தியா வேகமாக நடந்து கொண்டிருந்தாள். இதமாக வீசிக் கொண்டிருந்த காற்று குளிர் காற்றாக மாறியது. குளிர்காற்றாக மாறியதும் அல்லாமல் வேகமாகவும் வீசத் தொடங்கியது. பாதையின் இரு மருங்கிலும் இருந்த நிழல் தரும் மரங்களின் இலைகளையும் சருகுகளையும் காற்று சுழற்றியடித்தது.
மழைதூரத் தொடங்கியது. மெல்ல மெல்ல பெய்த மழை ஆலங்கட்டியாக உடலில் பட்டு வேதனையை தந்தது. மழைக்கு ஒதுங்கி நிற்கக் கூட மனது இடம் தரவில்லை. ஏனென்றால் அவளுக்கு விரைவாக வீடு செல்ல வேண்டும். பசியுடன் காத்துக் கொண்டிருக்கும் மகனுக்காக பால்மா வாங்கிச் செல்ல வேண்டும். இன்று அவளுக்கு சம்பள நாள்.
அவள் தான் வேலை செய்யும் ஆடைத் தொழிற்சாலையில் இருந்து வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்குப் போகவே நடந்து வந்து கொண்டிருந்தாள். மழையால் அவளுடைய நடையின் வேகத்தை குறைக்க முடியவில்லை. அவளது எண்ணமெல்லாம் வீட்டிலிருக்கும் தனது பச்சிளம் குழந்தை சுரேஷை சுற்றியே இருந்தது.
தியா அழகான ஒரு இளம் தாய் அவளுக்கும் ஒரு இனிமையான மகிழ்ச்சியான வாழ்க்கை ஒன்று இருந்தது. அவளது தந்தை ஒரு வர்த்தகர். தாயார் வீட்டிலிருந்தவாறே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஆடைகளை தைத்துக் கொடுத்து சிறிது வருமானம் ஈட்டி வந்தார்.
அவர்களின் ஒரே மகள் தியா. அவளின் அப்பா அன்பானவர். அம்மா கண்டிப்பானவர். ஆனால் தியா தைரியமான பெண்ணாக வளர காரணமானவர் அம்மாதான். அவரவர் வேலையை அவரவர் தான் செய்யவேண்டும். நேரம் தவறாமை, சுத்தம் சுகம் தரும். எதிலுமே ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும்.
தவறு செய்தால் மன்னிப்பு கேட்கவும், அதனை திருத்திக் கொள்ளவும் அறிவுரை கூறுவார். தியாவுக்கு இயற்கையை ரசிக்க கற்றுத் தந்தார். வெண்பஞ்சு மேகங்கள் உருவாக்கும் கோலங்களை ரசிப்பது. இரவின் சில்வண்டு இசை. மின்மினிப் பூச்சிகளின் கண்சிமிட்டல், வானத்து வேடன், தனுசு என நட்சத்திரங்களை அடையாளம் காண்பது, அதிகாலை புல்வெளியில் நடப்பது மாத்திரமல்ல மார்கழி பனியில் வாசலில் கோலம் போடவும் கற்றுத் தந்தாள். இன்றும் தியாவின் சமையலில் அம்மாவின் கைப்பக்குவம் உள்ளது என்ற பாராட்டும் அவளால்தான். இவையெல்லாம்தான் தியாவின் அழகான இளமைக்காலம்.
காலம் ஒருவரது வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதற்கு தியாவே உதாரணமாக வாழ்கிறாள்.
வாழ்க்கையில் மறக்க முடியாத எவ்வளவு இனிமையான காலம். விதி எவ்வளவு கொடியது. முழு உலகத்தையுமே ஆட்டிப்படைத்த கொரோனா என்னும் அரக்கன் தியாவின் வாழ்க்கையிலும் விளையாடிவிட்டான்.
தியா அந்நேரம் மாதவனை திருமணம் செய்து வெறும் ஆறு மாதங்களே ஆகியிருந்தன. நாடு முழுவதும் லொக்டவுன் என ஸ்தம்பித்துப் போயிருந்தது. அப்பாவின் கடையும் மூடப்பட்டது. மாதவன் வேலை பார்த்து வந்த நிறுவனமும் இழுத்து மூடப்பட்டது. அனைவரும் வீட்டுக்குள் முடங்கிப் போனார்கள். அவர்கள் உயிர்வாழ்வார்களா? என்பதே கேள்விக்குறியாகப் போய்விட்டது. பசி ஒருபுறம் வாட்டி வதைத்தது. அவர்களுக்கும் நோய் தொற்றி விடுமோ என்ற பயம் அவர்களை ஆட்டிப்படைத்தது. அரசாங்கமும் நல்ல இதயம் கொண்ட மனிதர்களின் உதவியாலும்தான் ஒரு நேர உணவுடன் அவர்கள் காலத்தை கடத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் தியா கர்ப்பமானாள். என்ன செய்வதென்றே யாருக்கும் புரியவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியான தருணம். ஆனால் அதை அனுபவிக்கும் மனநிலையில் யாரும் இல்லை. பயமே அவர்களை சூழ்ந்திருந்தது. இவ்வேளையில்தான் ஒரு நாள் தியாவின் தந்தை திடீரென தனக்கு காய்ச்சல் அடிப்பதாக கூறினார்.
தியா உடனடியாக சுகாதார துறையினருக்கு அறிவித்தாள். அவரை அவர்கள் அம்பியூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலையில் அனுமதிக்க அழைத்துச் சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு கொரோனா என முடிவு செய்து அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள். தியாவும் ஏனையோரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
இரண்டு நாட்களின் பின் தியாவின் தந்தை இறந்து போய்விட்டதாக தகவல் அறிவித்தார்கள். “ஐயோ நாம் என்ன செய்வது அவரின் முகத்தை கூட ஒரு தடவை பார்க்க நாம் கொடுத்து வைக்கவில்லையே!! என அவர்களால் அழ மாத்திரம் தான் முடிந்தது. பின்னர் வீட்டிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு தியாவுக்கு அடுத்த பேரதிர்ச்சி காத்திருந்தது. அவளைத் தவிர அவளது அம்மா, கணவர் இருவருமே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்கள். அவர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என்று தெரியாது நாடே கவலையில் மூழ்கி போனது. தியாவுக்கு கிடைத்த அடுத்த அதிர்ச்சியான தகவல் தாய் மற்றும் கணவர் இருவருமே இறந்து போனார்கள் என்பதாகும். அவளால் இப்போது அழக் கூட முடியவில்லை. அவளைச் சுற்றி அந்தகாரமே சூழ்ந்திருந்தது.
தியாவின் வீட்டுக்கு அருகிலிருந்த நண்பியொருத்தி அவளது பரிதாப நிலை கண்டு தனக்கு கிடைக்கும் உணவில் சிறிதளவு கொண்டு வந்து வாசற்கதவில் தொங்கவிட்டு செல்வாள். அரசாங்கம் அளித்த நிவாரண உதவிகளும் மெல்ல மெல்ல அவளுக்குக் கிடைத்தது.
தடுப்பூசிகளையும் தியா செலுத்தினாள், அவளது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. தாயாகப் போகும் தன் நிலைமை குறித்து அவளே பச்சாதாபப்பட்டாள்.
மெல்ல மெல்ல நாடு வழமைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. தியா மகன் சுரேஷை பெற்றெடுத்தாள். இவ்வேளையில் தியாவுக்கு உறுதுணையாக அவளது நண்பி இருந்தாள். அவளது எதிர்காலத்துக்கும் மகனின் எதிர்காலத்துக்கும் என்ன செய்வதென்று திகைத்து நின்றிருந்த வேளையில் நண்பியே அவளுக்கு ஒரு யோசனை சொன்னாள். அவள் வேலை செய்யும் பள்ளேகலை சுதந்திர வர்த்தக வலய ஆடை தொழிற்சாலையில் புதிதாக வேலைக்கு ஆட்களை சேர்ப்பதாகவும் தியாவுக்கு நன்றாக தைக்க முடியும் என்பதால் அங்கு வேலைக்கு விண்ணப்பிக்குமாறு கூறினாள். அது தியாவுக்கு நல்ல யோசனையாக தான் இருந்தது. ஆனால் தனது மகனை யாரின் பாதுகாப்பில் விட்டுச் செல்வது என்ற கேள்வி எழுந்தது.
அப்போது கடவுள் போன்று நண்பியின் தாயார் “மகள் நீங்கள் பயமில்லாமல் வேலைக்குப் போங்க நீங்கள் வரும் வரை சுரேஷை நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று கூறினார். அவர் சொன்னது அவளுக்குக்கு சந்தோசத்தை தந்தது. அன்று தொடக்கம் அவள் இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகிறாள்.
திடீரென அவள் மீது மழைத்துளிகள் பெரிதாக விழத் தொடங்க கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டாள். அவள் வர்த்தக வலயத்துக்கு அருகில் உள்ள வங்கிக்கருகில் நின்று கொண்டிருநதாள். உடனடியாக அவளுக்கு மகனின் ஞாபகம் வந்தது.
அன்று சம்பள நாள் அல்லவா வங்கியில் பணம் எடுப்பதற்கு பலரும் வரிசையில் நின்றிருந்தார்கள். விரைவாக வரிசை முடிந்து விடாதா என தவிப்புடன் காத்திருந்தாள்.
ஒரு நிமிடம் ஒரு யுகம் போல் தோன்றியது. இறுதியில் அவளது முறை வந்ததும் அவசர அவசரமாக பணத்தை எடுத்துக் கொண்டு பஸ் தரிப்பிடத்தை நோக்கிச் செனறாள். வழமை போல் அன்றும் பஸ்ஸில் அதிக சனக் கூட்டம். அவளும் ஒருவாறு முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
மெல்ல மெல்ல ஒவ்வொரு தரிப்பிடத்திலும் ஐந்து நிமிடங்கள் 10 நிமிடங்கள் என தரித்து நின்ற பஸ் வண்டி அவள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தது.
பஸ்ஸில் இருந்து இறங்கிய தியா அருகில் இருந்த கடைக்கு சென்று மகனுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான பால்மாவை வாங்கினாள்.
பின்னர் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை மிகவும் சிக்கனமாக வாங்கிக் கொண்டாள். கடை முதலாளி பில்லை அவளது கையில் தந்தார். அவருக்கு பணத்தை செலுத்துவதற்காக கைப்பையை திறந்து பர்ஸை எடுக்கப் போனாள். ஐயோ இது என்ன பர்ஸை காணவில்லை.
அவளுக்கு பூமியே சுழல்வது போல் இருந்தது. மகனின் பசி தான் தியாவுக்கு முதலில்தெரிந்தது. அவள் மீண்டும் மீண்டும் அவளது கைப்பையை துழாவினாள். பட்டகாலிலே படும் கெட்டக்குடியே கெடும் என்ற கூற்றுப் போன்று தனது உழைப்புக்காக கிடைத்த கூலியை இவ்வாறு அநியாயமாக இழந்து விட்டேனே என்று நினைத்தபோது அவளால் அழுகையை அடக்க முடியவில்லை விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
அவ்வேளையில் யாரோ தியாவை அழைப்பது போன்று உணர்ந்தாள். “அக்கா இந்தாங்க உங்களுடைய பர்ஸ்” நானும் நீங்கள் வந்த பஸ்ஸிலே தான் வந்தேன்.
நீங்கள் இறங்கும்போது உங்கள் பர்ஸை ஒருத்தன் பிக் பொக்கெட் அடிப்பதை கண்டேன்.
நான் அவனை துரத்திச் சென்றேன். அவன் பர்ஸை போட்டுவிட்டு ஓடிவிட்டான். நீங்கள் இந்த கடைக்குள் நுழைவதை கண்டேன். அதுதான் உங்களுடைய பர்ஸை கொடுக்க வந்தேன் என்றான்.
அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் அவனை நன்றியுடன் பார்த்தாள். கண் கண்ட கடவுளாக அவன் அவளுக்குத் தெரிந்தான். இரு கரம் கூப்பி அவனை வணங்கி நன்றி கூறினாள். திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்று கூறுவது போல் அவள் கண்களுக்கு அவன் தெய்வமாக தெரிந்தான். முதலாளியின் பில்லுக்கு பணத்தை செலுத்தி விட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி நடந்தாள்.
வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தாலும் தியா போன்ற பெண்களுக்கு வாழ்க்கையில் பாறையை துளைத்துக் கொண்டு வரும் துளிர் போன்று நம்பிக்கை துளிர்க்கவே செய்கிறது.
வயலட்