டைகளின் கதை அந்த அதிபரின் வாழ்வோடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. சில விடயங்கள் சிலரோடு தொடர்புள்ளதாக தொடர்ந்த வண்ணமிருக்கும் அவை அவரவரது வாழ்க்கை நடைமுறைகளோடு தொடர்புபட்டது.
அதிபர் மனோகரன் மாபெரும் பாடசாலையின் அதிபராக மிகச் சமீபத்தில்தான் பதவி உயர்வு பெற்றார். புதிய சூழல், புதிய ஆசிரியர்கள், பெற்றோர் என எல்லாம் மாற்றங்களுக்குள்ளானது.
அப்பாடசாலையின் கணனிக் கட்டடத் திறப்பு விழா, நூலகம், மனையியற் கூடம், சித்திரக் கூடம் போன்றன உள்ளடங்கிய ஒரு அலகின் திறப்பு விழாவை ஒரே தடவையில் செய்ய ஏற்பாடுகள் நடந்தேறி இருந்தன.
மே, ஜூன் மாதங்களில் அப்பிரதேசத்தில் தொடங்கும் மழை, காற்று, குளிர், செப்டெம்பர் வரை தொடரும். குடை இல்லாமல் எவரும் வெளியில் செல்லுதல் இயலாது. ஆசிரியைகள் எப்படியும் கைக்கு அடக்கமான ஒரு சிறு குடையை கொண்டு தமது மேனியை மழையிலிருந்து பாதுகாத்திட முயல்வர். சில பெண் ஆசிரியைகள் மழைக்கோர்ட் அணிந்தும் வருவர். நுவரெலியாவில் இதனை சர்வ சாதாரணமாக காணலாம். ஆண் ஆசிரியர்களுள் சிலர் சிறு குடைகளையும், இன்னும் சிலர் பெரிய குடைகளையும் கொண்டு திரிவர். சிலர் தமது கைகளையே குடைகளாக்கிக் கொள்வர். சிலர் நூல்கள், கொப்பிகளையும் சிறு மழைத்தூறல்களுக்காக ‘குடையாக’ உபயோகிப்பர்.
இப்பிரிவுகளுக்குள் உள்ளடங்காத கூட்டம் ஒன்றும் உள்ளது. இக்கூட்டம் குடைகளே கொண்டுவருவதில்லை. இக்கூட்டத்தின் உறுப்பினர்கள் பெருமளவில் ஆண் ஆசிரியர்களாகவே திகழ்வர். ஏனெனில் பெண் ஆசிரியர்கள் சிறுகுடைகளையே விரும்புவர் எனலாம். அதிலும் பல் நிறங்களிலான குடைகள் அவர்களுக்குப் பிடிக்கும். ஆசிரியர் வழிகாட்டி, பாடத்திட்டம், பாடக்குறிப்பு போன்ற இன்னோரன்ன உள்ளடங்கிய மற்றொரு பேக்கும் அவர்களின் கைகளில் காணப்படும். கைப்பை, கைக்குட்டை, அதனுள்ளே நீர்ப்போத்தல் இதுவே ஆசிரியை என்பதற்கான அடையாளமாகக் காணப்படும் என்பது தேசிய ரீதியாக எல்லாப் பிரதேசங்களிலும் ஏற்கக்கூடியதான ஒன்றாக உள்ளது.
கணனிக் கூடத்திற்கு பொறுப்பான ஜோன் ஆசிரியர், ஆசிரியை மலர் போன்றோர் வெகு சிறப்பாக கணனி அறையை அலங்கரித்திருந்ததுடன், அதிபருடன் தத்தமது குடைகளை பிடித்தவாறு மழைத்தூறல்களுக்கூடாக ஓடியாடி இயங்கிக் கொண்டிருந்தனர்.
இதேபோல பிரபலமான அப்பாடசாலை வளாகம் வாழைமரத் தோரணங்களாலும், தென்னங் குருத்தோலை அலங்கரிப்புகளாலும், மாவிலைகளாலும் ஓர் எழிலூட்டும் அழகோவியமாகி மிளிர்ந்தது. ஆங்கே தமிழர் தம் கலாசார அடையாளங்கள் பிரதிபலித்தன.
அழகான மலர்கள் பற்பல முறைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்தூரியம், பாபடன்ஸ், செவ்வந்தி, டேலியா, மெடொனா லில்லி ரோஜா, ஓர்கிட்ஸ் என அவை உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. இவற்றுக்கிடையே ‘சைப்பிரஸ் மரத் தோரணங்கள் பச்சைப் பசேலெனக் காணப்பட்டன. இந்த அலங்காரங்களுக்கெல்லாம் ஜோன் சேரும், சில்வெஸ்ரா சேரும் உரிமை கொண்டாட வேண்டியவர்கள் எனலாம்.
மழை மேலும் கூடியது. காற்று ஏடா கூடமாக பல பக்கமும் மாறி மாறி வீசத் தொடங்கி இருந்தது. அவை வெள்ளைக் கவுன்களோடு விளையாடின. சில்லுபூட்டித் திரியும் பெண் மாணவிகளின் கவுனை இலக்கு வைத்தன. மாணவர்களின் வெண்ணிற சேர்ட்டையும், காற் சட்டையையும் பதம் பார்க்கத் தவறவில்லை. கரங்களில் பலவண்ண குடைகளோடு மாணவர் கூட்டம் அல்லோலகல்லோலப்பட்டது. கிண்டல்கார இந்தப் பருவப் பெயர்ச்சிக் காற்று இக்காலத்தில் பெண்களின் சேலைகளோடும், குட்டைக் கவுன்களோடும் செல்லமாக விளையாடத் தவறுவதில்லை. இப்பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவிலும் அது தன் லீலையைக் காட்டியது.
பிரதி அதிபர், உப அதிபர்கள் பகுதித் தலைவர்கள் அனைவரும் ஒரே விதமான உடைகளுடன் காட்சி தந்தனர். கழுத்துப் பட்டிகளும் ஒரே நிறத்தில் காணப்பட்டன. ஆனால் அதிபர் மாத்திரம் கோட் அணிந்திருந்ததுடன், கழுத்துப் பட்டியின் நிறத்தையும் வேறு விதமாகக் கொண்டிருந்தார்.
பரபரப்பான இச்சூழ்நிலையில் சிவஜோதி சேர் கைப்பேசியில் வருகை தர இருக்கும் பிரதம அதிதியுடனும், ஏனைய அதிதிகளுடனும் ஏதோ சீரியஷாக பேசிக் கொண்டிருந்தார். இடையிடையே, “யேஸ் யேஸ்” என்பதும் “ஓகே ஓகே” என்பதும் அவரது முகபாவ சுளிப்புகளும் அதிபரின் அவதானத்துக்கு உட்படாமலில்லை.
பிரபல தொழிற்சங்கம் ஒன்றின் தூணாக தன்னைக் காட்டிக் கொள்ளும் குறித்த ஆசிரியர் ஊரே நன்கு அறிந்த ஒருவர். திருவிளையாடலில் “சிவன் எல்லாம் நானே” என்று சிவாஜி (சிவன்) கூறுவது போலவும் சீதையில் கண்ணன் எல்லாம் நானே என்பது போலவும் சிவஜோதி ஆசிரியர் காட்டிக் கொள்வது மாத்திரம் அல்ல அவற்றைச் செயலிலும் காட்டுபவர். சுழியோடுவதில் மாத்திரமல்ல சுழிகளுக்குள்ளும் சுழி போட்டு சுழிக்கக்கூடிய திறன் படைத்தவர்.
“என்னா சேர்?” என அதிபர் சிவஜோதி சேரைப் பார்த்துக் கேட்க, “சரியாக பத்து முப்பத்தைந்துக்கு பிரதம அதிதி மினிஸ்டர் வருவார். சரியாக ஒன்பது முப்பத்தைந்திற்கு மாகாண கல்வி அமைச்சர் வர உள்ளார். முதலில் மாகாண அமைச்சரே வருவார்” என்றார்.
அதிபர், பிரதிஅதிபர், உப அதிபர்கள் இச் செய்தியை கேட்டவுடன் உற்சாகமடைந்தார்கள். அக்கல்லூரியின் அலுவலகத்திலிருந்து தூரத்திலிருக்கும் புதிய கட்டடப் பகுதி, கணனிக் கூட பகுதிகளுக்குத் தத்தமது குடைகளுடன் பரிவாரமாய் புறப்பட்டனர்.
அதிபர் தனது பெரிய கலர் குடையை விரித்துப் பிடித்தவாறு பேண்ட் குழுவினரை ரெடி பண்ணுமாறும் மினிஸ்டர் பத்து முப்பத்தைந்திற்கு சரியாக நமது கோயிலடிக்கு வரும் வேளையில் அங்கிருந்து பேண்ட் மற்றும் எமது கலாசார வாத்தியமான மேள தாளங்களோடும் அழைத்து வர வேண்டும்” என்றும் கூறினார். இவ்வேற்பாடுகளுக்கு பொறுப்பான ஆசிரியை மாலாவை கூப்பிட்டு இவ்விபரங்களை கூறினார்.
“சேர் சின்ன ஒரு மாற்றம் செய்யலாமா? என்றார் ஆசிரியர் சிவஜோதி.
“சொல்லுங்க சொல்லுங்க” என்றார் மாலா டீச்சர்.
“மழை மோசமாக இருப்பதால் நீண்ட தூரம் மழையில் பிள்ளைகளை நனைய விடல் இயலாது. கோயிலடியிலிருந்து மேள தாளத்துடனும், பேண்ட் குழுவை கேட்டடியிலிருந்தும் ஏற்பாடு செய்யலாம் தானே” என்றார் ஏற்பாட்டாளர் சிவஜோதி. அதிபரும் இடையிலே குறுக்கிட்டு,
“அதுதான் சரி பிள்ளைகள் நனைவதை மினிஸ்டர் விரும்ப மாட்டார். அவர் எம்மீது குறைபடுவார்” என்றார் தொடர்ந்து,
“அப்படியானால் ஒரு சில சீனியர் ஆசிரியர், ஆசிரியைகளுடனும், மாணவர்களுடனும் அங்கு செல்லலாம்” என்றார்.
“நீங்கள் எல்லாப் பிள்ளைகளையும் குடைகளுடன் வரச்சொல்லுங்க சில பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களையும் வரச் சொல்லுங்க” என்றார்.
திடீரென கோல் வர அலைபேசியை எடுத்துப் பேசிய ஏற்பாட்டாளர் சிவஜோதி “ஓகே, ஓகே, எல்லாம் ஓகே” என்றவாறு, “சேர் மாகாண அமைச்சர் இன்னும் பத்து நிமிடத்தில் வருகிறார். அவரை கேட்டடியில் அழைத்து வர சீனியர் ஆசிரியர், ஆசிரியைகள் சிரேஷ்ட மாணவர் தலைவர், உட்பட சிலரை ரெடி பண்ணனும் சேர்” என்றார்.
மாகாண அமைச்சர வரவேற்றிட ஆயத்தமானார்கள். இதற்கிடையில் அதிபர் அலுவலகத்திற்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த சில கைக்குட்டைகளை காணவில்லை என ஓர் ஆசிரியர் சத்தமிடுவதை அவதானித்தார். ஆனால் அதனை அவர் அச்சூழ்நிலையில் கவனத்திற் கொண்டு ஆவன செய்ய இயலாத நிலையிலிருந்தார்.
மாகாண அமைச்சரை வரவேற்க ஆயத்தமாகிச் சென்று அழைத்து வந்தனர். அவர் அதிபரின் அறையின் முன்னிருந்த அதிதிகளுக்கான அல்லது விருந்தினர்களுக்கான அறையில் அமர வைக்கப்பட்டார். அமைச்சர் தனது பாதுகாப்பு உத்தியோகத்தரின் குடையினுள் வந்து சேர்ந்தார். மிக நல்ல நிலையில் இருப்பதை அவரது முகப்புன்னகை புலப்படுத்தியதுடன் மாணவர்களையும் தட்டிக் கொடுத்திருந்தார்.
நேரம் இருபத்து நான்கு மணி நேரத்தில் அதிகாலைப் பொழுது பறந்து செல்வது போல் கடந்து போய்க் கொண்டிருந்தது. மாகாண அமைச்சர் தனது கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதும் “லேட்டாகுதே” என்றவாறு “கட்டடங்களைத் திறக்கலாமா” என்பதுமாக இருந்தார்.
மனையியற் கூடம் உள்ளடங்கலான அவ்வலகு அமைச்சராலேயே திறக்கப்பட பெயர்ப்பலகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையை அதிபர் மாகாண அமைச்சரிடம் விளக்கிக் கூறினார். இவ்வுரையாடலை அங்கே கவனித்துக் கொண்டிருந்த சிவஜோதி சேர், மினிஸ்டர் பதினைந்து நிமிடங்களில் வர உள்ளதாக கூறினார். மாகாண அமைச்சரின் சில, பல உடல்மொழியை அவதானித்துக் கொண்டிருந்த ஜோன் சேர், மலர் டீச்சர், பிரதி அதிபர், ஆசிரியர் சிவஜோதி ஆகியோர் திடீரென ஏதோ கூடிக் குசுகுசுத்தனர். ஏற்பாட்டாளர் சிவஜோதி ஏதோ ஒரு விடயம் பற்றிக் கூறுவதையும் அவதானித்த அதிபர் அவ்விடத்திற்கு வந்தார்.
இதன் பின்னர் ஆசிரியர் ஜோனும், மலர் டீச்சரும் கணனிக் கூடத்தை நோக்கி விரைந்தனர். அதிபர் மிக வேகமாக தனது அலுவலகம் நோக்கி ஓட்டமும் நடையுமாய் சென்றார்.
சிறிது நேரத்தில் அதிபர் பிரதி அதிபர், உப அதிபர்கள் சிரேஷ்ட ஆசிரியர்கள் புடைசூழ மாகாண அமைச்சர் கணனிக் கட்டடம் நோக்கி அழைத்துவரப்பட்டார். கணனிக் கட்டட பட்டியை அமைச்சர் வெட்டி உள் செல்ல ஆங்கே கைலாகு கொடுத்து ஜோனாலும், ஆசிரியை மலராலும் வரவேற்கப்பட்டார். கணனிகளை பார்வையிட்ட வேளையில் புகைப்பட பிடிப்பாளர்கள் ‘பளிச்’, ‘பளிச்’ என கிளிக் செய்தனர். கணனியில் மாகாண அமைச்சரின் பெயர், பதவிகளுடன் வரவேற்பு வசனங்கள் ஓடிக் கொண்டிருக்க அமைச்சரும் புன்னகைத்துக் கொண்டு,
“எப்படி பிள்ளைகள் படிக்கிறாங்களா? யார் இக்கட்டடத்திற்கு பொறுப்பு?” என வினவ ஜோன் சேர் அதற்குப் பதிலளித்தார். அமைச்சரும் கணனிகளை இயக்கிப் பார்த்தார்.
இவ்வேளையில் உள்ளே வந்த சிரேஷ்ட மாணவர் தலைவர் மினிஸ்ட்டர் வந்து கொண்டிருப்பதாக அதிபரிடம் கூறினான். “Minister in one the way?” என்ற வண்ணம். அதிபர் மாகாண அமைச்சரை அழைத்துக் கொண்டு சென்றார். மழைமேலும் வலுக்கத் தொடங்கியது. மினிஸ்டரை வரவேற்க விரைவாக கோயிலடி சென்றனர். அவ்வேளை அதிபர் தனது குடையை சற்றுக் கவனித்துப் பார்த்தார், திகைப்படைந்தார். அது அவரது குடை அல்ல அவரது குடை போன்ற ஒரு குடை. ஆனால் பெரியது, பழையது சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மகேஸ்வரி டீச்சரைப் பார்த்து,
“டீச்சர் இது எனது குடை இல்லையே” என்றார்.
“சேர் இது பழைய குடை. நீங்க ‘டிஸ்டப்’ ஆகாதீங்க நீங்க கோயிலுக்கு போங்க, நா கவனிக்கிறேன்” என்றார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஜீப் வண்டிகள், கார்கள் ஒலி எழுப்பின. அமைச்சர் கோவிலடியில் வந்திறங்கினார். மேள தாளங்கள் முழங்கவும், நாதஸ்வர ஒலி எழுப்பப்படவும், பட்டாசுகள், பட பட் பட்டென பேரிரைச்சல் எழுப்பவும், மாலைகள் அவரின் மேனியைத் தழுவவும் பாடசாலை நோக்கி நடக்கலானார். நல்லவேளை மழை சற்றுவிட்டு தூறலாக தூறிக் கொண்டிருந்தது.
சிரித்த வண்ணமிருந்த மினிஸ்ட்டர், “பிள்ளைகளை நனைய விடாதீர்கள்| என அதிபரை பார்த்து வினயமாக வேண்டிக் கொண்டார். இவ்வேளை இடையில் இணைந்து கொண்ட நகர வர்த்தகர்கள் சிலர் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். கேட்டடியில் பேண்ட் குழுவினர் அவரை வாத்தியங்களுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். “
அதிபர் மண்டபத்திற்குள் நுழையும் வேளையில் மகேஸ்வரி டீச்சரிடம் குடையைக் கொடுத்துவிட்டு சென்றார் “பழைய குடை என்றாலும் கிடைத்த குடையை இழக்க இயலாதே” என அவர் மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.
வழமையான நிகழ்வுகளுடன் நிகழ்ச்சிகள் நடந்தன. அதிபரின் வரவேற்புரை, பாடசாலை தேவைகள் பற்றி பா.அ.ச. செயலாளரின் உரை, மாணவர்களின் சில கலை நிகழ்வுகள் என அவை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இதனிடையே எவ்வித சலசலப்பும் ஏற்படவில்லை. இறுதியில் மனையியல் கூடத்தில் இரு அமைச்சர்களும் அதிதிகளும் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர். எங்குமே எளிதில் விருந்துகளில் கலக்க விரும்பாத அமைச்சர், இப்பாடசாலையில் மாத்திரம் தேநீர் அருந்துவார் என்பது பலரால் சிலாகித்து பேசப்பட்டிருக்கின்றது. மகிழ்ச்சியுடன் காணப்பட்ட இரு அமைச்சர்களும் நல்ல நிலையில் காணப்படுவதற்கான அறிகுறிகளாகும் என சிவஜோதி சேர் கூறி மகிழ்ந்தார்.
இதன் பின்னர் ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பகல் உணவு ஆரம்பமானது. இது ஏலவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான். இதில் பா.அ.சங்க உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர். எல்லோரும் மகிழ்ச்சிகரமாகவும், குதூகலமாகவும் காணப்பட்டனர். அவர்கள் தத்தமது கடமைகளை செம்மையாக நடத்திவிட்டதான ஒரு திருப்தி கொண்டவர்களாக இருந்தனர்.
உணவு முடிய ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அதிபர் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வு பற்றிய குறைபாடுகள் உரையாடல்களில் இடம்பெற்றன. இதனிடையே அதிபர் தனது குடை மாற்றப்பட்டிருந்ததாகக் கூறினார். புதிய குடைகளை எடுத்துக் கொண்டு தமது பழைய குடைகளை விட்டுச் செல்லும் பழக்கம் சிலரிடம் உள்ளதை அவர் கூறினார். கடையில் குறுக்கிட்ட மல்லிகா ஆசிரியை “சேரின் குடை போன்ற ஒரு குடையை ஒருவர் வைத்திருந்த இடத்திலிருந்து எடுத்ததாகவும். தான் அதுபற்றி வினவிய போது அது தனது குடை என்றதாகவும் அவர் நகரத்திலிருக்கும் ஒரு வர்த்தகர் என்றும் அது தவறுதலாக நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுனார். அந்நேரம் சிவஜோதி குடையை வைக்கும் கூடையை உள்ளே வைக்க ஏற்பாடு செய்யுமாறு வேண்டியதாகவும் கூறினார்.
நேரம் ஓடிக் கொண்டிருக்க சில ஆசிரியைகள் வீடு செல்ல ஆயத்தம் செய்வது போல் தத்தமது கைப்பைகளை தூக்கினர். நிலைமையை புரிந்து கொண்ட அதிபர் மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
ஆசிரியர்கள் புறப்பட்ட வேளை வெளியில் மேக மூட்டம் பாடசாலையையே விழுங்கி இருந்தது. கடுமையான ஒரு குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. மழைக் கோட்டு, தொப்பிகள், ஸ்காஃப், குடைகள் என புறப்பட்ட அதிபர், ஆசிரியர்கள் கூட்டம் மன நிறைவுடன் மழைத்தூறலுக்கும் மத்தியில் வீடு புறப்பட்டனர். நாளையும் அவர்கள் இதே காலநிலைக்கு மத்தியில் தமது பயணத்தைத் தொடர்வார்கள்.
- மொழிவரதன்