பாலன் இயேசுவின் பிறப்பு விழா வாழ்த்துக்களை அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
மறைநூல் அறிஞர்கள் இறைமகன் இந்த பூமிக்கு வருவார், உலகை மீட்க மெசியா வருவார் எனக் கணித்திருந்தார்கள். மெசியாவாகிய இயேசு இந்த மண்ணிலே பிறந்த போது இவர்தான் மெசியா என்பதை மறைநூல் அறிஞர்களால் உணர்ந்துகொள்ள முடியாமல் போனது.
இதற்கு மிக முக்கிய காரணம் இயேசு தனிப்பட்ட அடையாளத்தோடு பிறக்கவில்லை. அதாவது. அரச குலத்திலோ, செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்திலோ அல்லது ஒரு அதிசய பிறவியாகவோ இயேசு பிறக்கவில்லை. மாறாக அன்னை மரியாள் மற்றும் சூசையப்பருடைய மகனாக மாட்டுத்தொழுவத்திலே எளிமையான முறையிலே பிறந்தார்.
இயேசுவினுடைய இந்த அடையாளமற்ற பிறப்புத் தான் மறைநூல் அறிஞர்களால் இயேசுவை இறைமகனாக மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு காரணமாக இருந்தது.
இயேசுவினுடைய பின்னணியைப் பற்றி ஆராயும் போது, இயேசுவினுடைய தாத்தா பாட்டியான சுவக்கீன் அன்னம்மாள் மிகவும் பின்தங்கிய சூழலிலே ஏழைகளாக வாழ்ந்தவர்கள். இயேசுவினுடைய பெற்றோரும் ஏழைகள் தான். இயேசுவினுடைய பிறப்புக்காக சத்திரத்திலே இடம் கேட்ட போது இடம் கிடைக்கவில்லை என்று விவிலியத்திலே வாசிக்கிறோம்.
இயேசுவின் காலத்திலே அந்த பகுதிகளில் சத்திரங்கள் எல்லா நேரங்களிலும் தயார் நிலையில் இருக்கும். எருசலேம் தேவாலயத்திற்கு திருப்பயணம் செய்யக்கூடியவர்களுடைய வசதிக்காக அந்த சத்திரங்கள் அங்கு கட்டப்படிருந்தன. யார் வேண்டுமென்றாலும் பணம் இருந்தால் சத்திரத்தில் பணம் கொடுத்து தங்கலாம்.
மரியாவிற்கு இடம் கிடைக்காமல் போனதற்கு காரணம் அவருடைய கையில் பணம் இருக்கவில்லை. இதே நிலைமைதான் இயேசு வளர்ந்த போதும் இயேசு இளைஞனாக இருந்த போதும் இருந்தது.
இயேசுவினுடைய ஊர் மக்கள் இயேசு வல்ல செயல்களை செய்ய முற்பட்ட போது, இவன் யோசேப்பின் மகன் அல்லவா? மரியாவின் மகன் அல்லவா? என்று சொல்லி அவரை ஏளனப்படுத்த முயற்சி செய்கிறார்கள் இதற்கு காரணம் அந்த பெற்றோரின் எளிமையான வாழ்க்கை சூழலே ஆகும்.
இயேசுவினுடைய மரணத்தின்போது கூட பரபாஸை விடுதலை செய்ய வேண்டுமா? இயேசுவை விடுதலை செய்ய வேண்டுமா? என்ற விவாதம் வந்த போது பரபாசுக்காக அரசவையில் பல குரல்கள் ஒலித்தன. இயேசுவுக்காக எவரும் குரல் கொடுக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இயேசுவினுடைய உறவினர்களோ நண்பர்களோ அரசவையில் இருக்கவில்லை.
இப்படி நம்முடைய பாலன் இயேசு எந்த அடையாளமும் இல்லாமல் பிறந்தார். அவருடைய குடும்ப பின்னணி பலவீனம் மிக்கதாக இருந்தது. ஆனால், இன்று உலகம் முழுவதும் இயேசு கொண்டாடப்படுகிறார். இன்று இயேசுவினுடைய பிறப்பு விழாவை கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி இந்த உலகமே கொண்டாடுகிறது.
இயேசு அடையாளத்தோடு பிறக்கவில்லை. ஆனால் தனக்கான ஒரு அடையாளத்தை தன் வாழ்வின் மூலம் உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார். இயேசு தனக்கான அடையாளத்தை பின்வரும் வழிகளில் உருவாக்கினார்.
முதலாவதாக ஏழைகளுக்கான சார்புநிலை. இயேசுவின் காலத்தில் இருந்த மற்ற போதகர்கள் செல்வந்தர்களுக்கு சார்பாக போதனையை செய்தார்கள். அவர்களுக்கு எதிராக போதித்தால் அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டினால், தண்டனை கிடைத்துவிடும் என்பதற்காக அவர்களுடை சார்பாக போதித்தார்கள்.
ஆனால் இயேசு ஏழைகளுடைய சார்பாக போதித்தார். ஏழைகளை கடவுள் அன்பு செய்வதாக அழுத்தம் திருத்தமாக சொன்னார். இந்த போதனைகள் ஏழை மக்களிடத்திலே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
இரண்டாவதாக , இன்றும் அன்றும் பெரியவர்கள் தவறு செய்தால் அது புண்ணியமாகவும் சாமானியர்கள் புண்ணியம் செய்தால் கூட அது பாவமாகவும் கருதப்பட்டது. எருசலேம் தேவாலயத்திற்கு முன்பாக ஏழை எளியவர்கள் சுரண்டப்பட்ட போது நாணய மாற்றுதல் மற்றும் காணிக்கைப் பொருட்கள் விற்பதிலே ஊழல் நடைபெற்ற போது இயேசு சாட்டை பின்னி அங்கிருந்த நேர்மையற்ற மனிதர்களை அடித்து துரத்துகிறார். இந்த பெரிய மனிதர்களுக்கு எதிரான அறச்சினம் அன்றைய கால கட்டத்திலே புதிய ஒரு விடியலாக பார்க்கப்பட்டது.
மூன்றாவதாக இரக்கம். தொழு நோயாளர்கள் சொந்த குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு துரத்தி விடப்பட்ட போதும் கூட இயேசு அவர்களை தேடிச்சென்று நலமாக்கி அவர்களுடைய உடல் வலியைப் போக்கியதோடு மீண்டும் விரட்டப்பட்ட குடும்பத்தினரோடு ஒன்றாக இணையச் செய்து அவர்களுடைய மன வலியையும் போக்கினார்.
நான்காவதாக, மன்னிப்பு எனும் சித்தாந்தத்தை இயேசு ஏற்படுத்தினார். கண்ணுக்கு கண்: பல்லுக்குப் பல் என்பது அன்றைய நீதியாக இருந்தது. அதாவது, ஒருவர் நம்முடைய கண்ணைக் காயப்படுத்தினால் அதற்குப் பதில் அவருடைய கண்ணைக் காயப்படுத்த வேண்டும். ஆனால் இயேசு, ஒருவர் வலக் கன்னத்தில் அடித்தால் இடக் கன்னத்தை காட்ட வேண்டுமென்று சொல்லி மன்னிப்பு எனும் புதிய சித்தாந்தத்தை கொண்டுவந்தார்.
இப்படி எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் பிறந்த இயேசு தன்னுடைய வாழ்வால் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை உருவாக்கி உலக சரித்திரத்திலே மறக்க முடியாத மனிதராகிறார்.
இயேசுவின் பிறந்த நாளில் நாம் எல்லோரும் ஒரு முடிவெடுப்போம். நாம் அடையாளம் இல்லாமல் பிறந்திருந்தாலும் நாம் செல்வந்தர்களாக பிறக்காமல் போயிருந்தாலும் குடும்பப் பின்னணி, பாரம்பரியம் இல்லாமல் நாம் இருந்தாலும் நமக்கான அடையாளத்தை நாம் உருவாக்கி வாழ வேண்டும். இதை பாலன் இயேசுவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் இயேசு பிறப்பின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்,
-அருட்பணி அருண் ரெக்ஸ் அடிகளார்