சீனாவுடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட மறுகணமே மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிராக சில பரபரப்பான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நல்லுறவு இருந்தது. அப்போதைய ஜனாதிபதி இந்தியாவுடன் நெருக்கம் காட்டிய நிலையில், இந்தியா பல முதலீடுகளையும் உதவிகளையும் மாலைதீவுக்குச் செய்திருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் முகமது முய்ஸு வென்றார். சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அவர், தேர்தல் பிரசாரத்தின் போதே ‘மாலைதீவில் இருக்கும் இந்தியப் படைகளை அகற்றுவோம்’ எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து சமரச நிலைமை வந்த போது, இப்போது திடீரென மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு மீண்டும் இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் இந்திய இராணுவ வீரர்கள், சிவில் உடையில் கூட தங்கள் நாட்டிற்குள் இருக்கமாட்டார்கள் என்று மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு கூறியுள்ளார். அதாவது மாலைதீவில் உள்ள இந்திய இராணுவத்தினர் எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என மாலைதீவு தெரிவித்துள்ளது.
தீவுக்கூட்டங்கள் கொண்ட நாடான மாலைதீவில் மருத்துவக் காரணங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிெகாப்டரை இயக்குவதற்கு இந்திய இராணுவம் அங்கே இருந்தது. அந்த இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று முய்ஸு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அங்குள்ள இராணுவத்தினரை வாபஸ் பெற்றுவிட்டு, அதற்குப் பதிலாகத் தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்து இருந்தது.
அதன்படி ஹெலிெகாப்டர்களை இயக்குவதற்கு இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலைதீவு சென்றிருந்தனர். இந்தச் சூழலில்தான் திடீரென முய்ஸு இந்த பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “இந்திய இராணுவத்தை எனது அரசு வெற்றிகரமாக வெளியேற்றி விட்டது. இதனால் எனது அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகச் சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
மேலும், இந்திய இராணுவம் இப்போது என்ன செய்ய முயல்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் இப்போது சீருடைகளை சிவிலியன் உடையாக மாற்றிவிட்டுத் திரும்புகிறார்கள். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மே மாதம் 10 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டில் எந்தவொரு இந்தியப் படைகளும் இருக்காது. அவர்கள் இராணுவ சீருடை அணிந்திருந்தாலும் சரி, சிவில் உடையில் இருந்தாலும் சரி… அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு சில தினங்களுக்கு முன்னர்தான் சீனாவுடன் பாதுகாப்பு சார்ந்த மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் சீன வீரர்கள் மாலைதீவுக்குள் வருவதை அனுமதிப்பதாக இருக்கிறது. இந்திய வீரர்களை வெளியேற்றிவிட்டு நிச்சயமாக சீனா உள்ளிட்ட எந்தவொரு வீரர்களையும் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி முய்ஸு கூறியிருந்த நிலையில், இப்போது அதற்கு நேர் எதிராக அவரே சீன இராணுவத்தை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலைதீவுகளின் வரலாறு சுவாரஸ்யம் நிறைந்தது. ஒரு காலத்தில் மாலைதீவுகள் தமிழ்நாட்டின் சோழ மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன. இந்தத் தீவுகள் பின்னர் சிங்கள இன ஆட்சியாளர்களின் ஆட்சிக்கு மாறின. கடந்த 1153- இல் மாலைதீவில் இஸ்லாம் மதம் பரவியதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. போர்த்துக்ேகயரின் காலனி நாடாக இருந்த மாலைதீவு கடந்த 1887- இல் பிரிட்டனின் காலனி நாடாக மாறியது.
கடந்த 1965- ஆம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து அந்நாடு விடுதலை பெற்றது. கடந்த 1968- ஆம் ஆண்டில் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசு நாடாக மாறியது. அப்போது முதல் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு செப்டெம்பரில் மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்ஸு புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் சீனாவின் ஆதரவாளர் ஆவார். கடந்த நவம்பரில் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போதுமுதல் இந்தியாவுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார்.
மாலைதீவில் முகாமிட்டுள்ள இந்திய இராணுவம் வெளியேற வேண்டும். இந்தியாவுடன் ஏற்கெனவே செய்த 100 ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முகமது முய்சு வலியுறுத்தி வருகிறார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு அவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு சென்றிருந்தார். சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தில் மாலைதீவு முழுமையாக இணைவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்பதால் மாலைதீவின் செயல்பாடுகளை இந்திய மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
மாலைதீவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த 1988- ஆம் ஆண்டில் மாலைதீவில் ஆட்சிக்கவிழ்ப்புக்கான கலவரம் ஏற்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இராணுவத்தை அனுப்பி அன்றைய ஜனாதிபதி அப்துல் கயூமின் அரசை காப்பாற்றினார்.
கடந்த 2018 ஆ-ம் ஆண்டில் மாலைதீவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி சரக்குக் கப்பல்களில் மாலைதீவுக்குத் தேவையான குடிநீரை அனுப்பி வைத்தார். மாலைதீவு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவும் மோடி அரசு தாராளமாக கடன் உதவிகளை வழங்கியிருந்தது.
மாலைதீவுக்கு 2 ஹெலிெகாப்டர்கள், ஒரு விமானத்தையும் இந்தியா பரிசாக வழங்கியது. இந்நிலையில் மாலத்தீவு தற்போது சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீதும் மாலைதீவு வெறுப்புணர்வை உமிழ்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அரசுமுறைப் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். அந்தப் பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி.
சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமரின் பயணம் காரணமாக 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலைதீவு அதிர்ச்சி அடைந்தது.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த மாலைதீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.