இலங்கை வாழ் மலையக மக்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, சுமார் 200 வருடங்களாகியுள்ளன. இந்த நிலையில், அவர்களின் வாழ்க்கை இன்றும் அதே நிலைமையில் இருந்து வருகிறது.
ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர், 1867ஆம் ஆண்டு கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் எல்லைப் பகுதியான லூல்கந்துர தோட்டத்தில் முதலாவது தேயிலை செய்கையை ஆரம்பித்தார்.
ஆனால் அதற்கு முன்னதாக கோப்பி உள்ளிட்ட செய்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டன. கோப்பி செய்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவே, தேயிலை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, இலங்கைக்கு மலையக மக்கள் 1822ம் ஆண்டு மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதியில் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள், வரிசையாக அமைக்கப்பட்ட சிறிய அறைகளை கொண்ட லயின் அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு 1822ம் ஆண்டு காலப் பகுதியில் அமைக்கப்பட்ட லயின் அறைகளில் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்ற நிலைமைகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
சுமார் 100 வருடங்கள், 150 வருடங்கள், 200 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட லயின் அறைகள் இன்றும் காணப்படுகின்றன. உடைந்த நிலையில், தகரங்கள் அற்ற நிலையில், சுவர்கள் இடிந்த நிலையில், இந்த லயின் அறைகள் காணப்படுகின்றன.
அன்று முதல் இன்று வரை தேயிலை தொழிலை நம்பி வாழ்ந்து வரும் இந்த மலையக சமூகம், எந்தவித முன்னேற்றத்தையும் அடையாது அதே நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையின் மலையக பகுதிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அந்த மக்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதே உண்மை. மலையக மக்களின் வாழ்க்ைக அவலங்கள் கவனிப்பைப் பெறவேண்டுமென்ற நோக்கிலேயே பல்வேறுவகையான நிகழ்வுகள் அண்மைக்காலமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ‘200ல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ எனும் தொனிப் பொருளில் மாபெரும் நிகழ்வு கடந்த 24.12.2023 அன்று நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணி உட்பட பொது அமைப்புகள் இணைந்து மேற்கொண்டிருந்தன. நிகழ்வுகள் காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகின. ஊர்வலம் கலை, கலாசார நிகழ்வுகளுடன் நகர மண்டபத்தை வந்தடைந்ததும், மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழக முதலமைச்சர் மறைந்த எம்.ஜி. ராமச்சந்திரன், மலையக தியாகிகள், மலையக மறைந்த தலைவர்கள், என அனைவருக்கும் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு கலை, கலாசார நிகழ்வுகளும் கௌரவிப்பும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகளுக்ெகல்லாம் மகுடம் சூட்டுவது போல அமைந்தது மலையக தியாகிகளுக்காக நுவரெலியா நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை அமைப்பதற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம் எடுத்துக் கொண்ட முயற்சி அவருடைய அந்த முயற்சிக்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோரை பாராட்டியாக வேண்டும். மலையக தியாகிகளை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க நியாயமில்லை. அவர்களிடம் எமது தியாகிகளையும் மலையக அரசியல் தலைவர்களையும் கொண்டு செல்வதற்கும் அவர்களுடைய தியாகங்கள் என்றுமே மறக்கப்படாதவை என்பதையும் இந்த நினைவுத் தூபி ஞாபகப்படுத்தும். இதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருடையதாகும்.
மலையக தியாகிகள்
1. முல்லோயா கோவிந்தன் 2. ராமசாமி வீராசாமி 3. அய்யன் பெருமாள் வேலாயுதம் 4. வெள்ளையன் 5. ராசம்மாள் 6. ஏப்ரகாம் சிங்கோ 7. கருமலை 8. கொம்பாடி 9. பொன்னையா 10. பிரான்சிஸ் 11. அய்யாவு 12. வைத்திலிங்கம் 13. முத்துசாமி 14. ஆராயி 15. நடேசன் 16. செல்லையா 17. மாரியப்பன் 18. அழகன் 19. ரெங்கசாமி 20. சோனை 21. அந்தோணிசாமி 22. பார்வதி 23. கந்தையா 24. ஆறுமுகம் 25. இராமசாமி 26. அழகர்சாமி 27. இராசையா 28. சிவனுலெட்சுமன் 29. பழனிவேலு 30. ஜோசையா ஜோசப்
'நுவரெலியா எஸ்.தியாகு