றக்கோட்டை பஸ் நிலையம் வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காதில் ஊர்களின் பெயர்களும் நடைபாதை வியாபாரிகள் பொருட்களை கூவி விற்கும் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. அந்த சந்தடி மிகுந்த பஸ் நிலையத்தில் தோளில் ஒரு பையும் கையில் ஒரு பையுமாக அருண் வேகமாக நடந்து கொண்டிருந்தான். தான் செல்ல வேண்டிய மாத்தளை பஸ் எங்கே நிறுத்தப்பட்டு இருக்கிறது என சுற்றும் முற்றும் தேடினான்.
தனக்கு முன்னால் இருவர் தமிழில் கதைத்துக் கொண்டு செல்வதைக் கண்டு அவர்களின் அருகில் சென்று “அண்ணா மாத்தளைக்கு போற பஸ் எங்க நிப்பாட்டுவாங்க? என்று அருண் கேட்டு முடிப்பதற்குள் அவர்களும் “எங்களோடு வாங்க தம்பி நாங்களும் கண்டிக்குத் தான் போறோம்.
கண்டி பஸ் நிப்பாட்டுற இடத்துக்கு முன்னுக்குத் தான் மாத்தளை பஸ் நிப்பாட்டுவாங்க எங்களோட வாங்க தம்பி” என்று அவனை அழைத்துச் சென்றார்கள். அருண் அவர்களோடு பஸ்நிலையத்தை நோக்கி நடந்தான்.
பஸ் நிலையம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஏனென்றால் நாளை விடிந்தால் தீபாவளி. கொழும்பில் வேலை செய்யும் அனைவரும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்து நின்றார்கள். மாத்தளை பஸ்ஸுக்காக காத்திருந்த கியூ வரிசையில் அவனும் இணைந்து கொண்டான். சிறிது நேரத்தில் பஸ்ஸில் ஏறி ஜன்னல் ஓரமான இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான்.
இருக்கையில் அமர்ந்து சுற்றும் முற்றும் அவனைச் சுற்றி இருந்தவர்களைப் பார்த்தான் சிலர் களைப்புடன் இருந்தார்கள், சிலர் மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவரவர்க்கு என்னென்ன பிரச்சினையோ, ஆனாலும் அவர்கள் நாளைய தினத்தை நினைத்து மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றார்கள். அவன் இருக்கையில் அமர்ந்து மெல்ல கண்களை மூடிக்கொண்டான். அவனது எண்ணங்கள் பின்னோக்கிச் செல்ல தொடங்கின.
அவனது ஊர் மாத்தளையிலிருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பிட்டகந்த என்னும் தேயிலைத் தோட்டமாகும். மாத்தளை என்றாலே அழகு மலைதான் முதலில் ஞாபகத்திற்கு வரும். யானை ஒன்று தும்பிக்கையை நீட்டிப் படுத்திருப்பது போன்று அந்த மலைகள் கண்களுக்கு காட்சியளிக்கும். நாட்புறமும் மலைகளால் சூழப்பட்ட மாத்தளை நகரின் நடுவே அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் சிறப்புகளை சுருக்கமாக கூற முடியாது.
தென்னிந்தியாவிலிருந்து இந்நாட்டுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் கும்பிடப்பட்ட தெய்வமே மாத்தளை முத்துமாரியம்மன் என வரலாறுகள் தெரிவிக்கின்றன. அவ் அன்னை எழுதருளியிருக்கும் ஊரில் வாழ்வதே பெரும் பேறாகும். மூவின மக்களும் கலந்து வாழும் மாத்தளை நகரில் ஆலயங்கள், பள்ளிவாயில்கள், விகாரைகளுக்கும் குறைவே இல்லை.
அருணின் ஊரானது மாத்தளை நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பிட்டகந்த என்ற தோட்டமாகும். அவனது குடும்பம் மிகவும் சிறிய குடும்பமாகும். தந்தை கணேசன், தாய் மீனாட்சி சகோதரி சுபாவுமே அவனது குடும்ப அங்கத்தவர்கள். அவனது ஊரை நினைத்தால் அவனுக்கு இவ்வுலகமே மறந்து போய்விடும். உடம்பை தழுவிச் செல்லும் குளிர் காற்று. எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல் எனத் தெரியும் தேயிலை தோட்டங்கள். அவற்றுக்கிடையே தெரியும் செம்மண் பாதைகள் என அந்த ஊரின் இயற்கை அழகை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
மலைமுகட்டில் நீர்வீழ்ச்சிகள் வெள்ளிப்பனி உருகி வருவதுபோல மின்னும். மல்லிகைப் பூக்கள் ஒரு புறம் வண்ண வண்ண ரோஜாக்கள் இன்னொரு புறம் பெயர் தெரியாத இன்னும் எத்தனை எத்தனையோ பூக்கள். அந்த அழகான ஊரில் மறைந்துள்ள எத்தனை எத்தனையோ வேதனைகள், எத்தனை எத்தனை துயரங்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு துயரக் கதை இருக்கவே செய்யும்.
அருணின் குடும்பமும் அதுபோன்றதே. அவனது தாயும் தந்தையும் தோட்டத்தில் வேலை செய்பவர்கள். விடிகாலை உடம்பைத் துளைக்கும் பனிக்குளிரையும் பொருட்படுத்தாது நித்திரையிலிருந்து எழும்பி அடுப்பைமூட்டி எரியாத ஈர விறகை ஊதி ஊதி பற்றவைத்து முதலில் தேநீர் ஊற்றித் தருவாள் அம்மா. பின்னர் ஏதோ வீட்டில் இருப்பதைக் கொண்டு சமையல் என்னும் பெயரில் சமைத்து எனக்கும் தங்கைக்கும் வைத்துவிட்டு அம்மாவும் அப்பாவும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வேலைக்குச் சென்று விடுவார்கள்.
நேரத்தோடு வேலைக்குச் சென்றால் தான் அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியும். இல்லாவிட்டால் அரை நாள் சம்பளம் தான். அனேகமாக எமது உணவு ரொட்டியாகத் தான் இருக்கும்.
அவனது தந்தை கடுமையான உழைப்பாளி. தோட்டத்தில் கவ்வாத்து வெட்டுவதற்கு அவரை மிஞ்சிய ஆட்களே இல்லை. அவனது அம்மாவும் அதற்கு சளைத்தவள் அல்ல.
மற்ற பெண்களை விட அவனது அம்மா தான் அதிக அளவு கொழுந்து பறிப்பாள். ஒரு தடவை அதிக கொழுந்து பறித்ததற்காக அம்மாவுக்கு பரிசும் கிடைத்தது. அன்றைய தினம் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்கவில்லை.
ஆனால் என்ன செய்வது அவர்களது தொழிலுக்கு ஏற்ப சம்பளமா கிடைக்கிறது? நானும் தங்கையும் பிட்டகந்த வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்றோம். அது ஒரு கஷ்டப் பிரதேச பாடசாலை.
எனது தங்கை சுபா ரொம்ப குறும்புக்காரி. நானும் அவளும் தான் பாடசாலைக்கு ஒன்றாகச் செல்வோம். அதிகமான நாட்கள் எமது காலுக்கு செருப்பு இருக்காது.
சரளை கற்கள் எமது கால்களை பதம் பார்த்தும் இருக்கின்றன. நாம் இருவருமே நன்றாகப் படித்தோம். நான் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தேன்.
எனது அப்பா அடிக்கடி கூறுவார் “நாமதான் படிக்காம இந்த காட்டுல வேலை செஞ்சு கஷ்டப்படுறோம். நம்ம பிள்ளைகளாவது நல்லா படிச்சு உத்தியோகம் பாக்கணும்” என்பார்.
எந்த ஒரு தந்தையும் தான் பட்ட துயரங்களை தமது பிள்ளைகளும் அனுபவிக்கக் கூடாது என எண்ணுவதில் எவ்வித தவறும் இல்லையே. நான் புலமைப் பரிசில் சித்தியடைந்த பின்னர் கல்வி கற்க மாத்தளை நகருக்கு செல்ல வேண்டி நேரிட்டது.
அங்கு இந்து கல்லூரியில் எனது படிப்பை தொடர்ந்தேன். என்னை அங்கு அனுப்பி படிக்க வைக்க எனது தந்தை பட்ட சிரமங்களை எண்ணும்போது எனது கண்கள் குளமாகி விடும்.
அவர்களின் சிரமத்தை மனதில் கொண்டு கல்வியில் உயர வேண்டும் என்ற எண்ணத்தோடு மிகவும் மன உறுதியுடன் எனது படிப்பை தொடர்ந்தேன்.
எவ்வாறோ நான் க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர் தரம், என்பவற்றில் சிறப்பாக சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கும் தெரிவானேன்.
அங்கு தான் எனது பிரச்சினை ஆரம்பமானது, எனது கல்விக்கான செலவை சமாளிக்க எனது பெற்றோரால் முடியுமா என எண்ணத் தொடங்கினேன்.
ஆனால் அவர்களோ எனது படிப்பிற்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்று என்னை தொடர்ந்து படிக்குமாறு வற்புறுத்தினார்கள்.
எனது தோட்டத்தில் உள்ளவர்கள் என்னை ஏதாவது தொழில் செய்து பெற்றோர்களின் கஷ்டத்தை குறைக்குமாறு ஆலோசனை கூறினாலும் எனது பெற்றோர்கள் அதற்கு ஒருபோதும் செவி சாய்க்கவில்லை.
நாங்கள் இருவரும் உனக்காக உழைக்கத் தயாராக இருக்கின்றோம். உனது வளமான எதிர்காலத்திற்கு நீ கட்டாயம் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என கூறினார்கள். பக்கத்து வீட்டு மரகத பாட்டி கூட “என்ன கணேசா இப்படி கஷ்டப்படுகிறாய்? உனது மகனை எங்காவது கடைக்கு வேலைக்கு அனுப்பலாம் தானே? என்று எத்தனையோ தடவை சொல்லி இருக்கிறார்.
அதை கேட்கும் எனது அப்பாவோ “என் மகன் நல்லா படிச்சி நல்ல நிலைமைக்கு வருவத பாக்குறதை விட எனக்கு வேற சந்தோஷம் எதுவும் இல்லை. அதற்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப் படுவேன் என அவருக்கு பதில் கொடுப்பார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பை தொடர்ந்தேன். எனது பெற்றோர்களின் சிரமத்தை ஓரளவாவது குறைக்க வேண்டும் என எண்ணி உயர்தரத்தில் கற்கும் மானவர்களுக்கு டியூஷன் வகுப்புகளையும் நடத்தினேன்.
இறுதியில் எனது லட்சியமான பல்கலைக்கழக பட்டத்தையும் பெற்றேன். ஆனால் எனக்கு உடனடியாக வேலை கிடைக்கவில்லை. நான் மிகவும் சோர்ந்து போனேன். அப்போதெல்லாம் எனது அம்மா ”அருண் நீ கவலைப்படாதே. உனது திறமைக்கு நிச்சயமாக நல்ல வேலை ஒன்று கிடைக்கும்” என எனக்கு ஆறுதல் கூறுவார்.
ஆம் அந்த நல்ல நாளும் வந்தது. எனக்கு கடந்த மாதம் தான் வங்கி ஒன்றில் உதவி முகாமையாளர் பதவி கிடைத்தது. எனது முதலாவது மாத சம்பளம் கையில் கிடைத்தவுடன் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. உடனடியாக, தீபாவளி தான் ஞாபகத்துக்கு வந்தது. zஉடனடியாக கடைக்குச் சென்று அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு இதோ இந்த பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் பயணித்த பஸ் மாத்தளையை அடைந்தது. அங்கிருந்து கடைசி பஸ்ஸை பிடித்து எனது ஊருக்குள் நுழைந்தேன்.
மாலைச் சூரியன் மலைகளில் மறையத் தொடங்கியிருந்தான். நான் வேகமாக நடந்து கொண்டிருந்தேன் எதிரே வருகிற சந்தியில் திரும்பி சிறிது தொலைவு சென்றால் எனது வீடு தெரியும். எங்கோ கோவில் மணியோசை கேட்கிறது.
அவன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மா, அப்பா, தங்கை என அனைவரும் ஆவலுடன் அவனை வரவேற்றார்கள். எல்லோருடைய பார்வையும் அவனது முகத்தை நோக்கியே இருப்பது அவனுக்கு தெரிந்தது. ஒரு கணம் தான் இதுவரை அடைந்த அத்தனை கஷ்டங்களையும் மறந்தவனாக அப்பாவினதும் அம்மா வினதும் கால்களில் விழுந்து வணங்கினான். தங்கையின் கைகளில் தான் வாங்கி வந்திருந்த இனிப்புகளை வழங்கினான்.
எல்லோரது மனதும் குதூகலத்தில் திளைத்திருந்தது. அவர்களது வாழ்விலும் இந்த தீபாவளியில் விடியல் தோன்றியது. அவர்களும் வறுமை என்னும் நரகாசுரனை அழித்து தீபாவளி கொண்டாட தயாராகின்றார்கள்.
வயலட்