சிம்பாப்வேயுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2–0 என வென்றது ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. என்றாலும் குசல் மெண்டிஸ் தலைமையில் பல மாற்றங்களுடன் களமிறங்கிய இலங்கை ஒருநாள் அணிக்கு இந்த வெற்றி முக்கியமான ஒன்று.
முதல் போட்டி மழையால் முடிவு கிடைக்காதபோதும் இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளால் போராடி வெற்றியீட்டிய இலங்கை அணி கடைசி போட்டியில் 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பலவீனப்பட்டிருக்கும் சிம்பாப்வேயுக்கு எதிரான இந்த வெற்றிகள் அணியின் உண்மையான பலத்தை முழுமையாக வெளிப்படுத்துவதாக எடுத்துக்கொள்ள முடியாது. என்றாலும் கடந்த கால குறைகள் அணியில் தொடர்ந்து நீடிப்பது மாத்திரம் தெரிகிறது.
ஆரம்ப துடுப்பாட்டத்தில் இருக்கும் பின்னடைவை சமாளிக்கும் முயற்சியாகவே முதல்தர போட்டிகளில் சோபித்து வந்த அவிஷ்க பெர்னாண்டோ அழைக்கப்பட்டார். என்றாலும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பத்தும் நிசங்க தொடரில் இருந்து நீக்கப்பட்டது பின்னடைவாக அமைந்தது.
அவிஷ்க பெர்னாண்டோ மூன்று போட்டிகளிலும் இரண்டில் டக் அவுட் மற்றும் ஒரு போட்டியில் 4 ஓட்டங்களையே பெற்றார். சரித் அசலங்க முதல் போட்டியில் சதம் பெற மற்றப் போட்டியில் டக் அவுட் ஆனார். குசல் மெண்டிஸும் முதல் இரு போட்டிகளிலும் பெரிதாக துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை. முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க துடுப்பாட்டத்தில் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.
இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் புதுமுக வீரராக வந்த ஜனித் லியனகே நம்பிக்கை தரும் வகையில் மத்திய வரிசையில் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது போட்டியில் அவரது 95 ஓட்டங்களும் இல்லாமல் இருந்திருந்தால் 209 ஓட்டங்களை துரத்திய இலங்கை அணி தோல்வியை சந்தித்திருக்கும்.
பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க மற்றும் துஷ்மன்த சமீர இருப்பதால் வேகப்பந்து வரிசை பலமாகவே இருந்தது. சுழற்பந்தில் மஹீஷ் தீக்ஷன வழக்கம்போல் சிறப்பாக செயற்பட்டதோடு ஏழு மாதங்களுக்குப் பின்னர் தொடரின் கடைசி போட்டியில் அணிக்கு திரும்பிய வனிந்து ஹசரங்க ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்து பந்துவீச்சாக 5.5 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது கூக்லி பந்தை சிம்பாப்வே வீரர்களால் சமாளிக்கவே முடியாமல்போனது.
அடுத்து இலங்கை அணி சிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (14) நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடுப்பகுதியில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறுவதால் இந்தத் தொடர் முக்கியமானது.
அதனால் தான் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளின் பின்னர் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸை டி20 அணிக்கு அழைத்திருக்கிறார்கள்.
இது ஒருநாள் உலகக் கிண்ணத்தில் செய்த தவறை திருத்திக் கொள்ளும் முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
புதிய டி20 தலைவராக நியமிக்கப்பட்ட வனிந்து ஹசரங்கவின் கீழ் இலங்கை ஆடும் முதல் தொடராகவும் இது அமையப்போகிறது. முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் குழாத்தில் சேர்க்கப்பட்டிருப்பது மற்றும் குசல் பெரேரா மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய அனுபவ வீரர்கள் இணைக்கப்பட்டிருப்பது டி20 உலகக் கிண்ணத்திற்கான அணியை தயார்படுத்தும் முயற்சியாகவே பார்க்க முடிகிறது.
என்றாலும் இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு முதல் சிம்பாப்வே தொடரையும் சேர்த்து மொத்தமாக 9 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடப்போகிறது. அணியை கட்டமைப்பதற்கு இந்த ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது.