சஜானி திருமணச் சோலைக்குள் நுழைந்து ஏழு வருடங்களில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அவளது கணவன் ஒரு கூலித் தொழிலாளி. காட்டுக்குச் சென்று விறகெடுத்து விற்று வாழ்வைக் கழித்தனர்.
ஒரு நாள் ….
பொலிஸ் சுற்றி வளைப்பில் சஜானியின் கணவன் அகப்பட்டுக் கொண்டார். விறகு வண்டிலுடன் பொ லிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விறகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டாயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் விடுதலை செய்யப்பட்டார்.
அன்றிலிருந்து காட்டுக்கு விறகெடுக்கச் செல்வது தடை செய்யப்பட்டது. பிள்ளைகளின் பசியைப் போக்க ஏதாவதொரு தொழிலைச் செய்தாக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்.
அருகிலுள்ள கடலுக்குச் சென்று மீன் பிடித்தாவது தன் வாழ்வைக் கடத்த வேண்டுமென எண்ணினார். எங்கும் மயான அமைதி. அனைவரும் அயர்ந்து தூங்கும் நடுச்சாமத்தில் குளிரையும் பொருட்படுத்தாது, வலையுடன் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டார்.
வழமை போல அன்றும் கடலுக்குச் சென்றார். வலையில் சொற்ப மீன்களே பிடிபட்டன. கடலின் நடுவே தோணி கவிழ்ந்தது தத்தளித்தார். காப்பாற்றுமாறு கத்தினார். உதவிக்கு யாருமே வரல்ல.
நீருக்குள்ள எதுவுமே செய்ய முடியாத நிலை. மூச்சுத் திணறியது. திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. தன்னால் இயலுமானவரை ஓதினார். காலை இழுத்துக் கொண்டு யாரோ செல்வது போலிருந்தது. அப்போதே.. தன் கால் முதலையின் வாய்க்குள் அகப்பட்டிருப்பதை உணர்ந்தார். எங்கிருந்தோ.. தைரியம் பிறந்தது. முதலையுடன்
போராடினார். தோணியின் சவலினால் முதலையின் தலையிலடித்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
மெது மெதுவாக நீச்சலடித்துக் கண்ணா மரங்களுக்குள் கரையொதுங்கினார். இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. தான் அணிந்திருந்த சேட்டைக் கிழித்துக் காலை இறுகக் கட்டினார். எழுந்து நடக்க முடியாது திண்டாடினார். அம் முதலை மீண்டும் தன்னை நோக்கி வருவதை அவதானித்தார். காலை இழுத்து.. இழுத்துக் கண்ணா மரத்துக்குள் மறைந்து கொண்டார். தலை சுற்றியது…! உலகமே இருண்டது. கை, கால்கள் நடுங்கின. அக்கம் பக்கத்தில் யாருமில்லை. என்ன நடந்ததென்றே தெரியாது. கண் விழித்துப் பார்த்த போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை உணர்ந்தார். அழுத கண்ணும், சிந்திய மூக்குமாகக் குடும்பத்தார் புடை சூழ்ந்திருந்தனர்.
நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் கூறினார். முதலையின் வாயில் அகப்பட்டுத் தப்பிய சரித்திரமே கிடையாது. இறைவன் காப்பாத்திட்டான் என்றனர். சத்திர சிகிச்சையின் போது முதலையின் வாய்ப்பட்ட கால் அகற்றப்பட்டது. ஒரு காலை இழந்து தொழிலுக்குச் செல்ல முடியாது, சிறகொடிந்த பறவையாக வீட்டிலிருந்தார்.
ஆறு பிள்ளைகளுக்கும், உணவு வேண்டும்.ஒ ரு நாள் உண்டால், மறுநாள் உண்பதற்கு உணவில்லை. பிள்ளைகள் பசியால் துடித்தனர். அவர்களின் பரிதாபத்தைப் பார்க்க முடியாது. வீடு வீடாகச் சென்று கூலி வேலை செய்தாள் மனைவி. அவர்களது வீட்டில் மிஞ்சும் உணவுகளைக் கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் கொடுத்தாள்.
ஒரு நாள்….
குழந்தை பசியால் கதறியழுதது. கொடுப்பதற்கு வீட்டில் எதுவுமே இல்லை. தேத்தண்ணிச் சாயத்தை
ஊற்றிக் கொடுத்தாள். அதற்குச் சீனி போட வழியுமில்லை. வாங்குவதற்குக் காசுமில்லை. தேநீரைக் குடித்த குழந்தை வாந்தியெடுத்தது. இச் சம்பவம் சஜானியின் உள்ளத்தை உருக்கியது. கண்ணீர் சிந்தினாள்.
இனியும் கஷ்டத்தை அனுபவிக்க ஏலாது. ஒரு முடிவுக்கு வந்தாள். வெளி நாடு செல்வதற்கு ஆயத்தமானாள். மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியரிடம் சென்றாள்.
அவளைப் பரிசோதித்த மருத்துவருக்கு பிள்ளைப் பாக்கியம் இல்லாத்தால், சஜானியின் பிள்ளையைத் தத்தெடுக்கச் சம்மதித்தனர்.
சஜானி யோசித்தாள்….
தன்னிடமிருந்து கஷ்டப்படுவதை விட, வைத்தியரிடம் வளர்வது எவ்வளவோ மேல். நேரத்துக்குச் சாப்பாடு கிடைக்கும். நன்றாகப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். தனது மகளை மகா ராணியாகக் கற்பனை செய்தாள். மறு நாள் சஜானி குழந்தையை வைத்தியரிடம் ஒப்படைத்தாள். பெத்த மனம் கலங்கியது. பிள்ளைகள் தங்கையைக் கேட்டு அழுதனர். அவள் எதனையும் பொருட்படுத்த வில்லை.
என்ன பொம்பள இவள்..? கல் மனசுக்காரி. பெத்த புள்ளைய விற்க எப்படி மனம் வந்தது..? வறுமையில யாரும் வாழலையா..? வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தால் கேட்கவும் வேணுமா..? அக்கம் பக்கத்தவர் வாயில் வந்தபடி ஏசத் தொடங்கினர். சஜானி பித்துப் பிடித்தவள் போல அலைந்தாள். வைத்தியரிடம் சென்று தன் குழந்தையைத் தருமாறு கெஞ்சி மன்றாடினாள். நான் வெளிநாடு போகல்ல.. எனது குழந்தையைத் தாங்க..! விம்மி.. விம்மி.. அழுதாள்.
குழந்தையைக் கொடுக்க வைத்தியர் விரும்பவில்லை. இன்னும் இரட்டிப்பு மடங்கு பணம் தருவதாகக் கூறினர். சஜானி எதற்கும் அசையவில்லை. எனக்குக் குழந்தை வேணும். எனது குழந்தையைப் பிரிந்து என்னால இருக்க முடியவில்லை. எங்க வீட்டுக்கு வந்து பாருங்க. மையத்து வீடு போல உள்ளது. அடுத்தவரின் ஏச்சுப் பேச்சைக் கேட்க முடியல. நிலத்தில் புரண்டு.. புரண்டு அழுதாள். அவள் வேதனையைப் புரிந்து கொண்டு குழந்தையைச் சஜானியிடம் ஒப்படைத்தனர். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள். வைத்தியத் தம்பதியினருக்ேகா குழந்தையைக் கொடுத்த சோகத்தில் ஆனால் இப்போது சஜானியின் வீடு கலகலப்பாக மாறியது. வெளிநாடு செல்லும் பயணத்தைக் கை விட்டாள். என்ன கஷ்டம் நேர்ந்தாலும் குழந்தையை வளர்ப்பதாக திடசங்கற்பம் பூண்டாள். பிள்ளைகளைக் கணவனின் பாதுகாப்பில் விட்டு விட்டுக் கூலித் தொழிலுக்காகச் சென்றாள்.
அங்கே.. சஜானியை ஒரு அடிமையாகவே பயன்படுத்தினர். அவள் எதையும் கண்டு கொள்வதில்லை.
அவர்கள் சொல்லும் வேலைகளையெல்லாம் செய்தாள். மாலை ஆறு மணிக்கே வீடு போய்ச் சேர்வாள். தினமும் தன் உதிரத்தைச் சாறாகப் பிழிந்தாள். யார் கண்பட்டதோ. வேலை முடிந்து வீடு வந்தவளால் எழுந்திருக்க முடியல. ஆ… ஊ.. என அனுங்கினாள். உடல் நெருப்பாகக் கொதித்தது. படுத்த படுக்கையானாள்.
குழந்தைகளுக்கு விளங்கப் போகிறதா.? ம்மா.. பசிக்குது..! எழும்புங்க. சாப்பாடு தாங்க ..! கடைசி மகள் அழுதாள். மற்றவர்கள் பசியை அடக்கிக் கொண்டு பொறுமையாக இருந்தனர்.
சஜானி, மூத்த மகன் நாசிரை அழைத்து மாமாவிடம் ஆயிரம் ரூபா வாங்கி வர அனுப்பி வைத்தாள்.
மாமா.. உம்மாக்கு ரெண்டு நாள் சரியான காய்ச்சல். படுத்த படுக்கையாக இருக்காங்க. ஆயிரம் ரூபா காசு தரட்டாம். தருவாங்கலாம் என்றான், காய்ச்சலெண்டா… ஆசுப்பத்திரிக்குப் போறது தானே..? ஏதோ ஒலகத்தில ஒங்கம்மாக்கு மட்டுமே காச்சல் வந்தாப் போல சொல்றாய். நீங்களா ஒழச்சி தந்தீங்க..? சம்பளம் எடுத்தா வந்திரிவீங்க. எப்பிடித் திருப்பித் தருவீங்க..? மாமியின் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சை ரணமாக்கியது.
மாமா விருப்பமில்லாமல் ஐநூறு ரூபாவைத் தூக்கிக் கொடுத்தார். இவ்வளவு கதைகளையும் கேட்டபின்னும் இக்காசு தேவை தானா..? ஒரு முறை வீட்டு நிலைமையினையும், சகோதர்ர்களின் பசிக் கொடுமையினையும் நினைத்துப் பார்த்தான். என்ன தம்பி யோசிக்கிறீங்க..? இந்தக் காசை வாங்குவது கௌரவக் குறைச்சலோ..? ஐநூறு ரூபாவை நீட்டினார். என்ன செய்வது..! விருப்பமில்லாமல் வாங்கிச் செல்லும் போது மாமாவின் பிள்ளைகள் நாஸீரை ஓட.. ஓட விரட்டினர். அவனையறியாமலே….வாங்கிய காசையும் தூக்கி வீசிவிட்டுக் கதறிக் கொண்டு ஓடினான். மாமாவும், மாமியும் கைதட்டிச் சிரித்தனர். உம்மா… பட்டினி கிடந்து செத்தாலும், மாமாக்கிட்ட எதுவும் கேட்டு அனுப்பாதீங்கம்மா. நடந்த விடயங்களைக் கூறி அழுதான். இறைவா..! யாருக்கும் இவ்வறுமையைக் கொடுத்திடாதே…! அடுத்தவரிடம் கையேந்த வைத்திராதே..! தாயின் அறிவுரைகள் பிள்ளைகளின் மனதில் ஆழமாக வேரூன்றின.
அன்றிலிருந்து… எவ்வளவு பசியானலும் யாரிடமும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார்கள்..
எல்லாமே நேற்று நடந்தது போலிருந்தது. வறுமை கல்விக்குத் தடையில்லை. சஜானியின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். நாஸிர் பல்கலைக் கழகம் தெரிவானான். பல கஷ்டங்களுக்கு மத்தியில் படித்து முடித்தான். ஊரில் நாஸிர் உயர்வாகப் பேசப்பட்டான். போட்டி போட்டுக் கொண்டு மாப்பிள்ளை கேட்கத் தொடங்கினர்.
நாஸிரின் மாமா தன் மகளுக்கு மாப்பிள்ளை கேட்டு, நாஸிரின் வீடே கதியெனத் தஞ்சம் புகுந்தார்.
பழைய சம்பவங்களை நினைவூட்டி ஒரேயடியாக மறுத்துவிட்டான். என்னைப் போல வறுமையில் வாடிய பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் எனக் கூறி, மாமாவின் பதிலை எதிர்பாராது விறுவிறு என நடந்தான்.
ஜெனீரா தௌபீக் ஹைருல் அமான் கிண்ணியா