கடந்த காலங்களைப் போலல்லாது, இம்முறை இஸ்ரேல் -பாலஸ்தீனத்தை மையப்படுத்திய மேற்காசிய நெருக்கடியில் இருதரப்புமே கோலோச்சும் நிலை தினசரி வலுப்பெற்றுக்கொண்டு வருகின்றது. 1947ஆம் ஆண்டு ஆரம்பித்த இஸ்ரேல் -பாலஸ்தீன போர் முதல், அனைத்து போர்களிலும் மேற்கு நாடுகளின் தயவுடன் போர்க்களத்திலும், சர்வதேச அரங்கிலும் இஸ்ரேல் பலமான சக்தியாக இருந்து வந்துள்ளது. எனினும் கடந்த ஒக்டோபர்- 07 இஸ்ரேலின் காஸா குடியேற்றங்கள் மீதான ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல்- ஹமாஸ் போர் 100 நாட்களை தாண்டுகின்ற போதிலும், முடிவினை எட்ட முடியவில்லை. இதன் பின்னணியில் போர்க்களத்திலும் சர்வதேச அரங்கிலும் இருதரப்புக்குமான வலுவான ஆதரவே காணப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே கடந்த டிசம்பர்- 29 அன்று சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா, இஸ்ரேல், காசா பகுதியில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானங்களை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. இக்கட்டுரையும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு, காஸா போரில் ஏற்படுத்தும் தாக்கத்தினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர்- 29 அன்று தென்னாப்பிரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தில் 84 பக்க வழக்கு பதிவில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஜனவரி 11, -12ஆம் திகதிகளில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வழக்கு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. குறித்த வழக்குப் பதிவில், காஸாவில் நடாத்தப்படும் இஸ்ரேல், -ஹமாஸ் போரில் அழிவு மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் அளவு சர்வதேச சட்டத்தின் கீழ் 1948ஆம் ஆண்டின் இனப்படுகொலை மாநாட்டின் வரம்பை மீறுகின்றன. காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறும் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்னாபிரிக்காவின் வழக்கு அடிப்படையில், இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன தேசிய இனம் மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டது. இதை மறுத்த இஸ்ரேல், சர்வதேச சட்டத்தின் கீழ் தற்காப்புக்கான தனது அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதாக வாதிடுகிறது.
சர்வதேச நீதிமன்றத்துக்கு இஸ்ரேல்,- பாலஸ்தீன விவகாரம் நகர்த்தப்பட்டுள்ளமையானது, சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை கொண்டு நேர் மற்றும் எதிரான கலவையான விமர்சனங்களை எதிர்கொள்கின்றது. தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது தொடுத்துள்ள வழக்கில் சர்வதேச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பினை வெளியிடப் போகின்றது மற்றும் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்த தீர்ப்பு வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக நடவடிக்கையாக இடைக்காலத் தீர்ப்பே அமையக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் அதன் சொந்த உத்தரவுகளை அமுல்படுத்த சர்வதேச நீதிமன்றத்திடம் எந்த வழியும் இல்லை. ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஊடாக நடவடிக்கைகளை எடுப்பதே சாத்தியமானதாக அமைகின்றது. ஆனால் அது நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோ அதிகாரத்துக்கு உட்பட்டது. இஸ்ரேலுக்கு பாதகமான தீர்ப்பு ஏற்பட்டால், அத்தகைய உத்தரவை அமுல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் வீட்டோ செய்ய இஸ்ரேல் அமெரிக்காவை கோரலாம். இப்பின்னணியிலேயே சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரமற்ற நீதி தொடர்பில் பல விமர்சனங்கள் காணப்படுகின்றன.
அதன் விளைவு என்னவாக இருந்தாலும், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டு, பாலஸ்தீனர்களுக்கு ஆழ்ந்த அடையாளத்துடன் கூடிய ஒரு சிறந்த தலையீடு ஆகும். நுணுக்கமான அர்த்தத்தில், சர்வதேச நீதிமன்றத்தின் வழக்கு காஸாவில் மூன்று மாத கால அழிவை மதிப்பிடுவதற்கான வாய்ப்பாகும். இப்புரிதலுடன் காஸா போரில் இஸ்ரேல் மீதான இனப்படுகாலை குற்றச்சாட்டுக்கான விளக்கத்துக்கு ஆழமான தேடல் அவசியமாகின்றது.
முதலாவது, இஸ்ரேல் மீது சர்வதேச அரங்கில் ஒரு எதிரான விவாதத்திற்கு உறுதியான அடித்தளத்தை சர்வதேச நீதிமன்ற வழக்கு உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், அமெரிக்காவின் ஆதரவுடன் அது தோற்கடிக்கப்பட்டன. ஆதலால் இஸ்ரேல் மீது அவை குற்றச்சாட்டுகளாக மாத்திரமே வந்து சென்றன. எனினும் சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, இஸ்ரேலின் தேசிய கௌரவத்துக்கு சர்வதேச அரங்கில் இழுக்கானதாகவே சர்வதேச அரசியல் அவதானிகளாலும் சுட்டிக்காட்ப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையால் இனப்படுகொலை மாநாடு டிசம்பர்- 9, 1948அன்று பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சி யூதர்களுக்கு எதிராக செய்த அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுக்கும் முதல் மனித உரிமைகள் ஒப்பந்தம் இதுவாகும். ரபேல் லெம்கின் என்ற போலந்து யூதரே முதலில் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை உருவாக்கினார். யூதர்களின் பாதுகாப்பும் இஸ்ரேல் எனும் அரசின் உருவாக்கத்தின் பின்னணியிலும் ஹிட்லரின் யூதர்கள் மீதான இனப்படுகொலை பிரசாரமே காரணமாக அமைந்தது. இன்று அவ்வினமே இன்னொரு தேசிய இனத்தின் மீது இனப்படுகொலையை நிகழ்த்துவதாக குற்றச்சாட்டை எதிர்கொள்வது, சர்வதேச அரங்கில் இஸ்ரேலின் தேசிய கௌரவத்திற்கான நெருக்கடியின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது. இந்த பின்னணியிலேயே இஸ்ரேல் தனது மறுப்பு பதிலில், “இந்த வழக்கு, யூதர்களின் இனப்படுகொலைக்குப் பின்னர் நிறுவப்பட்ட நாட்டை மற்ற நாடுகளை விட மிக உயர்ந்த ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் இஸ்ரேலை மாற்றுவதற்கான பல தசாப்த கால முயற்சியின் உச்சம்.” எனக் குற்றம் சாட்டுகின்றது. மேலும், ஜெருசலேமில் உள்ள ஆராய்ச்சி குழுவான ஷாலோம் ஹார்ட்மேன் இன்ஸ்டிட்யூட்டில் எழுத்தாளர் யோசி க்ளேய்ன் ஹலேவி “யூத மக்களை இயல்பாக்குவதற்கும், நாடுகளுக்கு மத்தியில் ஒரு தேசமாக நம்மை மாற்றுவதற்கும் இது சியோனிச அபிலாஷைக்கு ஒரு ஆழமான அடியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது முன்வைத்துள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டை மறுக்கின்ற போதிலும், இனப்படுகொலைக்கான சூழலை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஹோலோகாஸ்ட் மற்றும் இனப்படுகொலை ஆய்வுகளின் பேராசிரியர் ஓமர் பார்டோவ், “இனப்படுகொலையின் வரலாற்றாசிரியர் என்ற முறையில், காஸாவில் தற்போது இனப்படுகொலை நடைபெறுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நான் நம்புகிறேன், இருப்பினும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் கூட நடக்க வாய்ப்புள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நிலைமை மோசமடைவதற்கு முன்பு அதை நிறுத்துவதற்கான வாய்ப்பு நமக்கு உள்ளது. இனப்படுகொலை நடந்தபின் அதைத் தாமதமாகக் கண்டனம் செய்வதைவிட, அது நிகழும் முன்னரே இனப்படுகொலைக்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி எச்சரிப்பது மிகவும் முக்கியமானது, என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிவோம். எங்களுக்கு இன்னும் அந்த நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.” என காசா போரில் சர்வதேசம் தலையிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இத்தகைய கோரிக்கையானது, தென்னாபிரிக்காவின் இஸ்ரேல் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டை மையப்படுத்தியே எழுந்துள்ளது. மேலும், பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன், காஸா மீதான இஸ்ரேலின் போரில் சர்வதேச சட்ட மீறல்களும் உள்ளடங்கியிருக்கலாம் என்று தான் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், “இதுவரை தனக்கு கிடைத்த அறிவுரை இஸ்ரேலுக்கு இணங்குவதாக இருந்த போதிலும், பதிலளிக்க வேண்டிய கேள்விகள் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார். காஸா நிலப்பரப்பில் இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடர்பில் மேற்கு நாடுகளை பேச நிர்ப்பந்தித்தமை, இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டின் வெற்றியாகவே அமைகின்றது.
மூன்றாவது, பாலஸ்தீனம் தொடர்பான இஸ்ரேலின் இனப்படுகொலை சாட்சியங்கள் பொதுவெளிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக அதிக இறப்பு எண்ணிக்கைகள் பெரும்பாலும் சர்வதேச கண்டனத்தை கொண்டுவரும் அதே வேளையில், ஒரு சட்டப் பிரிவாக, இனப்படுகொலை என்பது ஒரு அரசின் இராணுவப் படையின் அளவுக்கதிகமான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பொதுமக்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை சார்ந்தது அல்ல. இனப்படுகொலை நோக்கத்தை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. அதனை வெளிப்படுத்தும் வகையில், இஸ்ரேலிய அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி உறுப்பினர்களின் அறிக்கைகள் மேற்கோள்காட்டப்படுகின்றன. ஒக்டோபர் -7அன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு காஸா மக்கள் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காஸாவின் மக்கள்தொகை மிகுந்த நகர்ப்புற மையங்களின் சில பகுதிகளை இடிபாடுகளாக மாற்றும்” என்றும் கூறினார். தொடர்ந்து ஒக்டோபர் -28அன்று, யூதர்களின் புனித நூல்களில் ஒன்றான உபாகமத்தை மேற்கோள் காட்டி, “அமலேக் உங்களுக்கு என்ன செய்தார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என இஸ்ரேலியர்களுக்கு காஸாவில் போர் தொடர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இஸ்ரேலிய இராணுவத்தின் பிராந்தியங்களில் அரசாங்க நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளரான மேஜர் ஜெனரல் கசான் அலியன், “மனித விலங்குகளை அப்படித்தான் நடத்த வேண்டும். அங்கே மின்சாரம் மற்றும் தண்ணீர் இருக்காது. அழிவு மட்டுமே இருக்கும். நீங்கள் நரகத்தை விரும்பினீர்கள், உங்களுக்கு நரகம் கிடைக்கும்” என அரபு மொழியில் காசாவின் மக்களிடம் உரையாற்றினார். இவ்வாறாக இஸ்ரேலின் அரச கட்டமைப்பின் வன்முறை, அழிவுகள், கண்டனங்களை கடந்து, இனப்படுகொலைக்கான நோக்கம் பொதுவெளியில் முதன்மை பெற சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா நகர்த்தியுள்ள வழக்கே காரணமாகின்றது.