விடிவதற்கு அந்தா இந்தா என்றிருக்கும் அதிகாலை வேளை. அடுப்பில் சுடவச்ச பழைய சோற்றுடன் வற்றிப்போன கறியையும் சேர்த்து அதை ஒரு டப்பாவுக்குள் போட்டு கையில் கொடுத்து அடைக்கலத்தை தோணியடிக்கு அனுப்பிவைத்தாள் சின்னாத்தா.
மீன்பாடு பெரும்பாடு என்பதால் கிடைத்த பத்துவரி காசில் முதல்நாள் இரவு குடிச்சு ஏற்பட்ட போதையினால் தலை கிறுகிறுப்பு அவனை இன்னும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அந்த வெறி அவனை விட்டு இன்னும் விலகவில்லை.
நாலுபேருடன் கரைவலை தொழிலுக்கு போனால் ஏன்தான் பேய்ப்புத்தி வருகிறதோ தெரியவில்லை. இந்த வகையான பேர்வழிக்கு காசுபணம் கிடைச்சால் அப்பணத்தை பத்திரமாக வீட்டில் சேர்க்க வேண்டுமென்ற நினைப்பு கொஞ்சம்கூட வராது அந்த மக்குகளுக்கு. அந்தப் பணத்தை கூடுவாரோட கூடி கும்மாளம் அடிச்சா நம்ம குடும்பத்த ஓட்டுவதெப்படி என்ற நெனப்பும் வராது. நாலு பேருக்கு முன்னால் சந்தி சிரிக்க நடந்து கொள்ளுவாங்க இந்த குடிகார பசங்க.
ஏன்தான் புத்தி கெட்டு நடக்கிறாங்க என்பது கொஞ்சங்கூட தெரியவில்லைங்க என்றாள் சின்னாத்தா. என்னங்க, உங்கள நம்பி நானும் புள்ளைங்களும் இருப்பத கொஞ்சம் நீங்க யோசிச்சு நடக்க பாருங்க. நீங்க இழுப்பு வலைப்பணத்த பத்திரமாக வீட்டுக்கு எடுத்து வரப்பாருங்க. ஒங்களுக்கு சல்லிப் பணம் கிடைச்சதும் கண்மண் தெரியாமல் நடக்காதீங்க. நம்மளப் பார்த்து மத்தவங்க காறித் துப்புமளவுக்கு நடப்பது ஞாயமா? என்று தனது துயரத்தை கொட்டித் தீர்த்தாள் சின்னாத்தா. இதைக் கேட்ட அடைக்கலம் கல்லுப்பிள்ளையாராக நின்றான். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான்.
தான் ஒரு மகாக்குடிகாரனாக இருப்பது தவறு என்பதை மனதளவில் ஏற்றுக்கொண்டதால் தன் மனைவி சின்னாத்தாவின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் தலை குனிந்தான். இவனின் பேச்சுக்கு எதிர்மறையான கருத்து தெரிவிப்பது புத்திசாலித்தனம்.
“இந்தா, பாருங்க, நா நம்ம வீட்டில மத்தவங்கபோல நாலு பணம் சம்பாதித்து ஒழைத்து வாழத்தான் நினைக்கிறேன். வாடிவேலைக்குப் போறேன். கால் கடுக்க, கை, தலை, முதுகு வலிக்க, கை காலில் மீனின் முள்குத்த வேலை செஞ்சி மாடா உழைக்கிறீங்க, ஆனால் உங்களுக்கு குடும்பப் பொறுப்பு கொஞ்சமும் இல்ல. குடித்து கும்மாளம் அடிச்சு வாழ்க்கையை நாசமாக்குறதுதான் உங்க வேலைங்க. சீ! கேடு கெட்டுப்போன உங்கள போன்ற ஆட்களோட வாழ்றது ரொம்பக் கஷ்டம்” என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டை பூட்டிய கையோடு சின்னாத்தா வாடியை நோக்கி விரைந்தாள்.
சின்னாத்தாவின் ஏச்சையும் பேச்சையும் கேட்டு நின்ற அடைக்கலம் நைசாக நழுவினான்.
போத்தி சம்மாட்டியாரின் வாடி வேலையென்பது விறுவிறுப்புடன் ஆறு நாட்களாக நடக்கும். ஒருநாள் வேலைக்கு வராவிட்டால் தண்டப்பணம் அறவிடப்படும். அதனால் சின்னாத்தா வாடி வேலையை ‘கட்’ பண்ணமாட்டாள்.
என்னதான் உழைப்பு வேலையென்று ஓடி ஆடி பணத்தை சம்பாதித்தாலும் தமது வாழ்வில் விமோசனம் இல்லையென்பதை சின்னாத்தா தெரிந்து தான் வைத்திருந்தாள்.
கடலே தமக்கு வாழ்க்கை என நம்பி வாழும் உடப்பை அண்மித்துள்ள அந்தூரைப்போன்ற இடங்களில் வாழும் மக்களின் முன்னேற்றம் என்பது பெரும்பாலும் கனவுதான்.
அப்பா செய்யும் தொழிலை தமையனும் செய்யத்தான் வேண்டுமா? தம் குலத்தொழிலை செய்யாமல் மாற்றுத்தொழிலை செய்தால் என்ன என்ற எண்ணம் பலருக்கும் இல்லை.
குடிப்பழக்கம் இருந்தாலும் அடைக்கலம் மோசமானவன் இல்லை. தன் மகனைப் படிக்க வைத்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவு அவனுக்கு இருந்தது.
தொழிலாளர்களை ஏமாற்றி வயிறுபுடைத்து வாழும் போத்தி சம்மாட்டி போன்றவர்களின் நோக்கமே கடற்றொழில் செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள் தகப்பன் செய்யும் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்பதாக இருந்தது.
“இந்தா பாரு அடைக்கலம்! இந்த காலத்தில் புள்ளைங்க படித்து கிழிப்பதினால் ஒன்றும் நடக்காதப்பா. ஏனப்பா உன்ர பிள்ளைய படிக்க வச்சி அவன்ர வாழ்வை நாசமாக்கிற? இது உனக்கு நல்லதா படுதா? நா சொல்வத கொஞ்சம் கருத்தில எடுத்துப்பார். யோசித்துப்பாரு” என்று ஒரு நாள் ஆரம்பித்தார் போத்தி சம்மாட்டி.
“இன்னைக்கு உன்ற புள்ள வலை இழுத்தா கை நிறைய சல்லியும் மடி நிறைய சமைக்க மீனும் கொண்டு போவாப்பா. உனக்கு நா சொல்றது கேக்குதா அடைக்கலம். புத்தியுடன் நடக்கப்பாரு” என அவர் வலை விரித்தார்.
என்னதான் அடைக்கலத்தின் மனதை மாற்றமுயற்சி செய்தாலும் போத்தி சம்மாட்டி இந்தா சல்லி என்று கொடுத்தாலும் அடைக்கலம் தன் எண்ணத்தை மாற்றுவதாக இல்லை.
“இந்தாங்க நீங்க சம்மாட்டியரிடம் போய் தொழில் செய்றீங்க. அதற்கு கூலியாக பணம் தாராங்க என்ற எண்ணத்துடன் நடந்து கொள்ளுங்க” என்ற மனைவியின் அறிவுரையை அப்படியே ஏற்றுக் கொள்வான்.
பணத் திமிருடன் நடந்துகொள்ளும் சம்மாட்டியாரின் அடாவடித்தனத்துக்கும் அவரின் பசப்பு வார்த்தைகளுக்கும் முடிவு கட்டியாக வேண்டுமென்று தொழிலாளர்கள் உள்ளுர நினைத்துக் கொள்வார்கள்.
பணத்துக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்ட கட்டமைப்பிலிருந்து விடுபட்டு படித்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே சின்னாத்தாவின் எண்ணமாக இருந்தது. அதன்படியே இருவரும் உழைத்தார்கள்.
கடற்கரை ஓரத்தை அண்டிய ஓலைக் குடிசை. அதனுடன் அமைக்கப்பட்ட முன் விறாந்தையுடன் கூடிய கட்டடம். ஒச்சாப்பு இறக்கிய குசினியுடன் சின்னாத்தாவின் இல்லம் அமைந்துள்ளது.
கரைவலைத் தொழிலும் வாடி வேலை உழைப்பும் கொண்ட அளவான குடும்பம் அது. தேர்தல் காலங்களில் அந்நகர் களைகட்டும். விழாக் கோலம் பூண்டுநிற்கும். இவ்வூர் தொழிலாளர் நிலைகண்டு பச்சாதாபத்தை வெளிபடுத்துவார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். அரசியல்வாதிகள், மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பைத் தருவோம், வீடுகள் இல்லாதவர்களுக்கு புதுமனை கட்டித் தரப்படும், தண்ணீர்த் திட்டத்தை கொண்டு வருவோம். படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு நிவாரண திட்டத்தில் தெப்பம், வலை. போட் என்பனவற்றை தருவோம் என்ற பசப்பு வார்த்தைகள் அக் கிராமத்தில் கரைபுரளும்.
இந்த பொய்யான வாக்குறுதிகளை கேட்டு சாமானிய தொழிலாளர்கள் நம்பி நிற்பதில் வியப்பொன்றுமில்லை. இவையெல்லாம் தமிழ்ப் பகுதிகளில் வாக்குகளை சூறையாடும் தந்திரம்.
ஆனால் எம் கிராமத்தை அண்டியுள்ள பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள், நிவாரணங்கள், கொடுப்பனவுகள் எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அப்பப்பா! இவ்வசதிகள் எல்லாம் எங்கள் கிராமத்தில் முயற்கொம்பான சங்கதிகள் என்பது அடைக்கலம் குடும்பத்துக்கு மட்டுமல்ல அந்தக் கிராமத்துக்ேக தெரியும். அடைக்கலம் தொழிலுக்குப்போகத் தயாரானான். பாசப்பிணைப்பின் காரணமாக அவளை உணர்ச்சிப் பிரவாகத்துடன் நெஞ்சார அணைத்து ஆலிங்கனம் செய்தான். இவ்வகையான உணர்ச்சிப் பிரவாகங்கள் கடற்தொழிலாளர்களிடத்தில் காணப்படுவது வழமை.
அவளும் கொஞ்சலாக, “இந்தாங்க, உங்களத்தான் கேக்குதா? கடல் சாந்தமாகத்தான் இருக்கு, காத்தும் அவ்வளவாக இல்லைங்க. மீன்படும் போல கெடக்கு. அப்படி இருந்தாலும் மீன்மடி மடியாக கிடைத்தால் சந்தோசம் என்ற போர்வையில் உங்களுக்கு கசிப்பு ஊத்துவான் அந்தப் பாழாய்ப்போன போத்தி சம்மாட்டி. பாத்து நடந்து கொள்ளுங்க” என்று புத்தி புகட்டியபடியே கொஞ்சலாக சொன்னாள் சின்னாத்தா.
“ஏண்டிபுள்ள உனக்கிட்ட ஒன்ன சொல்றேன். அடியே இன்று பாரிப்பாடு பாட்டுக்கும் போக வேண்டுமடி. நா முந்தி நீ முந்தி போய் ஆகவேண்டும். முந்திப்போனால் தானடி பங்குச்சல்லியுடன் மேப்பங்கு சல்லியும் கெடைக்கும். அப்போ தான் குடித்து நம்ம காலத்தை ஓட்டலாம்” என்று சொல்லி முடிப்பதுக்குள் டிரக்டர் சத்தம் கேட்டது.
“அடியேபுள்ளே, டெக்டர் சத்தம் கேக்குதடி.” அவன் ஓடி வந்து டிரக்டரில் பாய்ந்து ஏறி ஆட்களுடன் ஆட்களாக ஓர் மூலையில் அமர்ந்து கொண்டான்.
விரைந்தோடிய டிரெக்டரில் அங்குமிங்குமாக புரண்ட அடைக்கலத்துக்கு சலிப்பாக இருந்தது. இந்த மண்டாடி காளியப்புவின் ஏச்சையும் பேச்சையும் எவ்வளவு காலத்துக்குத்தான் கேட்டு நிற்பதென்று அடைக்கலம் முகத்தை சுளித்தான்.
உழைப்பு உழைப்பு என்று ஓடி உழைத்தாலும் கையில் பணம் மிஞ்சுவது மிகக் கஷ்டமாக இருந்தது. ஊரின் இக்கரைதொழில் சீசன் காலாவதியாகி விட்டதனால் அக்கரை தொழில் சித்திரை மாதத்துடன் களைகட்டும். இந்த தொழிலாளர்கள் அலம்பல், முல்லைத்தீவு போன்ற இடங்களுக்கு சென்று தொழில் புரிவது வழமை.
முல்லைத்தீவு பகுதியில் கரைவலைத் தொழிலில் பேர் போனவர் சவரியப்பு சம்மாட்டி. தொழிலாளர்களை ஏமாற்றி வேலை வாங்குவதில் கில்லாடி.
அதற்கு அவர் ஒரு உபாயம் வைத்திருந்தார். அதுதான் முற்பணம். இப்பணத்தை கை நீட்டி வாங்கினால் தொழிலை தொழிலாக நேர்த்தியாக செய்யவேண்டும். லீவு என்ற பேச்சுக்கே இடமில்லை. மூன்று நேரச் சாப்பாடு, குடித்து வெறிக்க கசிப்பு.
இக்கரை என்று சொல்லப்படும் உடப்புப்பகுதி தொழில் சித்திரை முதலாம் திகதியுடன் முடிவு பெறும். இத்தொழில் முடிந்தவுடன் அக்கரைத் தொழிலை நாடுவது இப்பகுதி தொழிலாளர்களின் வழக்கம்.
அடைக்கலம் தனது வறுமை காரணமாக இரண்டு லட்சம் ரூபாவை முற்பணமாக சவரியப்பு சம்மாட்டியிடம் கை நீட்டி வாங்கினான். அதன்படி அடைக்கலம் அலம்பில் என்ற இடத்திற்கு சவரியப்பு சம்மாட்டியாரின் கரைவலை வாடியை போய்ச்சேர்ந்தான்.
ஆனால் அடைக்கலத்துக்கு காத்திருந்தது புதிய இடம், புதிய சூழல். புதிய முகங்கள். இவற்றுடன் தொழில் முறையிலும் நடைமுறைப்பழக்கங்களிலும் வித்தியாசங்களைக் கண்டான். அடைக்கலம் புதியவன் என்பதால் சக தொழிலாளர்கள் உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்யப் பின்நிற்கவில்லை.
அவன் எதிர்பார்த்தது போல் சாப்பாட்டுக்கு பஞ்மில்லை. மனதை தேற்றிக் கொள்ள கசிப்பும் கிடைத்தது. இதைக்கண்ட அடைக்கலம் திருப்தி அடைந்தான்.
கசிப்பை உள்ளே விட பழக்கப்பட்டவன் குடிபோதையில் தொழிலை மாடாக செய்வான். அதனால் மற்ற தொழிலாளிகளை விட மாத சம்பளம் இரட்டிப்பாகக் கிடைத்தது. மனத்திருப்தி அடைந்த அடைக்கலம், வாங்கிய இரண்டு இலட்சத்தை ஆறு மாதத்தில் திருப்பிச் செலுத்தி விட்டான்.
அக் கிராமம் பின் தங்கிய நிலையில் காணப்பட்டாலும் இங்கும் சம்மாட்டிமார்களின் ஆதிக்கம், கையோங்கித்தான் இருந்தது. இதனால் தொழிலாளர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருந்தனர். இதற்கு முடிவு கட்ட வேண்டுமென சின்னாத்தா பாடுபட்டாள். தொழிலாளர்கள் சுய தொழில் செய்ய வேண்டும். தத்தம் பிள்ளைகளை படிப்பித்து முன்னேற்த்தைக் காண வேண்டும். தொழிலாளர்களின் பிள்ளைகள் தகப்பன் செய்யும் கரைவலைத் தொழிலில் இருந்து விடுபட்டு அரச தொழிலை மேற்கொள்ள வேண்டுமென கனவு கண்டாள்.
அக்கனவு வீண் போகவில்லை. மகன் கட்டப்பா படித்து முன்னேறி அரச தொழிலான ஆசிரியர் தொழிலைப் பெற்று கொண்டான்.
போத்தி சம்மாட்டியாரின் எண்ணமெல்லாம் தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்து முன்னேறக்கூடாது என்பதுதான். அந்த எண்ணம் படிப்படியாக உடையத் தொடங்கியது.
காலமும் மாறத் தொடங்கியது. ஏதோ காரணத்தால் கரைவலையில் மீன்படுவது குறைந்து போனது. போத்தி சம்மாட்டியாருக்கு பல பிரச்சினைகள் முளைக்க, வழக்கு, வம்பு, குடும்பப் பிரச்சினைகள் என அவர் அலைக்கழிந்து போனார். ஒரு தொழிலாளி மட்டத்துக்கு இறங்கிப் போனார்.
இதே சமயம், அப்பாடசாலையில் படித்து பட்டதாரி ஆசிரியனான கட்டப்பாவுக்கு பாடசாலையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் அடைக்கலமும் சின்னாத்தாவும் முக்கிய பிரமுகர்களாக அழைக்கப்பட்டு முன் வரிசையில் அமர்த்தப்பட்டனர். அது அவர்களுக்கு மறக்க முடியாத நாள்.
அடைக்கலம் இப்போதும் தொழிலுக்கு போகிறான். சின்னாத்தாவும் தொழிலை விடவில்லை. முன்னரைப்போல் இப்போது சண்டை சச்சரவு இல்லை. அடைக்கலம் இப்போதெல்லாம் எப்போதாவதுதான் குடிக்கிறான். ஏனென்றால் இப்போது அவனுக்கு ஊரில் ஒரு மரியாதை இருக்கிறது. இப்போது அவன் அடைக்கலம் சேர்.
உடப்பூர் வீரசொக்கன்