அது ஒரு மாலை நேரம். வேலை முடிந்து வரும்போது வீட்டுக்குத்தேவையான பொருட்களை வழமையாக வாங்கும் கடையில் வாங்கிக்கொண்டு தேவா வீட்டுக்குள் நுழைந்தான். திடீரென தேவாவின் மனைவி சியாழினிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. டொக்டர் குறிப்பிட்ட திகதிக்கு இன்னும் ஒரு கிழமையுள்ளது, அதற்குள் வலி ஏற்பட்டால் அட்மிட் ஆகச்சொன்னார்.
இதைக் கண்ட தேவாவிற்கு சந்தோசம் ஒரு பக்கம் மனைவி வலியால் துடிக்கின்றாளே என்ற துக்கம் மறுபக்கம். கை, கால் புரியாமல் ‘அம்மா அப்பாவிடம் பார்த்துக் கொள்ளுங்க எனச்சொல்லி விட்டு, பக்கத்து வீட்டிலுள்ள ஒரு சிலருக்கு தகவல்களை சொல்லிவிட்டு ஆட்டோ தரிப்பிடம் செல்ல வீதிக்கு வந்தான். வீட்டிலிருந்து ஆட்டோ ஸ்டான்ட் வெகு தூரமாகும். நடந்தே போகணும் தேவாவிற்கு தன் மனைவி படுகின்ற அவஸ்தையின் வலி மட்டுமே கண்களுக்கு தெரிந்ததால் தூரத்தையெல்லாம் நினைத்துப் பார்க்கும் நிலையில் அவனில்லை. முடிந்தவரை நடந்தான்.
இந்நேரம் ஆட்டோ ஒன்றுமில்லாததைப் பார்த்த தேவாவின் மனம் சங்கடமானது. கொஞ்ச நேரத்திற்குப் பின் அவனாகவே பிரதான வீதியில் ஏதாவது வாகனம் கிடைக்குமா? என்று மஞ்சக் கோட்டினூடாக நடந்து சென்று பார்த்தான். தூரத்தே ஒரு ஆட்டோ வந்தது. அதை நிறுத்தி விடயத்தைச் சொல்லி அந்த ஆட்டோவை வீட்டுப் பக்கம் திருப்பினான்.
பக்கத்து வீட்டார்கள் அவன் சொல்லாமலே ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு போக வேண்டிய பொருட்களை ஒரு கைக் கூடைக்குள் எடுத்து வைத்திருந்தது அவனுக்கு இலகுவாகவும் மன ஆறுதலாகவும் இருந்தது. வீதியில் உள்ள மேடு பள்ளங்களைத் தாண்டி ஆட்டோ ஹொஸ்பிட்டலை அடைந்தது. சரியான நேரத்துக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டதாக டொக்டர் தேவாவிடம் சொல்ல, ஆட்டோக்காரருக்குத்தான் நன்றி சொல்லனும் என்று தேவா மனசுக்குள் நினைத்தவனாக பிள்ளை கிடைக்கும் வரை ஹொஸ்பிட்டலுக்கு வெளியே நின்றிருந்தான்.
அது ஒரு பிறைவட் ஹொஸ்பிட்டல் என்பதால் கவனிப்புக்கள் அதிகமாகத்தான் இருந்தன. இருந்தாலும் தனக்கு தெரிந்த சில முகங்களை கண்டு தன் மனைவியைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுமாறு அடக்கத்துடன் தேவா கேட்டுக் கொண்டான்.
சியாழினியை சந்தித்த இதே ஹொஸ்பிட்டலில்தான் அவளுக்கு பிள்ளையும் கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷத்துடன் தன் பழைய நினைவுகளை மெல்ல மீட்டிப் பார்த்தான்.
தேவா தனியார் கம்பனியில் வேலை செய்து கொண்டு தன் பெற்றோருடன் வாழ்ந்து வருபவன். அவனது பெற்றோர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் திருமணம் முடிக்காமல் பிறகு பிறகென காலத்தை கடத்தினான். அதற்கு காரணம் தனக்கு மனைவியாக வருபவள் தனது வயது போன அம்மாவையும் அப்பாவையும் நன்றாக கவனித்துக்கொள்வாளா? என்று அவனது அடி மனதில் எழுந்த கவலையாகும்.
தாயில்லாமல் எத்தனையோ பிள்ளைகள் இன்று அநாதை இல்லங்களிலும் தெருக்களிலும் படுகின்ற கஷ்டங்களை கண்ணால் பார்க்கும்போது எவ்வளவு மனம் பாதிப்புள்ளாகி விடுகிறது அவ்வாறான நிலையிலிருந்து இறைவன் எம்மைக் காத்துள்ளான்.
அன்றும் வெளிநாட்டிலே உள்ள பெண்ணொருத்திக்கு தேவாவைக் கேட்டு தரகர் அவனது வீட்டுக்கு வந்தார். வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கேயே இருக்கணும் உங்களுக்கு தொழில் வசதிகள் எல்லாம் செய்து தருவார்கள். உறவுகளைப் பார்க்க இரண்டு வருசத்திற்கொரு தடவை சொந்த நாட்டுக்கு வந்துபோகலாம். எல்லா வசதிகளுடன் வீடு இருக்கு.
கனடாவுக்கு இப்போதைய காலத்தில் போவதை நினைத்தும் பார்க்கேலாது பல லட்சம்வேண்டும். இது உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு ராஜவாழ்க்கை வாழலாம், ஒரேயொரு பெண்பிள்ளை மற்ற இரண்டுபேரும் ஆண்மகன்கள். அவர்களும் நல்லா சம்பாதிக்கினம். ஆறுதலாக யோசித்து நல்ல முடிவாச் சொல்லுங்க என்று தரகர் சொன்னபோது,
திருமணம் என்ற பெயரில் தொப்புள் கொடி உறவைவிட்டுப் பிரிய முடியாது. எந்தன் ஒவ்வொரு அசைவிலும் அவர்களின் வழி நடத்தல்தான். தம்வயிற்றைக் கவனிக்காது என்வயிற்றை நிரப்பியவர்கள். உடுத்திய சேலையாலே என்உடற்காயங்களுக்கு கட்டுப்போட்ட தாயை மறந்து எனக்கொரு வாழ்வா? பிறந்ததிலிருந்து நெஞ்சிலும் மடியிலும் சுமந்து காத்தவர்களை கைவிடலாமா? அவர்களைப் பிரிந்து வாழும் வாழ்க்கை எனக்கு வேண்டாவே வேண்டாம் எனச் சொல்லிவிட்டான்.
அந்த பதில் தரகருக்கு மனச் சங்கடத்தினை உண்டாக்கினாலும், அவர் மனசுக்குள் இந்தக் காலத்தில் இப்படியொரு பிள்ளையா? ஆச்சரியமா இருக்கே என்ற எண்ணம் வார்த்தையாக அவரது உதடுகளிலிருந்து உதிராமலில்லை. கலியாணக்கதை வந்தாலே தேவாவுக்கு பெற்றவர்களைப் பற்றியதான நினைவுகளே அவனுக்குள் நீளமாகும்.
மறுநாள் தேவா உடல் கொஞ்சம் அசதியாக இருப்பதால் வேலைக்குப் போகவில்லை. டொக்டரிடம் சந்தித்துக் காட்ட ஹொஸ்பிட்டலுக்கு சென்றிருந்தான்.
அங்கு வைத்தியரைச் சந்திக்கும் வரிசையில் தேவா முதலாவதாகவும் அடுத்ததாக அடுத்தடுத்து பெண்களும் அமர்ந்திருந்தார்கள். இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் ஒவ்வொருத்தராக டொக்டரிடம் போய் வந்தனர். தேவாவும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைசியாக போகலாம் என நினைத்தான்.
அதன்படி சியாழினி டொக்டரைச் சந்திக்க உள்ளே போனாள். அவளிடம் டொக்டர் சில இரத்த பரிசோதனைகள் செய்து வருமாறு அவளது பெயரைக் கேட்டெழுதி இன்ன திகதியில் தன்னை வந்து சந்திக்குமாறும் அவர் அவளிடம் கூறினார். டொக்டரிடம் சரியென சொல்லி சியாழினி வெளியே வந்தாள். டொக்டரும் அவளும் கதைத்த விடயம் தேவாவின் காதில் ஓரளவு கேட்டே இருந்தது.
வியர்வை வடியும் முகத்துடனும் சின்னப் பதற்றத்துடனும் நின்றிருந்த சியாழினியின் பக்கத்திலே தேவா போய் நீங்க ஏன் பிள்ளையைக் கரைக்கப் போறீங்க நான் இப்படி கேட்பதால் நீங்க ஒண்ணும் கோபிக்க வேணாம். விரும்பினா என்னிடம் சொல்லலாம் என்று அவன் கேட்க, இவனுக்கு எப்படித் தெரிந்தது என ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தவள் ஏதோ அவனிடம் சொல்லவேண்டும் போல் தோன்ற அவனிடம் தன்சொந்த விடயங்களைச் சொன்னாள்.
அவளது கணவன் யுத்த காலத்தில் அவளை விட்டுப் போயிட்டார். அதன் பிறகு அவள் இப்போது வாழும் வாழ்வு மிகவும் எனக்கு கஷ்டமானது. தாங்க முடியாத சுமைகளை தாங்கிக் கொண்டிருக்கும் அவளுக்கு வயிற்றில் இப்படியான ஒரு சுமை எதற்கென்றுதான் அந்த முடிவுக்கு அவள் வந்திருக்கிறாள்.
அவளுக்கு பக்கத்தில் இருந்த உறவுக்காரர்களும் இடம்பெயர்ந்து எங்குபோனார்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரைக்கும் ஒரு தகவலுமில்லை. மேலும் அவள் நிலைமையைக் கண்டு தாங்க முடியாமல் அவளுடன் கூட இருந்த வயதான அம்மாவும் அவளை விட்டுப் பிரிந்து ஆறுமாதமாச்சு.
தற்போது நான் ஆதரவின்றி உறவுகளின்றி அநாதையாக இருக்கிறான். “சாப்பாட்டுக்கும் பெரும் கஷ்டம் இன்றைக்கு இருந்தால் நாளைக்கு இல்லை. பட்டினி கிடந்து இந்தப் பிள்ளையை எப்படி பெற்று வளர்த்தெடுப்பது” எனச்சொல்லும் போதே சியாழினியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட, அவளை பார்த்தவாறே தேவா அவளது இரு கைகளையும் இறுகப் பற்றினான். தேவாவின் தாயும், தந்தையும் சம்மதிக்க சியாழினியின் விருப்பத்துடன் அவளுக்கான புதிய வாழ்வு அவனால் உதயம் காணத்தொடங்கியது.
சற்று நேரத்திற்குப் பின் ஹொஸ்பிட்டல் தாதியின் அழைப்பை ஏற்று தன் பழைய நினைவுகளை விடுத்தவனாக உள்ளே தேவா போனான். அவனது கையில் அழகான பெண் குழந்தையை அவள் தூக்கிக் கொடுக்க அந்த குழந்தையை அன்புடன் நெஞ்சோடு அவன் தாங்கிக் கொண்டான். உள்ளத்தில் சந்தோஷத்தின் ஊற்று பெருக்கெடுத்தது. இனி அவளுக்கும் நல்லதே நடக்க தந்தையிங்கு உறுதி பூண்டான்.
கவிச்சுடர் ஏ.எம்.கஸ்புள்ளா