கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சமீபத்தில் கிழக்கு மாகாணத்தில் பொங்கல் விழாவை 1008 பொங்கல் பானைகள்,1500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்கள், சிலம்பம், பீச், கபடி, படகோட்டப்போட்டி என பல்வேறு நிகழ்வுகளுடன் இலங்கையில் வரலாறு காணாத வகையில் நடத்தி சாதனை படைத்துள்ளார்.
கிழக்கின் பொங்கல் விழா உலக சாதனை பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. உலக சாதனை படைத்த ஒரு பொங்கல் விழாவாக அது மாறியதன் பின்னணி என்ன?
பொங்கல் விழாவின் போது பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள், 500 கோலங்கள், ஜல்லிக்கட்டு, சிலம்பம், படகோட்டப்போட்டி, பீச் கபடி உட்பட பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அதேபோல் எதிர்காலத்தில் ரம்ஸான், வெசாக் போயா போன்ற நிகழ்வுகளையும் முன்னெடுத்து மத நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்பது திண்ணம்.
இலங்கையில் ஜல்லிக்கட்டு எப்படி சாத்தியமானது? என்பது பற்றி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்குகின்றார்.
ஜல்லிக்கட்டு ஒரு தமிழ்க் கலாசார விளையாட்டு. ஜல்லிக்கட்டை தமிழ் நாட்டில் நிலைநாட்ட பல போராட்டங்கள் பல விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அது மாணவர் எழுச்சியுடன் வெற்றி வாகை சூடி தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இலங்கையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கை மக்கள் ஜல்லிக்கட்டை தொலைக்காட்சியில் காணக்கூடிய வாய்ப்பு மாத்திரமே இருந்தது. அது மக்கள் மனதில் பெரும் குறையாக இருந்து வந்த நிலையில், அதை நிவர்த்தி செய்யும் முகமாக தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்துடன் இணைந்து, வெற்றிகரமாக ஜல்லிக்கட்டை இலங்கையில் நடத்தியதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
இந்தியாவின் மத்திய அரசை ஆளும் பா.ஜ.க வும், தமிழகத்தை ஆளும் தி.மு.க வும் வெவ்வேறு கொள்கையில் இருக்கும் போதும் தாங்கள் ஒருவரை மட்டும் இரு தரப்பினரும் ஆதரிப்பது எப்படி?
பா.ஜ.க அரசை பொறுத்தமட்டில் இலங்கையில் பல அரசியல் தலைவர்கள் பா.ஜ.கவுடன் தொடர்பில் இருந்தாலும், என்னுடைய கடந்தகால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை என்னால் வழங்க முடியும் என்பதை உணர்ந்து, எனக்கு ஆதரவாக உள்ளனர்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் வகையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஏற்பாட்டில் முத்திரை வெளியிடும் நிகழ்வு அண்மையில் டெல்லியில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நான் அழைக்கப்பட்டு, இந்திய தபால் அமைச்சுடன் இணைந்து பா.ஜ.க தேசிய தலைவர் பிபி நாடா முத்திரையின் முதலாவது பிரதியை எனக்கு வழங்கினார். அதன் மூலம் மலையக மக்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் உதயநிதி ஸ்டாலின் தங்களுடைய காளைகளுக்கு தங்க காசை பரிசாக வழங்கினாரா?
உதயநிதி ஸ்டாலின் அரசியல் மற்றும் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் அவருடன் பல வருட காலமாக நட்புப் பாராட்டியுள்ளேன். உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் அவரது அமைச்சு ஊடாக சிறப்பாக சேவை செய்து வருகிறார். அதேவேளை விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற வகையில் தமிழ் கலாசார விளையாட்டுகளை ஊக்குவித்தும் வருகிறார்.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த ஜல்லிக்கட்டில் எனது காளைகள் வெற்றிபெற்றதையடுத்து உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி ஆகியோரால் தங்க காசு பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
மலையகத்துக்கு சோனியாகாந்தி அம்மையாரால் முதல் கட்டமாக 4000 வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன. அவ்வீட்டுத்திட்டத்திற்கான ஏற்பாடு தங்களுடையது என்பது அந்த காலப்பகுதிகளில் பேசப்பட்டது. அது உண்மையா?
இலங்கை அரசாங்கத்தால் மலையக மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டம் போதுமானது அல்ல என்பதை நன்கு அறிந்து, இ.தொ.காவின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் இது குறித்து இந்தியா அரசின் உதவியை நாடலாம் என கலந்துரையாடினேன். இ.தொ.காவின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எனக்கு அனுமதி வழங்கியதை அடுத்து டெல்லியில் உள்ள சோனியாகாந்தி அம்மையாரை 2, 3 முறை சந்தித்து விரிவாக கலந்துரையாடினேன். அக்கலந்துரையாடலில் மலையக சமூகத்தின் பிரச்சினைகளை அவரது நேரடி கவனத்தித்திற்கு கொண்டு சென்றேன். மலையக மக்களின் பிரச்சினைகள் கஷ்டங்களை சோனியாகாந்தி அம்மையாரிடம் விவரித்து மலையக மக்களுக்கு இந்தியா அரசின் உதவி தேவைப்படுகிறது என்பதை தெரியப்படுத்தி, இ.தொ.காவின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவுக்கும் சோனியாகாந்தி அம்மையாருக்குமிடையிலான சந்திப்பினை ஏற்படுத்தி வீட்டுத்திட்டத்திற்கான முதல் கட்ட அனுமதியை பெற்று மலையகத்திற்கான வீடமைப்பு திட்டத்தை பெற்றுக்கொடுத்தோம்.
மலையகத்திற்காக தாங்கள் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்து விளக்குக?
2009ஆம் ஆண்டு ஊவா மாகாணத்தில் நான் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட போது அடிப்படை தேவைகளில் ஒன்றான மின்சாரம் பதுளை மக்களுக்கு முழுமையாக பெறப்படவில்லை என்பதை தேர்தல் பிரசாரத்தின் போது அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மேலும் முதியோர் ஊக்குவிப்பு தொகையில் மலையக மக்கள் சட்ட ரீதியாக உள்வாங்கப்படவில்லை என்பதையும் அறிய முடிந்தது. மாகாண ரீதியில் விளையாட்டுத்துறையில் தோட்டப்புற இளைஞர்கள் ஊவா மாகாணத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் பின்னடைவை சந்தித்தனர். இது போன்று பல குறைபாடுகள் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்டன. அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் முகமாக மின்சார அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு போன்ற அமைச்சுகள் எனது விருப்பத்திற்கு ஏற்ப எனக்கு வழங்கப்பட்டது. அமைச்சு பதவிகள் 5 வருட காலத்தை கொண்ட போதிலும் 3 வருடங்களில் தோட்டப்புறங்களில் 64 சதவீதமாக இருந்த மின்சாரத்தை 100 சதவீதமாக மாற்றப்பட்டது. தற்போது ஊவா மாகாணத்தில் மின்சாரம் இல்லாத தோட்டப்புறங்கள் இல்லை என்பது வரலாற்று வெற்றி. அதே போல் சமூக சேவை அமைச்சின் ஊடாக பெரும்பான்மை சமூகத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்ட முதியோர் கொடுப்பனவு சுற்றறிக்கையை மாற்றி முதல் முறையாக 14000 முதியோருக்கு ஒரே இரவில் முதியோர் கொடுப்பனவுகளை மாதந்தோறும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன். தோட்டப்புற வீதிகள் அனைத்தையும் மாகாண சபை நிதியூடாக புனரமைக்க வர்த்தமானி வெளியிடப்பட்டது. தோட்ட புறங்களில் முதல் முறையாக கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கப்பட்டது. ஒரே இரவில் உதவியாசிரியர்களாக இருந்த 800 பேரை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கிய ஒரே மாவட்டம் பதுளை மாவட்டம் ஆகும். இது போல் என்னுடைய காலத்தில் கல்விக்காக செய்த சேவைகள் எண்ணிலடங்காதவை.
IMF தங்களுடைய நிர்வாகத்திறனை பற்றி பாராட்டி கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
IMF ஐப் பொறுத்தமட்டில் நாடு முழுவதும் சென்று இலங்கை தங்களுக்கு செலுத்தவுள்ள கடன் தொகையை எவ்வாறு மீள்செலுத்த போகிறார்கள் என்பதை ஆய்வு செய்வதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையை பார்வையிட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் நான் ஆளுநராக பொறுப்பேற்று செய்த வேலைத்திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்தனர். கிழக்கு மாகாணம் சீராக செயற்படுவதாக பாராட்டினர். கிழக்கு மாகாணம் முழுமையாக வளர்ச்சி அடைந்தால் இலங்கையில் உள்ள முழுக் கடனையும் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள் கட்ட முடியும் என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்தினேன். அதற்கான வேலைத்திட்டங்களின் முன்மொழிவுகளை சமர்ப்பித்தேன்.