800 திரைப்படத்தின் முரளியின் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பது Slumdog Millionaire திரைப்படத்தில் நடித்த மாத்தூர் மிட்டால்
அன்றும் இன்றும் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் தமிழ் சினிமாவின் தயாரிப்பான ‘800’ திரைப்படம் திரையிடப்படுகின்றது. ‘800’ சினிமாவுடன் முரளிதரன் இணைந்து கொண்டது 2010ம் ஆண்டு ஜூலை 6ம் திகதி, காலி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் 800வது டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி நிறைவு செய்த 13வது ஆண்டு நிறைவு நாளான கடந்த 6ம் திகதியாகும்.
இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முரளியின் ‘800’ திரைப்படம் தமிழ்நாடு, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன், மத்திய கிழக்கு உள்ளிட்ட 15 நாடுகளில் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது. தமிழில் தயாரான ‘800’ சிங்களம் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் உபதலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குனர் எம். எஸ். ஸ்ரீபதி மற்றும் புக்கர் விருது வென்ற ஷெஹான் கருணாதிலக்க இணைந்து திரைக்கதையை எழுதியுள்ள இந்த படத்தை ஸ்ரீபதி இயக்கியுள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘Slumdog Millionaire‘ படத்தில் நடித்த மாத்துர் மிட்டல் இந்தப் படத்தில் முரளியாக நடித்துள்ளார்.
வர்த்தகத்தில் ஈடுபட்ட தோட்டப்புறக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞனின் வர்த்தக முயற்சிகள் காடையர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் பலம் வாய்ந்த வீரர்களில் ஒருவராக அவர் மாறி, சர்வதேசப் புகழ் பெற்ற விதம், இனவாதப் போர் முப்பது வருடங்களாக இலங்கையில் பயங்கரத்தையும் வெறுப்பையும் விதைத்த காலப்பகுதியில் தேசிய கிரிக்ெகட் அணியில் ஏனைய வீரர்களுக்கிடையில் இருந்த ஒரே தமிழ் வீரராக கிரிக்கெட் வீரர்களின் ஓய்வறையில் அவர்களோடு இணைந்து வெற்றி தோல்விகளை சகித்த விதம், அவுஸ்திரேலிய நடுவர்களால் ஏற்படுத்தப்பட்ட அசௌகரியங்களின் போது மன உளைச்சலுக்கு ஆளாகி தலைவர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட தேசிய அணியின் அனைத்து வீரர்களும் மற்றும் பொதுவாக ஒட்டுமொத்த நாட்டினரும் மத, இன பேதமின்றி முரளியுடன் எவ்வாறு நின்றார்கள் என்பதையும் காட்டும் இந்த அற்புதமான திரைப்படம் இலங்கை, இந்தியா மட்டுமல்லாது முழு உலகுக்கும் ஒரு அற்புதமான சகவாழ்வு பாடமாகும்.
முரளியின் ‘800’ திரைப்பட இயக்குநர் எம். எஸ். ஸ்ரீபதி தமிழ்நாட்டிலிருந்து தினகரனுடனான விஷேட நேர்காணலுடன் இணைந்து கொண்டது பல சவால்களுக்கு மத்தியில் முரளியின் ’800’ எவ்வாறு சினிமாவாக உருப்பெற்றது என்பது குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் இதுவரை யாருமே அறிந்திராத அற்புதமான நிகழ்வுகள் குறித்தும் பேசுவதற்காகும்.
“உண்மையில் முரளியின் திரைப்படத்தை இயக்க இருந்தது நானல்ல. தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தான் முரளி படத்தை இயக்க இருந்தார். நான் அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். நான் சேர்ந்து கொண்டது உதவி இயக்குநராகவும் மற்றும் முரளி தொடர்பில் ஆராய்ச்சி செய்து திரைக்கதை எழுதுவதற்குமாகும். இறுதியில் இப்படத்துக்கு நானே இயக்குநரானேன்” என்று ஸ்ரீபதி கதையைத் தொடங்கினார். வெங்கட் பிரபு என்பவர் தென்னிந்திய சினிமாவின் மாபெரும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரனின் மகனாகும்.
முரளியின் மனைவியும், வெங்கட் பிரபுவும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாகும். அந்த வகையில்தான் திடீரென முரளியின் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அடுத்தது வெங்கட் பிரபு இதற்கு முன்னர் “சென்னை 28” என்ற பெயரில் திரைப்படமொன்றை எடுத்திருந்தார். அது வெற்றிபெற்றது. அது வீதிக் கிரிக்ெகட் (Street cricket) பற்றி தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். வெங்கட் பிரபு திரைப்படங்களில் கிரிக்கெட்டை சரியாகப் படம்பிடித்திருந்தார். அதனால் முரளியைப் பற்றி படம் எடுக்கும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர்தான் முரளியின் கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து திரைக்கதை எழுத அவர் என்னை அழைத்தார். அப்படித்தான் இது ஆரம்பித்தது” படத்தின் பின்னணி எப்படி உருவானது என்பதை ஸ்ரீபதி விவரித்தார்.
திரைக்கதைக்கு முன் 2018ம் ஆண்டில் வெங்கட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதோடு, அவர் அங்கு முரளியின் முகாமையாளராகப் பணியாற்றிய குட்னஸ் நலன்புரி மன்றத்தின் நிறுவனர் குஷில் குணசேகரனை சந்தித்ததாகவும் ஸ்ரீபதி கூறினார்.
“அதன் பிறகு திரைக்கதை தயாரானது. முரளி ஐபிஎல் போட்டிகளுக்காக ஹைதராபாத் வந்திருந்தபோது நாம் அவரைச் சந்தித்தோம். எப்படியோ கடைசியில் வெங்கட் பிரபு இதை ஆரம்பிப்பதற்குள் வேறொரு படத்துக்குப் போக வேண்டியதாயிற்று. அதன் பின்னர்தான் இந்தப் படத்துக்கு நான் இயக்குநரானேன். நானும் உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகன்தான். அதேபோல் நான் பாடசாலைக் காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளேன். இந்தியாவின் ஒவ்வொரு சிறுவர்களினதும் கனவு எப்போதாவது ஒருநாள் கிரிக்ெகட் வீரனாக வரவேண்டும் என்பதுதான். அந்தக் கனவு எனக்கும் இருந்தது. எனது பாடசாலைக் காலத்தில் கிரிக்கெட்டைப் பற்றி அந்தளவுக்கு கூறுவதற்கு ஒன்றுமிருக்கவில்லை. 13 வயதின் கீழ் விளையாடும் போது நான் உள்ளூரில் தெரிவானதுதான் பெரிய விடயமாக இருந்தது. நான் வேகப் பந்து வீச்சாளராகவே விளையாடினேன். எனினும் நான் அந்தளவுக்கு உயரமானவனாக இல்லாததால் என்னால் பாடசாலை அணியில் இணைந்து கொள்ள முடியாமல் போனது. அதனால் நான் சுழல் பந்து வீச்சாளராக மாறினேன். எனது கதையும், முரளியின் கதையும் ஓரளவுக்கு ஒத்தாகும். அவரும் வேகப் பந்து வீச்சாளராக வந்து கடைசியில் சுழல் பந்து வீச்சாளராகினார். அதுவும் என்னால் மறக்க முடியாத விடயமாகும். எனினும் முரளியினால் எனது கதையை எந்த வகையிலும் சமப்படுத்த முடியாது. எனது கிரிக்கெட் வெறுமனே வீதி கிரிக்கெட்டைப் போன்றது. எந்த ஒரு தொழில்சார் பயிற்சியும் இருக்கவில்லை. கிரிக்கெட்டைக் கைவிட்டு விட்டு சினிமாத் துறைக்கு வந்து கடைசியில் சிரேஷ்ட கிரிக்கெட் வீரரின் கதையை திரைப்படமாக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
“உண்மையில், கிரிக்கெட்டுக்கு வெளியே முரளியின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதையைக் கேட்டபோது, முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. அவர் கடந்து வந்த மற்றும் பெற்ற வாழ்க்கை அனுபவங்கள் அற்புதமான விஷயங்கள். இந்தக் கதையை எல்லோருக்கும் சொல்ல வேண்டும், எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை என்று உணர்ந்தேன். ஆனால் அதை எப்படி செய்வது? என்று யோசித்தேன். ஏனென்றால் சினிமாவின் முகம் முற்றிலும் வேறுபட்டது. உங்களுக்கு இந்தக் கதையை இரண்டரை மூன்று மணி நேரத்தில் சொல்ல வேண்டும். எனவே அவரது வாழ்க்கையின் சில கதைகளை ஒரு திரைப்படத்திற்கு பொருத்தமாக நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஒரு வாழ்க்கைக் குறிப்பு திரைப்படம் என்பதால் முரளியின் வாழ்க்கையைப் பற்றிய சரியான விஷயங்களைத் தெரிந்துகொள்ள திரைப்பட ரசிகர்கள் விரும்புவார்கள். அத்தோடு இது ஆரம்பம், நடுப்பகுதி, முடிவும் இருக்கும் ஒரு படமாக இருக்க வேண்டும். அதனால்தான் இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. நான் கதையை எழுத ஆரம்பித்த பிறகு உதவிக் கதாசிரியராக இணைந்து கொள்ளுமாறு நான் ஷெஹான் கருணாதிலக்கவை அழைத்தேன். ஷெஹானை நான் அறிந்திருந்தது நான் அவருடைய ‘சைனமன்’ புத்தகத்தைப் படித்திருந்தனாலாகும். என் மனதை மிகவும் தொட்ட கதை அது. அத்துடன் இந்தக் கதையை எழுதும் போது எனக்கு இலங்கையில் இருந்து ஒருவரின் உதவி தேவைப்பட்டது. ஏனென்றால் நான் ஒரு வெளிநாட்டவரல்லவா. எனக்கு இலங்கையின் கலாசாரத்தைப் புரிந்து கொள்ளும் தேவை இருந்தது. மக்களைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருந்தது. எனவேதான் இலங்கையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன். நான் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த நேரம்தான் எனக்கு சைனமன் புத்தகத்தைப் படிக்க கிடைத்தது. ஷெஹானிடமிருந்து எல்லா புறத்திலும் நல்லதொரு ஒத்துழைப்பு கிடைக்கும் என நான் நினைத்தேன். உண்மையில் அவருடன் பணியாற்றிய போது நான் மிகுந்து மகிழ்ச்சியடைந்தேன். அது எனக்கு மிகவும் சிறந்த அனுபவமாகியது” என்றார் ஸ்ரீபதி.
முரளீதரன் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் என்று ஸ்ரீபதி கூறினார்.
இலங்கையில் அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை அறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாம் முதலில் விஜய் சேதுபதியை முரளியின் வேடத்தில் நடிக்க வைத்தோம். அது எல்லோருக்கும் தெரியும். அவர் ஏன் இந்தப் படத்தை விட்டு வெளியேறினார் என்பதும் இப்போது மக்களுக்குத் தெரியும். அப்போது தமிழகத்தில் தேர்தல் சூடு பிடித்த காலமாக இருந்தது. அதனால் சேதுபதி முரளி சேரின் படத்தில் நடித்தது அரசியல் நெருக்கடியாக மாறியது.
அந்த நேரத்தில் படத்துக்கு இந்த மாதிரி அரசியல் பிரசாரம் வேண்டாம் என முடிவு செய்தோம். அது தெளிவானது. ஏனென்றால் சேதுபதி மிகவும் பிரபலமான ஒரு நடிகர். அடுத்தது இது முதல் சம்பவம் அல்ல. இந்தியாவில் பல திரைப்படங்களில் இவ்வாறான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பிரபல நடிகர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இது இடம்பெற்றது ஆரம்பத்திலாகும். சேதுபதி ஒரு சிறந்த நடிகர். இப்படிப்பட்ட நடிகர்களுக்கு இவையெல்லாம் எளிதாக நடக்கும். நீங்கள் ஒரு நட்சத்திரமாகவோ, பிரபல நடிகராகவோ மாற வேண்டும் என்றால், சர்ச்சைகள், நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும்” என்றார்.
முரளியின் கதாபாத்திரத்திற்கு சரியான நடிகர் என்பதால்தான் நாம் சேதுபதியை தெரிவு செய்தோம். அந்த வகையில் மாத்தூர் தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய திறமையில் நான் திருப்தி அடைகிறேன். அதிர்ஷ்டவசமாக, மாத்தூருக்கு கிரிக்கெட் பற்றிய அடிப்படை அறிவும் இருந்தது. கிரிக்கெட் விளையாடவும் தெரியும். அவர் உயர் மட்டத்தில் விளையாடவில்லை என்றாலும், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அவருக்கு ஓரளவு திறமை இருந்தது. அதனால் எமக்கு வேலை எளிதாக இருந்தது. ஆனால் அவர் படத்தில் முரளியைப் போல இருக்க வேண்டும் என்பதால் அவருக்கு கொஞ்சம் விரிவாக பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது. சரியாக இல்லாவிட்டாலும் படத்தில் முரளிதான் நடிக்கிறார் என்பதை மக்களுக்கு புரிய வைக்க விரும்பினோம். அதனை மனதில் ஓரளவிற்கு பதிய விரும்பினேன். எனவே நாங்கள் ஒரு பந்துவீச்சு பயிற்சியாளரை சம்பளம் கொடுத்து நியமிக்க வேண்டியிருந்தது. மாத்தூர் அதை வெற்றிகரமாகச் செய்தார் என்று நினைக்கிறேன். முரளி கூட மாத்தூர் பந்து வீசுவது போல் தான் பந்து வீசுகிறார் என்று கூறினார். அத்துடன், கேமரா தொழில்நுட்பமும் எங்களுக்கு நன்றாகப் பயன்படுத்தப்பட்டது. முரளியை நாங்கள் சரியாக உருவாக்குவதற்கு அல்ல, ஆனால் அவரது உணர்வுகளை முன்னிலைப்படுத்த விரும்பினோம்” என்றார்.
‘800‘ திரைப்படம் முரளியின் பாத்திரத்தைத் தவிர, மிகவும் முக்கியமான மற்றும் கவனம் செலுத்தப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது அப்போதைய இலங்கை அணியின் கெப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்கவின் பாத்திரமாகும். முரளியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் மிக முக்கியமானவர்.
‘அர்ஜுன ரணதுங்க வேடத்தில் இலங்கை தமிழ் திரைப்பட இயக்குனர் கிங் ரத்னத்தை நடிக்க வைத்தோம். உண்மையில், அர்ஜுனவின் உருவத்துடன் அவருக்கு அதிக ஒற்றுமை இருக்கவில்லை. எனினும் நாம் மற்றைய கதாபாத்திரங்களைப் போல அவரை அப்படி வடிவமைத்தோம். சன்கிளாஸ் அணிதல், ஹெல்மெட் அணிதல் என பல கோணங்களில் பார்த்த போது வித்தியாசத்தைக் காண முடியவில்லை. நாம் சிந்தித்தது சரியான உருவத்தை ஒற்ற உருவத்தை அல்ல. நாங்கள் அதில் குறைந்த கவனத்தையே செலுத்தினோம். ஏனென்றால் இது ஒரு பாஷன் போட்டி அல்ல. நாம் உலக புகழ் பெற்ற ஒருவரைப் பற்றிய ஒரு திரைப்படத்தை எடுக்கிறோம். எப்படியாயினும் படம் தொடங்கி பத்து பதினைந்து நிமிடம் சென்ற போது எல்லாருக்கும் மாத்தூர் முரளி மாதிரியே காட்சியளிப்பார். உருவத்திற்கு ஒத்த உருவத்தைக் காட்டுவதை விட உருவாக்கத்தின் செய்தியே முக்கியமானது.
“இது ஒரு புதிரான, அசாதாரணமான மற்றும் சவாலான பணி. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து பல சாதனைகளை படைத்த ஒருவரைப் பற்றி உலகிற்கு சொல்லும் பாடம். அடுத்தது ஒரு ஊக்கமளிக்கும் படம். ஏன் இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். அதற்கு காரணம், இன்று நாம் போட்டி நிறைந்த பிரச்சினைகள் நிறைந்த உலகில் வாழ்கிறோம்.
குழுவாதம், இனவாதம், அரசியல் ரீதியான பிளவுகள் மற்றும் மத ரீதியான பிளவுகள் ஏராளம். வெற்றி பெறுவதற்கான தடைகள் ஏராளமுள்ளன. அந்தத் தடைகளையெல்லாம் இந்தப் திரைப்படம் உடைக்கிறது. ‘800’ திரைப்படத்திலிருந்து ஏதாவது விடயங்களைப் புரிந்து கொள்ள, பாடத்தைக் கற்றுக் கொள்ள, சினிமா ஆர்வலர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதுவே எங்களின் எதிர்பார்ப்பாகும். நாடுகள், மொழிகள், தேசங்கள் அனைத்தும் நாம் உருவாக்கியவை என்பதை சமூகத்திற்கு நினைவூட்டுவது கலைஞர்களாகிய நமது பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். ஒருவர் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் சவால்களை சமாளிப்பது கடினம் அல்ல என்கிறது படம். முரளி சேரின் கதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்று நினைக்கிறேன். அது அனைவருக்கும் சொல்ல வேண்டிய ஒன்றாகும்” என்றார்
‘800‘ ஐ அனைவரின் கண்களைத் திறக்கும் திரைப்படமாகவே நான் காண்கிறேன். இது பலமான ஒரு செய்தியை உலகிற்குச் சொல்லும் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தைப் பார்க்குமாறு நான் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன்” என்று அவர் இறுதியாகக் கேட்டுக் கொண்டார்.
பௌஸ் முகம்மட் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்