கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று இன்றும் நாளையும் தொடரலாம் என்ற வானிலை அறிவிப்பின் படி கடலோரத்தில் குடிவாழும் மக்களை மீளறிவிப்பு வரும் வரை தூர இடங்களுக்குச் செல்லுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்
பொலிஸ் நிலையம், கிண்ணியா
ஒலிபெருக்கியின் சத்தம் கேட்டு ஒவ்வொருவரும் தத்தமது உடுப்புப் பைகளை தயார் செய்தனர். சுனாமி வராவிட்டாலும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் எங்க ஊருக்கு சுனாமியின் வாசம் வந்துபோகும். மாறாத வலிகளைத் தந்த சுனாமியை மறக்கத்தான் முடியுமா?
வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த அஹ்லாப் உம்மா என்று ஓடி வந்து பர்ஸானாவின் முதுகுப்புறம் சாய்ந்தான். இந்த சிறுவனுக்கு சுனாமினா என்னவெளங்கப்போகுது. இந்த ஒலிபெருக்கிச் சத்தங்கள்தான் எங்களது உயிர் பிழைக்க ஓரளவு மனசுக்கு ஆறுதல் தருகிறது என கண்கள் கலங்கிட வார்த்தைகளை உதிர்ந்தாள்.
அன்று அது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் எல்லோரும் வீட்டில் இருப்பது வழமையானது. மூத்த நானாவின் மகன் இஜாஸ் எங்கட வீட்டிலேதான் தங்கியுள்ளார். தரம் ஆறில் படிக்கின்றார். அவங்கட ஊர்ல தரம் ஐந்து வரையான வகுப்புகள் மாத்திரமே உள்ளதால் நானா இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். இஜாஸ் அன்று ஊருக்கு போக விரும்பியதால் உம்மாவும் அனுப்பி வைத்தாங்க.
எனது சகோதரிகள் சிஹாராவும் சியானாவும் ஒரு அறைக்குள்ளும் உம்மா, வாப்பா, தம்பி ராபி மூவரும் இன்னொரு அறைக்குள்ளும் இருந்தநேரம். வலை இழுக்கும் தொழிலுக்கு கடலுக்குச் செல்ல அந்த வீதியால் சென்ற ஒருவருக்கு வீதிக்கு வந்த நீர் கானல் நீரா, கடல் நீரா என்று விளங்கல. இருந்தாலும் அது அவரை பின் தொடர்வதை அறிந்தார்.
கடல் தண்ணி வருகுது கடல் தண்ணி என்ற சத்தம் மட்டுமே அவரால் போட முடிந்தது. எல்லாப் பக்கமும் கடல் தண்ணி கழுத்தளவு மட்டம் வரை உயர்ந்தது. வீட்டின் கூரையை தம்பி ராபியும் உம்மாவும் வாப்பாவும் எட்டிப் பிடித்துக்கொண்டார்கள். மூத்தவள் சிஹாரா வீட்டின் கதவு நிலையை மெல்லத் தாவிப்பிடித்தாள். தாத்தா என்ர கையப் பிடியேன் என்று இளையவள் சியானா அழுதவளாக வீட்டின் அலைகளுக்குள் தத்தளித்தாள். மூத்தவள் சிஹாரா தனது கை எட்டாததால் தன் துப்பட்டாவை தங்கையின் பக்கம் வீசினாள். அதற்கிடையில் மீண்டும் வந்தபேரலை அவர்கள் எல்லோரையும் பிரித்துவிட்டது.
வினாடிக்குள் என்ன ஆனார்கள் எங்குபோனார்கள் என்ற நிலவரம் ஒன்றுமே தெரியவில்லை. ஊர்கடலாகவும் கடல் நிலமாகவும் மட்டுமே தெரிந்தது. ஊர்க் கடல் கொஞ்சம் வற்றியபோது எங்கு பார்த்தாலும் அழுகையின் சத்தங்களே! எங்கட பக்கத்து வீட்டுக்கு முன் வீடுதான் ரபீக் நானா! தோனா பள்ளிவாசல் தலைவராக இருந்தவர். நல்ல மனிதர். தன் கண்முன்னே கையில் பிடித்திருந்த இரண்டுபிள்ளைகளை அலைகள் பறித்தெடுத்துட்டதே என்று தலையில் அடித்து அடித்து அழுது கொண்டிருந்தார். எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது என விளங்கவில்லை. முழங்கால் அளவுக்கு சுனாமித் தண்ணீர் கறுப்பாகக் கிடந்தது. நடந்து செல்ல முடியாது. இப்படி ஓவ்வொருவரும் ஒரு உயிரையாவது இழந்து நின்றனர். தாய் பிள்ளைகளை, பிள்ளைகள் தாயினை, கணவன் மனைவியை, மனைவி கணவனை, மச்சான், மச்சி, மாமா, மாமி, வாப்பா, உம்மா என உயிரின் பிரிவுகள் கணக்கெடுக்க முடியாமல் இருந்தன. பலரது வீடுகள் இருந்த அடையாளமும் இல்லாமல் போனது. இன்னும் சிலவீடுகள் இடிபாடுகளுடன் கிடந்தது.
உயர்ந்து நின்ற தென்னை மரமும் பனை மரமும் பட்டுப்போன மரங்களாகவும் பூச்செடிகளும் வீட்டைச் சுற்றியிருந்த வேலியும் தடம் இல்லாமல் கிடந்தது. நீரில் மூழ்கிக் கிடக்கும் இன்னும் பலரை அடையாளம் காணுவது பெரும் கஷ்டமாக இருந்தது. சகோதரர் றசூல் விடயம் கேள்விப்பட்டு ஓடிவந்தார். உடன் பிறந்தவர்களைக் காணும்வரை அவருக்கு வீட்டின் எண்ணம் வரவில்லை.
குடும்பத்தவர்கள் வெவ்வேறு திசையிலே உயிரோடு இருப்பதாக அவருக்கு காதில் செய்தி எட்டியது. அப்போதுதான் அவருக்கு போன உயிர் திரும்பியதுபோல இருந்தது. இருந்தாலும் உடனே போய் அவர்களைப் பார்க்க முடியவில்லை. வீதிகள் எங்கும் சேறும் கற்களும் முட்களுமாய் கிடந்தது. சில இடங்களில் கடல் தண்ணீர் வற்றாமல் வீதி மூடிக் கிடந்தது.
அவர்கள் ஒவ்வொருத்தரையும் கண்டு நகரத்திற்கு அப்பாலுள்ள வான் எல எனும் அவரது கிராமத்திற்கு அழைத்துச் செல்ல பெரும்பாடு பட்டார். உடன் பிறப்புகளை அரைகுறை ஆடையுடன் பார்க்கின்ற யாருக்கும் கண்ணீரை வரவைக்கும். அன்றைய அவல நிலையில் சுனாமியின் அழுக்குகளே அவர்களுக்கு ஆடையாகின. யாருடைய கண்ணீரைத் துடைப்பது என்று தெரியாமல் வழிநெடுகிலும் கண்ணீர் வடிய அவர்களுடன் அவர் தனது ஊரை அடைந்தார். நடந்து வந்த பாதை தூரமானாலும் இதயத்தில் ஏற்பட்ட வலியில் நடந்த வலி பெரிதாக தெரியல.
உணவு, உடைகள், தங்குவதற்கான ஏற்பாடுகள் என சகல வசதிகளையும் தன்னால் முடிந்தவரை உறவுகளுக்கு செய்து கொடுத்தார். உயிர் தப்பியமைக்காக இறைவனை அவர்கள் சிரம் பணிந்தனர். ஒரு சில மாதங்களுக்குப் பின் பிறந்த மண்ணை பார்க்க வந்தனர். இடிபாடுகளுடன் கிடந்த வீட்டை சரி செய்து குடியிருந்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீட்டுத் திட்டம் இன்னும் பல்வேறு வசதிகள் செய்து கொடுத்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களில் பலருக்கு இந்த வசதிகள் போய்ச் சேரவில்லை. யாரின் மீது தவறைச் சொல்வது? சுனாமியால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட இவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. இயற்கையுடன் போராடிய இவர்களுக்கு மனிதர்களுடன் போராடமுடியாமல் போய்விட்டது. இருந்தாலும் இவர்களை இறைவன் கைவிடவில்லை. சுனாமியால் பாதிக்கப்படாத எந்த இழப்பும் இல்லாத ஒருவருக்கு வந்த வீட்டை இவர்களுக்கு ஒரு நிறுவனம் கையளித்தது. சுனாமியால் சிலர் நன்றாக வாழ்ந்தார்கள். நன்றாக வாழ்ந்தவர்கள் பலர் தாழ்ந்தார்கள். வாழ்க்கையின் சில நகர்வுக்குப் பின் அந்த ஒலிபெருக்கிச் சத்தம் மீண்டும் கேட்கத்தொடங்கியது.
கவிச்சுடர் ஏ.எம். கஸ்புள்ளா