அன்று மாலை ஆறு மணி போல் “ஆற்றுச்சேனை” கிராமத்தில் அந்த துயரமான செய்தி அங்குள்ள அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. ‘சிவமணி செத்துப் போனாளாம்’. ஆளுக்காள் ஒரு மாதிரி பேசிக் கொண்டனர். ‘நல்ல குணமானவளப்பா சிவமணி. நல்லாத்தான் இருந்தாள். அவளுக்கு என்னவோ பிரச்சினை போல. அதுதான் உயிரை மாய்த்து விட்டாள். பாவம் அவளது பிள்ளைகள்தான்’. அயல் வீட்டு அன்னம்மா தன் புருசன் சிவசம்புவிடம் சொல்லி வருத்தப்பட்டாள். அவளது தற்கொலை பலருக்கு வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
கடந்த வருடம் சுயதொழில் ஊக்குவிப்பு நுண்கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றின் ஆலோசனைக் கூட்டம் அங்கு ஏற்பாடாகியிருந்தது. மக்களின் வறுமை நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்ட நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் பல மாவட்டத்தின் பின் தங்கிய கிராமத்தவர்களை தேடிச்சென்று சுயதொழில் ஊக்குவிப்புக்கடன் என்ற பெயரில் வழங்கிய கடனும் வட்டியுமாக அவர்களை மேலும் கடனாளியாக்க அவர்களை சொல்ல முடியாத துன்பங்களுக்குள் தள்ளியது. மிக பின் தங்கிய ஆற்றுச்சேனை கிராமத்தில் ஒரு சிலரைத் தவிர அனேகமானோர் கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் தம் சீவியத்தை உருட்டுபவர்கள். ஒரு நாள் தொழில் இல்லா விட்டாலும் அவர்கள் வீட்டு அடுப்படியில் பூனைதான் படுத்துறங்கும் நிலை. கொரோனாவும், தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடியும் கிராமத்தில் பல குடும்பங்களை வெகுவாக தாக்கியது. அதனால் கூலி வேலைகூட முன்பு போல் கிடைக்காமல் அவர்களின் வாழ்வு வறுமையுடன் ஓயாத போராட்டமாக மாறியது. நாட்டு நிலமை பலரை வீதிக்கு இறங்கி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டிருந்தது.
‘சிவமணி, நீ எங்க அவசரமாக போறா’ பக்கத்து வீட்டு சிவகாமி தமது வீட்டு வேலியில் மறைப்புக்கு கட்டி இற்றுப்போயிருந்த தென்னமட்டை கிடுகு ஊடாக எட்டி பார்த்து கேட்டாள். அவளது வீட்டு ‘கிடுகு வேலி’ கூட அந்த கிராம மக்களது வாழ்க்கை நிலமையை போல ஓட்டையும் உடைசலாகவும் இருந்தது. ‘அக்கா கஷ்டப்படும் குடும்பங்களுக்கு கடன் தரப் போறார்களாம். அந்த கூட்டத்துக்குதான் போறன். அட என்னக்கா நீ முழிக்கற உனக்கு தெரியாதா’. ‘ மறந்து போனன் சிவமணி நானும் வாறன்’. ‘அப்ப வாக்கா போவம்.’ ‘அடுப்பில கறி கிடக்கு. சிவமணி அதை இறக்கிப் போட்டு வாறன் நீ முந்து.’ ‘சரி நீ கெதியா வாக்கா. நான் போறன்’. சிவமணிக்கு எதிலும் அவசரம்தான். அந்த அவசரந்தான் அவளுக்கு எமனாக வந்ததோ. குண்டும் குழியுமான ஊரின் குறுக்கு கிறவல் வீதியில் வேகமாக நடந்து போனாள் சிவமணி. பெண்கள் பலர் கூட்டத்துக்கு வந்திருந்தனர். கூட்டத்தில் கடன் பெறுவதற்கான விதி முறைகளை நுண்கடன் நிறுவன முகாமையாளர் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘நாங்கள் முதற் கட்டமாக உங்களில் இருந்து பத்துப் பேரை தெரிவு செய்துகொள்வோம். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபா கடன் வழங்குவோம். நீங்கள் விருப்பம் போல ஆடு, கோழி, கறவை மாடு வளர்க்கும் தொழில் ஒன்றை தெரிவு செய்யலாம். ஆறு மாதங்களின் பின் மாதா மாதம் ஒழுங்காக கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும்’. ‘பத்துப் பேருக்கு மட்டுந்தானா சேர் கடன் தருவியள்’ கூட்டத்தில் இருந்த சிவகாமி கேள்வி எழுப்பினாள்’. ‘நல்ல கேள்வி தான் நீங்கள் கேட்டது. ஆறு மாதங்களின் பின் கடன் அறவீடு செய்ய ஆரம்பித்தவுடன் அடுத்த கட்டமாக மேலும் பத்துப் பேரை தெரிவு செய்து கடன் வழங்குவம். அப்படியே படிப்படியாக பயனாளிகளை கூட்டுவோம். நீங்கள் உரிய திகதியில் கடனை கட்டுவது மிக முக்கியம்’.
அன்று கூட்டத்தில் பத்து பேர் தெரிந்தெடுக்கப்பட்டனர். கடன் பெற்ற பத்துப் பேரில் தற்கொலை செய்து கொண்ட சிவமணியும் ஒருத்தி. மிகவும் வறுமையில் வாழ்ந்த இளம் குடும்ப பெண். அவளுக்கு முப்பது, முப்பத்திரண்டு வயதுக்கு மேல் இருக்காது. திருமணமாகி தனிக் குடும்பமாக வாழும் அவளுக்கு கூடப் பிறந்த இரு சகோதரிகள். தகப்பன் சுப்பையா தனது முயற்சியால் குடும்பத்தை பராமரித்து வந்தார்.
கிராமத்து பள்ளியில் ஐந்தாம் தரத்துக்கு மேல் சிவமணியினால் கற்க முடியவில்லை. ஆனால் அவள் நல்ல கெட்டிக்காரி. பெற்றாரின் குடும்பச் சுமையும், வறுமையும் அவளுக்கு கல்வியை எட்டாக் கனியாகியது. அவளைப்போல பலர் வறுமையால் கல்வியை தொலைத்து விட்டவர்கள் அங்கு அனேகர்.
சிவமணி நல்ல அழகி. அவளது அழகில் மயங்கிய இளசுகளில் ஒருத்தன் ருத்திரன். சிவமணியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கியவன். அவளை எப்போதும் சுத்தியே வருவான். உறவு முறையானவன். சிவமணிக்கு இருபத்து நான்கு வயதான போது அவனுக்கே கல்யாணம் செய்து கொடுத்து விட்டனர். ருத்திரன் ஐந்தாம் வகுப்பு கூட தேறாதவன். நல்ல உழைப்பாளி. கூலி வேலை செய்து உரமேறிய உடல்வாகு. ஆள் கொஞ்சம் கறுவல்தான். சிவமணியைத் திருமணம் செய்த பின் தன் வீடுக்கருகில் ஒரு துண்டுக் காணியில் இரண்டு அறையில் வரிச்சு வைத்து களி மண்ணால் சிறிய வீட்டை கட்டினான் ருத்திரன். ‘சிவமணி எனக்கு எந்த நாளும் வேலை கிடைப்பது கஷ்டமாய் இருக்கு. என்னமா ஏறிப் போச்சு சாமான்கள் விலை. ஒரு நாளைக்கு ஒரு விலை? கையில காசும் இல்ல. இனி நாம பட்டினிதான் கிடந்து சாக வேணும். இல்லாட்டா பிச்சைதான் எடுக்கணும். நான் என்னதான் செய்ய’. ‘எனக்கும் எதுவும் சொல்ல தெரியல்லங்க.’ சொல்லிய படி அவன் முகத்தை கவலையோடு பார்த்தாள். ‘கிழமையில இரண்டு மூணு நாள் வேலை செய்து கிடைக்கிற காசு எதுக்கும் காணாது. நான் கட்டாருக்கு போனா உழைக்கலாம். வட்டிக்குக் காசு எங்காவது கிடைக்குமா என விசாரிக்க வேணும்’. தன் மனக் கிடக்கையை ருத்திரன் மனைவி சிவமணியிடம் சொன்னான். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தைக்கு ஒருவயது கூட ஆகவில்லை.
அவர்களது அதிர்ஷ்டம் அன்று நடந்த கூட்டத்தில், சுயதொழில் நுண் கடனுக்கு சிவமணியும் தெரிவு செய்யப்பட்டது தான். அது அதிர்ஷ்டமா அல்லது அவளுக்கான துரதிர்ஷ்டமா என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்? ஆடு வளர்ப்புக்கான நுண்கடன் இரண்டு இலட்சம் சிவமணி கையில் கிடைத்ததும் ருத்திரன் துரிதமாக செயற்பட்டான்.
‘எனக்கும் நீண்ட நாள் விருப்பம் ஒன்றிருக்கு சிவமணி. இந்த பணத்தை நான் எடுக்கிறேன். கட்டார் போய் உழைத்து கடனை கட்டி முடிக்கிறன். ஏஜன்சியை போய்ப் பார்க்க வேணும்’. ‘அது எப்படிங்க? ஆடு வளர்க்க வேணுமே கடன் தந்தவர்கள் விட மாட்டாங்களே?’. ‘அதுக்கு ஒரு வழி இருக்கு நான் சொல்வதைக் கவனமாக கேள். உங்க அப்பா வீட்டில் இருக்கிற ஐஞ்சு ஆடுகள நம்ம கடன் தந்த காசுக்கு வாங்கியது போல நம்ப வைப்பம்’, நம்ம வீட்டில ஆடுகள் வளரட்டும். நான் ஆட்டுக்கு கொட்டில் கட்டி விடுறன். கட்டாருக்கு போய் உழைச்சு கடன கட்டுவன் நம் கஷ்டம் போய் விடும். உன் வீட்ட கதைச்சு நீ அந்த ஏற்பாட்டபாரு, நான் போய் ஆட்டுக் கொட்டில் கட்டுவதற்கு மரம், தடிகளை பாக்கிறன்.’ சொல்லியபடி கத்தியுடன் கிராமத்துக்கு பக்கமாயிருந்த சேனைக் காட்டுப் பகுதிக்கு போனான் ருத்திரன். ஒரு வாரத்துக்குள் தன் ஓடாவி நண்பன் உதவியோடு தகரம் வேயப்பட்ட ஆட்டுக் கொட்டில் செய்து எடுத்தான்.
சிவமணியின் தகப்பன் வீட்டு ஆடுகள் புதிய ஆட்டுக் கொட்டிலில் குடியேறின. ஆடுகளை விலைக்கு வாங்கி விட்டதாக எல்லோரும் நம்பினர். ‘சிவமணி நான் ஏஜன்சிக்குப் போய் வாறன்.’ சொல்விவிட்டு உடனே போய் விட்டான் ருத்திரன். எண்ணி மூணு மாதங்களுக்குள் பாஸ்போர்ட், விசா அனைத்தும் முடித்து கட்டார் பயணமானான் ருத்திரன். இனி குடும்பக் கஷ்டம் எல்லாமே போய் விடும் என குதூகலப்பட்டது சிவமணியின் குடும்பம்.
நுண்கடன் திட்டத்துக்கு பொறுப்பான கடன் அறவீட்டு அதிகாரி ராகவன் கடன் பெற்றவர்களது வீடுகளுக்கு போய் தகவல்கள் திரட்டிஆலோசனை வழங்கினான். ராகவன் அழகான இளம் குடும்பஸ்தன். அவனது பேச்சும் செயற்பாடுகளும் கடன் பெற்றவர்களை நன்கு கவர்ந்தன. சிவமணி ஆடு வளர்ப்பில் காட்டிய ஆர்வம் ருத்திரன் கட்டார் போவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு என்பது ராகவனுக்கு எப்படித் தெரிய வரும். ஆனால் சிவமணியின் தோழி சரோஜாவுக்கு மட்டும் தெரியும். சிவமணி தன் அந்தரங்கங்களை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அவளது நம்பிக்கைக்குரியவள். ‘என்ன, சிவமணி ருத்திரன் கட்டார் போய் சேர்ந்தானா’ வீட்டுக்கு வந்த சரோஜா கேட்டாள். சறோஜா நாலைந்து வீடுகள் தள்ளி இருப்பவள். ‘ஓம். போய் சேர்ந்தாச்சாம் சறோஜா. ஆனா இன்னும் வேலைக்கு போகல்லையாம்’. ‘சரி உனக்கும் கஷ்டந்தான். தனியாக புருசனை பிரிஞ்சு இருப்பதும் சும்மாவா’ ‘என்ன செய்ற பிள்ளைகளின் முகத்தைப் பாத்துக் கொண்டு காலத்த ஓட்ட வேண்டியதுதான்’.
‘இந்த கஷ்டத்தப் பாத்தா, வருசம் முழுக்க கஷ்டப்பட வேணுமே சரோஜா. அதுதான் நானும் அவர போக சம்மதிச்சன்’. ‘சரி, சிவமணி ருத்திரன் காசு அனுப்பினால் உன் கஷ்டம் தொலைந்து போகும். நான் பிறகு வாறன். இவரும் வயலுக்கு போனவர் வந்திடுவார். இன்னும் நான் சமைக்கல்ல’ சொல்லிய படி சரோஜா தன் வீட்டுக்கு போய் விட்டாள். சிவமணியின் ஆடு வளர்ப்பு பற்றி அன்று பார்வையிட வந்த அதிகாரி ராகவன் ‘நீங்கள்தானா சிவமணி. மற்றவர்களுக்கு முன் மாதிரி ‘என பாராட்டினான்.
ஆடுகளையும் பார்த்தான். ‘ஆறுமாதம் முடிய கடன் அறவீடு செய்ய வருவன் ஏற்பாடு செய்யுங்க’ என்றவன் போய்விட்டான். அவனது பாராட்டில் மகிழ்ந்தாள். சிவமணியின் இளமையும், அழகும் அவளது பேச்சும் ராகவனையும் ஈர்த்ததில் வியப்பில்லைதான். சிவமணிக்கு அவளது தாயும் கூடமாட வந்து உதவினாள். அதனால் சமாளித்துக் கொண்டாள்.
கடன் பெற்றவர்கள் மாதாந்தம் கடனை செலுத்த தடுமாறினர். அது அவர்களை மேலும் மேலும் கடனாளியாக்கியது. கடனை கட்டுவதற்காக காதில, கழுத்தில இருந்த நகைகள் கூட அடகுக்கடைகளில் சிறைப்பட்டன. கட்டார் போன ருத்திரனிடமிருந்து காசு மட்டும் வரல்ல. Phone call மட்டுமே வந்தது. ‘ஏனப்பா நீங்க Phone னும் எடுக்கல காசும் அனுப்பல்ல’. ‘சிவமணி எனக்கு போன மாதம்தான் வேல கிடைச்சது வேலையும் கஷ்டம் சம்பளமும் குறைவு. ஏன்தான் வந்தனோ தெரியல்ல. அடுத்த மாதம் எனக்கு தெரிந்த இரண்டு பேரிடம் கடன் வாங்கி கொஞ்சம் அனுப்பி வைக்கிறன். சமாளிக்கப் பார். பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கு’. ‘சரிங்க. நீங்களும் உடம்ப பார்த்துக் கொள்ளுங்க’. ‘சிவமணி நான் வீட்டுக் கஷ்டத்தால எல்லாத்தையும் விட்டுட்டு வந்துவிட்டன். அதுதான் எனக்குக் கவலை’. என்னங்க செய்றது? எவ்வளவு காலம் அங்கு இருக்க வேணுமோ.’ ‘நாலு வருசம் எண்டாலும் இங்கு இருந்தால் நாலு காசெண்டாலும் மிச்சம் பிடிக்கலாம். சிவமணி’. ‘நாலு வருசமா? என்னால எப்படிங்க முடியும். அதுக்கு முதலே வரப்பாருங்க ‘சரி. சரி பாப்பம். நான் phone வைக்கிறன் ‘. ‘சரிங்க…’
காலமும் வேகமாக சுழன்றது ருத்திரன் கட்டார் போய் ஒரு வருடம் உருண்டோடியது. அவனது சம்பளமும் போதவில்லை. கஷ்டப்பட்டு மிச்சம் பிடிச்ச காசுடன் கடனும் வாங்கி ஒருலட்சம் அனுப்பி வைத்தான் ருத்திரன். அது போதவில்லை. வீட்டுச் செலவும் ஆட்டுக் கடனும் சிவமணியை ஆட்டிப் படைத்தது.
ஆட்டுக்கடன் வட்டியுடன் மூணு லட்சத்துக்கு மேல் கட்ட வேண்டிய நிலை. சிவமணி தான் என்ன செய்வாள். ஒழுங்காக கடனை கட்டிய சிவமணிக்கு அடுத்து வந்து மாதம் நெருக்கடியாகிப் போனது. கடன் அறவீட்டு அதிகாரி ராகவனும் வந்து நின்றான். இந்த ஒரு வருடத்தில் நல்ல நட்பு இயல்பாக அவர்களிடையே ஏற்பட்டிருந்தது. ‘சேர். என்னால இந்த மாசம் கடன் கட்டுவது கஷ்டமாக இருக்கும்’. என்ன சிவமணி இப்படி சொன்னா. நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க ‘என்றவன்? வீட்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் இருந்து விட்டான். சிவமணியும் தேநீர் கொடுத்து உபசரித்தாள் ராகவனை. ‘இரண்டு நாள் கழித்து வந்து பார்க்கிறன் சிவமணி’. ‘சேர் காசு வர தாமதிக்கும் அடுத்த மாதம் இதனையும் சேர்த்து தாறன்’. ‘அது சரிவராது. சிவமணி’. ‘எனக்கு வேறு எந்த வழியுமில்ல சேர்’. ‘சரி உங்களுக்காக இந்த மாத பணத்தை நானே கட்டி விடுறன். கவலைப்படாதிங்க’. தனக்கு உதவ முன்வந்த ராகவனின் மீது இயல்பாகவே இன்னும் பிடிப்பு ஏற்பட்டது. ‘நன்றி சேர்’என்றாள்.
கடன் கவலையில் இருந்தவளுக்கு அது சற்று ஆறுதலாக இருந்தது. கட்டாலிருந்து ருத்திரன் அன்றும் Phone ல் கதைத்தான். ‘சிவமணி, அடுத்த வருடம் எனக்கு நல்ல வேல, நல்ல சம்பளம் கிடைக்கும். பிறகு நான் காசு அனுப்புவன். கவலைப்படாத’. ‘சரிங்க. இப்ப மூணு ஆடுகள் குட்டி ஆறு போட்டிருக்கு நமக்குத்தான் அந்த கொடுப்பன இல்லையே’. சரி அதை விடு சிவமணி. நான் வந்து பார்க்கிறன்’. சிவமணியின் இரண்டாவது குழந்தைக்கும் இரண்டு வயது முடிந்திருந்தது. பிள்ளைகள் வளர வளர வீட்டு செலவுகளும் அதிகரித்துக் கொண்டு போனது. அன்று வீட்டுக்கு வந்திருந்த சறோஜா ‘என்ன சிவமணி உன்ன காணவும் கிடைக்கல்ல.? ‘ ‘இனியும் என்னால முடியாது சறோஜா’. நீ எதை சொல்லுறா சிவமணி’. ‘எல்லாந்தான் சறோஜா. உனக்குத் தெரியாதா. உன்னை வந்து பாக்க இருந்தன். எனக்கு நேரமும் கிடைக்கல்ல. கட்டாரில் இருந்து அவரும் காசு அனுப்பல்ல. ஆட்டு கடனை கட்ட கஷ்டப்பட்டு போனன்’
‘சரி அப்ப என்னடி செய்தா’. ‘அந்த ராகவன் ஐயாதான் தன் காசில் இந்த மாத கடனை கட்டுவதாகச் சொன்னவர்’. ‘ஓ, அப்படியா சரிடி பார்த்துக்கோ. நீயும் தனிய கிடந்து கஷ்டப்படுகிறாய். எனக்கும் உன்னப்பார்த்தா பாவமாகத்தான் இருக்கு. இதுக்குத்தான் கட்டின புருசன் பக்கத்தில இருக்க வேணும். எத்தனை வருசம் கழிச்சு வாறானோ? ருத்திரன் ஏதும் கதைத்தானா சிவமணி’. ‘கதைச்சாரு நாலு வருசத்துக்கு பிறகுதான் வருவராம்’. ‘சரிதான் அது உன் தலை எழுத்து’ என்றவாறு பெருமூச்சு விட்ட சறோஜா’, சரிடி காசு வேணுமெண்டா கேளு. நான் அவரிட்ட சொல்லி வாங்கித்தாறன். நான் வாறன்’ சறோஜா’ போய் விட்டாள்.
சறோஜவை நினைத்துப் பார்த்தாள் சிவமணி. வசதியான இடத்தில் வாழ்க்கைப்பட்டவள் சறோஜா. ருத்திரன் கட்டார் போகும் போது இரண்டு குழந்தைகள் அவளுக்கு. இப்ப இன்னொரு குழந்தைக்கும் தாயாகப் போகிறாள். அவளும் வாயும் வயிறுமாக இருக்காள். இந்த நான்கு மாதங்களுக்குள் சிவமணியின் வாழ்வில் பல சம்பவங்கள் அரங்கேறிவிட்டன. ருத்திரனும் காசு அனுப்பவில்லை. ஆனால் அவன் Phone எடுக்க தவறமாட்டான். சிவமணி மேல் அவனுக்கு கொள்ளைப் பிரியம்.
அன்று தான் ருத்திரன் phone ல் அழைத்தான். ‘சிவமணி உனக்குத்தான் கஷ்டம் தந்து போட்டன். இந்த மாதத்திலிருந்து நல்ல சம்பளம் கிடைக்கும். இனி நம் கஷ்டம் எல்லாம் போய் விடும். கடன் எல்லாவற்றையும் கட்டி முடித்துவிடலாம். சிவமணியின் விசும்பல் கேட்டது. ‘ஏன் அழுகிறாய் சிவமணி’ ‘ஒன்னுமில்லங்க. உங்களப் பிரிந்த தனிமையின் அவஸ்தைகளை நான் அனுபவித்து விட்டன். பிள்ளைகள் இருவரும் வளர்ந்து விட்டார்கள். அவர்களுக்காக எத்தன வருசம் இருந்ததாவது உழைச்சுக்கொண்டு வாங்க. இருவருக்கும் இரண்டு வீடுகள கட்டிக்கொடுங்க. கவனமாக இருங்க’. ‘சரி சிவமணி’. ‘சரிங்க. நானும் phone ஐ வைக்கிறன்’. மூணு மாதமாக வீட்டுச்செலவுக்கு சறோஜாவிடம் கொஞ்சமாக பெற்ற கடன் உதவியது.
ஆனால் ஆட்டுக் கடன் சுமையை அவளால் ஈடு செய்ய முடியவில்லை. ஒரு மாதம் தன் காசில் கடனை செலுத்திய ராகவன் அடுத்த மாதமும் வந்திருந்தான். அவளது கஷ்டங்கள் கண்டு அவன் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அவளுக்கு தேவையாக இருந்தது. ‘சேர். நீங்க இருந்து சாப்பிட்டு போங்க’. அவனும் மறுக்கவில்லை. அடுத்தடுத்த மாதங்களில் அடிக்கடி சிவமணி வீட்டுக்கு வந்து போவான் ராகவன்.
அவர்களிடையே நெருக்கம் இன்னும் அதிகமாகியது. ஆட்டுக்கடன் பற்றி அவன் இப்போ எதுவும் சிவமணியிடம் கதைப்பதில்லை. ‘சேர் நீங்கதான் என் கஷ்டம் புரிந்து எனக்கு உதவி செய்திருக்கிறிங்க. நீங்க செய்த உதவிகள என்னால எப்போதும் மறக்க முடியாது’. ‘சிவமணி அதை பாத்துக்கலாம் விடுங்க ‘அவனும் வாஞ்சையோடு சொன்னான். ‘இல்ல சேர் நாலு மாதங்கள் இப்ப முடிஞ்சு போச்சு. எனக்கு என்ன செய்வதென எதுவும் புரியல்ல. இப்ப எனக்கு நீங்க கட்டிய கடன் காசு பற்றி அவரிடம் சொல்லி இருக்கன். அனுப்பி விடுவார்’. ‘அதை பிறகு பாத்துக்கொள்ளலாம். நானும் அதுபற்றி யோசித்துக் கொண்டு பிறகு வாறன்’. ‘கட்டாயம் வாங்க சேர் நான் பார்த்திருக்கன்’. என்னவோ ராகவனிடம் ஒரு பிடிப்பும் தவிப்பும் சிவமணியிடம் இருந்தது.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. சிவமணிக்கு சறோஜாவைக் கண்டு கதைக்க வேணும் என்ற உந்துதல். அவள்தான் அவளது ஒரேயொரு உயிர்த் தோழி. தன் அந்தரங்களை பகிர்ந்து அவளிடமே ஆறுதல் பெறுவாள். பிள்ளைகள் இருவரையும் தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டு சறோஜா வீட்டுக்குப் போயிருந்தாள் சிவமணி. ‘அடடா, சிவமணியா, உனக்கு நேரமே இருக்காதே என்னிடம் வருவதற்கு, என்ன ஏதாவது அவசரமோ.’ ‘அப்படி ஒண்ணுமில்ல சறோஜா நீ பதறாத. சும்மாதான், கொஞ்ச நேரம் கதைக்கலாமே என்றுதான் வந்தன்’. ‘எங்க பிள்ளைகள்? நீ கூட்டி வரல்லையா. சரி சிவமணி கொஞ்சம் இரு, உனக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வாறன்’. ‘அது ஒன்னும் எனக்கு வேணாம் நீ வா சறோஜா’. ‘சரி சொல்லு, காலையில இருந்து எனக்கும் வேலதான். ஒரு இடமும் போக கிடைக்கல்ல. ருத்திரன் phone எடுத்தானா சிவமணி’. ‘இப்பதான் சறோஜா அவரோட கதைத்துப் போட்டு வாறன். நல்ல சம்பளத்தோடு வேல கிடைச்சிருக்காம். அதுதான் இன்னும் நாலு வருடமாவது இருந்து உழைத்துக் கொண்டு வருமாறு நானே சொன்னன் இரண்டும் பொட்ட பிள்ளைகள். அதுகளாவது பின்னுக்கு நல்லாக இருக்கட்டும். உன்னிடம் வாங்கிய கடன், ராகவன் சேருக்கு கொடுக்க வேண்டியது எல்லாம் சொல்லியிருக்கன். ‘அம்மாவிடம் பிள்ளைகள விட்டுபோட்டு வந்தன். நான் போகணும்’.
‘என்ன சிவமணி நீ ஏதோ வித்தியாசமாக கதைக்கிறா’. ‘நான் இதை உன்னிடம் மட்டுமே சொல்லுகிறன். அது உன்னுடன் மட்டுமே இருக்கட்டும். என்னோடு அது புதைந்து
போகட்டும் சறோஜா’. இந்த நாலு மாதங்களில் நடந்த முழுவதையும் ஒன்று விடாமல்
சொல்லி முடிக்க அதிர்ச்சியில் உறைந்து போன சறோஜா சற்று நிதானத்துக்கு வந்தாள். ‘இவ்வளவும் நடந்திருக்கா, சிவமணி? எனக்குப் புரியுது எல்லாம்’. ‘உன்னில் நான் ஒரு குத்தமும் காணல்ல. உன் தனிமையும், நிலைமையும் அப்படி. சந்தர்ப்பம் சூழ்நிலைகள் உனக்கு ராகவனோடு அப்படி அமைந்து போச்சு’. ‘அதுதான் என் தலவிதி’. ‘நீ ஒண்ணும் யோசிக்காத சிவமணி, ஏதாவது வழி இருக்குதா கலைத்து விட எனப் பார்க்கலாம்’. ‘இனி இதுக்கு ஒரு வழியுமில்ல காலம் கடந்து போச்சு’. ‘சிவமணி அவசரப்பட்டு எந்த முடிவும் நீ எடுக்காத. ராகவனிடம் இத பத்தி சொன்னியா’. ‘சொன்னன் இது எல்லாமே இந்தக் கடனால வந்த பிரச்சின. என் கனவுகள் எல்லாம் இந்த கடனால சிதைந்து போச்சு. இது பற்றி எவரிடமும் மூச்சு விடாத. சத்தியம் பண்ணு. நான் சொன்னத மட்டும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக் கொள். சறோஜா, நான் போறன்’.
வீட்டுக்கு விரைந்த சிவமணி முடிவு எடுத்து விட்டாள். ருத்திரனுக்கு துரோகம் செய்து விட்டு அவமானத்துடன் வாழ அவள் விரும்பவில்லை. அவள் நிரந்தரமான உறக்கத்துக்கு போனாள். அவளது உயிர் பிரிந்து போனது அவளுக்கே தெரியாது. மாலை ஆறு மணி போல் பிள்ளைகளுடன் வந்த சிவமணியின் தாய், சிவமணியை எழுப்பிப் பார்த்துவிட்டு வைத்த ஒப்பாரியில் ஊரே கூடிவிட்டது. மளமளவென காரியங்கள் நடந்தேறின. கிராம அலுவலர் ஊடாக பொலிசுக்கு செய்தி பறந்தது. காலையில் “Coroner” வந்தார். பொலிஸார் வந்திருந்தனர். ஊர் கூடியிருந்தது. மரண விசாரணை நடைபெற்றது. ‘என்ன நடந்தது. இறந்தவளது புருசன் எங்க. ‘கம்பீரமான குரலில் கர்சித்தார் Coroner. ‘ஐயா அவ புருசன் வெளி நாட்டில’. ‘நீ யார் என் முன்னால வந்து சாட்சி சொல்லு’ Coroner மிக கண்டிப்பானவர். அவர் கம்பீரமும் அதட்டலும் சாட்சிகளிடம் இருந்து உண்மையை வர வைத்து விடும். அவரது கரிய நிறமும் சாட்சிகளை உறுத்தும் அவர் பார்வையும் சாட்சி சொல்பவர்களுக்கு கிலியை உண்டாக்கும். அவர் போட்ட அதட்டலில் பயந்து நடுங்கிய படி சிவமணியின் தாய்.’ஐயா என்ட மக்கள் தான், இஞ்ச செத்து கிடக்கும் சிவமணி. இந்தா பக்கத்திலதான் என் வீடு இருக்கு. என்னிடம் அவளது பிள்ளைகள தந்து போட்டு, சறோஜா வீட்டுக்கு போனாவள். போனவள இன்னமும் வரல்லயே எண்டு பாக்க வந்தன். வீட்டு விறாந்தையில் செத்துக் கிடந்தாள். சத்தம் போட்டு அழுத பிறகுதான் ஊருக்கு தெரிய வந்தது’. தாயின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. ‘சரி நீ போ. யார் அது சறோஜா, உடனே அவள கொண்டு வாருங்க’ பொலிசாருக்கு Coroner கட்டளை பிறப்பித்தார்’. ‘ஐயா நான்தான், சறோஜா. சிவமணி சாக முதல் என் வீட்டுக்கு வந்தது உண்மைதான். தன் கடன் சுமைய சொல்லி என்னிடம் அழுதாள். நான் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னன். ‘சரி நீ சொல்வது உண்மையா’. முறைத்தபடி அதட்டினார் அவர். அதட்டலில் பயந்து போன சறோஜா நிதானம் தவறாமல் உறுதியை கைவிடாமல் சிவமணிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் வழியே நின்று சாட்சியம் சொன்னாள்.
‘நான் சொன்னது உண்மைதான் ஐயா. கடன் சுமையால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் புருஷன் கட்டாரில் கஷ்டப்படுவதால் அவனாலும் பணம் அனுப்ப முடியல்ல. நானும் சின்னச் சின்ன உதவிகள் செய்திருக்கிறன். ஆனாலும் கடன் சுமையால் நொந்து போய் இருந்தாள் ஐயா’. சறோஜா சொல்லி முடித்தாள்.
சறோஜாவின் சாட்சியம் வலுவாக இருந்தது. அதனை பதிவு செய்த Coroner தன் தீர்ப்பை சொன்னார். ‘கடன் சுமை தாங்க முடியாது தற்கொலை செய்ததால் ஏற்பட்ட மரணம் இது. Post mortemக்கு அவசியமில்லை பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கவும்’.
தீர்ப்பு வழங்கினார் Coroner. அன்று சடலத்தை பிரேத பரிசோதனை செய்திருப்பின், சிவமணியோடு சேர்ந்து கூடவே பூமியில் தன் பாதம் பதிக்காத இன்னுமொரு உயிரும் மௌனித்தது என்ற சறோஜாவுக்கு மட்டுமே தெரிந்த அந்த உண்மை ஊருக்கே தெரிந்திருக்கும். அங்கு கூட்டத்தோடு ஒருவனாய் நின்றிருந்த ராகவன் மௌனமாய் அழுதான். அன்றில் இருந்து அந்தக் கிராமத்துக்கு கடன் அறவிட வராமல் காணமலே போனான்.