Home » இலங்கைக்கு பலமாய் அமையும் IMF உதவி

இலங்கைக்கு பலமாய் அமையும் IMF உதவி

by Damith Pushpika
March 31, 2024 6:00 am 0 comment
நாம் மீண்டும் எழுந்து விட்டோம்

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கா

தற்போது IMF ன் மூன்றாவது தவணைக்குரிய கடன் தொகை இந்நாட்டிற்கு வழங்குவதற்கான அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இது நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்?

உலகில் உதவி வழங்கும் நாடுகளுக்கு இது நல்லதொரு செய்தியாகும். உலகின் முதன்மை சந்தை திறக்கப்படும். முதலீட்டாளர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவார்கள். உண்மையிலேயே இது எமக்குப் பெரும் பலமாகும்.

மக்களை ஒரு பக்கம் வைத்துவிட்டு, திருடர்களை இன்னொரு பக்கம் வைப்பதற்கு இன்னும் சில வாரங்கள் தான் உள்ளன என ஜே.வி.பி கூறுகிறதே?

மக்களையும், திருடர்களை மாத்திரமல்ல, மக்களையும் கொலைகாரர்களையும் பிரிக்கவே இன்னும் சில வாரங்கள் உள்ளது எனக் கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஜே.வி.பி எப்பொழுதும் கைகால்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், வீடுகள், ட்ரான்ஸ்போமர்கள் மற்றும் பஸ்களை எரித்துமே தீர்வுகளைத் தேடியது

12 வீத வாக்குகளே ஜே.வி.பிக்கு உள்ளது என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?

கடந்த போராட்ட காலத்தின் போது அவர்களுக்கு சுமார் 25% இருந்து எனக் கூறினாலும், அவ்வாறான வாக்குகள் அவர்களிடம் இல்லை. கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில், நாம் பொதுஜன பெரமுன கட்சியாக பூஜ்ஜியத்திற்குச் சென்றோம். மக்கள் மீண்டும் எங்கள் நோக்கி வந்து கொண்ருகிறார்கள். ஜேவிபிக்கு 10, 12 வீத செல்வாக்கே உள்ளது. அது இன்னும் குறையும்.

ஆனால் மொட்டுக் கட்சி மண்ணோடு சங்கமித்து விட்டது என்றே ஜே.வி.பி கூறுகிறதே?

கடந்த காலங்களில் கட்சி என்ற வகையில் நாங்கள் தூசு நிறைந்தவர்களாக இருந்தோம். இப்போது நாங்கள் எழுந்திருக்கிறோம். நாங்கள் இப்போது பூஜ்ஜியத்தில் 30 வீதமளவில் மேலே வந்திருக்கின்றோம். இன்னும் மேலே செல்வோம். இந்த நாட்டின் தேசபக்தர்களுக்கு, இடதுசாரிகளுக்கு நம்பிக்கையான பாதை தேவை. அந்த பாதைக்கு வலுவான கட்சி பொதுஜன பெரமுன என்றே நாங்கள் நினைக்கிறோம்.

****

இந்த நாட்டை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே கட்டி எழுப்ப முடியும்

ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலத்தில் கடும் பின்னடைவைச் சந்தித்தது. உங்கள் கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

ஜனாதிபதி நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்றார். நாம் நாட்டைப் பற்றித்தான் சிந்தித்தோம். கட்சி என்ற வகையில் அதிகாரத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எதிர்மறையான பொருளாதாரத்தை நேர்மறையான பொருளாதாரமாக மாற்றியிருக்கின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என சில எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே?

இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே கட்சி ஐ.தே.கட்சியாகும். காரணம் ஐ.தே.க.வில் எஞ்சியிருப்பது ஐ.தே.க.வின் கொள்கைகளைப் பாதுகாக்கும் குழுவாகும். அன்று ஐக்கிய மக்கள் சக்தியில் நானும் போட்டியிட்டிருந்தால் இன்று நானும் பாராளுமன்றத்தில் இருந்திருப்பேன். எனினும் அந்த நேரத்தில் எனது தேவையாக இருந்தது ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருந்து முன்னாள் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதேயாகும். ஐ.தே.க தான் என்றாவது இந்த நாட்டை மீண்டும் தூக்கி நிறுத்தும் என்பதை அன்று நான் கண்டேன்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு வேறு கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வர உள்ளார்கள் எனக் கூறினாலும் அப்படி யாருமே வரவில்லையே?

ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாம் தற்போது நாடு முழுவதும் ஒழுங்கமைத்து வருகின்றோம். முதலில் மக்களுக்குத் தேவைப்படாத நிலையில் நாம் மக்களிடம் சென்று கூறுவதில் பயனில்லையே. இதை யாரால் செய்ய முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது யாரும் ரிஸ்க் எடுக்க வேண்டியில்லையே. தற்போதைய ஜனாதிபதி உலகில் எங்கு சென்றாலும் அங்கு முக்கியத்துவம் பெறுகிறார். இன்னும் ஐந்து வருடங்கள் அவரிடம் கொடுத்தால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்கள் அரசாங்கத்திடம் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

அவ்வாறு எந்தத் தேவையும் எமக்கு இல்லை. ஜனாதிபதி தேர்தல் கண்டிப்பாக நடக்கும் என்றே அரசாங்கம் கூறுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறும், ஜனாதிபதி தேர்தலை நாம் நடத்துவோம் என்றும் ஜனாதிபதி அமைச்சரவையிலும் கூறியிருக்கிறார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்று ஐ.தே.கட்சியாகப் போட்டியிட்டு உண்மையைக் கூறியவர். அவர் இந்த நாட்டுக்காக அனைத்தையும் செய்துவிட்டு, உண்மையைக் கூறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்.

****

கூட்டிணைந்து செயற்பட வேண்டிய தேவை எமக்கு இல்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் மீளாய்வு செய்வோம் என தேசிய மக்கள் சக்தி கூறுகிறது. இது தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் கடன் மறுசீரமைப்பை எவ்வாறு மேற்கொள்வது என அவர்கள் இன்னமும் குறிப்பிடவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு, கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு தே.ம.சக்தி முன்வைத்துள்ள முன்மொழிவுகள் நடைமுறைச் சாத்தியமானவை அல்ல. அவர்கள் முன்வைக்கும் முன்மொழிவுகளைச் செயல்படுத்தக் கூடிய திறமையான குழு தே.ம.சக்தியிடம் இல்லை.

மக்களைக் கஷ்டங்களுக்கு உள்ளாக்காமல் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும்.

அரச வளங்கள் விற்பனை செய்யப்படுவதை தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் அனுமதிக்கிறார்கள் என ஏன் நீங்கள் குற்றம் சுமத்துகிறீர்கள்?

தேசிய மக்கள் சக்தி இந்திய விஜயத்தின் பின்னர் அவ்வாறான ஒரு விடயத்தை கூறியுள்ளது. முன்னர் அரச சொத்துக்கள் விற்பனை செய்வதற்கு இடமளிக்க மாட்டோம் எனக் கூறியிருந்தார்கள். நாம் அரச நிறுவனங்களை விற்பதற்கு எதிரானவர்கள், உயிரைக் கொடுத்து பாதுகாப்போம் என்று கூறியவர்கள் அந்த நிலையை மாற்றிக் கொண்டுள்ளனர். அரசு வளங்களை விற்பனை செய்வதற்கு முறையான டெண்டர் முறையின் கீழ் அங்கீகாரம் வழங்கப்படும் என தற்போது கூறுகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய விஜயத்தின் பின்னர், வெளிப்படைத் தன்மையான டெண்டர் நடைமுறையின் கீழ் அரச வளங்களை விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்க உத்தேசித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தே.ம.சக்தியின் பொருளாதார குழுவிற்கு சவால் விடப்பட்டுள்ளதுதானே?

ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் பொருளாதார கொள்கைகளைத் தனித் தனியே அறிந்து கொள்ள விரும்புகிறோம். ஜே.வி.பியின் கொள்கையே தான் தே.ம.சக்தியிடமும் உள்ளது. மாற்றங்கள் இல்லை. மக்களுக்கு இவ்விடயங்களை கூற வேண்டும். தே.ம.சக்தியின் பொருளாதார கொள்கை தொடர்பில் நாம் பகிரங்கமாக கூறியுள்ளோம்.

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளராக நீங்கள் இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

எமக்கு இது எந்தவித சவாலுமில்லை. இந்த சக்திகளைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கடந்த நாட்களில் பெசில் ராஜபக்ச கூறியிருந்தார்.

****

அரசாங்கத்தின் தேவை எந்தத் தேர்தலையும் நடத்தாமல் இருப்பதே

ஜே.வி.பியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தீர்க்கமானது என ஏன் ஜே.வி.பி கூறுகின்றது?

நாம் தீர்க்கமானது எனக் கூறுவது, நாட்டில் இருக்கின்ற திருட்டுக் கும்பலுக்கு எதிராக மேற்கொள்ளும் போராட்டம் என்பதற்கேயாகும். கும்பல் கட்சிகளாகப் பிரிந்திருந்தாலும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். அதனால்தான் இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை நாங்கள் செய்வோம் என உறுதியாகக் கூறுகிறோம்.

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலைப் பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது என ஜே.வி.பி கூறுகிறதே?

ஆம். அரசாங்கம் எந்தத் தேர்தலையும் நடத்தாமல் இருப்பதையே விரும்புகின்றது என நாம் நினைக்கிறோம். ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல், பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தாமல் இருப்பதே அவர்களின் விருப்பமாகும். என்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை உரிய தினத்தில் நடத்த வேண்டும். எனவே பாராளுமன்றத் தேர்தலை முன்னரே நடாத்தினாலும் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாது. நாட்டில் நவம்பர் 17ம் திகதியாகும் போது புதிய ஜனாதிபதி ஒருவர் இருக்க வேண்டும்.

ஜே.வி.பி சமூக வலைதளங்களில் மாத்திரம்தான் பிரபலம் என்று அனேகமானோர் கூறுகின்றனரே?

பரவாயில்லை, அப்படியே கூறிக் கொள்ளட்டடும். நாம் சமூக வலைத்தளங்களிலும், நாட்டிலும் பிரபலமாகவே இருக்கின்றோம். நாட்டில் நாம் செய்யும் விடயங்களை ஏனையவர்களால் செய்ய முடியாதே. மாவட்ட மட்டத்தில் மகளிர் மாநாடுகளில், இளைஞர் மாநாடுகளில் எங்கு கூட்டம் இருக்கின்றது?

எம். எஸ். முஸப்பிர் நேர்படப் பேசுவோம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division