மார்கழி தொடங்க இன்னும் சில நாட்களே இருந்தாலும் பனியின் ஆக்கிரமிப்பு அந்த வைகறைப் பொழுதில் அதிகமாகவே இருந்தது. பனிக்குளிரும் நடுநடுங்கச் செய்தது.
அந்த அதிகாலைப் பொழுது இன்னும் கூட விடியாததுபோல காட்சியளித்தாலும் பொழுது புலர்ந்ததை சகாயமேரியின் வீட்டுக் குசினிக்குள் அடைபட்டிருந்த சேவல் அறியத்தந்தது.
சேவல் கூவும் சிங்கார ஒலி கேட்டு தடல்புடலென படுக்கையை விட்டெழுந்தாள் சகாயமேரி. இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருந்தால் சுகமாக இருக்கும் போல் இருந்தது. அவளால் அது முடியாதே. இந்த மலையக மாந்தருக்கு சரியான நேர சூசிக்கேற்ற அலுவல்கள், அடுக்கடுக்காக எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சோம்பல் முறித்தவாறு எழ முயன்றவளை, அவள் மார்பில் கிடந்த பெரியவள் ஜெசிந்தாவின் கை தடுத்தது. கையை விலக்கிவிட்டு எழுத்தவள், காலின் அடியில் கிடந்த சின்னவள் இமெல்டாவை தன் படுக்கையில் கிடத்திவிட்டு உடையை சரிசெய்து கொண்டு வாயிற் கதவை திறந்தபோது, பீலியடியில் கூடியிருந்த பெண்களின் குரலொலிகளும் ரீங்காரமாய் பாட்டிசைத்தது.
பீலியடியில் கூட்டமோ தெரியவில்லை. தானும் வீட்டுக்கு தேவையான தண்ணீரை சேகரித்துக் கொள்ள வேண்டுமே, எனினும் பனிக்காற்று நடுங்கச் செய்ததால் மரத்துப் போன உடம்புக்கு கொஞ்சம் கசாயத்தண்ணி குடித்தால் தெம்பு வரும் அல்லவா, என்று எண்ணியவள் அடுப்பை பற்ற வைத்து தேநீருக்கு தண்ணீரை கேற்றலில் ஊற்றி கொதிக்க வைத்து விட்டு… அடுப்பிலிருந்த கரித்துண்டொன்றை எடுத்து வாயில் போட்டு, பல் துலக்கிக் கொண்டே காலைக்கடனை முடிக்கத் தொடங்கினாள். பனி கலந்த தண்ணீரில் கைகால் அலம்பும் போது உடம்பெங்கும் சிலிர்த்தது. சமாளித்தவாறே காலைக் கடன்களை முடித்துவிட்டு குடத்தையும் ஏனைய பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு பீலியடிக்குச் சென்றாள்.“என்னம்மா மேரி, நல்லா தூங்கிட்டியா? நாங்கெல்லாம் ராமர் பஜனை வரும் போதே எழும்பிட்டோமே” என்று சிலரும் “ஏன்டீ மேரி, நீதான் கம்பத்துக்கு எண்ணெய் ஊத்த மாட்டியே, அதுனால் நல்லா தூங்கி இருப்ப” என்றும் “இல்ல புள்ள அவ மாப்புள அவள விட்டாத்தானே” என்றும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக பேச ஆரம்பித்தார்கள்.
“ஏம்மா மேரி, அந்தோனிக்கு இப்ப நல்லமா? பாவம் அந்த மனுசன், நல்ல நேரம், கடவுள் காப்பாத்திட்டாரு” என்று அவள் தோழி பங்கஜம் மட்டும் ஆறுதலாகப் பேசினாள். “இப்போ கொஞ்சம் பரவாயில்ல.. இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கிறாரு, பாவம் கூதலுள்ள நடுங்கிக்கிட்டு இருப்பாரு, அடுப்புல தண்ணி வச்சிட்டி ஓடி வந்தேன். அவருக்கு தேத்தண்ணி ஊத்திக் குடுக்கணும். பங்கஜம் இந்த பாத்திரங்களையும் கொஞ்சம் பாத்துக்க” என்று கூறிவிட்டு குடத்தில் மட்டும் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு ஓடோடி வந்தாள்.
அதற்கிடையில் தண்ணீர் நன்றாகக் கொதித்து கேத்தல் மூடியை மேலே தள்ளியது. அடுப்பிலுள்ள விறகுக் கட்டைகளை அகற்றிவிட்டு, உள் வீட்டினுள் நுழைந்து கணவனைப் பார்த்தாள். கணவன் குளிரால் நடுநடுங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு ஒருவித பரிவோடு, “என்னங்க குளிருதா? இருங்க தேத்தண்ணி கொண்டுவாறன்” என்றவாறு மீண்டும் குசினுக்குள் நுழைந்து கொதித்த நீரில் தேநீரை தயாரித்து வைத்துவிட்டு, மற்றுமொரு கோப்பையில் வாய் கொப்பளிப்பதற்கும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு கணவனை எழுப்பச் சென்றாள்.
“என்னங்க., இந்தாங்க தேத்தண்ணி. குடிச்சிட்டு நல்லா போர்த்திக்கிட்டு இன்னுங்கொஞ்சம் படுத்துத் தூங்குங்க..” என்றவாறு தேநீரை கணவனிடம் கொடுத்துவிட்டு, பிள்ளைகள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கும் தேநீரைக் கொடுத்துவிட்டு, மிகுதித் தேநீரைத் தானும் குடித்துவிட்டு மீண்டும் பீலியடிக்கு ஓடிச் சென்றாள்.
அந்த தேயிலைத் தோட்டம் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடந்தது. மேல் கணக்கு, கீழ்கணக்கு, நடுக்கணக்கு, புதுப்பக்கம் என்று நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்துக்களும், பௌத்தர்களும், கிறிஸ்தவர்களும் பின்னிப் பிணைந்து அந்தத் தோட்டத்தில் தொழிலாளர்களாகத் தொழில் புரிந்தார்கள். அவர்களிடம் மத ஒற்றுமையோடு இன ஒற்றுமையும் நிறைந்திருந்தது. எல்லோரும் ஒரே தோட்டத்து தொழிலாளர்களே என்பதைத் தவிர அங்கு வேறு எந்தப் பிரிவினைக்கும் இடமில்லை. எல்லோரும் ஒருதாய் மக்கள் போல் எந்த விசயத்திலும் கைகோர்த்து நின்றார்கள்.
அங்குதான் அந்தோனியின் குடும்பமும்வாழ்ந்து வந்தது. அந்தோனியும் அவன் மனைவி சகாயமேரியும் தோட்டத் தொழிலாளர்களாக தொழில் புரிந்தார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் கிறிஸ்தோஃபர், ஜெசிந்தாவும் இமெல்டாவும் இளையவர்கள். எல்லோரையும் போல் இவர்கள் குடும்பமும் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்து வந்தது. அந்தோனியும் சகாயமேரியும் உழைத்தாலும் கூட, வருவாய் போதுமானதாக இருக்கவில்லை. ஏதோ சமாளித்து வந்தார்கள். மூன்று பிள்ளைகளையும் தோட்டப் பாடசாலையிலேயே படிக்கவும் அனுப்பினார்கள். மூத்தவன் கிறிஸ்தோஃபர் சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு இருக்கும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
அந்தோனி தேயிலைத் தொழிற்சாலையிலேயே தொழில் புரிந்து வந்தான். அவன் அப்பா சவரிமுத்து பென்ஷன் வாங்கி விலகியபோது, அவனுடைய கடின உழைப்பு மற்றும் நன்னடத்தையின் காரணமாக தோட்ட நிருவாகம் அந்தோனிக்கும் அதே தேயிலைத் தொழிற்சாலையிலேயே தொழில் புரிய அனுமதி அளித்தது. பதினொரு வயதில் தொழிற்சாலை வேலைக்குப் போன அந்தோனி, அவன் அப்பாவைப் போலவே கண்ணியமாகவும் பணிவுடனும் நடந்து கொண்டு அனைத்து அலுவல்களையும் நேர்த்தியாகக் கற்றுக் கொண்டான். பெரிய டீமேக்கர் ஐயா உட்பட அனைத்து உத்தியோகத்தர்களோடும் அடக்கத்தோடு இருந்து அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான்.
அவனை எல்லோருக்குமே நன்கு பிடித்திருந்தது. சவரிமுத்து, தான் இறக்கும் முன்னே அந்தோனிக்கு ஒரு கால்கட்டு போட்டுவிட வேண்டுமென்று அவசரப்பட்டான். அவனது தூரத்து உறவான செபமாலை கங்காணியின் மகள் சகாயமேரியை அந்தோனிக்கு மணமுடித்து வைத்து விட்டு சில நாட்களில் கண்ணை மூடிவிட்டான். தன் தந்தை தன்னை விட்டு பிரிந்ததால் அந்தோனி மிகவும் துவண்டு போனான். இருந்தாலும் சகாயமேரியின் குடும்பத்தார் அவனுக்கு பக்க பலமாக நின்று கை கொடுத்தார்கள். சகாயமேரியும் அவனுடன் ஏற்றாற்போல் பாசத்தோடும், பரிவோடும், புரிந்துணர்வோடும் நடந்து கொண்டாள்.
அந்தோனி இரவு பகலாக கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்தான். எப்போதும் சுறுசுறுப்பான சுபாவம் கொண்டவன். அந்த தேயிலைத் தொழிற்சாலையில் அவனுக்குத் தெரியாத வேலைகளே இல்லை. அதேபோல் தொழிற்சாலையின் மூலைமுடுக்கெல்லாம் அவனுக்கு அத்துப்படி. புதிதாக தொழிலைப் பழக வருகின்ற ஐயாமார் கூட அந்தோனியிடம் தான் சுலபமாகக் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அந்தோனி கைபட்டால் எந்த வேலையும் சிறப்பாக முடியும் என்ற எண்ணம் கூட எல்லோரிடமும் இருந்தது. இதனால் அவனுடன் வேலை செய்யும் சகபாடிகளுக்கு பொறாமையாகவும் இருந்தது. பல விதத்திலும் அவனை மாட்டிவிட சூழ்ச்சி செய்தார்கள். அவை எதுவுமே ஈடேறவில்லை. ஏனெனில் அந்தோனி பக்கம் கர்த்தரின் பார்வையும் இருந்தது.
பதினொரு வயதில் வேலைக்குப் போன அந்தோனிக்கு இப்போது வயது ஐம்பது. அநேகமாக இரவில் தான் தொழிற்சாலையின் தேயிலைத்தூள் அரைக்கப்படுவது வழக்கம். அனைத்து அலுவல்களும் முடியும் போது பொழுது விடிந்துவிடும். விடியற் காலையில் அந்தத் தோட்டமே தேயிலைத்தூள் மணக்கும். அந்தோனிக்கு இரவு வேலை பழகிப் போய் இருந்தது. அதேபோல் அவனுக்கு கொஞ்சம் குடிப்பழக்கமும் இருந்தது.
அன்றும் வழமைபோல லேசாக வாயை நனைத்துக் கொண்டு அலுவல்களை மேற்கொண்டிருந்த போது அவனையும் அறியாமல் கொஞ்சம் தூக்கம் போக, தூக்கக் கலக்கத்தில் தடுமாறி தூள் அரைக்கும் மெஷினில் வலது கை பட்டுவிட்டது. அவனது கையின் மணிக்கூட்டுப் பகுதி துண்டாக வெட்டப்பட்டு விட்டது.
உடனே நகர வைத்தியசாலைக்கு அவனை கொண்டுபோய் நிறுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டது. சகாயமேரியும் பிள்ளைகளும் துடிதுடித்துப் போனார்கள். காயம் குணமாவதற்கு முன்னமே வைத்தியசாலையில் டிக்கட் வெட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அந்தோனிக்கு என்ன செய்ததென்றே புரியவில்லை. மூத்தவன் மட்டுந்தான் ஓரளவுக்காவது படிப்பை முடிந்திருந்தான். ஏனைய இருவரும் இன்னும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கிருந்த கவலையெல்லாம் வீட்டு வருமான நிலைமை பற்றியதாகவே இருந்தது. சகாயமேரியின் உழைப்பு மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவுகளும் கூடிக் கொண்டே போகிறதல்லவா. அவனுக்கு இப்படி நடந்தும் தோட்டத்தில் பெரிதாக உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி மகன் கிறிஸ்தோஃபரை வேலைக்கு அனுப்ப முடிவு செய்தான்.
கிறிஸ்தோஃபர் நல்ல திறமைசாலி. நன்றாக படிக்கக் கூடியவன். எதையும் சிந்தித்து செயல்படக் கூடியவன். அவனை எப்படியாவது நகரத்திலுள்ள உயர் பாடசாலையொன்றுக்கு அனுப்பி உயர்தரத்தில் படிக்க வைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அந்தோனிக்கு எல்லாமே பூச்சியமாய்ப் போனது. இனி அதை எண்ணிப் பயனில்லை. தற்போதைய நிலைமையில் மகனை தொழிலுக்கு அனுப்புவதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்த ஐயாமார்கள், முதலாளிமார்கள், அரசியல்வாதிகள் எல்லோரிடமும் சென்று மகனின் படிப்பிற்கேற்ற உத்தியோகமொன்றை பெற்றுத் தருமாறு கெஞ்சிக் கேட்டான். யாருமே உதவி புரிய முன்வரவில்லை.
அந்தோனி தோட்ட வேலையிலிருந்து விலகினால், அந்தத் தொழிலை மகனுக்குத் தருவதாக தோட்ட நிருவாகம் தெரிவித்தது. பரம்பரை பரம்பரையாக இது தொடர வேண்டுமா? என்னுடனே இந்த தொழிற்சாலை வேலை முற்றுப்பெற வேண்டும். இந்த விடயத்தில் அவனுக்கு பெரிதாக விருப்பம் இருக்கவில்லை. சகாயமேரியும் இதை ஆமோதிக்கவில்லை. இருந்தாலும் இந்த நேரத்தில் வேறு என்ன செய்வது? ‘வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது, வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது, என்பது போல அவனுக்கு இந்த சந்தர்ப்பத்தில் யாருமே உதவ முன்வரவில்லை. ‘இனி யாரையும் எதிர்பார்த்து பயனில்லை. கொழும்புக்காவது போய் பார்ப்போம்’ என்ற முடிவுக்கு வந்தான் கிறிஸ்தோஃபர்.
தன் கைக்குள்ளேயே வளர்த்த பிள்ளையை இவ்வளவு தூரம் எப்படி அனுப்புவது என்று அந்தோனியும் அவன் மனைவியும் யோசித்தார்கள். இதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. யார் கைவிட்டாலும் கர்த்தர் கை விடுவதில்லை அல்லவா. எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை நினைத்துக் கொண்டு அவன் கொழும்புக்கு புறப்பட்டான். அம்மாவும் தங்கைமாரும் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென கண்ணீர் விட்டார்கள். அந்தோனிக்கும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘எல்லாம் என் தலைவிதி’ என்று அவனும் தன் தலையில் அடித்துக் கொண்டு புலம்பினான். அனைவரையும், ஏன், அந்த ஊரையுமே விட்டு கிறிஸ்தோஃபர் விடைபெற்றான்.
தலைநகரை நோக்கி அவன் ரயிலில் பயணித்த போதே அவனுக்கு ஒருவர் நண்பரானார். இவனின் குடும்ப நிலைமைகளைக் கேட்டு துயரமடைந்து உதவ முன்வந்தார். அவனுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆண்டவரே நேரில் வந்து உதவி புரிவதாக எண்ணிக்கொண்டான். ஒரு உல்லாச விடுதியில் உதவியாளனாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவனது திறமையைக் கொண்டு படிப்படியாக முன்னேறி ஒரு மாதத்திலேயே மேற்பார்வையாளனாக பதவி உயர்வடைந்தான். போதிய ஊதியமும் கிடைத்தது. எல்லாம் கர்த்தரின் கருணை என்று ஆண்டவரை நினைத்து பிரார்த்தித்தான்.
காலங்கள் உருண்டோடி நத்தார் திருநாளையும் அண்மித்தது. கிறிஸ்தோஃபரின் குடும்ப சூழ்நிலையை கருத்திற் கொண்டு மேலதிகமாக இரண்டு மாதக் கொடுப்பனவையும் அவன் கையில் கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பினார் அந்த உல்லாச விடுதியின் அதிபதி லோரன்ஸ். அவரும் ஓர் கிறிஸ்தவர் என்பதால், அவருக்கும் எல்லாமே புரிந்தது. அவரை சிரம்தாழ்த்தி வணங்கி விடைபெற்ற கிறிஸ்தோஃபர், தலைநகரிலேயே அப்பா, அம்மாவுக்கும் தங்கைகளுக்கும் வேண்டிய உடைகளையும், நத்தார் பண்டிகைக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டான்.
அந்தி மங்கிய மாலை நேரம் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த அந்தோனி தனியாக யோசித்துக் கொண்டிருந்தான். அவன் யோசனை எல்லாம் நத்தார் பண்டிகையைப் பற்றியதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் தன்னால் முடிந்தவரை பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வழிவகையைச் செய்வான். “இம்முறை என்ன செய்வது ஆண்டவரே, கையும் போயிட்டே” என்று தனியாக மனதுக்குள் புலம்பி தன்னையும் அறியாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த போது, சகாயமேரியும் வேலை முடித்து வந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
“என்னங்க, பலமான யோசனை போல, புள்ளைங்க ரெண்டுபேரும் எங்க?” “இல்லபுள்ள, கிறிஸ்மஸ் வருதில்ல, அத பத்தித்தான், தம்பியும் வருவானோ தெரியல்ல” “ஒண்ணும் யோசிக்காதீங்க, யாரு கைவிட்டாலும் கர்த்தர் நமக்கு வழி காட்டுவாருங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் போது, லயக்கோடியில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் மூச்சிறைக்க ஓடி வந்தார்கள்.
“அம்மா, அம்மா, அண்ணா வருது, அங்க பாருவே” என்றார்கள். சகாயமேரி ஆச்சரியத்தோடு விறாந்தையைத் தாண்டி வெளியில் சென்று பார்த்தபோது, ஊர் கண்ணேபட்டுவிடும் அளவுக்கு கிறிஸ்தோஃபர் வந்து கொண்டிருந்தான்.
“அம்மா வந்துட்டேன், இந்த முறை கிறிஸ்மஸ் பெருநாளை ஜாம், ஜாம்னு கொண்டாடுவோம். பயப்படாதீங்க, எல்லாத்தையும் கொழும்புலேயே வாங்கிட்டு வந்திட்டேன்” என்று அவன் சொன்னபோது சகாயமேரி தன் மகனை அப்படியே கட்டித்தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். ஆம் கர்த்தரின் கருணையே கருணை!
பசறையூர் ஏ.எஸ்.பாலச்சந்திரன்