இந்த நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் இந்தநாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கவென தென்னிந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே நாடெங்கிலும் உள்ள பெருந்தோட்டங்களில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்.
இந்த மக்களின் கடும் உழைப்பினால் இலங்கை தேயிலை ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உலகளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டுக்கு கிடைக்கும் அந்நியசெலாவணியில் ஏறத்தாழ அறுபது சதவீதம் தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினாலேயே கிடைக்கிறது.
உண்மை இதுவாக இருந்தும், இந்த நாடெங்கிலும் உள்ள பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்கள், இந்த நாட்டில் இதுவரை பதவிக்கு வந்த அத்தனை அரசாங்கங்களினாலும் அவர்களை தொழிற்சங்க ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்டத் தொழிற்சங்கங்களினாலும் அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளினாலும் தோட்ட நிர்வாகங்களினாலும் பல வழிகளிலும் ஏமாற்றப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறாதவர்களாகவும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தவர்களாக வாழ்கிறார்கள்.
இந்த நாட்டின் இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடப்பு வருடத்துடன் ஏறத்தாழ இருநூற்றொரு வருட வரலாறு உள்ளது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மனித வாழ்வில் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று இந்த உலகத்தில் எந்த மூலை முடுக்கில் வாழ்ந்தாலும் அவருடன் நினைத்த மாத்திரத்தில் தொடர்புகொள்ளக் கூடிய விதத்தில் உலகம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், தோட்டத் தொழிலாளர்களின் கணிசமான தொகையினர் இன்னும் ஆங்கிலேயரினால் கட்டப்பட்ட லயன் அறை குடியிருப்புகளிலேயே பல்வேறு அசெகரியங்களுக்கு மத்தியில் மன வேதனையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இன்று வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் வானளாவ உயர்ந்து கொண்டிருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு வானளாவ உயர்ந்துவரும் வாழ்க்கை செலவுகளை சமாளிக்கும் விதத்தில் சம்பளம் வழங்கப்படாததனால் அவர்கள் யாசகர்கள் போன்று வாழ்கின்றார்கள்.
தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சங்க ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்டத் தொழிற்சங்கங்களும் அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக அரசியல் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கூடுதலான அக்கறை செலுத்தாத காரணத்தினால் சம்பளப் பேச்சுவார்த்தைகளில் உரிய, நியாயமான ஒரு தொகையை நாளாந்த சம்பளமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023.12.31 ஆம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்ட கம்பனி உரிமையாளர்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்குவது சம்பந்தமாக கலந்துரையாடி அவர்களின் முடிவை அறிவிக்கும்படி கோரினார். ஆனால் அந்த திகதி கடந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கடக்கவுள்ள சூழ்நிலையில் கூட பெருந்தோட்ட கம்பனியினர் தங்களது முடிவை அறிவிக்கவில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை தீர்மானிப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிக்காரர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும் தோட்டத் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிஆகிய தொழிற்சங்கங்கள் மேலும் காலம் தாழ்த்தாது நடவடிக்ைக எடுக்க வேண்டும். பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அவற்றின் முடிவை அறிவிக்காதமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசாங்கத்தை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தலையிடச் செய்து பெருந்தோட்டக் கம்பனிகள் மூலம்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
தோட்டத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், மற்றும் அவர்களின் சேமநலன்கள் சம்பந்தமாக தீர்வுகாக மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது என வலியுறுத்துகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஜனாதிபதியின் ஆலோசகராக இலங்கை தேசிய தோட்டத் தொழலாளர் சங்கத்தின் பொது செயலாளர் வடிவேல் சுரேஷ் பதவி வகிக்கிறார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக உள்ளார். இவர்கள் இருவரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சம்பந்தமான ஒப்பந்தத்தில் தொடர்ந்தும் கையொப்பம் இட்டு வருபவர்கள்.
இலங்கை தேயிலை ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் வகிக்கிறது. உலகளவில் இலங்கையை தமது கடும் உழைப்பினால் இரண்டாம் இடத்தை வகிக்கச் செய்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான தொகையை சம்பளமாக பெற்றுக் கொடுக்க அரசாங்கமும் தோட்டத் தொழிற்சங்கங்களும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டங்களில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாதுள்ளன. அந்த தரிசுக் காணிகளை பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ப பயிர்செய்கையை மேற்கொள்ளவும், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, மலர்ச் செய்கை, பழவகை உற்பத்தி ஆகிய தொழில்துறைகளிலும் அவர்களை ஈடுபடச் செய்தால் என்பனவற்றின் மூலம் அவர்களுக்கு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடிவதோடு இந்த நாடும் மேலே குறிப்பிட்டுள்ள தொழில் முயற்சிகளின் மூலம் தன்னிறைவு பெறக்கூடிய நிலை உருவாகும்.
மலையக அரசியல்வாதிகளில் பலரும் தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருவதை அறியக் கூடியதாக உள்ளது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தோட்டத்தில் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என எடுத்த எடுப்பில் கோரிக்கை விடுவது புத்திசாலித்தனமான கோரிக்கையாக அமைய வாய்ப்பில்லை.
ஏனெனில் அந்தக் கோரிக்கை சம்பந்தமாக தீர்க்கமாக அலசி ஆராயந்து இறுதி முடிவு எடுத்த பின்பு ஏகோபித்த கோரிக்கையாக முன்வைப்பதன் மூலமே உரிய பயன் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிட்டக் கூடியதாக இருக்கும்.
சு.ப.சீலன்