உலகில் வாழும் முஸ்லிம்கள் மாத்திரமன்றி பிறமத சகோதரர்களின் மனங்களையும் கவர்ந்து உலக வரலாற்றில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொண்டது மஸ்ஜித் அந்நபவி. அல்லாஹ்வை ஈமான் கொண்டு நம்பிக்கையோடு வாழும் அனைத்து முஸ்லிம்களினதும் அதிகபட்ச ஆசைகளில் ஒன்றுதான் மக்கா நகரம் சென்று உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரைகளை நிறைவேற்றி, மதீனா நகரில் உள்ள நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஸ்ஜித் அந்நபவியில் இரண்டு ரக்காத்தேனும் தொழ வேண்டும் என்பது.
சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள புனித மதீனத்து மண்ணின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இம்மஸ்ஜித் அந்நபவி உலகிலேயே மிகவும் புனிதமான பள்ளிவாசல்கள் எனும் பட்டியலில் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜித் ஹராமுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
புனித மக்கா நகரில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் அதிகரித்து அழைப்பு பணியை மேற்கொள்ள முடியாமல் போனது. இச்சந்தர்ப்பத்தில் நபித்துவம் கிடைத்து 13 ஆண்டுகளின் பின்னர் மக்கா நகரிலிருந்து மதினா நகருக்கு ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட நபியவர்கள் மதீனாவில் தன்னுடைய வீட்டுக்கு அருகாமையில் முஸ்லிம்களுக்கென்று ஒரு கேந்திரஸ்தலமாக இம்மஸ்ஜித் நபவியை ஹிஜ்ரி 01-ஆம் ஆண்டு (622) நிறுவினார்கள். மதீனா நகரம் ஆரம்ப காலத்தில் எஸ்ரிப் என்று அழைக்கப்பட்டு பின்னர் அல்மதீனா அல்முனவ்வரா என்றழைக்கப்பட்டது.
இம்மஸ்ஜித் அமைந்துள்ள குறித்த இடத்தில் ஹிஜ்ரத்துக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்ற அன்ஸாரிகள் (மதீனா முஸ்லிம்கள்) தொழுகையை நிறைவேற்றிவந்தார்கள். பின்னர் ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டு மதீனா நகரம் வந்தடைந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்த அவ்விடத்தை நெருங்கியவுடன் அவர்களுடைய ஒட்டகம் அன்சாரிகள் தொழுதுகொண்டிருந்த அதே இடத்தில் அமர்ந்து கொண்டது. அதையே நபியவர்கள் மஸ்ஜித் அந்நபவியினை நிறுவுவதற்கான இடமாக தேர்ந்தெடுத்தார்கள்.
குறித்த இடம் பெற்றோரை இழந்த அனாதை சிறுவர்களான ஸஹ்ல் இப்னு அம்ர் மற்றும் சுகைல் இப்னு அம்ர் ஆகியோருக்கு சொந்தமாக இருந்ததுடன் அவ்விடத்தினை விலைபேசி பணம் கொடுத்து வாங்கிய சம்பவத்தினை இஸ்லாமிய வரலாறுகளூடாக அறிந்துகொள்ள முடியும்.
வணக்க வழிபாடுகள், கல்வி, தீர்ப்பு வழங்கல், சமூக விடயங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் என அனைத்து விடயங்களுக்கும் கேந்திர ஸ்தலமாக காணப்பட்ட இம்மஸ்ஜித் நபவியில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தொழுகையும் ஆயிரம் தொழுகைகளுக்கு சமமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இச்செயற்பாடுகளில் வணக்க வழிபாடுகள், போதனைகள், வழிகாட்டுதல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் என பல சேவைகள் இன்றும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆரம்ப காலத்தில் நபியவர்கள் மற்றும் ஸஹாபாக்கள் ஒன்றிணைந்து நிறுவிய இம்மஸ்ஜித் ஈத்த மர ஓலைகள் மற்றும் அதன் பாகங்களைக்கொண்டு அமைந்ததாகும்.
இதில் மூன்று நுழை வாயில்கள் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இதன் பின்னர் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களின் காலப் பகுதிகளில் தேவைகளை கவனத்தில் கொண்டு விஸ்தரிக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
ஹிஜ்ரி 01(622)-இல் நிர்மாணிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட
விஸ்தரிப்பு மற்றும் புனர்நிர்மாணங்களின் பட்டியல் பின்வருமாறு…
1. ஹிஜ்ரி 07 (628) – நபியவர்களின் காலம்.
2. ஹிஜ்ரி 17 (638) – உமர் இப்னுல் கத்தாப்
3 .ஹிஜ்ரி 30 (640) – உஸ்மான் இப்னு அப்ஃபான்
4. ஹிஜ்ரி 91 (710) – வலீத் இப்னு அப்துல் மலிக்
5. ஹிஜ்ரி 165 (782) – முஹம்மத் இப்னு மஹ்தி
6. ஹிஜ்ரி 888 (1483) – காய்திபாய்
7. ஹிஜ்ரி 1277 (1860) – முதலாவது அப்துல் மஜீத்
8. ஹிஜ்ரி 1375 (1955) – அப்துல் அஸீஸ் ஆலு சுஊத்
9. ஹிஜ்ரி 1414 (1994) – பஹத் இப்னு அப்துல் அஸீஸ் ஆலு சுஊத்
சவுதி அரேபியாவின் ஆட்சிக் காலத்தில் இறுதியாக செய்யப்பட்ட விஸ்தரிப்பு மற்றும் புனர்நிர்மாணம் மிகவும் பிரமாண்டமானதும் வியப்புக்குரியதுமாகும்.
இதில் 41 நுழைவாயில்கள், 103.89 மீட்டர் உயரமுடைய 10 மனாராக்கள், 8.88 மீட்டர் உயரமுடைய 170 சாதாரண குப்பாக்கள், 3.55 மீட்டர் உயரமுடைய 27 நகரக்கூடிய குப்பாக்கள் மற்றும் 436 மின்விசிறிகளைக் கொண்ட 22 மீட்டர் உயரமுடைய 250 குடைகள் உள்ளடங்கலாக 698,000 பேர் தொழும் அளவிலான பாரிய இட வசதிகளைக் கொண்டுள்ளது. அல்லாஹ் நம் அனைவரினதும் நற்கிரிகைகளை ஒப்புக் கொள்வானாக!