அதற்கு முன்னர் சமூகம் பற்றிய சிந்தனையும், விழிப்புணர்வும் ஏற்படவில்லையா? இல்லை என்பது வரலாறு குறித்த அறிவீனம். சமூகப் பிராணியான மனிதனால் சமூகத்தைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. வாழ் நிலையும், அதனை உருவாக்கிய காரணிகளும் அவனது சிந்தனையை தீர்மானிக்கின்றது. இதற்கேற்ப ஏற்படும் விழிப்புணர்வில் வேறுபாடுகள் இருக்கக்கூடும்.
இன்றைய மலையகத்தாரின் முன்னோர் இலங்கைக்கு வந்து நூறு ஆண்டுகள் கடந்த பின்னரே (1823 முதல் 1930 வரையான காலகட்டத்தில்) விழிப்புணர்வு துளிர்விடத் தொடங்கியது. 1930 களில் எற்பட்ட உலக பொருளாதார பின்னடைவு மலையகத்தார் உட்பட முழு இலங்கையர்களையும் பாதித்தது. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு அரசியல்,தொழிற்சங்க முனைப்புகளை முடுக்கி விட்டன. இடதுசாரி அரசியலும், தொழிற்சங்கங்களும் தோற்றம் பெற்றன. இடதுசாரித் தன்மையான நடேச ஐயரின் தொழிற்சங்கம் தோட்ட மக்களிடையே இவ்விழிப்புணர்வை கொண்டு சென்றது. இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம் போன்ற இடதுசாரி கட்சி சார்ந்த அமைப்புகள் வர்க்க விழிப்புணர்வினை தூண்டிவிட்டன. இதன் விளைவாக தொழிலாளரிடையே போராட்ட முனைப்புகள் ஏற்பட்டன. கண்டி ஹேவாஹட்ட பகுதி முல்லோயா தோட்டத்தில் ஆரம்பமான தொழிலாளர் போராட்டம் படிப்படியாக புஸ்ஸல்லாவ, புபுரச, ரம்பொட, நாவலப்பிட்டி, ஹட்டன், பொகவந்தலாவ பகுதிகளுக்குப் பரவி, தொடர்ந்து, ஊவா, சப்ரகமுவ மாகாண தோட்டங்களுக்கும் பரவின. தொழிற்சங்க எழுச்சிப் போராட்ட காலமென இக்கட்டத்தினைக் குறிப்பிடலாம். இதனால் அச்சமடைந்த முதலாளிமாரும், அரசாங்கமும் அதிர்ச்சியுற்று அவற்றை ஒடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டன. கொடூர அடக்கு முறைக்கு ஆளான தொழிலாளர்கள் எதிர்த்து தாக்குதல்களை செய்தபோது, அவை இன்று போலவே பயங்கரவாத செயல்கள் எனக் கூறி அரச படையினராலும், குண்டர்களாலும் ஒடுக்கப்பட்டதோடு, நீதிமன்றங்களும் அவர்களுக்கு சார்பாக நடந்து கொண்டன.
1948 இல் குடியுரிமையும், தொடர்ந்து வாக்குரிமையும் பறிக்கப்பட்டு அரசியல் அனாதையாக்கப்பட்ட பின்னர் போராட்ட உணர்வோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் செல்வாக்கு பரவத் தொடங்கியது. முற்போக்கு, பகுத்தறிவு, சீர்திருத்த கொள்கைகளை இவ்வியக்கம் பரப்பியது.தோட்டப் புற படித்த இளைஞர்களையும், பிறரையும் கவர்ந்த இவ்வியக்கம் போராட்ட உணர்வினையும் விதைத்தது. ஊவா மாகாண தோட்டப் பகுதிகளில் இதன் செல்வாக்கு அதிகரித்து காணப்பட்டது. தோட்டங்களில் மன்றங்கள் உருவாகத் தொடங்கியது இக்கட்டத்திலேயாகும். இதனால் ஏற்பட்ட எழுச்சி 1956, 58 இனக்கலவரங்கள் வரை நீடித்தது.
சிறுபான்மையோர் சீறி எழுந்த போதிலெல்லாம் ஆட்சியாளர்கள் அரச இயந்திரத்தின் உதவியோடு குண்டர்களை வைத்து ஒடுக்குவது வழமையான நடைமுறை. பாதிக்கப்பட்டோர் மீண்டும் எழுச்சி பெறுவதனை இவ்வாறு தொடர்ந்தும் தடுக்க முடியாமல் போனது.
இவ்வாறான பின்னணியின் கலவையாக மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் உருவாகி பின்னர் மலையக இளைஞர் முன்னணியாக மாற்றம் பெற்றது. இதற்கு ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி ஆசிரியராக இருந்த இர.சிவலிங்கம் மூலவராகவும், திருச்செந்தூரன் இணையாளராவும் இருந்தார். இத்தீபச்சுடர் வியாகபத்தோடு சுடர்விடத் தொடங்கியது.
சிவலிங்கம், செந்தூரன் ஆகிய இருவரும் தமிழ்நாட்டு பட்டதாரிகள். மலையத்தில் இருந்து உயர் கல்விக்காக அங்கு சென்றோரில் இவ்விருவரும் தனித்துவ போக்கினைக் கொண்டோராக இருந்துள்ளனர். இவ் இரட்டையர்களில் மூலவரான சிவலிங்கம் தமிழ் நாட்டின் அன்றைய செல்நெறியின் செழிப்பான பகுத்தறிவு, முற்போக்கு, சமூக சீர்திருத்த முனைப்புகளை சுமந்து வந்த செயற்பாட்டாளராக மிளிர்ந்தார். இருவரும் இவ்விழுமியங்களின் பரப்புரைக்கு ஏற்ற தளமாக ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தனர். அதனூடாக மாணவர்களுக்கு சமூக உணர்வினை பிரகாசிக்கச் செய்து, அவர்களின் ஊடாக தோட்ட இளஞர்களிடேயே அதனை விரிவுபடுத்தினர். இதன் தாக்கம் பிற பாடசாலைகளிலும் ஏற்படலாயிற்று. அது மற்ற பிரதேசங்களிலும் விரிவடைந்தது.
சிறு பொறி தீப்பிழம்பாக மாணவர், இளைஞர் என பரவியது. இந்த சமூக எழுச்சியில் பல மட்டத்தினரும் சங்கமமாகினர். சமூகம் அடுத்த கட்டத்தினை நோக்கி நகரத் தொடங்கியது.
1930களில் நடேச ஐயரின் இடதுசாரிப் பாங்கான தொழிற்சங்க முனைப்பு தோட்ட முதலாளிகளாலும் அவர்களது அடியாட்களாலும் அடக்கப்பட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடியது ஆளும் கூட்டத்தினரை கிலிகொள்ள வைக்க, அதற்கு எதிரான வியூகங்களை வகுக்கத் தொடங்கினர். கூடவே வலதுசாரி போக்கினை வலுப் படுத்தும் வேலைகளையும் மேற்கொண்டனர். நடேச ஐயரின் தனி மனித முனைப்பு நாளடைவில் வலுவிழந்தது. எனினும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வளர்ச்சி அடைந்தன.
இவ்வாறான பின்னணியில்தான் இலங்கை, இந்திய காங்கிரஸ் தோற்றம் பெற்றது. அது இன, மத, ஜாதிக் கூறுகளின் கலவையாக வளர்ச்சி அடையத் தொடங்கியது. இந்தக் கூறுகள் அதன் பலமாகவும், பலவீனமாகவும் இருந்தன. இ.இ.கா . இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மற்றம் பெற்றது தொழிலாளர்களின் ஈர்ப்பினைக் கூட்டியது.
சமூக உணர்வு மேவிய இளைஞர்கள் அதனை வலுவும்,வளமும் உள்ளதாக வளர்க்க முனைந்தனர். பெரிசுந்தரம், வேலுப்பிள்ளை, நடேசன், செல்லையா, சோமசுந்தரம், ராஜலிங்கம், அஸீஸ் என பல தரப்பட்டோர் இதில் சங்கமித்தனர். H .H .விக்ரமசிங்க, மு.நித்தியானந்தன் ஆகியோர் வெளியிட்ட வேலுப்பிள்ளையின் ‘மலையக அரசியல்: தலைவர்களும், தளபதிகளும்’ என்ற நூலில் இதனைப்பற்றிய விளக்கங்கள் உண்டு. பெரும் எடுப்போடு பயணிக்கத் தொடங்கிய அவ்வமைப்பு சுயநல, வலதுசாரி வல்லூறுகளின் கைகளில் சிக்கிக் கொண்டதோடு தடம் மாறி செல்லத் தொடங்கியது. தோட்ட முதலாளிகளின் ஒடுக்குமுறைகளில் இருந்து தொழிலாளர்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட அவ்வமைப்பு தோட்ட முதலாளிகளின் கைகளில் சிக்கிக்கொண்டது.
பண பலத்தாலும், ஆளும் வர்க்க ஆதரவினால் அது சக்திமிக்க அமைப்பாக மாறியது. வர்க்கம் தவிர்த்து, இன, மத, ஜாதி உணர்வுகளின் மூலமாக அது வளர்ச்சி பெற்றது,இந்த அமைப்பின் வளர்ச்சிக் காலத்தில்தான் மக்களின் குடி உரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் முடமாக்கப்பட்டது.
மலையக மக்களின் போராட்ட உணர்வு மழுங்கடிக்கப் பட்ட கட்டத்தில் 1960இல் இவ்விழிப்புணர்வு தோற்றம் பெறுகின்றது. 1960களில் ஏற்பட்ட அதிர்வுகளை ஆற்றுப்படுத்தும் காரணிகளின் பின்னணி இதுதான். தேசிய உணர்வுப் பிரவாகத்தினை ஏற்படுத்திய 1956 அரசியல் மாற்றம் தமிழ், முஸ்லிம் மக்களிடமும் பாதிப்புகளை எற்படுத்தின.
மலையகத்தில் மாற்று அரசியலைத் தேடும் நிலையினை இது ஏற்படுத்தியது. சமூக மறுமலர்ச்சியாகக் கருத்தக்கூடிய கூடிய இவ்வோட்டத்தில் படித்த இளைஞர்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டனர். வலதுசாரி அரசியல் சார்பு மரபுக்குப் பதிலாக இடதுசாரி அரசியலை ஆதரிக்கும் மரபு உருவாகியது. அடிப்படை உரிமைகளைப் பறித்து, அடையாளங்களை நிர்மூலமாக்கிய ஐ.தே.கட்சியினை நிராகரித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், இடதுசாரி காட்சிகளையும் ஆதரிக்கும் மனோபாவம் உருவானது. இதேகாலத்தில் இ.தொ.காவில் இருந்து பிரிந்து அஜிஸ் தலைமையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உருவாக்கியது. முன்னைய அமைப்பில் இருந்த முற்போக்கு சிந்தனை கொண்ட பலர் இதில் இணைந்தனர்.
(தொடர் அடுத்த வாரம்)
பீ.மரியதாஸ்