இன்றைய நற்செய்தியானது பல சந்தர்ப்பங்களில் கல்லறை அடக்க நிகழ்வில் பயன்படுத்தப்படுகிறது. இயேசுவின் இறப்பு உயிர்ப்பு காரணமாக, எந்தவொரு மனிதரினதும் அடக்க நிகழ்வானது எதிர்நோக்கின் அடையாளமாகத் திகழ்கிறது. மரணத்தில் நாம் வேண்டுவது யாதெனில், நிலத்தில் விதைக்கப்பட்ட கோதுமை மணி போன்று நாங்களும் நிலைவாழ்வின் கனிகளை சுவைக்க வேண்டுமென்பதாகும். இயேசு என்கிற கோதுமை மணி தந்தையின் மீதும், நம்மீதும் கொண்ட அன்பின் நிமித்தம் சிலுவையில் தமது உயிரைக் கொடுத்தார். இவரது தியாக மரணமானது அவரது உயிர்ப்பில் அளவுகடந்த கனிகளை விளைவித்தது.
இயற்கையில் காணப்படுகின்ற விதை என்கிற உருவகமானது, இயேசுவின் படிப்பினையினை விளக்குகிறது. ‘தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர் அதனை இழந்து விடுவார், தம் உயிரை இழப்பவரோ அதனை நிலைவாழ்விற்காக காத்துக்கொள்வார்.
’நம்மீது கொண்ட அன்பினால், இயேசு தமது வாழ்வினை சிலுவையில் அளித்தார், ஆயினும் அவரது உயிர்ப்பினால் நித்தியத்திற்கும் வாழ்வினைப் பெற்றுக்கொண்டார்.நடப்பட்ட விதை கனி கொடுப்பதும், தன் வாழ்வினை பெற்றுக்கொள்ள அதனை இழப்பதும் உண்மையான அன்பின் அழகான விளக்கமாகும். உண்மையாகவே அடுத்தவரை அன்பு செய்வது என்பது, நமது சுயத்திற்கு இறந்து அதனால் நமது அன்பின் கனியானது அடுத்த மனிதருக்கு பலனாக மாறுவதாகும்.
அதாவது, இயேசு செய்ததுபோன்று அடுத்தவரை அன்பு செய்வதற்காக நமது வாழ்வினை இழப்பதாகும். அன்பு செய்வதில் நாம் அதன் பொருளையும், நோக்கத்தையும் அறிகிறோம், நாம் நமது உண்மை நிலையினை அறிவதோடு, நிலைவாழ்வினுள் உள்நுழைகிறோம்.நாம் நமது சுயத்திற்கு இறந்து, நமது வாழ்வினை கடவுளுக்கும், சகமனிதருக்கும் அன்பில் வழங்கி, இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.