காற்று திசைமாறி வீசுவதைப் போல இந்திய அரசியல் சூழலிலும் ஆதரவு அலை மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் வரையில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களை வெல்லும் என்று கருத்துக்கணிப்பு நிலவி வந்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி பக்கம் திரும்பியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அரசியல் நிலவரம் மாறிக் கொண்டே இருக்கும் என்பது இயற்கை. எதுவும் இங்கே நிரந்தரமில்லை.
பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் பின்னடைவுக்கு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று தேர்தல் பத்திரம், இன்னொன்று இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் மீது இலஞ்ச, ஊழல் புகார்களை முன்வைத்து அமுலாக்கத்துறை எடுத்துவரும் கைது நடவடிக்கை. இதில் முக்கியமாக இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழலில் செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டு அமுலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது இந்திய அரசியலில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருக்கும் டெல்லி அரசின் கலால் கொள்கை, மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும் அதற்கு இலஞ்சம் கொடுத்ததாகவும், சில விற்பனையாளர்களுக்கு சாதகமாக இந்த கொள்கை வகுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் அளவில் நடந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மத்திய அமுலாக்கத் துறை பணப் பரிவர்த்தனை மோசடி தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சியோடியா, சஞ்சய் சிங், அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் மற்றும் சில தொழிலதிபர்களை அமுலாக்கத் துறையினர் கைது செய்தனர். கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சதி செய்ததாக குற்றப் பத்திரிகையில் அமுலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இதுவரை 9 முறை கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் அது சட்டவிரோதம் என்று அவர் தொடர்ந்து கூறிவந்தார். இவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளாத அமுலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கை ஏன்? என்றே கேள்வியை இந்தியா கூட்டணி தலைவர்கள் முன்வைக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் பலத்தை உடைக்க வேண்டும் என்றும், இவர்களின் ஒற்றுமையால் பா.ஜ.க தோற்றுவிடும் என்ற பயத்தினாலுமே அமுலாக்கத் துறையினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இது பழிவாங்கும் நடவடிக்கை என்று போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்திய ஊடகங்களில் முதன்மைச் செய்தியாக இது முன்னிறுத்தப்படுவதால் மக்கள் மத்தியிலும் இது பேசுபொருளாகியிருக்கிறது.
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வமான பத்திரிகையான சாம்னாவில் இந்த கைது நடவடிக்கையை முன்வைத்து ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது முதல்வர் கெஜ்ரிவால் அமுலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவர்கள் எதிர்க்கட்சிகளைக் கண்டு பயந்து அவர்களை சிறையில் அடைத்துவிட்டு தேர்தலை எதிர்கொள்கிறார்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க 4 வழிகளில் ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இது குறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவு செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறும் போது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள். தற்போது ஊழலை சட்டபூர்வமாக ஆக்கிவிட்டு அதை மறைக்க முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க 4 வழிகளில் ஊழலில் ஈடுபட்டுள்ளது. முதலாவது ப்ரீ பெய்டு இலஞ்சம். அதாவது நன்கொடை தா, வாய்ப்பைப் பெறு. இரண்டாவது போஸ்ட்பெய்டு இலஞ்சம், அதாவது ஒப்பந்தம் வாங்கிக் கொள்ள இலஞ்சமாக நன்கொடை கொடு. மூன்றாவது மிரட்டிப் பணம் பறித்தல், சோதனை செய்த பிறகு இலஞ்சம் வாங்குவது. நான்காவது போலி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இலஞ்சமாக நன்கொடை பெறுவது. இந்த நான்கு வழிகளில் பா.ஜ.க மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாக அவர் மேலும் குற்றம்சாட்டுகிறார்.
இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து முறையான பதில் இல்லை. இந்தியாவின் வடகிழக்கில் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க தேர்தலில் போட்டியிடாமல் விலகியுள்ளது. தோல்விப் பயத்தாலேயே போட்டியிடாமல் விலகியுள்ளதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.
பா.ஜ.க ஆளும் மணிப்பூர் மாநிலம் இனக் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதமாக அங்கு மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வீடு, உடைமைகளை இழந்த மக்கள் பலரும் அரசு முகாம்களிலேயே இதுவரை தஞ்சமடைந்துள்ளனர். நாகலாந்திலும் அம்மாநில மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறிய ஒன்றிய பா.ஜ.க அரசு அதைச் செய்யவில்லை என்று அங்குள்ள மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனாலேயேதேர்தலில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்று பா.ஜ.க விலகுவதாக அறிவித்துள்ளது.
ஆனால், அம்மாநில கட்சிகள் தங்களுக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளதால் போட்டியிடவில்லை என்று பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார், மற்ற மாநிலங்களில் உட்கட்சிகளில் மோதலை உண்டாக்கி கட்சிகளை உடைத்து மாநில ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க இந்த மூன்று மாநில அரசியல் களத்திலிருந்து விலகுவது ஏன்? அங்குள்ள மக்களிடம் இவர்களுக்கு துளிகூட ஆதரவு இல்லை. அங்கே இவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் ஒரு வாக்கைக் கூட பெற முடியாது என்ற பயமே தேர்தலிலிருந்து விலக வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்படும். சி.பி.ஐ. அமுலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவை தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் போது இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். மக்கள் தான் இந்தியா கூட்டணியின் மிகப்பெரிய பலம். இந்தக் கூட்டணி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேகம் பெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், ஆர்.ஜே.டி யின் தேஸ்வி யாதவ், உட்பட நாடு முழுவதும் உள்ள பல முக்கிய தலைவர்கள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சித் தலைவர்களும் இதில் சேர்ந்து விடுவார்கள். அப்போது இந்தியா கூட்டணி இன்னும் பலம் பெறும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நடிகருமான சத்ருகன்சின்ஹா கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது மீண்டும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்ற குரலே ஒங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது, ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. சூழல் மாறலாம். எனினும் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.