அலுத்துக் களைத்து வீடு வந்து சேர்ந்தாள் சாகிரா. பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த மகள் சஹானா எழுந்தோடி வந்து கழுத்தில் தொங்கினாள். அள்ளியெடுத்து அவளுக்கு வாடிக்கையான முத்தத்தைக் கொடுத்துவிட்டு ‘வாப்பா எங்கும்மா?’ எனக்கேட்டாள். ‘தூங்குறாம்மா….. ஸ்….. சத்தம் போடாதீங்க…. எழும்பிடுவா…’ என்றாள் – வாயில் விரல் வைத்துப் பாசாங்கு செய்தபடி. குழந்தையைத் தனியே விளையாடவிட்டு என்ன தூக்கம்? என்று புறுபுறுத்தவள் அறையைப் பார்த்தாள். கதவு திறந்தே கிடந்தது.
ஒவ்வொரு நாளும் காலையில் சிரான் கடைக்குச் சென்றிட, குழந்தையை ஆயத்தப்படுத்தி அழைத்துக்கொண்டு பாலர் பாடசாலையில் விட்டுவிட்டு அவள் பணிக்குச் செல்லவேண்டும். பகல் பன்னிரண்டு மணிக்கு சிரான் கடையிலிருந்து வந்து பிள்ளையை முன்பள்ளியிலிருந்து எடுத்துக்கொண்டு, அவள் வரும்வரையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அவள் மூன்றரை மணிக்குள் வந்த பின் சிரான் மீண்டும் சென்று கடையின் அலுவல்களைக் கவனித்து விட்டு இரவு எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரவேண்டும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் கட்டாயமாகக் கடை மூடப்பட வேண்டும். இருவருமாக பிள்ளையுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்.
சஹானாவின் மழலைப்பருவத்தில் அவளைக் கவனித்துக் கொள்ள, சிரானின் தாயார் உதவியாக இருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் கொரோனாத் தொற்றுக்குப் பலியானதால் ஏற்பட்ட ரணம், இருவர் மனங்களிலும் ஆறாத வடுவானது. வேலைக்குப் போகும் பெண்டிரின் திண்டாட்டம் எப்படியானது என்பதை அதன்பின்னர் தான் சாகிரா உணர்ந்தாள். வீட்டுவேலைக்கு ஆள் கிடைப்பது முயற்கொம்பாக இருந்தாலும், நம்பிக்கையாக, நாணயமாக, நல்லொழுக்கமுள்ளவர்களாக வேலைக்கு வருபவர்கள் இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? அதனால் தான் சிரானும் சாகிராவும் கலந்துபேசி ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். சொந்தக்கடையும், மோட்டார் சைக்கிளும் சிரானுக்கு இருப்பது கூட இந்த ஒப்பந்தத்துக்குச் சாதகமாகவே அமைந்ததால் குடும்பவண்டி சுமுகமாக ஓடலானது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களின் இல்லம் கலகலப்பாக இருக்கும். மூவரும் ஒன்றாக இருந்து மகிழ்ச்சியை அனுபவிக்கும் விதமாக திட்டமிட்டுக்கொள்வார்கள். உறவினர்களைச் சந்திக்கச்செல்வது, சஹானாவுடன் சிறுவர் பூங்காக்களுக்குச் சென்று விளையாடுவது, நெருங்கிய உறவுகளை வரவழைத்து விருந்து வைப்பது, பிரபலமான உணவகங்களில் பகலுணவை எடுத்துக்கொள்வது, இப்படி…..
அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை சிறுவர் பூங்காவுக்குச் செல்ல வேண்டிய நாள். சாகிரா பகலுணவு தயாரித்துக்கொண்டிருக்க, சிரான் சஹானாவை மடியில் வைத்துக் கதை பேசிக்கொண்டிருந்தான். சற்றைக்கெல்லாம், முச்சக்கரவண்டியொன்று வீட்டின் முன் நின்றது. வாட்டசாட்டமான ஒரு பெண்மணி சல்வார் உடையில் கேற்றைத் திறந்துகொண்டு வந்தாள்.
‘ஹாய் சிரான்…. எப்படியிரிக்கீங்க?’
சிரான் எழுந்து வாசலருகில் வந்துபார்க்க, அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.
‘அட… இது ரலீனா இல்ல… வாங்க வாங்க… எவ்ளோநாள் கண்டு? எங்க இந்தப்பக்கம்?…..’
வாசலில் பேச்சரவம் கேட்டு சாகிரா வந்து பார்த்தாள்.
‘சாகிரா…. இவ ரலீனா. ஏண்ட கிளாஸ்மேட்’
அழையாமல் வந்த அதிதியை இருவருமாக வரவேற்று அமரவைத்தார்கள். பரஸ்பர நலவிசாரிப்புகளோடு பழைய, புதிய விடயங்கள் சுவாரஸ்யமாகப் பரிமாறப்பட்டன. அறிமுகமில்லாத நபரைத் தாயின் பின்னால் ஒளிந்துகொண்டு தலையை மட்டும் நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள் சஹானா.
‘ஸ்வீட் கேர்ள்….ஆன்ரிகிட்ட வாங்கடா செல்லம்…’ என்று கையோடு கொண்டு வந்திருந்த பொதியை நீட்டினாள். – குழந்தையல்லவா? தாயின் முகத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு அவள் உதிர்த்த புன்னகையை அங்கீகாரமாகக் கருதி மெல்லமெல்ல ரலீனாவை நெருங்கினாள்.
ரலீனாவின் குடும்பநிலை சுமாரானது. நிரந்தரத்தொழில் என்று எதிலும் ஒட்டிக்கொள்ளாத தந்தை. ரலீனாவுக்கு அடுத்தடுத்து இரண்டு தங்கையைர் தம்பி என்று குடும்பம் பெருத்துப் போன போது கஷ்டநிலை தீர்க்க ரலீனா விமானமேறினாள். தங்கைகளுக்கு வாழவழி செய்துவிட்டு, ஏழு வருடங்களின் பின் நாடு திரும்பியிருக்கின்றாள். வெளிநாட்டு வாழ்க்கையின் செழிப்பு அவள் சாயலில் ஒருசில வயதுகளைக் குறைத்து விட்டிருந்தது.
ரலீனாவுடன் எல்லோரும் பகலுணவு எடுத்தார்கள். சஹானாவும் அவளோடு ஈயாக ஒட்டிக்கொண்டாள். சாகிராவும் இயல்பாகப் பழகினாள். அன்றைய தினம் அந்த வீடு அதீத மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தது.
ரலீனா, சிரான் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிட்டாள். சாகிராவின் விடுமுறை நாட்களில் எல்லாம் ரலீனாவின் வரவு வாடிக்கையாகிவிட்டது. இவர்களால் ஒழுங்கு செய்யப்படும் பயணங்களிலெல்லாம் ரலீனாவும் ஓர் அங்கமானாள்.
வான விதானத்திலே ‘எப்போது அவிழ்ந்து விடலாம்’ என்று எதிர்பார்ப்போடு கார்மேகங்கள் மூட்டை முடிச்சுகளுடன் காத்துநின்றன. மெல்லிய மழையிருட்டு; சின்னக்குமுறலாய் இடிமுழக்கம். நடையைத் துரிதப்படுத்தியபடி சாகிரா வீட்டை அண்மித்தாள். வீட்டினுள்ளே தொலைக்காட்சியின் சத்தம். ‘இந்த நேரத்துல டீவி பாக்கிற பழக்கம் எங்க வீட்ல இல்லையே…’ திறந்திருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்நுழைய… தான் வந்ததும் தெரியாமல் சஹானா கார்ட்டூனில் மூழ்கிக் கிடந்தாள்.
‘சஹானா…’ கத்த வேண்டும் போலிருந்தது. சுதாகரித்துக் கொண்டாள்.
‘என்னம்மா இது புதுப்பழக்கம்? யாரு கார்ட்டூன் போட்டுத் தந்த?’
‘வாப்பா தான்’ கார்ட்டூனிலிருந்து கண்ணை எடுக்காமலே குழந்தை பதிலளித்தது. பெரிய பிள்ளையாயிருந்தால் கன்னத்தில் அறைந்திருக்கலாம்.
‘என்னவா நீங்க… புள்ளக்கி கார்ட்டூன் போட்டுக்குடுத்த…?’
‘ஐயோ எவ்ளோ நேரம் புள்ள போனிக்காவோட மட்டும் வெளயாடிட்டீக்கிற… பாவந்தானே’ சிரான் சொன்னான்.
‘நல்ல பஸந்து… கார்ட்டூன் பாக்கிறதால என்னென்ன கேடு வருமெண்டு ஒங்களுக்கு தெரியாவா? அப்படி இரக்கம் பாத்தா புள்ளேட கண்ணோட கருத்தும் சேந்து தான் கெட்டுப் போவும்..’
வாயைவாயைத் திறந்து காட்டிய குழந்தைக்கு சோற்றுக் கவளங்களை ஊட்டியபடியே, குழந்தை தன்னோடு அணைத்துக் கொண்டிருந்த பொம்மையைப் பார்த்தாள் சாகிரா.
‘இந்த போனிக்கா நேத்தெல்லாம் ஒங்களுக்கிட்ட ஈக்கலயே சஹானா….இது எங்கால…?’ பொம்மையை எடுத்து மேலுங்கீழும் புரட்டிப்பார்த்தாள். அது கண்களைத் திறந்து மூடுகின்ற, சரித்தால் அழுகின்ற அழகிய பொம்மை.
‘இந்த பபாவ ரலீனா ஆன்ரி தந்தாங்க…’
‘எப்ப…’
‘இன்னக்கித் தாம்மா…. ஜாதி பபாவொண்டு…’
‘ஆன்ரி இங்க வந்தாங்களா?’
குழந்தை உணவை மென்றுகொண்டே தலை ஆட்டியது. ‘எங்கசரி போற வழீல புள்ளய பாக்க நெனச்சி வந்தீக்குமாக்கும்.’
காலவிருட்சம் நாளிலைகளை ஒவ்வொன்றாக உதிர்த்துக் கொண்டிருந்தது. அன்றும் பகலுணவுக்கு வந்த சிரான் வழமை போல கடைக்குப்போன பின சஹானாவுடன் சாகிரா கட்டிலில் சாய்ந்தாள்.
‘இன்னக்கி நர்ஸரில என்ன செஞ்சீங்க…?’
‘ம்…ம்…. கலர் பண்ணின… பாட்டு படிச்ச….ம்…. வெளயாடின….. உம்மா நா குட் கேர்ள் மா…. ஏ தெரீமா….? மெடம் தந்த வேலயெல்லாம் குவிக்கா செஞ்சி காட்டின… எனக்கு ஸ்டாரும் கெடச்ச…. ரெட் ஸ்டார்….’
‘அப்படியம்மா…. வெரிகுட் கேர்ள்….’
சஹானாவின் நெற்றியில் முத்தமிட்டபடியே சொன்னாள். ‘இப்ப போல எல்லாநாளும் குட் கேர்ளா ஈக்கனும். காட்டூன்லாம் பாக்காம படிச்சாத்தான் கெட்டிக்காரி ஆவேலும். சரியா?’
‘நா காட்டூன் பாக்கிறல்லம்மா…. வாப்பா தான் போட்டுத்தாற. ரலீனா ஆன்ரி வந்தாக்கா வாப்பா எனக்குப் பாக்கச் செல்லி காட்டூன் போட்டுத் தருவா…. அப்ப நான் பாப்பன்…’
உச்சந்தலையில் நச்சென்று குட்டியது போலிருந்தது சாகிராவுக்கு. உடல் மெலிதாக வெடவெடத்தது. உள்ளத்தில் இனம்புரியாத பதற்றம். மேற்கொண்டு குழந்தையிடம் எதைக் கேட்க முடியும்? எவ்வளவு நேரம் கட்டிலில் சாய்ந்திருந்தாளோ? குழந்தை தூங்கிவிட்டிருந்தது. சிரானிடம் எதுவும் கேட்கக்கூடாது. கொஞ்சநாள் பொறுமையோடு வழமைபோல் இருக்க வேண்டும். நினைத்துக் கொண்டாளே தவிர உள்ளம் பதகளித்துக் கொண்டேயிருந்தது.
அடுத்துவந்த நாட்களில் சஹானாவிடம் எப்படித்தகவல் பெறலாம் என்ற சிந்தனையோடு மூளை போரிட்டது.
‘இன்னக்கி ரலீனா ஆன்ரி வந்தாங்களா?’
‘ரலீனா ஆன்ரி. என்ன கொணந்து தந்தாங்க?’
‘அவங்க வந்தா ஒங்களோட வெளயாடுவாங்களா?’
‘இன்னக்கிம் வாப்பா கார்ட்டூன் போட்டுத் தந்தாங்களா?’
நாளுக்கொரு கேள்வியாய் குழந்தையுடனான இந்த விஷவேள்வியில் சாகிரா ஆடிப்போனாள். என்ன செய்வது? தலைக்கு மேலால் வெள்ளம் போகவிடமுடியாதே. இரவெல்லாம் தூக்கமின்றி மூளையைக் கசக்கிப் பிழிந்தாள். பொறுமை என்ற ஆபரணத்தைக் கையில் பிடித்தபடி தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்.
‘இன்னக்கி நான் லீவு வா… சஹானாவ நர்ஸரில உட்டுட்டு நீங்க கடைக்குப் போங்க…’ கேள்விக்குறியோடு சாகிராவைப் பார்த்த சிரான் ‘ஏன் வா லீவு? சொகமில்லயா’ என்று ஆதுரத்துடன் கிட்ட வந்து விசாரித்தான். சாகிரா எப்படியோ சமாளித்தாள். வழமை போல சிரான் பகலுணவுக்கு வந்து போன சிறிது நேரத்தில் சஹானாவை அழைத்துக்கொண்டு சாகிரா புறப்பட்டாள். ரலீனாவின் வீட்டுவாசலில் ஆட்டோ நின்றது.
ரலீனாவின் தாயார் வாயெல்லாம் பல்லாக வரவேற்றார். மகளை அழைக்கப் பார்த்தவளைத் தடுத்து,
‘ஒங்களத் தாம்மா பாக்க வந்த வாப்பா எங்க?’ என்று கேட்க, வாசலில் சாக்குக் கட்டிலில் படுத்திருந்த கணவரை எழுப்பிவிட்டாள்.
‘நான் இப்ப சொல்றத கேட்டு ரெண்டுபேரும் அதிர்ச்சியாவ வாணம். நேரடியாகவே விஷயத்துக்கு வாறேன்’ என்றவள், சஹானாவை அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாட அனுப்பினாள். ‘ஒங்கட மகளும் சிரானும் ஒன்னாப் படிச்சவங்களாம். அதால வந்த பழக்கம் ரலீனாவ குடும்பத்துல ஒத்தரா நெனக்க வச்சது. ஆனா…ஆனா’ தளர்ந்துபோன குரலை வலுக்கட்டாயமாக சரி செய்தாள்.
‘கிளாஸ்மேட் என்ற தொடர்பைத் தாண்டி, ரலீனாவுக்கும் சிரானுக்கும் இடைல வேறொரு தொடர்பும் இரிக்கிறதா எனக்குப்படுது…’
‘என்னதும்மா இது நீங்க செல்லுற? எங்கட புள்ளட மேல்ல வீண்பழி போடப்பாக்கிற?’ கோபமாகத் தாயார் பேசினாலும் குரலில் நடுக்கம். கணவரின் முகத்தைப் பாரத்தாள்.
‘இதபத்தி யாருக்கும் தெரியாதும்மா. நானாத்தான் தேடிப்பார்த்து சில விஷயங்களைத் தெரிஞ்சி கொண்ட. ஒங்கட மகளுக்கும் கலியாணமாவல. அதுக்காக ஆசாபாசங்கள் இல்லாமயா போவும். இந்த விஷயம் வெளில கசியிறதுக்க முந்தி, ஊருக்குள்ள அவமானப்பட முந்தி, ஒரெயொரு ஒதவி பண்ணினாப் போதுமெனக்கு.’
சொல்லிவிட்டு அந்தத் தம்பதியின் முகங்களை ஊடுருவினாள். ‘எங்கட மகளுக்கு மாப்புள தேடித்தேடி நாங்க தோத்துட்டோம்மா வெளிநாட்டுக்கு போன புள்ள வாணமென்டு தான் எல்லாரும் சொல்றாங்க. காலாகாலத்துல எம்புள்ளக்கொரு கலியாணம் நடந்திருந்தா…. இந்த மாதிரி கதயெல்லாம் கேட்கத் தேவலம்மா….’
கண்களைச் சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டாள் அந்தத் தாய்.
‘இது கதையல்லம்மா…. அத கண்ணுமூக்கு வச்சி கதயாக்காம இருக்கத்தான் நான் இந்த ஒதவியக் கேக்கிறன்.’
‘என்னம்மா இந்த ஊர உட்டுட்டு நாங்க போவணுமா?’
தகப்பனார் வாய்திறந்தார். கொஞ்சம் சூடான வார்த்தைகள்..
‘அதுக்கொண்டும் தேவப்படாது வாப்பா. ஒங்கட மகளோட கதச்சிப்பாருங்க. அவ உண்மைய ஒத்துக் கொள்ளுவான்னு நம்புறன் அவங்க ரெண்டுபேரும் இஸ்லாத்தால தடுக்கப்பட்ட விதத்துல நடந்து கொள்ளுறத்த தெரிஞ்சும் நாங்க பேசாம இருந்தா, பாவம் எங்க எல்லாருக்கும் தான். அதனால… அதனால…’ கட்டுப்பாட்டை மீறித் தழுதழுத்தது சாகிராவின் குரல். சிறிது நேரம் மௌனித்து விட்டு தொடர்ந்தாள்.
‘ரலீனாவுக்கு எங்னகடவர நிக்காஹ் பண்ணிவைக்க எனக்குப் முழுச்சம்மதம். அதுக்கு ஒதவி செய்ங்கன்னு தான் கேக்க வந்தன்.’
அதிர்ந்து போனார்கள் ரலீனாவின் பெற்றோர்.
‘என்ன மடத்தனம் மகள். இது எப்பிடி நடக்கும்? ஒங்கட வாழ்க்க என்னாவுறது? சரிப்பட்டு வராது.’
‘என்னப்பத்தி யோசிக்க வாணாம் உம்மா. அவருக்கு ரெண்டு கலியாணம் முடிக்க இஸ்லாம் சொல்ற தகுதி தாராளமா இரிக்கி. அதனால இத செஞ்சி வைக்கிறது எங்கட கடம’
தீர்க்கமான தன்னுடைய முடிவை முன்வைத்தவள் எப்படியோ பேசி சம்மதிக்க வைத்தாள். உரியவர்களுடன் பேசி ஒரு வாரத்துக்குள் பதிவுத் திருமணம் செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.
சிரானுக்குக் கடும் அதிர்ச்சி.
‘என்ன சாகிரா…. எனக்கிட்ட ஒரு வார்த்த விசாரிக்காம இப்பிடித் திடீர்னு முடிவெடுத்த?’
‘ஒங்களோட இது சம்பந்தமா பேச எதுவுமில்ல. இந்த வீட்டில ஹராமான காரியங்கள என்னால அனுமதிக்கேலா. அல்லாஹ்வுக்காகத் தான் நான் இந்த முடிவ எடுத்த.’
சாகிராவின் தீட்சண்யமான பார்வையைச் சந்திக்க முடியாமல் சிரான் தலை கவிழ்ந்தான்.
மாலையில் ஊர்ப் பள்ளிவாசலில் நிக்காஹ்.
இதயத்தைப் பிழியும் வேதனை மேலிட தன் கணவனை அவரது நண்பர்கள் சிலரோடு பள்ளிக்கு அனுப்பி விட்டு கதவைத் தாழ்ப்பாள் போட்டாள் உடைந்து நொறுங்கிப் போன உள்ளத்துக்கு ஆறுதல் பெற, வெளிப்படையாக அழக்கூட முடியவில்லை. சஹானா உடனிருப்பதால்.
‘அன்புள்ள கணவர் சிரானுக்கு. நான் உங்களுடன் எந்த மனஸ்தாபமும் இல்லை. ஒரு சராசரிப் பெண் என்றவகையில் என்னால் சோகத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை தான்.
ஆனாலும் உங்கள் மீது கொண்டுள்ள உண்மையான அன்பின் காரணமாகவே நான் இந்த முடிவுக்கு வந்தேன். உங்களுக்கு நல்லதை நாடிய திருப்தி என்னுள்ளத்தை நிறைத்திருக்கிறது.
நான் இனியும் உங்களுடனிருந்தால் ரலீனாவைக் கவனிப்பதில் உங்களுக்கு சங்கடம் ஏற்படலாம். எனவே நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். சஹானாவுடன் என் தாய் வீட்டுக்குத் தான் போகிறேன். என்னைத் தேடுவதாக அங்கே நீங்கள் வந்து சிக்கலில் மாட்டிக் கொள்வதை நான் விரும்பவில்லை.
நீங்கள் தான் எப்போதும் என் கணவர். உங்களை மணவிலக்கு செய்யும் எண்ணம் கடுகளவும் எனக்கில்லை. எனக்கும் கணவர் இருக்கிறார் என்ற அந்தஸ்தை சமூகத்தின் முன் நான் விட்டுத்தரத் தயாரில்லை. இது உங்கள் வீடு. திருமணமே கைகூடாத ஓர் அபலைக்கு வாழ்வு கொடுத்த நற்பாக்கியம் உங்களை வாழவைக்கும். உங்கள் புது வாழ்க்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இப்படிக்கு சாகிரா – உங்கள் மனைவி’
கடிதத்தை எழுதி முடித்ததும் பெரியதொரு பாரம் மனதிலிருந்து இறங்கிய உணர்வு. தனது அலைபேசியின் ‘சிம்’ மைக் கழற்றி கடித மடிப்புக்குள் வைத்தாள். வெண்ணிற உறைக்குள் கடிதம் மேசை மீது சலனமின்றிக் கிடந்தது.
அதற்கு மேலால் ஒற்றைச் சிவப்பு ரோஜாவை வைத்ததும், ‘பளிச்’சென்று தெரிந்தது. கதவைச் சாத்திவிட்டு சஹானாவுடன் வெளியில் வந்து அவளை, ஏற்றிச்செல்ல முச்சக்கர வண்டியொன்று வாசலில் காத்திருந்தது.
- மஸீதா புன்னியாமீன்