காலைப்பொழுது. இன்னும் எட்டுமணியாகவில்லை. வீட்டு முன் படிக்கட்டில் நின்று அமைதியான மனதோடு பார்த்தான் சாதாத் அலி. எதிர்ப்பக்கமாக அமைந்துள்ள வீடுகள் தெரிந்தன. வீடுகளின் கூரைக்கப்பால் தென்னை மரங்கள் ஆடியசைவது தெரிந்தது. அதற்கும் அப்பால் நீலமும் வெள்ளையுமான வானம் தெரிந்தது.
கடந்த முப்பத்தைந்து வருடங்களாக இவை எவையும் இல்லாமல் போகவில்லை. அவற்றைப் பார்த்துப் பரவசமடைய நேரம்தான் இல்லாமல் போயிருந்தது. பள்ளிவாசலில் இருந்து அதிகாலையில் அதான் ஒலி கேட்டதும் எழுந்துவிடுவான் அவன். சுறுசுறுப்பாக எல்லாக் காரியங்களையும் முடித்துக்கொண்டு, காரியாலயத்தில் எட்டு முப்பதுக்கு முன் கையொப்பம் போடுவதற்காக பைக்கில் ஏறிவிடுவான்.
பரீட்சைகளில் சித்தியடைந்து பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டால், இனி அரசாங்க உத்தியோகம் பார்ப்பதுதான் அக்கால கட்டத்தில் கௌரவமாகக் கருதப்பட்டது. இரண்டு வருடங்கள்கூட நகரவில்லை.
இலிகிதர் சேவைப் போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு சேவையில் இணைந்தான். மாத்தறை மாவட்டத்தில் பல இடங்களிலும் கடமையாற்றினான். முப்பத்தேழு வருட சேவையின்பின் முகாமைத்துவ உதவியாளராக ஓய்வுநிலை அடைந்து இப்போதைக்கு ஒரு மாதம்தான். ஓய்வு பெற்றுவிட்டால் சிலபேர் பள்ளிவாசல் – தைக்காக்களைக் கட்டிப் பிடித்துக்கொள்வார்கள். இன்னும் சிலர் சமூக- சமய இயக்கங்களில் வழிகாட்டிகளாகவும் பேச்சாளர்களாகவும் மாறிவிடுவார்கள். இன்னும் சிலர் விவாகப் பதிவாளர்களாக, ஜேபி பதவிகளுக்காக ஓடித் திரிவார்கள். இப்படி ஏதோ ஒன்றில் இயங்காதவர்கள், பென்ஷன் எடுத்த பொலிஸ்காரனின் நிலைக்குத்தான் தள்ளப்பட்டு விடுவார்கள்.
சாதாத்அலி சற்றே வித்தியாசமாக யோசித்தான். மாதக் கணக்கில் சற்று முன்பின்னாக ஓய்வெடுத்த கிராம சேவகர் ஹுஸைன் மஹ்தியையும் சமூர்த்தி முகாமையாளர் இஸ்திகாரையும் சந்தித்து உரையாடினான். வித்தியாசமான சில சமூகப் பணிகளை முன்னெடுப்பதாகப் பட்டியல் படுத்தினர். அதில் முதலிடத்தை வகித்தது பாடசாலை நூலகம். ஓ.எல் வரை மாத்திரமே உள்ள ஓர் இடைநிலைப் பாடசாலை அது.
பாடசாலை அதிபர் அதற்கு முழுமையான ஆதரவை வழங்கியதோடு, ஒரு அறையை ஒதுக்கித் தருவதாகவும் தெரிவித்தார். புத்தகங்கள், திருத்தி எடுக்கக்கூடிய தளபாடங்கள், ராக்கைகள், இப்படியாக உத்தேச நிதித்திட்டமிடலும் தயாரிக்கப்பட்டது. ஊர் மக்களிடம் வாசிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி நிதி வசூல் செய்வதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.
“பள்ளி தக்கியாவெண்டா கண்ணப் பொத்திக்கொண்டு குடுப்பாங்க…கந்திரிகிந்திரி என்டா வாயத் தொறந்துக்கொண்டு குடுப்பாங்க…கிரிக்கட் மெச் ஃபுட்போல் மெச்செண்டாலும் கைய நீட்டிநீட்டி குடுப்பாங்க… லைப்ரரி என்டா இது தேவையாண்டு கேப்பாங்கள்” இஸ்திகார் சொன்ன யதார்த்த நிலை இது.
“கஷ்டம்தான். ஆனா பெறுமதியான விஷயம். இன்ஷா அல்லாஹ் ட்ரய் பண்ணோம்” மஹ்தி பின்வாங்கவில்லை.
மூவரது முகங்களிலும் அணுக வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியல் விரிந்தது.
*** *** ***
தபாற்காரனின் பெல் சத்தம் கேட்டது. ஒரு பத்தடி நடந்தால் தான் கேற்றடிக்குப்போகலாம். இரண்டு பாய்ச்சலில் பாய்ந்து சென்ற காலம் என்றோ கடந்துவிட்டது.
கடிதத்தை எடுத்துக் கொண்டு திரும்பிவிட முடியவில்லை. அங்கே அஸீன் தாத்தா வந்துகொண்டிருந்தாள். அதற்காக கேற்றடியில் நின்று கதைக்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?
“மிச்சம் நாளக்கிப் பொறகு கண்ட. உள்ளுக்கு வாங்கொளே “- ஊருலகத்துச் செய்திகளை அறியும் ஆவல் அஸாரியாவுக்கு இல்லாமல் போகுமா.
இருவரும் மெல்லமெல்ல நடந்தனர். கால் வலிக் காலத்தவர்கள் அல்லவா!
“பிலிங்க மரம் இன்னேம் ஈக்கியெனா? பளிக் கொடத்துக்குப் போறகாலத்தில இதால பிலிங்க பிச்சி உப்புக் கட்டிய ஒரச்சொரச்சி நக்கினது நெனவு வாரடி.”
“நானுமொருநாள் அஸ்கியா, நுஸ்கியா எல்லாரும் வந்தீந்த டைமில பேசிப்பேசி பிலிங்க திண்டு ராவு பொகுத்து வலி புடிச்சிட்ட. பொறகு தொண்டில்லே வாட்டில கொணுபெய்த்துப் போட்ட என்ன…அதுசரி இப்பிடி இரீங்கொளே. நானிந்த காயிதத்த வெச்சிட்டு வாரன் “- என்றவாறு வராந்தா கதிரையைக் காட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
வீட்டைச் சுற்றிக் கண்களைச் சுழற்றிய அஸீன் தாத்தாவுக்கு கறிவேப்பிலை மரம்தான் பெரிதாகத் தெரிந்தது. மருந்து மாயத்துக்குத் தேவைப்படும் குறிஞ்சா, கற்றாழை, நகச்சுற்ற இலை போன்றவையும் ஆங்காங்கே தெரிந்தன.
“இந்தாங்கொ கசட்ட கொஞ்சமும் கருப்பட்டியும். நானெண்டா வெறும் கசட்டதான் குடிக்கிய ”
“அய்சரி மாப்பிள இல்லயா ஊட்டில?”
“இப்பதான்போன. இனி ளொஹரு தொழுதிட்டுத்தான் வாரொண்டும்”
“ஓடீ மாப்பிள மாரு ஊட்டுக்குள நிண்டா கத்தக் கரச்சல்தான்”
இருவரும் எதையெதையோவெல்லாம் நினைத்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர்.
“ஓண்ட மாப்பிளேம் பென்ஷன் எடுத்திட்டாமே. அப்ப ஒனக்கு நல்ல வாசிதான்.”
“கெடச்ச சம்பளமும் கொறஞ்சிட்ட. அது வாசியா?”
“சம்பளம் கொறஞ்சத்துக்கி லச்சக் கணக்கில கெடக்கியாம். அந்தக் கெழட்டு பீபி டீச்சருக்கே முப்பத்தாறு லட்சம் கெடச்செண்டால் பாத்துக்கோ”
” என்ன சொல்றீங்க?”
“அந்த அமீர் மாஸ்டர், நல்ல பஸந்தா மகள மாப்பிளேக் குடுத்த பென்ஷன் எடுத்துத்தானே…ஓபீஸ் வேலக்கிப் போன உம்முக்குலுஸட மருமகன், வேஹல்லேல பென்ஷன் சல்லிக்கி காணி துண்டொண்டு எடுத்துப் போட்டு அஞ்சு வருஷமும் ஆகல்ல. இப்ப கோடி பொறுமதியெண்டா லேசா ? ”
அஸாரியாவால் நம்ப முடியவில்லை” சல்லி கொஞ்சம் கெடக்கியாம். எப்பிடீம் ஒரு வருஷமாலும் போகுமாம்”- பேச்சுவாக்கில் கணவன் சொன்னதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லைதான்.
“பேசிப்பேசீந்து சரிவாரல்ல. பகலக்காக்கோணுமேன். எறச்சி மீன்… பருப்பு கெழங்கு… பச்சகொச்சிக்கா தக்காளிக்கா… வீட்டில எதுவுமே இல்ல. சுறுசுறெண்டு இந்த மழக்கூத்தால மனிசனுக்கு ஒண்டுமே நடக்குதில்ல.”- என்றவாறு பிடவையைச் சரி செய்துகொண்டு அஸீன் எழுந்தாள்.
“ஏத்தியன் பொகப்போறோ.கொஞ்சம் நில்லுங்கொ பிலிங்க கொஞ்சம் பிச்சித் தாரன். ”
“ஆ அப்ப கறிவேப்பிலையும் கொஞ்சம் ஒடச்சித்தா”
அஸீன் தாத்தா கேற்றைக் கடக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த அஸாரியாவுக்கு, ‘மாப்புளமாரு ஊட்டுக்குள நிண்டா கத்தக் கரச்சல்’ என்று சொன்னது ஞாபகம் வந்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை.
*** *** ***
கைபேசியை ஓஃப் செய்துவிட்டு சாய் கதிரையில் அமர்ந்த சாதாத் அலிக்கு அவனது பெரியப்பாவின் பேரனின் வருகைக்கான காரணம் என்னவாக இருக்குமென்று புரியவில்லை.
அவன் படித்துக் கொண்டிருக்கிறானா அல்லது ஏதாவது தொழில் செய்கிறானா என்பதும் தெரியவில்லை. உண்மையில் அப்படி நெருக்கமான தொடர்புகூட இருக்கவில்லை. பரம்பரைச் சொத்துப் பகிர்வில் பெரியப்பா நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று வாப்பா இருக்கும்போது சொன்னது அவனுக்கு ஞாபகம்.
‘சரி வரட்டே பாக்கோம்’ என்று சாய்ந்துகொண்டிருந்த சாதாத்அலி தன்னையறியாமலேயே தூங்கிப் போய்விட்டான்.
“அஸ்ஸலா மலைக்கும் ” என்ற குரல் வாசற்படியில் ஒலித்தபோது திடுக்கிட்டு விழித்தான் அலி.
“ஆ வாங்க வாங்க. மிச்ச நாளேப் பொறகு கண்ட. சாச்சா எப்பிடியன் சொகமா?”
” ஓ நல்ல சொகம். மகன் வெளிநாட்டுக்கு பொகவெண்டு ரெடியாகிய. யாவாரமெல்லம் மிச்சம் டல்லான காலம். எல்லமே கொழப்பம். வெளிநாட்டில ரெண்டு, மூணு வருஷம் நிண்டிட்டு வந்தா நல்ல மெண்டுதான் எனக்கும் படுகிய “- சாச்சா நிதானமாகப் பேசினார்.
“ஓ இப்ப எல்லாம் தொறந்துட்டீக்க. ஏஜென்ஸி காரனியள் ஏத்தி அனுப்புவானியள். அங்க பெய்த்து தின்னேம் வழில்லாம மனிசர் படுகிய பாட்ட டீவீயெல்ல ஒரே காட்டிய “- நிலைமை இப்படித்தான் என்று எடுத்துச் சொன்னான் அலி.
” நீங்க செல்லியது மெய்தான். ஏன்ட கூட்டாளி மாரியள் அங்க வேல செய்த. அவங்க எல்லம் செட் பண்ணித் தாரென்டு செல்லீக்கி.”- இக்பால் ஜான் தெளிவாகப் பேசினான்.
“பெரிசா யோசின பண்ண வான. எல்லாத்தேம் நான் பொறுப்பெடுக்கியன். ஒருலெச்சம் ரெண்டு லெச்சம் கேட்ட காலத்தில போறது கஷ்டம். இப்ப போறது லேசு. ஆனா பெரிய கணக்கு கேக்கிய”- சாச்சா மேலும் உறுதியளித்தார்.
“ஏன்ட கைலேம் கொஞ்சமீக்கி. ஒரு அஞ்சிலெச்சம் கொறவு. போனா ஏன்ட மொதலாவது வேல எடுத்த கடனெல்லம் குடுக்கியதுதான். நம்பித் தந்தவங்கள ஏமாத்தப்படாது. பரக்கத்தில்ல”
வாப்பாவுக்கு சற்றும் குறையாமல் மகனும் பேசினான். என்ன செய்வதென்று சாதாத் அலிக்குத் தோன்றவில்லை.
“சரி நல்லொரு விஷயம்தான். நான் கோலொன்டு தாரனே “-
“அல்ஹம்துலில்லாஹ் ”
இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.
*** *** ***
சாகிர் அலியைக் கால்நடையாக வீதியில் கண்டால் அவன் பள்ளிவாசலுக்குப் போகிறான் அல்லது போய் வருகிறான் என்ற அர்த்தம்.
இவரை இடை நடுவில் பிடித்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் சத்தார் – ஹாஷிம் நண்பர்களின் இலக்கு. இருவரும் முறையே சிடி டெக்ஸ், சிடி டொய்ஸ் உரிமையாளர்கள். இருவரும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்பவர்கள்.
இருவருமாக சாதாத் அலிக்கு ஸலாம் சொல்லி சிரித்துக் கதைத்துக் கைக்குள் போட்டுக் கொண்டனர். இனி ஊருக்குள்ளே உலாவரவேண்டி இருந்ததால் பலரோடும் சிநேகிதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் அவனுக்கிருந்தது.
“அப்பிடியே எங்கட கடையடிக்குப் பெய்த்து ஒரு பிளேன்றி குடிக்கோம்.”- சத்தாரின் அழைப்பு.
இந்த நேரத்தில் அது வெறும் பிளேன்றியாக இருக்காது, கூடவே சுடச்சுட ஒரு கடியும் இருக்குமென அவன் ஊகித்தான்.
சிடி டெக்ஸ் ஒரு சுமாரான கடை. இரண்டுபேர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அதற்குச் சற்று முன்னெதிரே சிடி டொய்ஸ் தெரிந்தது. சிறுவர் விளையாட்டுப் பொருட்களெல்லாம் தொங்கிய வண்ணமிருந்தன. கடையின் பிற்பகுதியில் ஒரு மேசையும் நான்கு கதிரைகளும் கிடந்தன. கூடிப் பேசுவதற்கேற்ற சிறு ஒழுங்கு. சுடச்சுட இஞ்சிப் பிளேன்றியும் ரோல்ஸும் வந்து சேர்ந்தது. சொல்லமுன்பே சதாத் அலியின் கைநீண்டது.
“நீங்க பென்ஷன் எடுத்தீக்காமெண்டு கேள்விப்பட்ட”- சத்தார் ஆரம்பித்தான்.
“பென்ஷனெடுக்க இன்னமொரு பத்து வருஷமாவது பொகுமெண்டுதான் நான் நெனச்சீந்த “- ஹாஷிமின் வியப்புரை.
தான் இன்னும் இளமை என்ற கருத்துப்பட யாராவது ஏதாவது சொன்னால் அதைவிட ஆனந்தம் சதாத் அலிக்கு இல்லை.
“இந்தக் கடயாவாரம் அப்பிடியே இருக்கச்செல்லே ரெண்டுபேரும் சேந்து ஒன்லைன் பிஸ்னஸொண்டுக்கு ஏற்பாடு செஞ்சிக்கொண்டீக்கீய. மூணு மாஸ்தக்கி முந்தி ரெண்டு பேரும் சைனாக்கும் பெய்த்திட்டு வந்த.”- மிக உசத்தியான முன்னுரையை வழங்கினான் சத்தார்.
“அல்லாவெண்டு எறங்கினால் வெத்திதான். நம்பிக்கயான… விஷயம் வெளங்கின… ஒரு பாட்னர் எங்களுக்குத் தேவயாஈந்த. எல்லாம் சட்டப்படி எழுத்துமூலம் நடக்கும். கொஞ்சம் யோசிச்சிப் பத்து செல்லுங்க ஸேர்”- ஹாஷிம் நறுக்கென்று முடித்துவைத்தான்.
மஃரிபு வரையில் பேச்சு வார்த்தை தொடர்ந்தது.
“இன்ஷா அல்லாஹ் பேசோம்”- என்றபடி சதாத் அலி எழுந்தான்.
பச்சையொளிப் பிரகாசம் எங்கும் பரவுவது போலிருந்தது.
மூவரும் மீண்டும் பள்ளிவாசலை நோக்கி….
*** *** ***
மெல்லிய குளிர்க்காற்று வீச ஆரம்பித்திருந்தது. இத்தனைக்கும் இரவு ஒன்பது மணிதான். சாப்பாட்டு நேரம். அதன்பின்பு கொஞ்சநேரம் டீவீ பார்த்துவிட்டு, பத்து மணியாகும்போது நித்திரை. இதுதான் சதாத் அலியின் ஒழுங்கு. விடிய வேலைக்குப் போகும் காலத்து ஒழங்கை மாற்றிக்கொள்வது கஷ்டமாக இருந்தது.
” தாரோ வார போலீக்கு “- வீட்டுக்குள் இருந்தபடியே கேற்றடியைப் பார்த்துக்கொண்டு சொன்னாள் அஸாரியா.
” ஆம்பிளயா பொம்பிளயா ?”
” பொம்பிளயள் போலீக்கி ”
” அப்ப நீங்க ஸ்தோப்புக்குப் போங்கோ”
சற்று நேரத்தில் வந்தவர்களும் அஸாரியாவும் கலகலப்போடு உள்ளே வந்தனர். அந்தக் கலகலப்பு நெருங்கிய பழக்கக்காரர் என்பதை உணர்த்தியது.
” ஆ உம்மு தாத்தா… மிச்ச நாளேப் பொறகு?”
“ஓ விடிஞ்சா அந்திபட்டா இனி இடுமூச்சினில்லாத வேலவெட்டி. ம் மகளட புள்ளயளால தப்பேல. உம்மும்மா உம்மும்மா எண்டு என்னத் தின்னப்போற. உம்மாக் கணக்கில்ல. என்னோடேதான். இனி சொகமா ஈக்கியா? இப்ப பென்ஷன் எடுத்திட்டாமெண்டு கேள்விப்பட்ட”- உறவுமுறை இல்லாவிட்டாலும் பழக்க முறை மேலானதென்பதை உம்முதாத்தா வெளிக்காட்டினார்.
“இப்ப ஒங்கட வாப்பாம் இல்ல. எங்கட வாப்பாம் இல்ல. அவங்க ரெண்டு பேரேம்போல கூட்டாளித்தனமா இந்தூரில வேற தாராலும் ஈந்தில்ல”
“அதெண்டா மெய்தான். அந்த மொஹப்பத்த நாங்க கடசிவரேம் வெச்சிக்கொளோணும்.”
இடையில் குறுக்கிட்ட அஸாரியா “இவரு ஒரே நெனவூட்டியவா”- என்று கொஞ்சம் பலப்படுத்தினாள்.
“பேசிப்பேசி டைம் போர. ம்..வந்த விஷயத்த சதாத்தோட செல்லோனேன். எங்கடூட்டுக்கு அடுத்தூடு. சின்னோரு ஊடுதான். அந்த மனிசன் உப்புக் கிரிந்த. ஊட்ட வித்திட்டு அங்க பொகப்போறாம். எங்களோட உசிருமாதிரி. மகளட பொம்புளப் புள்ளயள் வளரியேன். எப்பிடிச்சரி எடுத்துக் கொண்டா நல்லம்”
அஸாரியாவுக்கி இப்போதுதான் மீற்றர் பிடிபட்டது.
“ஓ நல்லந்தானே. சவுதீல நிக்கிய மகனோட செல்லி, பாத்துப் பாத்து ஈக்காம எடுத்துப் போடுங்க “-விளங்கியும் விளங்காததுபோல சாதாத் அலி சொன்னார்.
“மகன் கோல் பேசீன. ஒங்களோட, மம்மது மாமோட, ஸெய்ன் சாச்சோட, எல்லாரோடேம் செல்லச்சென்ன. அந்தப் பொடியன் கூட்டம் குடும்பமெண்டு கொஞ்சமான சல்லி செலவளிக்கியா. ம் எதுக்கும் கொஞ்சம் யோசின பண்ணிப் பாத்து ஒதவி செய்ங்கொ “- என்றபடி சுவர் மணிக்கூட்டைப் பார்த்துப் பார்த்து உம்மு தாத்தா எழும்பினாள்.
“எல்லாம் ஹைராகும். நாளக்கி நான் அந்தப்பொகத்துக்கு வாரனே”
அப்படியே போய் கேற்றை மூடிவிட்டு வந்த சதாத் அலியின் கண்களில் தூக்கம் நிரம்பியிருந்தது.
*** *** ***
அன்று சுபஹு தொழுதுவிட்டு வரும்போது கையோடு சுருட்டாப்பம் கொண்டு வருவதற்கும் மனைவி உள்ளேயிருந்து கோப்பிக் கோப்பையோடு வருவதற்கும் சரியாக இருந்தது.
இருவரும் பேசிப்பேசி குறைந்தது ஒரு மணித்தியாலத்தைக் கடத்தும் நேரமாக இது மாறியிருந்தது. சதாத் அலி ஓய்வுபெற்றபின் இப்படி நேரமாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
“ஒரு காலத்திலேம் வராத ஆள்களெல்லம் இப்ப ஒங்கள தேடித்தேடி வாராங்க. எனக்கெண்டா வெளங்கல்ல.”- இதுபற்றிய தெளிவு அவளுக்குத் தேவைப்பட்டிருந்தது.
“பென்ஷன் எடுத்தா கோடிக்கணக்கில சல்லி குடுத்தனுப்பியெண்டு எல்லாரும் நெனச்சிக் கொண்டீக்கியபோல. எனக்கும் புதினமா ஈக்கி”- அவன்கூட நினைத்துப் பார்த்திராத விடயம்தான் இது.
“கோடிக் கணக்கில இல்லாட்டீம் லச்சக் கணக்கிலயாவது கெடக்கியா? ஒரு பத்துப் பதினஞ்சாயிரம் கெடக்குமெண்டுதான் நான் நெனச்சீந்த. செல்லுங்கொளே எத்தின லெச்சம் கெடக்கியன்? “- அஸாரியா விட்டபாடில்லை.
” அது இப்பவே கெடக்கியல்ல. ஒரு வருஷமாலும் போகும். எப்பிடீம் ஒரு முப்பத்தெட்டு லச்சம் கெடக்கும் போல ”
“என்னல்லா அவளவு கெடக்கியா? நம்பேலவேன். இது தெரிஞ்சுதான் ஒத்தரொத்தரா போலின் போட்டு வார. ஒத்தரயாலும் நம்பவாண. அவனியள் தரப்போறேமில்ல நீங்க கேக்கப் போறேமில்ல. இவனியள்ட அகப்புட வாண. எங்களுக்கு இன்னும் எத்தின வேலவெட்டி ஈக்கன். எல்லாரும் ஊடு வாசல ஒடச்சொடச்சிக் கெட்டிய. எங்கடூடு இன்னும சீ மயோட்டுக் கூர. நாளக்கே பாஸக் கூட்டிக்கொணுவாங்கொ. இதூப் பொறகு வரட்டும் பாக்க தாருசரி. கேள்வி கொஞ்சம் கேக்கியன் ”
பேய்பிடித்ததுபோல் அவளது முகமே மாறியிருந்தது. அவன் பேச்சுக் கொடுக்கவில்லை.
*** *** ***
அண்மையில் ஓய்வு பெற்றவர்களான சாதாத்அலி, ஹுஸைன் மஹ்தி, இஸ்திகார் ஆகியோர் ஒன்றுகூடி சமூக வேலைத் திட்டம் தொடர்பாக அலசி ஆராய்துவிட்டு கலைந்துபோக அதிக நேரமாகவில்லை.
முதல் வேலையாக பாடசாலை வாசிகசாலைக்கான நிதி திரட்டலில் பாதிகூடத் தேறவில்லை. இதையொரு தேவையான விடயமாக பலரும் எடுத்துக்கொள்ளவில்லை. இன்னும் ஒரு லட்சம் ரூபாவாவது இருந்தால்தான் சமாளித்து வேலையை முடிக்கலாம் என்றநிலை. “இது நடக்காட்டி இதுக்குப் பொறகு இன்னுமொண்டு செய்ய எங்களுக்கு மனம் வராது. நாங்களும் சேர்த்துக்கிட்டு கிரிக்கட் மெச்சும்தான் நடத்தவாகும். கெட்டின பெரய எப்பிடிச்சரி அடிக்கோம்.”- சதாத் அலியின் உணர்ச்சிவசமான பேச்சு இருவரையும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தது.
அவர்கள் வீடுகளைச் சென்றடைந்திருந்தபோதிலும் சதாத் அலி முற்றத்துக் கதிரையிலிருந்து இன்னும் எழும்பவில்லை. யாரோ கேற்றைத் திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே பள்ளிவாசல் மு அத்தினார் வந்தொண்டிருந்தார்.
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வேலை செய்து வருபவர். எப்படியும் அறுபது வருடங்களுக்கு மேல்தானிருக்கும். ஆனால் சுறுசுறுப்புக் குறையவில்லை. பள்ளிவாசலை பெருக்குதல், ஒட்டடை துடைத்தல், பாய்களை விரித்தல், ஹவுழுக்கு தண்ணீர் நிறைத்தல், மலசலகூடங்களைத் துப்புரவு செய்தல், இப்படி இன்னும் எத்தனை வேலைகள்.பெரிய சம்பளமும் இல்லை. முன்புபோல் மேலதிக வருமானமும் இல்லை. பாவம்தான். ஏதோ உதவி நாடித்தான் வருகிறார் போலும். கொஞ்சம் பெரிய உதவியொன்று செய்யவேண்டுமென்று காணும் போதெல்லாம் நினைப்பான். இன்று சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாதென்று எண்ணியபடியே எழுந்து சலாம் சொல்லி வரவேற்றான்.
“இரீங்கொ மோதீனப்பா. சொகமா? புள்ள குட்டியள் எப்பிடியன?”
“எனக்கு ஒரேயொரு மகள்தான். சொந்த ஊரு யக்கஸ்முல்ல. மகளப்பத்தித்தான் எனக்கு ஒரே யோசினயா ஈந்த. அத அல்லா லேசாக்கீட்டான். மாப்புள ஊட்டாரே கேட்டுவந்து பாத்து புரியப்பட்டிட்டாங்க. நாங்க நிக்காஹ் செஞ்சி குடுத்திட்ட. மருமகன் டுபாயில வேல. ரெண்டு கெழமேல கூட்டிக்கொண்டு பெய்துட்டாங்க ”
“அல்ஹம்துலில்லாஹ். நல்லவங்கள அல்லா கையுடமாட்டான் மோதீனப்பா. சந்தோஷமாயீக்கி”-
“மகளுக்கு குடுக்க நெனச்சீந்த ஊட்டுப் பங்க தங்கச்சீட மகளுக்கு எழுதிக் குடுத்திட்டன். நான் வாணான்டு செல்லச்செல்ல எனக்குச் சல்லி கொஞ்சமும் தந்தாங்க. ”
என்ன நடக்கிறதென்று சதாத் அலிக்கு விளங்கவில்லை. சக்கரம் மறுபக்கம் சுழன்றுகொண்டிருந்தது. “வேலீக்கி பள்ளீல. அப்ப நான்போறன் தொர. ஒங்கட ஸ்கூல் லைப்ரரி வேலக்கி இதேம் சேத்திக் கோங்க.சின்னத் தொகயொண்டு.”- என்றவாறு ஒரு கவரை நீட்டினார். ஒன்றும் புரியாநிலை. சதாத் அலி எடுக்கவில்லை. டக்கென்று அவரது சேட் பொக்கட்டில் திணித்துவிட்டுத் திரும்பி நடந்தார். கேற்றைக் கடந்து செல்லும்வரை பார்த்துக்கொண்டே இருந்தான். ஒருவித படபடப்புடன் மெல்ல அந்தக் கவரை எடுத்து விரித்தான். அதற்குள் ஐயாயிரம் ரூபாத் தாள்கள் இருபது.
‘சின்ன மசிஷன்தான். ஆனா எவளவு பெரிய மனசு ‘ சாதாத் அலி வியந்துபோனான்.