சடப் பொருட்களில் பொதிந்துள்ள வேதியல், பௌதிக இயக்கங்களால் மாற்றமும், வளர்ச்சியும் ஏற்படுவது போன்றே
சமூகத்தி-லும் அதன் உள், வெளி கட்டுமான இயக்கங்களால் மாற்றமும், வளர்ச்சியும் ஏற்படுகின்றது. உற்பத்தி சக்திகள், அதனூடாக உருவாகும். உறவுகள்ஆகியவற்றின் இயக்கத்தால் இவை ஏற்படுகின்றன. இயக்கவியல் எனக் கூறப்படும் இவ்விஞ்ஞான உண்மையின்படி இவை தவிர்க்கப்பட முடியாதவை.
இந்த உண்மையின்படி மலையகத்தின் எதிர்காலம் பிரகாசம் குன்றியதாக இருக்காது. மலையகச் சமூகத்தின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மலையகச் சமூகம் பெரும்பான்மை பாட்டாளிகளையும், அடுத்ததாக வளர்நிலையிலுள்ள மத்திய வர்க்கத்தினரையும், அதற்கடுத்து சிறு வர்த்தகர்களையும், பெரும் வணிகர்களையும், புறத்தில் உள்ள விளிம்பு நிலையோரையும் கொண்டது.
மொழியும், சமயமும் இவர்களை பிணைப்பனவாகவும், தொழிலும், வாழ்நிலையும் வேறுபடுத்துவனவாகவும் இருக்கின்றன. இம்மக்களை மலையகத் தமிழரெனவா, இந்திய வம்சாவளித் தமிழரெனவா என்று இனங்காணும் குடுமிச்சண்டை இவ்வேறுபட்ட நிலைப்பாட்டினைக் காட்டுகின்றது. இச்சமூகத்தில் இருந்து பொருளாதார மேம்பாடு அடைந்து,வெளியேறி சமூக உயர்வாக்கம் பெற்றோர் மற்ற பிரிவினரோடு இனங்காட்ட அசூசைப் படுவதனை உணர்த்துவதாக வேலண்டைன் டேனியல் எனும் ஆய்வா-ளர் கூறியுள்ளார். இது பகை முரண்பாட்டு நிலைக்கு வளர்ச்சி அடையவில்லை.
மலையக மக்களுக்கு இன, வர்க்கம் எனும் இரு அடையாளங்கள் இருக்கின்றன. இன அடையாளம் தொன்மைசார் பெருமித முதுசம். இதற்கு உள்நாட்டு தமிழர், தமிழ்நாட்டார், புலம்பெயர் தமிழர் ஆகியோர் ஆதரவு சக்திகளாவர். வர்க்க அடையாளம் தொழிலும், வாழ் நிலையும் சார்ந்தது. இதற்கு இந்த நாட்டு பாட்டாளி வர்க்கத்தாரும், உலகளாவிய பாட்டாளிகளும் ஆதரவுச் சக்திகள். எதிர் காலத்தில் மலையக மக்கள் இவ்விரு அடிப்படைகளிலும் எதிர்கொள்ளக்கூடிய சவால்களுக்கு ஆதரவாக இச் சக்திகள் இருக்கின்றன.
மலையக மக்களின் எதிர்காலம் இந்நாட்டின் மொத்த மக்க-ளின் எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டது. இலங்கையர் ஆள்வோர் விரித்த மாயைகளை படிப்படியாக விளங்கிக்கொள்ளும் கட்டத்திற்கு வளர்த்துள்ளனர். இலங்கையின் வரலாறு இதற்குச் சான்று. விஜயனும், கூட்டாளிகளும் நாட்டுக்குள் வந்து, குடியேற்றங்களை அமைத்து, மன்னர் ஆட்சியை ஆரம்பித்த காலம் முதல் மக்கள் ஒரு பிரிவினராகவும், அவர்களை ஆண்ட அரசர்களும், அவர்களை சார்ந்த மேட்டுக் குடியினரும் வேறொரு பிரிவினராகவும் இருந்து வந்துள்ளனர். நிலம், நீர் உட்பட அனைத்து இயற்கை வளங்-களும் அரசர்களுக்கும், அவர்களை சார்ந்த உயர் குடியினருக்குமே சொந்தம். பாமரர்கள் அவர்கள் கொடுத்ததை அல்லது கிடைத்ததைக் கொண்டு வாழ்க்ைகயை ஒட்டினர். இயற்கைச் சீற்றங்களின் போது அவர்கள் பஞ்சத்தால் தவித்தனர். இதுவே அவர்களது வாழ்க்கை நியதி என்று நம்ப வைக்கப்பட்டது. இந்த பாவச் செயலுக்கு வெகுமதியாக அவர்களுக்கு சகல வசதிகளையும் அரசர்கள் செய்து பராமரித்தனர்.
1505, 1658, 1796 ஆண்டுகளில் ஐரோப்பியர் முதலில் கரை-யோரப் பகுதிகளையும், பின்னர் முழு இலங்கையையும் கைப்பற்றி ஆண்ட காலத்திலும் இவ் இருள் சூழ் வாழ்க்கை நீடித்தது. என்ற போதிலும் மேலத்தே-யரின் வருகையோடு மேம்போக்கான சில மாற்றங்கள் ஏற்பட்டன. கிறித்தவமத அறிமுகம்,1789 இன் பிரெஞ்சுப் புரட்சி, 1848ஆம் ஆண்டின் பொதுவுடமைப் பிரகடனம், அத-னை அடுத்து ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்ட புரட்சிகள் ஆகிய-வற்றின் அதிர்வுகள் இங்கும் ஏற்படத்தொடங்கின.
இவ்வாறான மக்கள் நலன்சார்/மீட்சி பற்றிய அதிர்வுகளை மக்கள் உணர்வதற்கு முன்னர் ஆளும் வர்க்கத்தார் விளங்கிக்கொண்டு, அவற்றை முறியடிக்கும் வியூகங்களை வகுக்கத் தொடங்கினர்.
பொதுவாக நாட்டு நிலைமையினைப் போன்றே மலையக நிலைமையும் கொதிநிலையில் இருக்கின்றது.தோட்டங்கள் தேச உடமை ஆக்கப்பட்டதன் பின்னர் அதன் பரப்பளவும், உற்பத்தியின் அளவும் வீழ்ச்சி அடையத்தொடங்கின. ஆளும் கட்சி ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்துவதற்காக தேயிலைக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டமை, மகாவலி, மேல், கீழ் கொத்மலை நீர்ப் பாசனத்திட்டங்கள், அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை புறக்கணித்து பாதிக்கப்படாத சிங்கள மக்களுக்கு தோட்டக் காணிகள் கொடுக்கப்பட்டமை போன்ற செயல்களால் தோட்டங்களின் அளவு குறைந்தது. தோட்டங்கள் முறையாக பராமரிக்கப் படாததாலும், மீள் நடுகை செய்யப்படாதலும் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. ஆட்சியாளர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள் என தோட்ட முகாமைத்துவ அறிவும், அனுபவமும் அற்றோரிடம் முகாமைத்து பொறுப்பினைக் கொடுத்ததால் பராமரிப்பும், உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. வீழ்ச்சி சீர் செய்யப்பட முடியாத கட்டத்தில் மீண்டும் தனியார் கம்பெனிகளிடம் கொடுக்கப்பட்டது. குத்தகைக்காரர்களான அவர்கள் கிடைத்ததை சுருட்டி தோட்டங்களை காடுகளாக்கியுள்ளனர்.
அரசுடமை ஆக்கப்பட்டவுடன் ஜனவசம, உசவசம, நட்சா போன்ற முகாமைத்துவ அமைப்புகளை ஏற்படுத்தி, ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கு காணிகள் கொடுக்கப்பட்டன. கம்பனிகளுக்கு கொடுக்கப்பட்டதன் பின்னரும் இது தொடர்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. பசளை இடல், பீடைக் கொல்லி பாவனை ஆகிவற்றை நிறுத்தி, பயிர்ப் பாதுகாப்பு செய்யப்படாமல் தோட்டங்கள் பாழடைந்துள்ளன, என்ற போதிலும் வஞ்சகமற்ற தொழிலார்களின் உழைப்பால் வருமானம் பாதிப்படையாமல் உள்ளது. அதே போன்றே உற்பத்தியில் தள-ம்பல்கள் ஏற்படுகின்ற போதிலும் தேயிலைத் துறை முழுமையாக முடங்கி விடவுமில்லை,கம்பெனிகளின் லாபமும் பதிப்படையவில்லை.
காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் பின்னர் சிறு தோட்டங்கள் என்ற பரப்பளவில் சிறியதான தோட்டங்கள் முன்னிலைக்கு வந்தன. பெரும்பாலும் பெரும்பான்மையினருக்குச் சொந்தமான இத்தோட்டங்களுக்கு அரசாங்கத்தின் அனுசரணையும், தாராள உதவிகளும் கிடக்கின்றன. அதனால் அவை வளமும், உற்பத்தித்திறனும் கூடியவையாக இருக்கின்றன.
தோட்டத்துறை தேய்ந்துவரும் இன்றைய கட்டத்தில் தொழிற்சங்க இயக்கமும் தேய்ந்து வருகின்றது. 1940 களில் துடிப்போடு எழுச்சியுற்ற தொழிற்சங்க இயக்கம் வீரியம் குன்றியுள்ளது. ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிகள், அதனோடு ஒட்டிய சோரம்போன, சுயநல வலதுசாரி தொழிற்சங்களினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. தொழிற்-சங்க போராட்டங்களின் மூலமாக பெற்ற நலன்கள் ஏராளம். இன்று இக்கருவி இல்லாமல் உரிமைகளை பெறவும், பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வகையில் இது சாதகமானது. தரகர்கள் இன்றி சுயமாக போராடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சுய எழுச்சிப் போராட்ட செல்நறி தேசிய, மலையக மட்டத்தில் ஆரம்பமாகத் தொடங்கியுள்ளது. இதற்கேற்ப தொழிலார்களின் போராட்ட வடிவம் மாற்றம் பெறும்.
ஆரம்பத்தில் முதலாளிகளால் நிர்ணயிக்கப்பட்ட கூலி பின்னர் சம்பள நிர்ணய சபையால் நிர்ணயிக்கப்பட்டு, கம்பனிகள் மீண்டும் தோட்டத்துறையை குத்தகைக்கு பெற்றதன் பின்னர் கூட்டு ஒப்பத்தம் என்ற பொறிமுறையால் நிர்ணயிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தினை கிரகிப்பதனை மேவிய கையூட்டல்கள் பற்றிய அக்கறையின் காரணத்தால், பெறக்கூடிய நலன்கள் இல்லாமல் போயின.
பீ.மரியதாஸ்