக்கு நாள் பலம்பெற்று வருகிறது.
ஆனால், இலங்கை இன்றும் எழுந்து நிற்கவே போராடும் அளவுக்கே இருக்கிறது. இலங்கை அணியிலும் உண்மையான உள்நாட்டு வீரர்களுக்கு அப்பால் வெளிநாடுகளில் ஆடும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறுகிய கால வெற்றிகளைத் தேடித் தந்தபோதும் நீண்டகால திட்டமிடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது.
பிஃபா அறிமுகம் செய்திருக்கும் இந்த தொடரும் முழுமையான ஒரு போட்டி ரீதியான ஆட்டங்களாக குறிப்பிட முடியாது. வெறுமனே நட்பு ரீதியான போட்டிகளாகவே நடைபெறுகின்றன. சம்பியன் அணி எதுவும் தேர்வு செய்யப்படுவதில்லை.
இலங்கை நடத்திய பிஃபா தொடரில் பங்கேற்ற மற்றொரு அணியான மத்திய ஆபிரிக்க குடியரசு தான் எதிர்கொண்ட பூட்டான் மற்றும் பப்புவா நியூகினிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை முறையே 6–0 மற்றும் 4–0 என இலகுவாக வென்றது. குறைந்தது இந்தத் தொடரை ஒரு முழுமையான கால்பந்து தொடராக நடத்தி இருந்தால் இலங்கை அணிக்கு இன்னும் சவாலான மத்திய ஆபிரிக்க குடியரசையும் எதிர்கொள்ள வாய்ப்பு கடைத்திருக்கும்.
இலங்கையில் பாடசாலை மற்றும் கழக மட்ட கால்பந்து போட்டிகள் வழக்கம்போல நடைபெற்று வந்தபோதும் அது தேசிய மட்டத்தில் வீரர்களை உருவாக்குவதில் இன்னும் குறைபாடுகள் இருப்பதாகவே தெரிகிறது.
இத்தனைக்கும் இலங்கை கால்பந்துக்கு என்று பிரத்தியேக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏன் பூட்டானுக்கு எதிரான போட்டியில் குதிரைப் பந்தய திடல் நிரம்பி வழிந்தது. டிக்கெட் கிடைக்காமல் வெளியே காத்திருந்தவர்கள் ஏராளம். இது இலங்கை கால்பந்துக்கான சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்கள் இல்லாத குறையையே காட்டுகிறது.
‘குதிரைப்பந்தய திடல் அரங்கின் மட்டுப்படுத்தப்பட்ட இருக்கை அளவு காரணமாக டிக்கெட் பெற முடியாமல்போன இலங்கை ரசிகர்களுக்கான நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பிரத்தியேக கால்பந்து அரங்கொன்றை நிர்மாணிப்பதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்’ என்று இலங்கை கால்பந்து சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டார்.
எனவே இலங்கை கால்பந்து மைதானத்தில் மாத்திரமல்ல, அதன் உட்கட்டமைப்பிலும் மாற்றங்கள் செய்ய வேண்டிய நீண்ட பயணத்தில் ஆரம்பப் புள்ளியாக இந்த பிஃபா தொடரை எடுத்துக்கொள்ளலாம்.
எஸ்.பிர்தெளஸ்