Home » மென்பந்து பாணியில் கடினப்பந்தாடும் துஷார

மென்பந்து பாணியில் கடினப்பந்தாடும் துஷார

by Damith Pushpika
March 17, 2024 6:07 am 0 comment

நுவன் துஷார பங்களாதேஷுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் இருக்கையில் அமரவைக்கப்பட்ட நிலையில், மதீஷ பதிரண காயமடைந்தபோதே மூன்றாவது போட்டிக்கு அழைக்கப்பட்டார். மதீஷ அளவுக்கு அவர் அவதானம் பெற்றவரல்ல, மாலிங்க பாணியில் பந்துவீசும் மற்றொரு வீரர்.

பங்களாதேஷுக்கு 174 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தனது முதல் ஓவரை வீச அழைக்கப்பட்டார் துஷார. நஜ்முல் ஹொஸைன் ஷான்டோ, தவ்ஹீத் ஹ்ரிதொன் மற்றும் மஹ்மூதுல்லாவின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். அந்த ஹட்ரிக் போட்டியை முழுமையாக இலங்கை பக்கம் திருப்பியது.

திசர பெரேரா, லசித் மாலிங்க (இரு முறை), அக்கில தனஞ்சய மற்றும் வனிந்து ஹசரங்கவுக்குப் பின்னர் இலங்கைக்காக டி20 சர்வதேச போட்டியில் ஹட்ரிக் சாதனை படைத்தார் துஷார. அந்தப் போட்டியில் அவர் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

‘அந்த மூன்று விக்கெட்டுகளும் போட்டியை எமது பக்கம் திசை திருப்பியது. அது மாலிங்கவின் பந்துவீச்சை நினைவுபடுத்தியது’ என்கிறார் குசல் மெண்டிஸ்.

உண்மையில் நுவன் துஷார மாலிங்கவின் பந்துவீச்சு பாணியை பின்பற்றவில்லை. மென்பந்து கிரிக்கெட் ஆடுபவர்கள் இடையே இந்த பந்துவீச்சு பாணி பொதுவானது. துஷார சிறு வயது தொடக்கம் முறையாக கிரிக்கெட் ஆடி வந்தவரல்ல, அவர் மென்பந்து கிரிக்கெட்டில் இருந்தே தன்னை வளர்த்துக் கொண்டவர்.

‘நான் மாலிங்கவின் பந்துவீச்சு பாணியை பின்பற்றவில்லை. மென்பந்து கிரிக்கெட்டில் அதிக வேகமாக பந்தை வீசுவதற்கு இந்த பந்துவீச்சு பாணியை பயன்படுத்தினேன். அன்று தொடக்கம் இன்று வரை அவ்வாறே பந்து வீசுகிறேன்’ என்கிறார் நுவன் துஷார.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி சில்ஹட்டில் நடைபெற்ற போட்டி அவரது முதல் சர்வதேச போட்டியல்ல. அதற்கு முன்னர் அவர் 8 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியே அவரது முதலாவது சர்வதேச போட்டி.

என்றாலும் 29 வயதான துஷாரவுக்கு அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. கடந்த ஏழு போட்டிகளிலும் மொத்தமாக அவரால் ஐந்து விக்கெட்டுகளையே வீழ்த்த முடிந்தது. அவரது திறமையில் தொடர்ச்சியான போக்கு ஒன்று இருக்கவில்லை. கடந்த ஒக்டோபரில் நடந்த ஆப்கானுக்கு எதிரான ஆசிய கிண்ண போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதனை முழுமைபெற்ற டி20 சர்வதேச போட்டியாக எடுத்துக் கொள்ள முடியாது. என்றாலும் அண்மைக் காலமாக சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவரும் நுவன் துஷாரவின் ஆட்டத்தில் மேலும் அனுபவம் சேர்க்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் இந்திய பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் வாங்கப்பட்டது அவர் மீதான கேள்வியை அதிகரித்திருக்கிறது.

நுவன் துஷாரவின் பந்துவீச்சு இயல்பானது, அது அவர் கடந்து வந்த நீண்ட பயணத்தைச் சொல்கிறது.

தெற்கின் எல்பிட்டியவில் தலவ கிராமத்தில் வளர்ந்தவர் துஷார. அங்கிருக்கு 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தலவ கனிஷ்ட வித்தியாலயத்திற்குத் தான் கல்வி கற்கச் சென்றார்.

‘நான் பாடசாலையில் (கடினப் பந்து) கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் சிறு வயதில் இருந்து அதிகம் கிரிக்கெட் பார்ப்பேன், மென்பந்து கிரிக்கெட் ஆடுவேன். எனது நண்பர்களில் ஒருவரான துஷான் அண்ணா தென் மாகாண கிரிக்கெட் சங்க தலைவர் குமார ஹலம்பகேவை அறிமுகம் செய்து வைத்தார். ஒருநாள் அவர் வேகப்பந்து பயிற்சியாளர் அனுஷ சமரநாயக்கவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனது கிரிக்கெட் வாழ்வில் அதுவே திருப்புமுனையாக இருந்தது’ என்கிறார் துஷார.

அனுஷ சமரநாயக்கவிடம் வேகப்பந்து வீச்சு பயிற்சி பெற்ற நுவன் துஷாரவை எஸ்.எஸ்.சி. அணியில் இணைவதற்கு இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டில்ஹார பெர்னாண்டோ அழைப்பு விடுத்தார். இலங்கையின் முன்னணி கழகமான எஸ்.எஸ்.சியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது பல வழிகளை திறப்பதாக இருந்தது. அவர் அந்தக் கழகத்தில் நான்கு ஆண்டுகள் இருந்தார். உண்மையில் அவர் இருக்கையில் இருந்தது தான் அதிகம்.

பின்னர் சி.சி.சி. கழகத்திற்கு மாறிய அவர் தரங்க தம்மிக்கவின் கீழ் பயிற்சி பெற்றார். அது அவருக்கு பெரும் உதவியாக இருந்தது. இப்போது அவரது பயிற்சியாளராக செயற்படுபவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் அஷான் பிரியன்சன்.

‘நான் மாலிங்கவின் பந்துவீச்சு பாணியை பின்பற்றுவதில்லை, அவர் ஒரு ஜாம்பவான். நான் எப்போதும் அவரை மதிக்கிறேன். ஒருபோதும் அவரது பந்துவீச்சு பாணியை பின்பற்றவில்லை. கடுமையான பயிற்சி மற்றும் அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைப்பது எப்போதும் வெற்றியைத் தரும் என்பது எனக்குத் தெரியும். அது தான் எனது வெற்றிக்குக் காரணம்’ என்றார் துஷார.

இலங்கை முதல்தர போட்டிகள் மற்றும் அவ்வப்போது சர்வதேச வாய்ப்புகளுக்கு மத்தியில் சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் அவரது திறமையை வளர்த்தது. கடந்த ஜனவரி, பெப்ரவரியில் தென்னாபிரிக்க டி20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன் கேப் டவுன் அணிக்கு ஆடிவிட்டே இலங்கை அணிக்கு திரும்பி இருந்தார்.

இந்திய பிரீமியர் லீக்கில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியால் வங்கப்பட்டதை அடுத்தே அதன் ஓர் அணியான கேப் டவுன் அணியில் இடம்பிடித்திருந்தார்.

‘ஐ.பி.எல்லின் நான் தேர்வு செய்யப்பட்டது எனது கனவாக இருந்தது. நான் மற்றும் டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸில் இருக்கிறோம். அந்த அணியில் மாலிங்க அண்ணா மற்றும் மஹேல அண்ணாவும் இருக்கிறார்கள். அந்த அணியின் சூழல் எனக்கு நன்றாக இருக்கும்’ என்கிறார் துஷார.

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நெருங்கி இருக்கும் சூழலிலேயே துஷாரவின் திறமை வெளிப்பட்டிருக்கிறது. இது இலங்கை அணிக்கு மேலும் சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

‘டி20 உலகக் கிண்ணம் தான் எனது இலக்கு. ஆனால் அணிக்கு தேர்வாகாமல் போனால் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். இருக்கையில் இருக்கும் வீரராகக் கூட அணிக்கு எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன். சிரேஷ்ட வீரர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள்’ என்றார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division