“உங்க பையனுக்கு கால சர்ப்ப தோஷம் இருக்கு. ஆதலால் அதற்குப் பொருத்தமாக அதேதோஷம் இருக்கிற பெண்ணொருத்தியைத் தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணி வையுங்கள்!” என்று சோதிடர் சொன்னால் கேட்பவர் திகைப்பர். செவ்வாய்தோஷம், சனிதோஷம் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். கால சர்ப்ப யோகம் என்றும் அறிந்திருக்கிறோம். அப்புறமென்ன “காலசர்ப்ப தோஷம், புதுசா?” என்று அதன் பிறகுதான் அந்தத் தோஷம் பற்றி அறிய முனைவர்.
கால சர்ப்ப தோஷம் என்பது வேறு. கால சர்ப்ப யோகம் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக்கி குழம்பக் கூடாது. எப்போதும் சாதகங்களில் ராகு நிற்கும் ராசிக்கு ஏழாவது ராசியில் தான் கேது சஞ்சரிக்கும். அதுவும் ஒன்றுக் கொன்று எதிர்த்திசையில்! இந்த இரண்டுக்குமிடையேயுள்ள ராசிகளில் இதர கிரகங்கள் அடைபடுவதைத்தான் கால சர்ப்பயோகமென்று சோதிடம் கூறுகிறது.
ஒரு மனிதனின் Subconscious Mind எனப்படும் நனவிலி மனம் அல்லது அந்தராத்மாதான் ராகு. அதனாலேயே சோதிடத்தில் கனவுகளைப் பற்றிச் சொல்பவராக ராகு சித்திரிக்கப்படுகிறார். Sixth Sense. எனப்படும் ஆறாம் அறிவுதான் கேதுவாகும். இன்னும் விபரிக்கப்போனால் நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாத அல்லது நம்ப முடியாத விடயங்களை உணர்த்துபவர் தான் கேது. உடலுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்ட நுண்ணிய அறிவைக் கேது அளிப்பார். எல்லோருக்கும் சிந்தனையுண்டு. அந்தச் சிந்தனைகளுக்குத் தூண்டுகோலாகவும் துலக்குகிறவர்களாகவும் விளங்குபவர்கள் ராகுவும் கேதுவும்தான். நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் தத்தமக்கென்றுள்ள நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன. ஆனால் இந்த ராகுவுக்கும் கேதுவுக்கும் தனிப்பட்ட பாதைகள் எதுவுமில்லை. ஒரு சாதகத்திலுள்ள பன்னிரு ராசிக்கட்டங்களில் அது அதுக்கென்று தனிப்பட்ட வீடுகளுமில்லை.
இது எதனால்? ராகுவும் கேதுவும் உண்மையிலேயே கிரகங்கள் அல்ல. அவையிரண்டும் தனித்தனியான நீண்ட நிழல்கள். அந்த நிழல்களே கிரகங்களுக்குரிய சக்தியைப் பெற்றிருக்கின்றன. அதனாலேயே அவைகளை சாயாக்கிரகங்கள் என அழைத்தார்கள். அதாவது நிஜமான கிரகங்களைப் போன்ற சாயல்கள் கிரக மாதிரிகள்! அந்த நிழல் போன்ற வடிவம் எப்படி உருவானது?
கிரகங்களின் சுழற்சியின் போதும் அவற்றையொட்டி மின்காந்த அலைகள் போன்ற சக்திகள் உருவாகும் அந்தச் சக்திகளுக்குத்தான் ராகு என்றும் கேது என்றும் பெயர். தன் பாதையில் சுற்றும் கிரகங்களுக்கு இணையான மிகப்பெரிய படலமாக அவை காணப்படும். காற்றில் தரைக்காற்று, மேல்க்காற்று என்று இருப்பதுபோல, அந்தப் படலத்தின் மேலேயுள்ள தொகுதியையே கேது என்றும், கீழ்ப்படலத்தையே ராகு என்றும் அழைக்கிறோம்.
பஸ் ஒன்று நம்மை வேகமாகக் கடந்து சென்றுவிட்ட பிறகும் அவ்விடத்தில் கிளம்பிச் சுழலும் புழுதிப் புயல்தான் ராகுவும் கேதுவும்! அந்தச் அசைவுகள் பாம்பு போன்று வளைந்தும் நெளிந்தும் காணப்படுகின்றன. ஏனென்றால் அந்தச் சக்திகளுக்கு எந்தப் பாதையுமில்லை. நீங்கள் வெயிலில் நின்றால் உங்கள் நிழல் கீழே விழத்தான் செய்யும். ஆனால் அது நீங்கள் அல்ல. அப்படித்தான் ராகுவும் கேதுவும். கிரகணங்கள் கூட நிழலை மையமாக வைத்துத்தான் சொல்லப்படுகின்றன. அந்த நிழலான பாம்பு சந்திரனைக் கவ்வுகிறது என்று எளிமையாக பாமரர்களுக்குச் சொன்னார்கள்.
சனிபோல ராகு, செவ்வாய் போல கேது என்று சோதிடத்தில் சொல்லப்படுகிறது. சனியின் உட்கரு, உள்நிறம் கறுப்பு. வெளிநிறம் நீலம். அதனால் தான் நீலத்தையும் ராகுவோடு இணைத்து கருநாகம் என்றழைத்தார்கள். செவ்வாயின் நிறம் தணல் சிவப்பாக இருக்கும். கேதுவிடம் செவ்வாயின் சாயல் இருப்பதால் செந்நாகம் என்றார்கள். சில விடயங்களை சில நேரங்களில் சில மனிதர்களால் செய்து முடிக்க முடியாது. அப்போது தங்கள் சார்பாக தங்களது சாயலாக (பினாமியாக) வேறு சிலரை அனுப்பிக் காரியங்களை முடித்துக் கொள்வார்கள். அப்படித்தான் இங்கு சனியும் செவ்வாயும் செயல்படுகின்றன. ஏனென்றால் ராகுவும் கேதுவும் சனி மற்றும் செவ்வாயின் சில அம்சங்களுடன் வேலை செய்கின்றன. எனவேதான் சோதிட சாத்திரத்தில் கூட ராகுவின் ஆதிக்கமுடையவர்களாக நிழல் உலக, அதாவது பாதாள உலக தாதாக்களைக் குறிப்பிடுகின்றனர்.
ராகுவின் ஆதிக்கம் மிகுந்தவர்களிடம் முடியாது என்ற வார்த்தைக்கே இடமில்லை. சாதி, மதம், குலம், கோத்திரம் எல்லாவற்றையும் தாண்டி சாதிக்க விரும்புவார்கள். பெரிய குறிக்கோளுடன் திடமான தொலைநோக்கும் இருக்கும். இவர்கள் சொல்வதும் செய்வதும் நடைமுறைக்கே ஒவ்வாததாக நமக்குத் தோன்றும். “பகல் கனவு காண்கிறான் பார்” என்போம். ஆனால் எப்படியோ தாம் நினைத்ததைச் சாதித்தே தீருவார்கள். மெல்லிய உடல்வாகும் சற்று உயரமான தோற்றமும் கொண்டிருப்பார்கள். எதிலும் பொடி வைத்தே பேசுவார்கள். தற்புகழ்ச்சியோடு தமக்குப் பிடித்தமானவர்களை தூக்கி வைத்துப்பேசவும் செய்வார்கள்.
சாதகத்தில் கேது நன்றாக அமைந்திருந்தால் பேச்சில் ஞானம் வெளிப்படும் தத்துவ முத்துக்களை உதிர்ப்பார்கள். வாழ்வில் தொடரும் துன்பதுயரங்கள் அவரை ஒரு முதிர்ந்த வேதாந்தியாக மாற்றும். இரத்தினங்களில் கோமேதகக்கல்லில் ராகுவும் வைடூரியத்தில் கேதுவும் ஒளிர்கிறார்கள். தானியஙகளில் ராகு உளுந்தாகவும் கேது கொள்ளாகவும் உள்ளனர். அதேபோல மந்தாரை மலரில் ராகுவும், செவ்வல்லியில் கேதுவும் வாசம் வீசுகின்றனர். பித்தளையை ராகுவும் வெண்கலத்தை கேதுவும் தத்தமது உலோகங்களாகக் கொண்டுள்ளனர். ஆட்டின் மீது ராகு சவாரி செய்கிறார். சிங்க வாகனத்தில் கேது சஞ்சரிக்கிறார். கருமையே தமது அருமையான நிறமென ராகு கூறுகிறார். எல்லா வர்ணங்களிலும் கேது தன்னை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். ராகுவின் தேவதையாக பத்ரகாளி விளங்குகிறாள். கேதுவின் அதிபதியாக இந்திரன் இருக்கிறார். இருப்பினும் நமது பாவபுண்ணியங்களைக் குறித்துக்கொண்டு அதன்வழியே எம்மை மறுபிறவிக்கு தயார்படுத்தும் சித்திரகுப்தனை கேதுவுக்கு அதிதேவதையாக சோதிடம் கற்பிக்கிறது. ராகு தந்தைவழி தாத்தா- பாட்டி உறவையும் கேது தாய்வழி தாத்தா-பாட்டி உறவையும் நிர்ணயிக்கிறார்கள். வளைந்து நெளிந்த கொடிகள் போன்ற அமைப்பே ராகுவின் ஆசனம், தென்மேற்கு ராகுவிற்குரிய திசையாகும். அதற்கு எதிரான வடமேற்கை கேது தனது திசையாகக் கொண்டுள்ளார்.
ஒருவரது சாதகத்தில் ராகு நன்றாக இருந்தால் அவர் நயமாகப் பேசுவார். ஆளறிந்து இடம்பொருள் ஏவலறிந்து பேசிப்புழங்குவார். ராகு சரியான முறையில் அமைந்திராவிடில் அந்நபர் எவரையும் தூக்கியெறிந்து பேசத்தயங்கமாட்டார். ஒரு கூட்டத்தைக் குழப்ப இவர் ஒருவரே போதும். ஒரு நல்ல விடயம் வம்பாக, வசையாக, வதந்தியாக ‘பரவுவதற்கு இவரே காரணமாயிருப்பார். எடுத்தேன், கவிழ்த்தேனென்று காரியத்தை முடிப்பார்.
உலகிலுள்ள அனைத்துச் சுகபோகங்களையும் அனுபவிக்கும் யோகத்தைத் தருபவர் ராகு. படிப்பில் அரைகுறையாய் இருக்கும் சிலர் தங்களது அனுபவ ஞானத்தால் மெத்தப் படித்தவர்களையும் தோற்கடிப்பர். இதற்குக் காரணம் அவரது சாதகத்தில் ராகு நல்ல இடத்திலமர்ந்து சுபர்பார்வையும் பெற்றுள்ளதே. அத்தகைய ராகுவானவர் சமய சந்தர்ப்பம் சூழ்நிலைகளை அவதானித்து பக்குவமாய்ப் பேசவைப்பார். நெருக்கடியான தருணத்தில் தோள்தட்டி உற்சாகப்படுத்துவார். அசாத்தியமான தன்னம்பிக்கையை அனாயாசமாக அருளுவார். வெற்றிபெற வேண்டுமென்று தீர்மானித்து விட்டால் தில்லுமுல்லு செய்தாவது வெற்றிபெறவைக்கத் தயங்கமாட்டார். அத்தகைய தருணங்களில் சட்டதிட்டங்கள் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல!
துறைமுகங்கள், தொழிற்சாலைகள், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், சுரங்கங்கள், மதுபானத் தொழிற்சாலைகள், சூதாட்ட விடுதிகள் என்று இவர் ஆட்சி செய்யும் பிரதேசங்கள் எண்ணிலடங்காதவை, வீதியோரத்தில் போதையில் கிடத்தி வாழ்க்கையைத் தொலைக்கச் செய்பவரும் இவர்தான். அதே தெருவோரங்களில் “லாபாய் லாபாய்’ என்று கூவி இரவு பகலென்று வியாபாரம் செய்யும் அங்காடிகள் எல்லாம் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்ட விடயங்கள் தான்.
எத்தனை சுகபோகங்களை அனுபவித்தாலும் அவற்றுக்கு மத்தியில் “காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா” என்று நீர்க்குமிழி வாழ்க்கையை உணர்த்திக் கொண்டிருப்பவர்தான் கேது. பூர்வ ஜென்மம், நிகழ் ஜென்மம் என்று ஏழேழு ஜென்ம பாவங்களுக்கும் பரிகாரம் தேடித்தருபவரும் இவர்தான். தனது இராச்சியம் முதல் பெற்ற பிள்ளைவரை அனைத்தையும் இழந்தாலும் சுடலையில் நின்று உண்மை பேசிய அரிச்சந்திரனின் நாவில் இருந்ததும் கேதுதான். வேதங்களையும் மந்திரங்களையும் அறியவைத்து தினசரி வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடிக்க வைப்பவரும் இவர்தான். இறைதூதர்களையும் சித்த புருஷர்களையும் அடையாளம் காட்டுவதில் இவரின் பங்கு மகத்தானது. கடும் விரதமிருக்கும் பக்தர்களின் உள்ளங்களை பக்குவத்தோடு வைத்திருக்கவும் செய்கிறார். இரத்ததானம் முதல் கண்தானம், உறுப்பு தானமென்று செய்வோரின் உள்ளங்களில் உறைந்திருப்பவர் கேதுவெனில் அதுமிகையானதல்ல.
சரி, இப்படிப்பட்ட தன்மையுள்ள ராகுவும் கேதுவும் எப்படி ஒருவருக்கு தோஷத்தைத் தருகிறார்கள்? இன்னும் சற்று உள்ளார்ந்து யோசித்தால், “அத்தனைக்கும் ஆசைப்படு” என்பதுதான் ராகு. “ஆசையே படாதே” என்று அழுத்துவதுதான் கேது. இரண்டும் பாம்புகள் தான். ஆனால் தத்தமது இயல்புகளால் ஒன்றுக்கு எதிராகத்தான் இன்னொன்று நகரும். “ஒருவன் மனது ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா” என்ற கண்ணதாசன் பாடலொன்று உண்டு. அந்த ஒளிந்து கிடக்கும் எண்பதும்தான் ராகுவாகவும் கேதுவாகவும் வெளிப்படுகின்றன.
அத்தனைக்கும் ஆசைப்படுவது மனதின் இயல்பு. அதில் சில சிக்கலான விபரீதமான ஆசைகள் தோன்றுவதும் கூட மனதின் இயல்புதான். ஆனால் யோசித்துப் பார்த்த, அல்லது கண்கூடாகக் கண்ட, விடயங்களை தவறான முறையில் அனுபவிக்கத் தொடங்கும்போது தான் உள்ளிருக்கும் ராகுவும் கேதுவும் தோஷமாக மாறுகின்றன. தவறான எண்ணங்களையும் தர்மமில்லாத தீங்கான காரியங்களையும் செயற்படுத்தினால் அத்தகையவரின் சாதகத்தில் அது மோசமான இடங்களில் அமர்ந்து தோஷமாக தன்னைக் காட்டிக்கொள்கிறது. அப்போது சர்ப்பங்கள் நஞ்சை உமிழத்தான் செய்யும். அதைத்தான் சர்ப்ப தோஷம் என்று சோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.
ராகு கற்பித்த பாடம்
ராகு-கேது சஞ்சாரம் பற்றிச்சொல்லும்போது தனது வடிவழகாலும் நடிப்புத்திறமையாலும் இறுதியில் அரசியல் சாணக்கியத்தாலும் புகழேணியின் உச்சத்துக்கு ஏறி, இறுதியில் மர்மமான முறையில் மாண்டுபோனதாக கற்பிதம் கொள்ளப்படும் தமிழகத்தின் முக்கிய புள்ளியொருவரைப் பற்றிச் சொல்லாவிட்டால் இக்கட்டுரை முழுமை பெற்றதாகாது…
அவர் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா! அவரது வாழ்க்கைப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் அவரை வழிநடத்தியது அவரது சாதகத்திலுள்ள ராகு திசையாகும். மிதுன இலக்கினத்தை முதன்மையாகக் கொண்டு பிறந்த ஜெயலலிதாவுக்கு கடைசிவரை கல்யாணம் நடக்கவில்லை. நடக்க குடும்பத்தானத்தில் வக்கிரமடைந்த சனி விடவில்லை. இருந்தாலும் இலக்கினத்திற்கு ஏழாமிடமான களத்திரஸ்தானத்தில் சுபக்கிரகமான வியாழன் ஆட்சிபெற்று வலுவாக அமர்ந்திருந்தபடியால் அவருக்கென்று ஒரு குடும்ப வாழ்க்கை இருந்ததும் அதற்கு அத்தாட்சியாக குழந்தையொன்று பிறந்து மறைவாக பிறிதோரிடத்தில் வளர்வதாகவும் சொல்லப்பட்டது. கடைசிகாலத்தில் அதுவும் வெளிப்பட்டது.
ஜெயலலிதா 2011இல் தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி தமிழக முதலமைச்சராக ஆட்சி பீடமேறினார். அதற்கு அவரது சாதகப்படி ‘இலாபத்தானத்தில் (11ஆம் வீடு) சஞ்சரித்த யோககாரகனான ராகுவின் திசை அவரது சாதகப்படி நடந்ததே காரணமாகும். ஆட்சியில் அவரும், தலையாட்டிப் பொம்மைகளான அவரது அமைச்சர்களும். உடன்பிறவாச் சகோதரியான சசிகலாவும் அவரது உறவுகளும் செய்த அளவிறந்த ஊழல்மோசடிகள் காரணமாக இடைநடுவே அவரது ஆட்சிபறிக்கப்பட்டதும், அவருக்கு 100 கோடிரூபா அபராதமும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதும் தெரிந்ததே.
அதன்பின் மேன்முறையீடு செய்ததில் அதில் அவர் எப்படியோ விடுதலையாகி 11.05.2015 இல் மறுபடியும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அதன்பின் படிப்படியாக தன்னைத் திருத்திக்கொண்டு ஆட்சி புரிந்து வருவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகையில், ஒரு தினம் திடீர்ச் சுகவீனமுற்று அப்பல்லோ மருத்துவமனையில் உயிர்நீத்ததாக சசிகலா, இளவரசி கோஷ்டியினரை உள்ளிட்ட தமிழக அரசாங்கம் உலகுக்கு அறிவித்தது. இதன்பின்னாலுள்ள மர்மங்களை யாரறிவார்? அதுதான் அறம் பிழைத்தால் அதுவே கூற்றுவனாகும் என்பதற்கு ராகு பகவான் நமக்குத் தரும் பாடம்!
திருவோணம்