Home » ஹமாஸ் – இஸ்ரேல் போர் ஏற்படுத்தும் உலக ஒழுங்கு

ஹமாஸ் – இஸ்ரேல் போர் ஏற்படுத்தும் உலக ஒழுங்கு

by Damith Pushpika
March 3, 2024 6:40 am 0 comment

ஹமாஸ்- இஸ்ரேல் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என்ற எதிர்பார்க்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 21 ஆயிரம் சிறுவர்கள் உட்பட 30ஆயிரம் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பிபிசி தகவல் தெரிவிக்கின்றது. இந்தப் போரில் சிறுவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளமையைத் தெளிவாக கண்டு கொள்ளமுடிகிறது. பலஸ்தீனர்களது எதிர்காலத்தை இலக்குவைத்துள்ளமை உணரக்கூடியதாக உள்ளது. சிறுவர்களை அழிப்பதன் மூலம் எதிர்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற கணிப்பீட்டுடன் இஸ்ரேல் செயல்படுவதாக தெரிகிறது. பலஸ்தீன சிறுவர்களை வேட்டையாடுவதில் இஸ்ரேலிய இராணும் முனைப்பாக உள்ளது. அதனை ஒர் இராணுவ உத்தியாக இஸ்ரேல் கொண்டுள்ளது. பல சிலுவை போர்களை எதிர் கொண்ட இஸ்லாமியர்கள் ஒரு சிலுவைப் போருக்கு நகர்வதாகவே தெரிகிறது. இதன் மூலம் ஒரு நீண்ட வரலாற்றை தமது காலடியில் வைத்துள்ள மேற்குலகம் திட்டமிடுவதையே கண்டுகொள்ள முடிகிறது. இக்கட்டுரையும் ஹமாஸ்- இஸ்ரேலியப் போர் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை விளங்கிக் கொள்ள முயலுகிறது.

29.02.2024 உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள் ஐக்கிய நாடுகள் அமையத்தின் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்த வேளை இஸ்ரேல் இராணும் தாக்குதல் நடாத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் உலகளாவிய ரீதியில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஐ.நா.சபை இஸ்ரேலியத் தாக்குதலை கண்டிக்கும் முகமாக விசேட கூட்டத்தொடரை ஏற்பாடு செய்துள்ளது. பலஸ்தீன மக்கள் தெற்கு காஸாவிலிருந்து வடக்கு காஸாவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டை இஸ்ரேல் பயன்படுத்திக் கொண்டு தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ரபாவை நோக்கி இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உள்ள ரபாவை நோக்கிய தாக்குதல்கள் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

எதனையும் பொருட்படுத்தாது இஸ்ரேல் படையெடுப்பை நிகழ்த்தப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளது. ஹமாஸை அழித்தொழிப்பதே தனது நடவடிக்கையின் நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. கட்டார், பிரான்ஸ் போன்ற நாடுகள் உணவுப் பொதிகளை பலஸ்தீன மக்களுக்கு விமானத்திலிருந்து வீசிவருவதாகவும் கட்டார் அண்மையில் மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை எனவும் அதிகமான உணவுப் பொதிகள் கடலில் வீழ்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அது மட்டுமன்றி தரைவழியாக உணவுப் பொதிகளை நாடுகள் கொண்டு செல்வதை இஸ்ரேல் அனுமதிக்கவில்லை என்பதை கட்டாரும் பிரான்ஸும் அறிவித்துள்ளன.

இதே நேரம் லெபனான் எல்லையிலிருந்து ஹமாஸ்- ஹிஸ்புல்லா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சிக் குழு என்பன இணைந்து புதிய போர்க்களத்தை திறந்துள்ளதுடன் அதனை அண்டிய இஸ்ரேலிய குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களால் யூதர்கள் வெளியேறிவருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய தாக்குதலால் இஸ்ரேலிய இராணுவம் பாரிய சேதங்களைச் சந்தித்துள்ளதாகவும் இராணுவ கனரக வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இத்தாக்குதல் பெரியளவில் இருதரப்புக்கும் இடையில் மூண்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாரிய அழிவுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் அமைப்பினர் தாம் பலமாக இருப்பதாகவும் தாக்குதலுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் அறிவித்துள்ளனர். லெபனான் எல்லையோரத்திலிருந்து தொடக்கப்பட்ட தாக்குதல் வடக்கு இஸ்ரேலின் குடியிருப்புகளை இலக்குவைத்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அப்பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேறுவதாகவும் பாரியளவான ஏவுகணைத் தாக்குதலால் யூதர்களுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இருதரப்புக்குமிடையில் போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ளும் முயற்சியில் கட்டார் மற்றும் அமெரிக்கா முயன்று வருவதாகத் தெரியவருகிறது. இருதரப்புடனான பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இருதரப்பும் போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளதாகவும் கட்டார் தெரிவித்துள்ளது.

அதனை முதன்மைப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ ைபடன் போர்நிறுத்தத்துக்கான வாய்ப்பினை இஸ்ரேலின் தாக்குதல் நெருக்கடிக்கு உள்ளாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உணவுக்கு முண்டியடித்த மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் போர் நிறுத்தத்தை சாத்தியமற்றதாக்கிவிடும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் இஸ்ரேலிய இராணுவத்திற்கு போர் நிறுத்தம் அவசியமானதாக உள்ளதாக மேற்கு ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. காரணம் போதியளவு ஆயுத தளபாடங்களை தாக்குதல் களத்திற்கு கொண்டு செல்ல முடியாததது மட்டுமல்லாது அமெரிக்கா உட்பட மேற்குலகத்திடமிருந்து தருவிக்கப்படும் ஆயுத தளபாடங்களை இஸ்ரேலுக்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே பிரதான அம்சமென அவ்வூடகங்கள் கருத்து முன்வைத்துள்ளன. அதே நேரம் பலஸ்தீன மக்கள் உணவுக்கு அலைவதோடு பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்படும் என ஐ.நா. உணவுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனவே உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றுக்கான வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. இதில் அமெரிக்காவின் கவனமும் போர் நிறுத்தமாக உள்ளதனால் அதற்கான தேவைப்பாடு இஸ்ரேலுக்கும் உள்ளதாகவே தெரிகிறது.

ரபாவை நோக்கி இஸ்ரேலியப் படைகள் நகர்வதற்கு முக்கிய காரணமாக ஹமாஸை அழிப்பது அமைந்திருந்தாலும் குறிப்பாக ஹமாஸ் அமைப்பினால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட யூதர்களை மீட்க முடியாதுள்ளமையே பிரதான விடயமாகும். அதற்கான தேடுதலை மையப்படுத்தியே இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்திருந்தன. ஆனால் அத்தகைய நகர்வினால் ஒரு யூதரையும் இஸ்ரேலிய இராணுவத்தினால் மீட்க முடியவில்லை. ஏற்கனவே ஹமாஸ் அமைப்பின் அனுசரணையுடன் விடுவிக்கப்பட்டவர்களையே இஸ்ரேல் மீட்டுள்ளதாக தெரிகிறது.

அதனால் இஸ்ரேலிய இராணுவத்துக்கும் அதன் புலனாய்வுத்துறைக்கும் அதிக குழப்பத்தை தந்துள்ளதுடன் உலகளாவிய ரீதியில் மொசாட் அமைப்புக்கு இருந்த முக்கியத்துவம் காணாமல் போயுள்ளது. இது யூதமக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கையீனத்தை தந்துள்ளதாகவே இஸ்ரேலிய அரசாங்கம் கருதுகிறது. காரணம் இஸ்ரேல் வன்முறையினால் கட்டியெழுப்பப்பட்ட தேசமாகும். அத்தகைய வன்முறைக்கு மாற்றீடு தோன்றுமாயின் அதன் பலம் குன்றிவிடும் என்பதே தற்போது இஸ்ரேலுக்குள்ள நெருக்கடியாகும்.

ஆனால் இஸ்ரேலின் தாக்குதல் உலகளாவிய நியதிகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. வரப்போகும் உலகத்தின் இருப்பு எந்த வரைபுக்குள்ளும் உட்படாத உலகத்தை தருவிக்க தயாராகிவிட்டது. மேற்குலகம் வரைந்துள்ள அனைத்து விதிகளையும் மேற்கே மீறும் உலகத்தின் பிடிக்குள் நாடுகள் இயங்க ஆரம்பித்துள்ளன. ஐ.நா.சபையின் இருப்பும் அதன் சட்டப்பிரமாணங்களின் பெறுமானங்கள் அனைத்தும் கலாவதியாகிவிட்டன. இதன் தொடக்கம் போர்களாக இருந்தாலும் உக்ரைன் ரஷ்ய போர் அத்தகைய மீறலுக்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்திருந்தது. அதனை முழுமையாக மாற்றியதில் இஸ்ரேல் -ஹமாஸ் போரே முக்கிய பகுதியாகும். சர்வதேச சட்டங்களும் விதிகளும் பயனற்ற உலகத்தை இஸ்ரேலிய -ஹமாஸ் போர் ஏற்படுத்தியுள்ளது.

எதுவாயினும் புதிய உலகத்துக்கான வடிவத்தை இஸ்ரேலின் காஸா மீதான நகர்வு வெளிப்படுத்தியுள்ளது. அதில் ஹமாஸின் பங்கையும் தனித்துவமாக அளவீடு செய்வது அவசியமாகும். கடந்தகாலம் முழுவதும் ஏதோ ஒரடிப்படையில், அத்தகைய மீறல்கள் நிகழ்ந்தாலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் எதிர்ப்புகளும் அத்தகைய போக்கினை கட்டுப்படுத்தியிருந்தது.

ஆனால் தற்போதைய உலக ஒழுங்கும் அதன் வரைபுகளும் முழுமையாக அத்தகைய விதிகளை நிராகரித்தே செயல்படுகின்றன.

எனவே இஸ்ரேல் -ஹமாஸ் போர் தந்துள்ள அனைத்து விளைவுகளும் புதிய உலகத்திற்கான ஆரம்பமாக உள்ளது. அத்தகைய உலகம் எத்தகைய விதிகளையும் சட்டவரைபுகளையும் கொண்டதாக அமையாது.

அரசுகளது இறைமைக்குள் உட்டபட்டதாகவே அமையவுள்ளது. அத்தகைய அரசுகளின் பலமும் வன்முறையுமே பிரதானமான அம்சங்களாகும். பலமும் வன்முறையும் அதிகாரமுமே உலக அரசின் நியதிகளாக உள்ளன. அத்தகைய வரைபுக்குள் உலக நாடுகளது இருப்புக்கள் அமையவுள்ளன. இது மக்களைவிட அவர்களது உரிமை, சுதந்திரம் இறைமை என்பனவற்றைக் கடந்து ஆதிக்கமுடைய அரசுகளின் விருப்புக்களை மையப்படுத்திய உலகத்தை கட்டமைக்க வழிவகுத்துள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division