‘200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மலையகம் 200 எனும் தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் தற்பொழுது இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் நடைபெற்று வருகின்றன. அநேகமான நிகழ்வுகளில் எமது பின்னடைவுகள், குறைபாடுகள் தொடர்பாகவுமே அதிகமாக பேசப்படுகின்றது.
இது சர்வதேசத்திற்கு எமது மலையக மக்கள் தொடர்பாக தவறான புரிதல்களை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இலங்கையில் மலையக மக்கள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் என்றும் வீடுகளில் வேலை செய்வதற்காக இருக்கின்ற ஒரு சமூகம் என்ற புரிதலே இருக்கின்றது. எனவே இந்த மனநிலையை மாற்ற வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அதனை செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுடையது. இதனை வேறு யாரும் எமக்காக செய்யமாட்டார்கள். எனவே இந்த நிகழ்வு என்பது தனியே எங்களுடைய கட்சிக்கானதோ அல்லது தனிப்பட்ட என்னுடைய நிகழ்வோ அல்ல. இது நம் அனைவருடையதுமான நிகழ்வு. இது மலையக மக்களுடைய நிகழ்வு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் மலையக சமூகமாக நாம் இந்த நாட்டிற்கு வருகை தந்து 200 வருடங்களை கடந்துள்ள இந்த நிலையில், நாம் பெற்ற வெற்றிகள் நமது சாதனைகள் சர்வதேசத்தில் எமது சமூகத்தின் பங்களிப்பு போன்ற விடயங்களை வெளியுலகத்திற்கு கொண்டு செல்வதே. எமது சமூகத்தை சார்ந்தவர்கள் நீதித்துறையில், வைத்தியத்துறையில், பொறியியல்துறையில், காவல்துறையில், கல்வித்துறையில், ஊடகத்துறையில் என அனைத்து துறைகளிலும் உயர்ந்த இடங்களையும் உயர்பதவிகளையும் வகிக்கின்றார்கள். இவர்களை அடையாளப்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
இந்த நிகழ்வில் இந்த அனைத்து துறைகளையும் சார்ந்தவர்களை ஒரே மேடைக்கு கொண்டுவந்து அவர்கள் பெற்ற வெற்றிகளுக்காக அவர்களை கௌரவிப்பதும் அவர்களை உலகறியச் செய்வதுமே முக்கிய நோக்கம்.
எனவே, அரசியல்கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று நாம் அனைவரும் இணைந்து ஒரு குடையின் கீழ் ஒன்றினைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இதற்காக உங்கள் அனைவரையும் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு நாம் வேண்டுகின்றோம்.
குறிப்பாக இந்த நிகழ்வின் மூலமாக கடந்த 200 வருடத்தில் எங்களுடைய வளர்ச்சிக்காக உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவு கூர வேண்டியதும் அண்மைய காலங்களில் அரசியலில் தொழிற்சங்க செயற்பாடுகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து உயிர் நீத்த தலைவர்களையும் நினைவு கூர்ந்து அவர்களை எங்களுடைய எதிர்கால சமூகத்துக்கு அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பும் எம்முடையது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜாராம்
இந்த நிகழ்வில் மலையக தியாகிகள் சுமார் 36 பேர் இனம் காணப்பட்டுள்ளார்கள். எங்களுடைய சமூகத்தின் சார்பாக பல துறைகளிலும் உயர் பதவிகளை வகிக்கின்றவர்களை கௌரவிப்பதற்காக ‘மலையக தியாகிகள்’ என்ற பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் மலையகத்தில் இன்று இருக்கின்ற இளைஞர் சமூகம் எங்களுடைய மலையக தியாகிகள்
தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.ஏனெனில் மலையக தியாகிகள் தொடர்பாக வெளியான புத்தகங்களும் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
எனவே, மலையக தியாகிகள் என்பவர்கள் அன்று செய்த தியாகத்தின் பலனாகவே நாம் இன்று இந்த அளவிற்கு முன்னேற்றமடைந்திருக்கின்றோம் அவர்கள் இல்லை என்றால் எமது நிலை இதைவிட மிகவும் மோசமாக இருந்திருக்கும்.
மேலும், இந்த நாட்டில் நாம் அனைவரும் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வாழ வேண்டுமானால் எங்களுடைய சமூகத்தில் இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்ற அனைவரையும் கௌரவப்படுத்த வேண்டிய பொறுப்பு எம்முடையதாகும்.
நாம் இந்த நாட்டுக்கு கடந்த 200 வருடங்களாக என்ன செய்திருக்கின்றோம் என்பதை இன்றுள்ள அநேகமான பெரும்பான்மை சமூகத்தினர் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனை நாம் அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய ஒரு தேவை எமக்கு இருக்கின்றது. ஏனெனில் நாங்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை அன்றும் இன்றும் செய்து கொண்டிருப்பவர்கள். இதனை இந்த நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான ஒரு இடமாக இந்த நிகழ்வு அமைய வேண்டும்.
குறிப்பாக நாம் மலையக சமூகமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் இது. நாம் இணைந்து செயற்படாவிட்டால் என்றுமே எமது வெற்றிகளை நாம் அடைய முடியாது. இந்த நிகழ்வில் எமது ஒற்றுமையையும் எமது பலத்தையும் எடுத்துக்காட்ட வேண்டும். எனவே நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா தினகரன் நிருபர்