அவள் ஒரு பேரழகி. அவளது அழகுக்கிணையானது அவளுடைய நற்குணம். அவள் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அன்பே உருவான தேவதையாக வளர்ந்தாள். இஷ்தா எனும் இனிமையான நாமம் கொண்ட அவள் ஒரு அரசபள்ளி ஆசிரியை. இருபத்து மூன்று வயது நிரம்பிய இஷ்தா இலங்கையின் தலைநகரான கொழும்பில் வசித்து வந்தாள். கலையில் அவளுக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது. பேரழகியான இஷ்தா அதுவரை எந்த ஆணுடனும் காதல் வயப்படவில்லை. என்றாலும் அவளது ஆழ்மனதில் அவளுடைய எதிர்காலக் காதலனைப்பற்றி ஏராளமான கனவுகளும் கேள்விகளும் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தன. சிறந்த அறிவும் கற்பனை வளமுமுள்ள இஷ்தாவை வாழ்க்கையின் ஒரு ரசிகை எனலாம்.
எல்லாக் குடும்பங்களையும் போலவே இஷ்தாவுடைய வீட்டிலும் அவளுக்குத் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகளைப் பார்த்தும். அவர்களில் யாரையுமே இஷ்தாவுக்குப் பிடிக்கவில்லை. அவளுடைய மனத்தேடலில் அவளுக்கு எந்த மாப்பிள்ளை மீதும் திருப்தியேற்படவில்லை. அப்பொழுதுதான் அவளுடைய பக்கத்து ஊரில் இடம்பெற்ற ஒரு பாடசாலைக் கலைவிழாவில் இஷ்தா தற்செயலாக அவனைப் பார்த்தாள். அவன் வெளியூரிலிருந்து வந்திருந்தான். அவனுடைய பெயர் ஆஷித். அவன் ஒரு பேரழகன். அவனது முகம் சந்திரனைப் போன்றிருந்தது, அதில் குழந்தையாய் ஒரு புன்னகையும் தவழ்ந்தது. அவன் கண்களில் ஒரு ஒளி தென்பட்டது. ஆண்மை நிறைந்த உடலுடையவன். கம்பீரமான நடையும். வசியம் செய்யும் பார்வையுமுள்ளவன். மொத்தத்தில் எல்லா விதத்திலும் இஷ்தாவிற்குப் பொருத்தமானவன்.
சிறந்த குரல்வளமுள்ள ஆஷித் அந்த மேடையில் இனிமையான ஒரு பாடலை பாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த எல்லோரும் அவனுடைய பாடலில் லயித்துப் போயிருந்தனர். இஷ்தா அவனைப் பார்த்ததும் அதிசயித்துப்போனாள். இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். இதுவரை அப்படியொரு உணர்வு எந்த ஆணின்மீதும் அவளுக்கு ஏற்பட்டதேயில்லை. வாழ்க்கையில் முதல்முறை இஷ்தா காதலை உணர்ந்தாள். இஷ்தாவுடைய கண்கள் அவனை மாத்திரமே கவனிக்கத் தொடங்கின. அங்கேயே அவளது கால்கள் உறைந்துபோயின. இஷ்தாவுடைய ஆத்மாவுக்குள் ஆஷித் ஆழமாக புதைந்துபோனான். ஆஷித்துடைய பெயர் கூடத் தெரியாத இஷ்தாவிற்கு, அவனைப்பார்த்த மறுகணமே அவன்மீது ஏற்பட்ட பேரன்பு, அவளுடைய உயிருக்கு நிகரானதாக இருந்தது. அதை உணர்ந்த அவள், அதனை எண்ணி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.
அந்த விழா முழுவதும். இஷ்தா அவளுடைய சுயத்தை மறந்து ஆஷித்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுடைய பேச்சு, சிரிப்பு, நடை, உடை, பாவனை என அவனது மொத்தத்தையும் ஒவ்வொன்றாக ரசித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் என்றுமே புரிந்திடாத ஒரு பேரின்பத்தை அவள் உணர்ந்தாள். அவளது இதயம் புதிதாக மலர்ந்தது. பூலோகம் அவளுக்கு அலங்காரமாகத் தெரிந்தது. ஆத்மாவில் புத்துயிர் தருகின்ற ஒரு பேரானந்தத்தை அனுபவித்தாள். இவை அனைத்துமே அவளுக்குள் அற்புதமாக பரிணமித்தன. ஆறு மணித்தியாலங்களாக நடைபெற்ற அந்தக் கலைவிழா, இஷ்தாவிற்கு மாத்திரம் அரைமணி நேரமாகத் தோன்றியது. இஷ்தா அவளுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தாளோ, அதை மிகைக்கும் வண்ணமாக அந்தக் காதலன் இருந்தான். ஆனாலும், ஆசையாய் வளர்த்த செல்லப்பறவை ஒன்று திசை தெரியாமல் பறந்ததைப்போல, இஷ்தாவின் கண்களை விட்டு அவன் மறைந்துவிட்டான். அன்றிரவு முழுவதும் இஷ்தா அவனுடைய நினைவுகளிலேயே புரண்டு கிடந்தாள். அவன் மீதுள்ள மாறாத அன்பும், தீராத ஆசையும் அவளை ஆட்டிப்படைத்தன. அதனால் மறுநாள் காலை மீண்டும் அந்த அரங்கத்திற்கு அவனைத்தேடிச் சென்றாள். அங்கே அவளுடைய காதலனைக் காணாமல் ஏமாற்றத்தோடும் ஏக்கத்தோடும் வீடு திரும்பினாள்.
அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் இஷ்தா திருமணத்திற்குச் சம்மதிக்கவேயில்லை. அவள் அவளை மொத்தமாக வசீகரித்துச் சென்ற, அவளுடைய மாயக் காதலனின் நினைவுகளுடனேயே மனதுக்குள் போராடினாள்.
சில நேரங்களில் கண்ணீர் விட்டு அழுவாள், பல பொழுதுகளில் வாழ்க்கையை வெறுத்து, இறுதியில் இதயம் உறைந்துபோனாள். பின்பு அவளுடைய பெற்றோரின் சந்தோசத்திற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள். இஷ்தாவின் வீட்டில் அவளைப் பெரியதொரு தொழிலதிபருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.
இஷ்தாவின் கணவர் அவளுக்கு மாளிகை போன்ற ஒரு பங்களாவையும், உல்லாசமான வாகனங்களையும், எண்ணிலடங்காத தங்க நகைகளையும், விலையுயர்ந்த ஆடைகளையும், கோடிக்கணக்கான பணத்தையும் கொடுத்தார். ஆனால் இஷ்தா அவைகள்மீது வெறுப்பை மாத்திரமே உணர்ந்தாள். எப்போதும் அவளுடைய கணவர் இவள்தான் என்னுடைய அழகு மனைவியென்று, இஷ்தாவை பெருமையாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவார். ஆனால் இஷ்தாவிற்கு அவளுடைய கணவனைப் பார்க்கும்போதெல்லாம் கசப்பாகவே இருந்தது.
இவ்வாறே ஐந்து ஆண்டுகள் கடந்தன. இஷ்தாவிற்கு மூன்று வயதில் அழகானதொரு பெண் குழந்தையும் இருந்தாள். அவளுடை குழந்தைக்கு அவள் ஒரு மகிழ்ச்சியான தாயாக இருக்க முடியாததை எண்ணி இஷ்தா எப்போதும் மனம் வருந்தினாள். இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவிப்பாள். அவளது குழந்தையும் சற்று வளர்ந்துவிட்டதால், அவளும் இஷ்தாவைப் பார்த்து பலவிதமான கேள்விகளைக் கேட்கத் துவங்கினாள். அக்கேள்விகளில் பெரும்பாலானவை இஷ்தாவைப் பற்றியதாகவே இருந்தன. அவ்வாறு தன் குழந்தையின் கேள்விகளுக்கே சகஜமாகப் பதில் சொல்ல முடியாத இஷ்தா, வாழ்க்கையில் விரக்தியடைந்தாள். அவளுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த விரக்தி, இறுதியில் விவாகரத்தில் முடிந்தது.
பத்து வருடங்கள் கடந்தன. இன்றும் கூட இஷ்தாவின் மனதை ஆஷித்தின் நினைவுகளே ஆட்சி செய்கின்றன. இத்தனை வருடங்களில் இஷ்தாவினால் ஒரு நாள்கூட அவனை மறந்திருக்க முடியவில்லை.
அவனோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை. அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும், தனக்கு வேறு எதுவுமே தேவையில்லை, அவன் ஒருமுறை தன் கண்களில் தென்படமாட்டானா, என்று தவித்தாள். அவளுடைய நினைவெல்லாம் அவனைச் சுற்றியே இருந்தது. குளிர்ச்சியாக விடியும் நாட்களெல்லாம் அவளுக்கு மாத்திரம் நெருப்பாக மாறின. அவளுடைய ஆழ்மனதில், பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தக் கலைவிழாவின் நினைவுகள் மாத்திரமே, மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தன. உலகமெல்லாம் அமைதியாகிப்போகின்ற பின்னிரவு வேளைகளிலும், இஷ்தாவின் மனதுக்குள் அந்தக் கலைவிழா தினந்தோறும் அரங்கேற்றப்பட்டது.
இஷ்தாவுக்கு காதலின் உறவும் புரியவில்லை, வாழ்க்கையின் அர்த்தமும் புரியவில்லை. அதனால் நாட்களையெல்லாம் இறைவணக்கத்திலும் பிரார்த்தனையிலும் கழிக்கத் தொடங்கினாள். ஒருநாள் மாலைவேளை அந்தக் கலைவிழா நிகழ்ந்த அரங்கத்தை நோக்கிச் சென்றாள். அங்கே அன்று ஆஷித் வீற்றிருந்த இடங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தாள். இஷ்தாவின் மனம் உள்ளுக்குள் அனல் கிடங்காக எரிய ஆரம்பித்தது. அவளது கண்கள் தாங்க முடியாத துக்கத்தினால் கண்ணீரில் குளித்தன. வழிந்தோடிய கண்ணீர்த்துளிகள் ஆஷித்தின் நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தன. அந்த ஏக்கங்கள் அவளை மூடிக்கொள்ளவே, இஷ்தா செய்வதறியாது சோகத்தோடு அங்கிருந்து புறப்பட்டாள். மனதை எவ்வளவுதான் சமாதானப்படுத்தினாலும் அவன் நினைவுகள் அவளை எப்போதும் ஆட்கொள்கின்றன. அவள் தனக்குள் பேசிக்கொள்வாள். இஷ்தாவின் இதயம் அவளுடைய காதலனுக்காகவே துடித்தது. அதனால் அவள் வெட்கத்தை இழந்து, ஊர் பெயர் தெரியாத அவனைத் தேட ஆரம்பித்தாள். கண் போன திசையெல்லாம் அவனைத் தேடினாள், கால் போன இடமெல்லாம் அவனுக்காக நடந்தாள். இவ்வாறு நாளெல்லாம் அவனைத் தேடி அலைந்தாள். ஒருநாள் அவளுடைய ஆஷித்தை எதேச்சையாக ஒரு சிறுவர் பூங்காவில் பார்த்தாள். அங்கே அவனும், இஷ்தாவை விட அழகான அவனுடைய மனைவியும், அவனைப்போன்றே பேரழகாக ஆஷித்துடைய இரு பெண் குழந்தைகளும், பூங்காவுக்குள் நுழைந்துகொண்டிருந்தனர். ஏற்கனவே அந்தப் பூங்காவிற்குள்ளிருந்து இதனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் இஷ்தா. அந்தக் காட்சியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளை அறியாமலே அழ ஆரம்பித்துவிட்டாள். அவளது உள்ளம் இடிந்துபோக, அங்கிருந்த ஒரு நாற்காலியில் சட்டென அமர்ந்தாள்.
டொக்டர் ராஸி கொள்ளுப்பிட்டி