Home » தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜ.க-தி.மு.க இடையே மோதல்!

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜ.க-தி.மு.க இடையே மோதல்!

by Damith Pushpika
March 3, 2024 6:03 am 0 comment

இந்திய பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மீது அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதில் பா.ஜ.க அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.

தமிழ்நாட்டுக்கு கடந்த புதன்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி என்று கூறியிருக்கின்றார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

“லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்தே தி.மு.க காணாமல் போகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வருகை தந்த அவர், தூத்துக்குடியில் திட்டங்களை தொடக்கி வைத்த பிறகு, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அங்கு உரையாற்றிய அவர், “திருநெல்வேலி அல்வாவை போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லைய்யப்பர் காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். பூலித்தேவன், ஒண்டிவீரன், சுந்தரலிங்கனார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மண் நெல்லை மண்- ஆகும்” என்று பாராட்டினார்.

“தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள். உங்களின் நம்பிக்கையை பா.ஜ.க நிச்சயம் நிறைவேற்றும். பா.ஜ.கதான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி. உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள், தங்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால்தான் வருகிறது.

தமிழ்நாடு மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும், விசுவாசமும் எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம். பா.ஜ.கவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழ்நாடு மக்களுடன் ஒத்துப்போகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. பா.ஜ.கதான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி. தமிழக மக்கள் பா.ஜ.க மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு எந்தத் திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது.

தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கேட்டால் தி.மு.கவினரிடம் பதில் இருக்காது. எனக்கு தமிழ்மொழி தெரியாது. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கின்றேன். தி.மு.கவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவி வகிக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.கவும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கின்றன. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தி.மு.க என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். தி.மு.க தமிழ்நாட்டை சுரண்டுவது போல, காங்கிரஸ் ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்து நாட்டை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே, சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள்” என்று கடும் தாக்குதல் தொடுத்தார் பிரதமர் மோடி.

இது இவ்வாறிருக்க, பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு தி.மு.க எம்.பியான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“சீனா நமது எதிரி நாடு என இதுவரை யாரும் அறிவிக்கவில்லையே” என கனிமொழி எம்.பி பதில் அளித்துள்ளார்.

தி.மு.க கொடுத்த விளம்பரத்தில் சீன நாட்டு ெராக்கெட் இடம்பெற்றுள்ளதாகவும் இதுதான் தி.மு.கவின் நாட்டுப் பற்று என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளிக்ைகயிலேயே கனிமொழி இவ்வாறு கண்டனம் தெரிவித்திருந்தார்.

தூத்துக்குடிக்கு சென்ற பிரதமர் மோடி குலசேகரபட்டினத்தில் ரொக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்கான அழைப்பிதழில் கனிமொழியின் பெயர் இல்லை. அது போல் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் விடுபட்டே இருந்தது. அதே தூத்துக்குடியைச் சேர்ந்த அமைச்சர் கீதாஜீவனின் பெயர் இருந்தது. திட்டமிட்டே கனிமொழியின் பெயர் புறக்கணிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

இந்த வினாவுக்கே விடை தெரியாமல் இருந்த நிலையில், இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது மேடையில் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரின் பெயர்களைக் கூறினார். ஆனால் கனிமொழி எம்.பி பெயரையும், தமிழக அமைச்சர் எ.வ.வேலு பெயரையும் மட்டும் சொல்லாமல் நேரடியாக பேச்சைத் தொடர்ந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இவ்வாறான செயற்பாடு தி.மு.கவினருக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து கனிமொழி எம். பி செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவிக்கையில், “குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. இது தி.மு.க அரசுக்குக் கிடைத்த வெற்றி. பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது தொடங்கியதுதான் இந்த குலசேகரப்பட்டினம் திட்டம். முதல்வராக கருணாநிதி வந்த போதும் இந்தத் திட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்காக நிலத்தை விரைவில் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினும் துரிதப்படுத்தியதால்தான் இந்தத் திட்டம் தற்போது சாத்தியமாகியுள்ளது. மேலும் தற்போது நடந்து முடிந்த பட்ஜெட்டிலும் கூட இந்த ஏவுதளத்திற்காக 2000 ஏக்கரை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இப்படி குலசேகரபட்டினம் திட்டம் கொண்டு வருவதற்கு தி.மு.க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இது எங்கள் தலைவர் கருணாநிதியின் திட்டம் என்பதால்தான் நானும் எ.வ.வேலுவும் சென்றோம். ஆனால் பிரதமருக்கு என் பெயரை சொல்லக் கூட மனமில்லை. அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“குலசேகரபட்டினம் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவுக்காக தி.மு.க சார்பில் வெளியான விளம்பரத்தில் சீன நாட்டின் கொடி இருப்பதாக பிரதமர் குற்றம்சாட்டினாரே! அது குறித்து உங்கள் கருத்து என்ன?” என கனிமொழியிடம் நிருபர் கேட்டார்.

அதற்கு அவர் “யாரோ வடிவமைப்பு செய்தவர், அப்படிப்பட்ட ெராக்கெட் சின்னத்தை போட்டிருக்கிறார். சீன அதிபர் தமிழகம் வந்த போது அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இருவரும் மகாபலிபுரத்தில் நடைப்பயிற்சியெல்லாம் போனார்கள். அப்படியிருக்கும் சூழலில் அதை எதிரி நாடு என இதுவரை யாரும் அறிவிக்கவில்லை” என கனிமொழி பதில் அளித்தார்.

இந்த ரொக்கெட் ஏவுதளம் என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு என்கிறார்கள். இது தற்போது நனவாவதால் தி.மு.க அரசை வாழ்த்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு விளம்பரத்தை செய்தித் தாள்களுக்கு கொடுத்திருந்தார்.

அந்த விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலினின் படங்கள் பெரியதாகவும் கனிமொழி, உதயநிதியின் படங்கள் சிறியதாகவும் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் படங்களுக்கு பின்புலத்தில் ரொக்கெட் ஏவுவது போல் ஒரு படம் இருக்கிறது.

அங்கு நிறைய ெராக்கெட்டுகள் உள்ள நிலையில் சிவப்பு நிறத்தில் நட்சத்திரக் குறியீடுகளுடன் ஒரு ரொக்கெட் இடம்பெற்றுள்ளது. இது சீன நாட்டு கொடியைப் போன்றே இருப்பதால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இந்தியா ரொக்கெட் துறையில் அசுர வளர்ச்சி பெற்று வரும் நிலையில், இந்திய நாட்டு விண்வெளி வீரர்களை அவமதிப்பது போல் சீன நாட்டின் ெராக்கெட் போட்டிருப்பதாக தி.மு.கவுக்கு எதிராக பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.சாரங்கன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division