உலக வாழ் இந்து மக்களால் போற்றப்படும் மகாபாரதம், இராமாயணம் எனும் பெரும் காவியங்கள் வாழ்க்கைக்கு பெரும் அர்த்தங்களை தருகின்றன.
அந்தவகையில் மானுடப் பிறவி எடுத்த மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீ ராம அவதாரம் மானுட தர்மத்தை மக்களுக்கு தந்தது.
இந்தவகையில் அயோத்தியில் பிறந்த ஸ்ரீராமருக்கு புதிதாக கோவிலில் பிராண பிரதிஷ்டை இடம்பெறுவது மிகவும் சிறப்பானதாகும். இந்து மக்கள் பிரமிக்கத்தக்க அளவுக்கு ஸ்ரீராமர் கோவில் அமைந்திருப்பது மிகவும் விஷேடமாகும். அந்த இராமாயணத்தில் இலங்கையும் தொடர்புபட்டிருப்பதும் இலங்கையில் இராமர் பாதம் பதித்ததும் ஒரு பெருமைக்குரிய விடயம். இதனால் இலங்கையும் சிறப்பு பெறுகின்றது. அந்த வகையில் நுவரெலியாவில் சீதாஎலியா எனும் இடத்தில் சீதை அம்மனுக்கான ஆலய சூழலில் இருந்தும் அந்த கோவில் அமைப்பதற்கான கற்கள் கொண்டு செல்லப்பட்டதும் பெருமைப்படக்கூடிய விடயமாக அயோத்தி ஸ்ரீராமர் கோவில் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அனுமான் பாலம் அமைத்தது போல் இந்த ஸ்ரீராமர் ஆலயமும் பக்தி ரீதியான பிணைப்பை இந்து மக்களுக்கிடையில் மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை இந்த புனித கைங்கரியத்தை மேற்கொள்வதற்கு ஸ்ரீராம பிரானின் பரிபூரண அனுக்கிரகம் பெற்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி இதனை அமைப்பதற்கான முயற்சிகளை பலரதும் ஆதரவுடன் செய்து முடித்திருக்கின்றார்.
இது இந்துக்களுக்கு பெருமை சேர்க்கும் விடயம். ஸ்ரீராமர் அருள் பெற்று மேலும் இந்துமதத்துக்கு வலுச்சேர்க்கும் புண்ணியமான கைங்கரியங்களில் ஈடுபட எல்லாம் வல்ல இராமபிரான் இந்திய பிரதமருக்கு அருள்புரிய வேண்டும். நாளை 22/01/2022 அன்று எல்லோரும் ஸ்ரீராமஜெயம் பாராயணம் செய்துகொள்வது சிறப்பானதாகும் என சர்வதேச இந்துமதபீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.