நாளை 04.12.2023 திங்களன்று சரஸ்வதி மண்டபத்தில் நாவலர் பெருமானின் குரு பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது
லங்கையில் சைவமும், தமிழும் நலிவுற்று. ஆதரவு குன்றியிருந்த காலத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் யுக புருஷராக விளங்கியவர் நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர், சைவமும், தமிழும் மீளெழுச்சி பெறத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து, சைவமும், தமிழும் நின்று நிலைத்து, வளம் பெற வழிகாட்டிய விடிவெள்ளி அவர். பல்துறை அறிஞர், பேராசான் என்பவற்றுக்கு மேலாக தமிழ், சைவ மரபு காத்த, அவரின் பல்துறை ஆளுமைப் பண்புகளும் பணிகளும், ஆராதிக்கப்பட வேண்டிய காலம் இது. நாவலர் பெருமானின் இத்தகைய தொண்டுகளுடன் அவரின் உரைநடை, பதிப்புக்கலை, பத்திரிகைப் பணியும் சமூக நோக்குடனான ‘காலத்துக்குத் தேவையான முன்னெடுப்புகளும் தமிழினத்துக்கே விடிவைப் பெற்றுத் தந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் சைவசித்தாந்த மெய்யியலாளருள் தலையாயவொருவர் ஆறுமுக நாவலர் என்பதை சைவ உலகம் மறந்தும், அவரின் கல்வித் தொண்டுகளுக்கு முக்கியத்துவமளித்துப் போற்றாமையும் கவனத்துக்குரியது. சைவ சமயத்தையும், அதன் வளர்ச்சிக்குரிய கல்வியையும் வளர்த்தற் பொருட்டு, தனது பொருள் போகத்தைத் துறந்து, செயலிலும் துறவை மேற்கொண்ட நம் நாவலர் பெருமானது தூய ஊழியத்தினால் அவரது உள்ளத்திலே அநுபூதி உணர்வுகளே மேலோங்கி நின்றன.
பொதுவாக ஆறுமுக நாவலரின் சமயப்பணியினைப் பின்வமாறு பகுத்து நோக்கலாம்,
அ. பிரசாரம்.
அ. கல்விப்பணி.
இ. நூலாக்கமும் பதிப்பாசிரியர் பணியும்
ஈழநாட்டின் சைவசமய வரலாறானது கிறிஸ்து சகாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பித்திருந்த போதும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேதான் சைவம் பலவகைத் துறைகளிலும் பரந்து, விரிந்து தன்னெழுச்சி கொண்டமைவதைக் காண்கிறோம்.
யாழ்பாணத்தில் நாவலரவர்களின் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனங்கள் நிறுவப்பட்டதும். சைவப்பிரகாச சமாஜம் (1879), சைவப்பிரகாச சமாசியம் (1880), சைவ பரிபாலன சபை (1888), சைவ வித்தியா விருத்திச் சங்கம் (1923), சைவ ஆசிரிய கலாசாலை (1928), ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை (1968) போன்ற நிறுவனங்கள் இன்றுவரை செயற்படுவதும் நற்சகுணமே. கலாநிலையம் என்ற பெயரில் (1932) இல் நிறுவப்பட்ட ஆறுமுக நாவலர் ஆய்வு நிலையமும் குறிப்பிடத்தக்கது. கொழும்பில் செயற்படும் சபையின் பணிகளின் விருத்தி பன்முகப்படுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டு நாவலர் இலட்சியங்கள் வளர்ந்துவருகிறன.
சைவத்தின் காவலராகவும், மறுமலர்ச்சியாளராகவும் கொண்டாடப்பட்டும் ஈழத்தின் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரை சமூக சிந்தனையற்ற பிற்போக்குவாதியெனவும், சாதியவாதி எனவும் ஒரு சிலர் குற்றம் கூறி பேசியும், எழுதியும், ஆய்வுகளில் ஆவணப்படுத்தியும் வருகின்ற நிலை வருத்தத்துக்குரியது. எனினும் அவரின் சைவ வினா விடை, பாலபாடம். முதலாகிய நுல்களில் இழிசாதியார் எனக் குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள அவர் காலச் சமய பின்னணி, சமூக அரசியல் நிலைப்பாட்டை உண்மையாகவே புரிந்து கொள்ளக் கூடியவர்கள் இதனைச் செய்யார் என்பதும், குறிப்பிடத்தக்கது. அன்றியும் நாவலரின் சாதி நிலை பற்றிய வெளிப்பாட்டை அவர து எந்த ஒரு தனி நூலிலோ, கட்டுரையோ வலியுறுத்திக் கூறியதாக காண முடியவில்லை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் அரசியற் பங்கு பற்றிச் சிந்திக்கும் போது ஈழ நாட்டிலே தொடர்ச்சியான சைவப் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பவேண்டுமெனில் சைவ மரபிலே வந்த பிரதிநிதியொருவரைச் சட்ட நிருபண சபையில் அங்கம் வகிக்க விட வேண்டும் என்று அன்றே சிந்தித்த பெருமகர், புகழ் பூத்த சைவ நியாயவாதி சேர் பொன்னம்பலம் இராமநாதனைச் சட்ட நிருபண சபைக்கு அனுப்புவதில் காட்டிய ஆர்வம் அரசினால் நாவலர் ஆளுமை வளர்ச்சி வரலாற்றில் மிகமுக்கியமான நிகழ்ச்சி எனலாம்.
சமுதாய சீர்திருத்தக்கோட்பாட்டு ரீதியில் சிந்தித்த நாவலர் பெருமான், வெறுமனே மரபுவழி அமைப்புகளின் தேவையற்ற போக்குகளை அவ்வப்போது கண்டித்து, மறுமலர்ச்சிக் கொள்கைகளைப் பிரபலப்படுத்தியவர் என்ற வகையில் 1875 இல் நாவலர் கண்டனங்கள் என்ற நூலில் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் செய்யப்பட வேண்டியதும், விலக்கப்பட வேண்டியதுமான சீர்திருத்தங்கள் பற்றியே குறிப்பிட்டாரொழிய வேலாயுதத்தை வைத்துக் கும்பிடுதல் பற்றி விசேடமாகக் கூறுகையில்” கந்தசுவாமி கைவேல் அவரது சக்தியே ஆகலாறும் சத்திசத்தனைத் தவிர வேறன்றுகாளர்” என்று வலியுறுத்தி ஞான சகட தியாகிய வேலாயுத ஆராதனையை ஏத்திப் பேசியவர் நல்லை ஆறுமுகநாவலர் என்பதை அறிவோமாக. இந்த வகையில் தமிழ்ச் சைவத்தின் பாதுகாவலனாகவும், மறுமலர்ச்சிக் காரணியாகவும், சைவநெறிமுறைகளின் வழிகாட்டியாகவும் வாழ்ந்த ஈழத்தின் தேசிய வீரர் நாவலரையும், அவர் பணிகளையும் போற்றி அவர் வழி நாமனைவரும் வாழ்ந்து நம் சமய நெறியை ஆராதிப்போமாக
” கலைமாமணி” புலவர் M.S.ஸ்ரீதயாளன்
(அ.இ.ஸ்ரீலஸ்ரீ நாவலர்
சமய விவகாரச் செயலாளர்)