இன்று நாம் புனித வாரத்தினை ஆரம்பிக்கின்றோம். பாஸ்கு திரிதின நாட்கள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆண்டவரின் இறுதி இரா உணவுத் திருப்பலியுடன் ஆரம்பமாகும். இவ்வாரமானது திரு அவையின் கதை சொல்கின்ற வாரமாகும். கடவுள் நம்மையும் படைப்புகளை படைத்ததையும் படைப்புக் கதையாகத் தருகிறார். நாம் எல்லோரும் கதையின் மக்கள். திருவிவிலியமே கதைப் புத்தகமாகும். பெரும்பாலான நமது நம்பிக்கை கோட்பாடுகள், வெளிப்பாடுகள் போன்றவை கதை வடிவத்திலேயே நம்மிடம் வருகின்றன. கடவுள் நம்மையும் உலகையும் படைத்தார் என்று சொல்வதை விட, நாம் அதனை தொடக்க நூலின் படைப்புக் கதையினூடாக அறிகிறோம். மத்தேயு, லூக்கா நற்செய்திகளில் காணப்படும் இயேசுவின் குழந்தைப் பருவ கதைகளினூடாக வார்த்தை மனுவுருவானார் என்கிற அவரது பிறப்பினை அறிகின்றோம். இயேசுவின் நம்மீதான அன்பினை பாடுகளின் விளக்கவுரைகளினூடாக அறிகின்றோம். இரக்கம், பாவ மன்னிப்பு போன்ற பல விழுமியங்களை இயேசுவின் பல்வேறுபட்ட செயல்கள், புதுமைகள் வாயிலாக நாம் அறிகின்றோம்.இவ்வாரமானது இயேசுவின் பாடுகள், மரணம் போன்ற கதைகளினூடாக ஆரம்பிக்கிறது. அவை மீண்டும் மீண்டும் எமக்கு சொல்லப்படுவதனூடாக நம்மட்டிலான கடவுளின் மேலான அன்பினை உணர்கின்றோம்.
ஒவ்வொரு நற்செய்திப் பகுதியின் அறிவிப்பும் வெறுமனே பழைய கதையின் ஒரு பகுதியோ அல்லது ஏதும் கதைகளோ கிடையாது. அவை கடவுள் நமக்கு இன்று பேசிய வார்த்தைகளாகும். கடவுளின் வார்த்தைஉயிருள்ளது. ஆற்றல் மிக்கது. இறை வார்த்தை அறிவிக்கப்படுகின்ற போது கடவுள் தாமே நம்மோடு இங்கே இப்போது இன்று பேசுகின்றார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் நகரில் வெற்றிப் பேரிகையோடு நுழைவதை அனுபவிக்கின்றோம். வீதியெங்கும் கூட்டம் கைகளில் ஒலிவ் கிளைகளை தாங்கியவராய் ‘ஆண்டவரின் திருப்பெயரால் வருபவர் பேறு பெற்றவர். ஓசான்னா!’ என்று சொல்லி ஆர்ப்பரிக்கின்றனர்.நாமும் பலவேளைகளில் இதனைச் செய்துள்ளோம். பல வேளைகளில் நாமும் மக்கள் கூட்டத்தைப் போன்று கல்வாரியில் ‘அவனைச் சிலுவையில் அறையும்’ என்றும் கூக்குரலிட்டிருப்போம்.நம் எல்லோருக்கும் குருத்தோலை ஞாயிறு மற்றும் பாடுகள் மரணக் கதைகள் தெரியும்.
இந்தக் கதைகளைக் கேட்டுவிட்டு நாம் நம்மையே பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி யாதெனில், இக்கதையில் இன்று நான் எங்கு நிற்கின்றேன்? இக்கதையில் நான் யார்? இக்கதை கடவுளின் கதையாகும். திரு அவையின் கதையாகும். இக்கதை எனது கதையுமாகும். உலகில் சொல்லப்பட்ட இவ்வுன்னத கதையில் உமது இடத்தினை கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கவும்.
மகிழ்நிறை புனிதவார வாழ்த்துக்கள்.
-அருட்தந்தை நவாஜி (திருகோணமலை மறைமாவட்டம்)